பிறவி உள்சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது?
சாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத்தடை உண்டா?
பிறவி வருணசாதிகள் நான்கு மட்டுமே. அவை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்.
இந்த நான்கு வருணங்களின் பெயர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. இதுபற்றிய விவரம் “இந்துச் சட்டம்” என்கிற உரிமை இயல் சட்டத்தில் மட்டுமே உண்டு. அதனால் பிறவி வருண சாதி ஒழிப்பு, பழக்கவழக்கச் சட்ட ஒழிப்புப் பற்றிய சட்டத் திருத்தத் தை, இந்துச் சட்டத் திருத்த மசோதா (Hindu Code Bill) என்பதில் சேர்த்து, 1947லேயே மேதை அம்பேத்கர் அரசமைப்பு அவையில் முன்மொழிந்தார்.
அப்படி முன்மொழிந்த பிறகு, இரண்டு மாதங்கள் கழித்துத்தான், அம்பேத்கர், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அமர்த்தம் பெற்றார். நிற்க.
இந்தியாவில் 1881இல் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கு (Census)) அறிக்கை வெளியான வுடனே, பல சூத்திர உள்சாதிக்காரர்கள் தத்தம் சாதியின் பெயர், ‘பிராமணன்’, ‘சத்திரியன்’, ‘வைசியன்’ என உரிமை கொண்டாடினார்கள்.
வட இந்தியாவில் பூமிகார், மருத்துவர் (barber) சாதியினர்-பூமிகார் பிராமணர், நாயி பிராமணர் என்று முறையே உரிமை கொண்டாடினார்கள்.
தென்னிந்தியாவில் விசுவகருமர், சௌராஷ்டிரர், தேவாங்கர் சாதியினர் விசுவ கரும பிராமணர், சௌராஷ்டிர பிராமணர், தேவாங்க பிராமணர் என்று உரிமை கொண்டாடினர்.
இவற்றுக்கு, பிற்காலத்தில் எழுதப்பட்ட புராணக் கதைகளே அடிப்படை.
“அதற்கென்ன? அப்படியே அவரவர் அழைத்துக் கொள்ளலாம்” என்று, 1921க்குப் பிறகு வெள்ளையர்கள் அரசு ஆணைகளைப் பிறப்பித்தார்கள். அதை அந்தந்த உள்சாதியினர் கொண்டாடினார்கள். ஆனால் சட்டப்படி -சாத்திரப்படி-பிறவியால் இவர்களில் எவரும் பிராமணர் இல்லை.
அதேபோல் வடநாட்டில் காய°தர், யாதவர், குர்மி, ஜாட், கொய்ரி போன்றோரும், தென்னாட்டில் வன்னியர், நாடார், ராஜுக்கள் போன்றோரும் தத்தம் உள்சாதி, ‘சத்திரியர்’ என்று உரிமை கொண்டாடினார் கள். அப்படி அழைத்துக் கொள்ளலாம் என்று வெள் ளையர்கள் அரசு ஆணைகளை வெளியிட்டார்கள். ஆனால் இவர்களில் எந்த உள்சாதியாரும் சட்டப்படி, சாத்திரப்படி பிறவியால் ‘சத்திரியர்’ இல்லை.
அடுத்து வடநாட்டில் எண்ணெய் வணிகர், மளிகை வணிகர், வட்டிக்கடை வணிகர் முதலானோர் தத்தம் சாதியை ‘வைசியர்’ என்று அழைத்துக் கொண்டார்கள்.
தென்னாட்டில் செக்காரச் செட்டி, கோமுட்டிச் செட்டி, வட்டிக்கடை செட்டி, உள்சாதியினர் தத்தம் சாதியை ‘வைசியர்’ என அழைத்துக் கொண்டார்கள்.
ஆனால் இவர்களில் எந்த உள்சாதிக்காரரும் சட்டப் படி, சாத்திரப்படி பிறவியால் ‘வைசியர்’ இல்லை.
பின்னர் இவர்கள் எல்லாம் யார்? சட்டப்படி - சாத்திரப்படி இவர்கள் ‘சூத்திரர்’ மட்டுமே. 2015, 2016லும் இதுவே உண்மை.
இந்நிலையில் வடநாட்டில் காய°தர் - தென்னாட்டில் கார்காத்தார், தொண்டை மண்டலத்தார், கம்மா, ரெட்டி போன்ற சாதியினர் தத்தம் சாதியை சற்+சூத்திரர் என்று பெருமையாகக் கூறிக்கொண்டார்கள். அதற்கு ‘நல்ல சூத்திரர்’ என்று மட்டுமே பொருள். இதுபற்றிப் பெரியார், நல்ல + தேவடியாள் மக்கள் என்பதே சற்சூத்திரர் என் பதற்குப் பொருள் என்பதை வேதனையோடு சுட்டிக் காட்டினார்.
ஆகவே, கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் 2015 வரை, வடநாட்டில் மட்டும் சட்டப்படி - சாத்திரப்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற பிறவி வருணச் சாதிகள் நான்கும் உண்டு.
தென்னாட்டில் சட்டப்படி, சாத்திரப்படி பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு பிறவி வருணச் சாதிகள் மட்டுமே உண்டு.
இந்தப் பிறவி வருணச் சாதிகளின் பெயர்கள் நான்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருக்க வில்லை; இந்துச் சட்டத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் நான்கு பிறவி வருணச் சாதிகள் நடப்பில் உண்டு.
அதேபோல், பிறவி வருணச் சாதிகள் நான்கிலும் உள்ள 7000-க்கு மேற்பட்ட உள்சாதிகளின் பெயர்கள் இந்துச் சட்டத்திலோ, இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால் நடப்பில் உண்டு. நிற்க.
இவற்றுள் பிறவி வருணச் சாதிகள் நான்கையும் சார்ந்தோர் தத்தம் சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளுவதற்கு 1923க்குப் பிறகு, இந்துச் சட்டப்படி தடை இல்லை. திருமணம் செய்துகொள்ள விரும்புகிற - திருமண வயது வந்த எந்த வருணத்துப் பெண்ணும், எந்த வருணத்துப் ஆணும் - “நாங்கள் இந்துக்கள்” என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளலாம். அது சட்டப்படி செல்லும்.
அதேபோல், சூத்திர, சற்சூத்திர, ஆதிசூத்திரச் சாதி யினராக உள்ள 6000 உள்சாதிக்காரர்கள் சாதி மாறித் திருமணம் செய்துகொள்ள முடியாத சட்டத் தடை 1946 இல் நீக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகாத சூத்திரர் தங்களுக்குள்ளே சாதி மாறியும், சூத்திர சாதியினரும், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான ஆதி சூத்திரரும், தங்களுக்குள் சாதிமாறியும் திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆணுக்கு அகவை 21, பெண்ணுக்கு அகவை 18 இருக்க வேண்டும் என்பது மட்டுமே சட்டக் கட்டளை.
அப்படியானால் பிறவி நால்வருண சாதி நடப்பில் உரிமைத்தடை எதில், எதில் உள்ளது?
6000 உள்சாதிகளிடையே, நடப்பில் உரிமைத் தடை எதில், எதில் இருக்கிறது?
இந்துக் கோவில்களிலும், கோவில்களில் கடவுள் சிலை உள்ள கருவறைகளிலும்; மற்றும் இந்து மடங் களிலும் மற்ற மத நிறுவனங்களிலும் மட்டுமே சட்டப் படி தடை உள்ளது.
எந்தச் சட்டப்படி? பழக்கவழக்கச் சட்டப்படி! ஆகம விதிகளின் படி! பிராந்திய வழக்கச் சட்டப்படி! இந்திய அரசமைப்புச் சட்டப்படி!
அதாவது தமிழ்நாட்டில் கி.பி.8ஆம் நூற்றாண் டுக்குப் பிறகு நடப்புக்கு வந்த சைவ, வைணவ ஆக மங்களில் கண்டபடி பிறவியால் பிராமணனாகப் பிறந்த வன் மட்டுமே இந்துக் கோவில்களில் கருவறையில் அர்ச்சகனாக - பூசாரியாக இருக்க முடியும். இந்த ஆகமச் சட்டங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறாக இருக் கும். காட்டாக ஒரிசாவில் பண்டரிபுரம், உ.பி.யில், காசியில், நமக்கு அண்டையிலுள்ள கேரளாவில் ஆகமங்கள் வேறு வேறு.
ஆதிசங்கரர் காலத்துக்குப் பிறகு - கி.பி.800 - 832க்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட எல்லா சங்கர மடங்களிலும் பிறவியில் பார்ப்பானாக உள்ளவர்கள் மட்டும் இன்றும், நாளையும் மட அதிபதியாக வரமுடியும். இதில் காஞ்சிபுரம் சங்கர மடமும் அடக்கம்.
திருப்பனந்தாள், தருமபுரம், மதுரை, குன்றக்குடி முதலான ஆதிசைவ மடங்களுக்குப் பிறவியால் கார் காத்த வேளாளராக உள்ள சூத்திரர் மட்டுமே மட அதிபதியாக வரமுடியும். தொண்டை மண்டல மடம், லிங்காயத்துக்கள் மடம், மற்ற சில உள்சாதி சூத்திரர் மடங்களுக்கு அந்தந்த உள்சாதிக்காரரே மடாதிபதியாக வரமுடியும்.
இவற்றை இப்படியே காப்பாற்றுகிற உரிமைகளை இந்துச் சட்டம் அளிக்கிறது; 1950க்குப் பிறகு நடப் புக்கு வந்த அரசமைப்புச் சட்டம் அளிக்கிறது. இவற்றை அடியோடு மாற்றினால்தான் பிறவி சாதிப்படி உள்ள வருண சாதி ஒழியும்; அதன் விளைவாக இங்கெல் லாம் காப்பாற்றப்படுகிற திண்டாமையும் ஒழியும்.
இந்தத் தடை எந்தெந்தச் சட்டங்களில் உள்ளது?
இந்துச் சட்டம், இ°லாமியச் சட்டம், கிறித்துவச் சட்டம் என்கிற எல்லா உரிமை இயல் சட்டங்களிலும் உள்ளது. சீக்கியர், பௌத்தர், சமணர், என்கிறவர்களுக்கு இந்துச் சட்டமே உரிமை இயல் சட்டம் ஆகும்.
இவ்வளவு உண்மைகளும் எவ்வளவு உயரிய கல்வி கற்றவருக்கும் கற்பிக்கப்படுவதற்கு ஏற்ற கல்வித் திட்டம், இந்தியாவில், 1947க்குப் பிறகு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல் இந்தப் பழக்கவழக்கச் சட்டம், பிராந்தியப் பழக்கச் சட்டம், ஆகம விதிகள் நடப்புச் சட்டம் இவற்றுக்கு இந்திய அரசமைப்புச் சட்டவிதிகள் 13, 25, 26, 372(1) இவற்றில் கெட்டியான பாதுகாப்பு இன்று 2015லும் - நாளைக்கு எப்போதோ இவை நீக்கப்படுகிற வரையிலும் செல்லுபடியாகும் என்பதும் நம் எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றை மக்களுக்குத் தெரிவிக்கவும், தங்கள் காலத்திலேயே சாதிக்கவும் தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும் தத்தம் இறுதி மூச்சு வரை உழைத்தார்கள்.
உள்ளம் நொந்த அம்மேதைகள் என்ன சொன் னார்கள்? என்ன செய்தார்கள்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மேதை அம்பேத்கர் - “இப்படிப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை நான் தான் எழுதினேன். அதை எரித்திட நான் முதலாவது ஆளாக இருப்பேன்” என, 2-9-1953 முற்பகலில் இந்திய மாநிலங்கள் அவையில் முழங்கினார்.
மேதை அம்பேத்கர் 1953இல் அறிவித்ததை -26-11-1957 அன்று தந்தை பெரியார் தமிழக ஊர்தோறும் செய்துகாட்டினார். அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 25, 26, 372(1) இவற்றைத் தமிழில் அச்சுப்போட்டு, எரிக்கப்படச் செய்தார்.
இது நடைபெற்று 58 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள இவ்விதிகள் நீக்கப்பட எவரும் எதுவும் செய்யவில்லை.
அரசமைப்புச் சட்ட விதி 17 என்பது இதற்கு மிகவும் உதவும் என்று, முட்டாள்தனமாக, பெரியாரை வைத்துக் கொண்டே-பெரியார் திடலில், 9-12-1973 அன்று, சாதி இழிவு ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் போட்ட பொறுப் பற்ற தனத்தை, இன்னமும் பெரியார் தொண்டர்கள் எடுத்து எழுதிக் கொண்டாடுவது தகாதது.
இதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.