நெற்றி நீவி
மடி கிடத்தி
குழந்தையை உறங்க
வைக்கும் அம்மாவின் அருகாமை.
எப்போதும்
வசியம் செய்யும்
நாமு வின் வரிகள்
கோடை மழை
கிளர்த்தும்
மண்வாசம்.
இளையராஜா
இசை அழகா?
இசைக்கு இசைந்திடும்
வரியழகா? எனக்
குழம்பித் தொலைக்கும் மனம்.
மார்கழி மாதத்து
சிறு கீற்று
மஞ்சள் வெய்யில்
பிடித்தவன்
கையளித்த
மயிற்பீலி.
பேச மறந்து
எழுதி மறைத்திட்ட
காதல் கடிதம்.
விடைபெறுகையில்
இழுத்தணைத்து
கடத்திய உள்ளங்கை சூடு.
பயந்து பயந்து
கண் பார்த்துக் கொண்ட
தருணத்து வெட்கப் புன்னகை.
உன்னை
நினைவுபடுத்தும்
தருணமெல்லாம்
அழகானவை
உள்ளுக்குள்
உருகி
கண்ணுக்குள்
கட்டி வைக்கயியலாப்
ப்ரியத்துக்கும்
காதலின் சாயல்.
- இசைமலர்