நூல் வேட்டி மறைப்பில்
அப்பாவின் பிணத்தை குளிப்பாட்டுகிறார்கள்..
வெள்ளரிப்பிஞ்சி கால்கள்
குளிரில் நடுங்குகின்றன..
மேல் தேய்த்து குளிப்பாட்ட
கூச்சப்படும் அங்காளிபங்காளிகள்
எல்லாம் ஒரு கூட்டு குடிகாரர்கள்..

            ***

நெருஞ்சி முள் செடியை
செதிக்கி ஒதிக்கி
அப்பாவுக்கு குழி பறிக்கிறார்கள்..
கண்ணீர் சிதற
வெட்டியானின் செதுக்கல்கள்
அப்பாவின் சிநேகிதர்
இடுகாட்டு மந்தையை நோக்கி
பிணத் "ஈ" முன்னமே வந்தமர்ந்தது..
பறித்த குழியில் சுத்துக்கு சுத்து
எழும்புத் துண்டுகள்..
நெற்றி நாடி கழற்ற பள்ளத்துக்கு
அப்படியே பொருந்துகிறது நீளம்..
பிடி மண் அள்ளும் விரல்களை
அணைத்துக் கொள்கிறது மண்
அப்பா நீ இன்னுமா உயிரோடிருக்கிறாய்?

             ***

வாதையில் ஒடிந்த நாடி
செய்யது பீடி நாறும் உடல்
முடிகளுக்குள் ஒழிந்திருக்கும்
தீய்ந்த மார்பு ..
சளி அள்ளி வரும் இருமல்..
மாத்திரை, ஊசி, மூத்திர வேட்டி
பீபி, சுகர், மலக்குவியல்
இத்தியாதி, இத்தியாதி ...
இவ்வளவு தான் அம்மா
அப்பாவோடு காதலித்திருந்தது...

            ***

பட்டம்மாளுக்கு தீச்சட்டி சுமந்து
மாரியாத்துளுக்கு மாவிலக்கெடுத்து
பொட்டல் வெக்கையில் மண்சோறுதின்று
நோஞ்சான் மனைவியென ஊர்வாய் விழுந்து
சக்காளத்தி சடையிழுத்து
விழுந்து உருண்டோடி
தீராத வாதை
ஒன்றை கருணை ஊசியில்
கூசாமல் கரைசேர்ந்துவிட்டது..

             ***
இரவுக்கு மஞ்சள் நிறம்
பகலுக்கு செம்பழுப்பு
குளுருக்கு கஞ்சா சுருட்டு
காமத்திற்கு வாழைத்தார்
பரட்டை தலை, கூட்டுச்சிக்கல்
கருத்த உதடு,செமித்த தேகம்
கிறுக்கன் பட்டம், அதில்
யாருக்குத்தான் நட்டம்..

- சிபி சரவணன்

Pin It