1.
புவியீர்ப்பு விசைக்குக்
கட்டுண்ட
உன் கிளைகளை
நிலமகளின்
மேனியைத்
தொட்டும் தொடாமலும்;
தழுவுமாறு படர விட்டுள்ளாய்
காட்டுத்தீயொத்த
உன் மேமாத மலர்களை
மனித விரல்களின்
வன்தீண்டுதலில் இருந்து
எப்படிக் காப்பாற்றுவாய்
காட்டுத்தீ மரமே...
2.
காட்டு வழிப் பயணத்தில்
சக பாதசாரிகளைப்
பின்னுக்குத் தள்ளி
முன்னோக்கி விரைகிறேன்
கண்ணில் படும்
முதல் காட்டோடையின்
குளிர்ச்சியைக்
கைகளில் ஏந்தவேண்டும்
கற்பனைதானே
கனவு மெய்ப்படட்டும்.
3.
வெட்ட வெட்ட
தலை நிமிர்ந்து நிற்கும்
காட்டு மருதாணிச்செடியின்
ஆணவச் சிரிப்பிலிருந்து
இன்றைய கவிதையின்
பாடுபொருளைப்
பிரதியெடுக்கிறேன்.
4.
மழைக் காலங்களிலும்
நீயாக
பூசிக்கொண்ட
அரிதாரம்
கலையாமல்
பாதுகாக்கிறாய்...
அரிதாரம்
தற்காலிகமானதுதான்
என்பதை
அறியாதவளா நீ...
5.
அழகநெரியிலிருந்து
அருகன்குளம் வரையிலும்
நீண்டு கிடக்கிறது
புனரமைக்கப்பட்ட
அரை வட்டக் குளக்கரை...
கிழக்கு மேற்காக
செல்லும் கூட்டம்
ரசித்துச் செல்கிறது...
எனக்கென்னவோ
புதுப்பெண்ணின்
கழுத்து நகைகளை
ஆராயும் தொனியே
மேலோங்குகிறது...
6.
கடற்கரை மணலில்
தனியாக
அமர்ந்திருக்கிறேன்
அலை ஓசை
என்னை
எதுவும்
செய்யவில்லை
ஏற்கெனவே
எப்பொழுதோ
யாருடனோ
அமர்ந்திருந்த
நினைவு மட்டும்
வாட்டி வதைக்கிறது.
7.
கருக்குகளின்
வெட்டுகளைப்
பரிசாகப்பெற்று
இரணங்களுடன்
பதனீர்
இறக்குகிறாய்!
தித்திப்பு
சுவையை
ஒருமுறையேனும்
அனுபவித்திருக்கிறாயா?
8.
காலைநேர
தேன்சிட்டுகளின்
செல்லமான
சிணுங்களும்
காற்றில்
மிதந்துவரும்
வேப்பம்பூ வாடையும்
ஒரு கவிதையின்
பிரசவத்திற்குப்
போதுமானது.