கம்பளி பூச்சிகளின்
முள் பிடித்து முருங்கை மரங்களில்
ஏறிப் பார்க்கிறேன்..

பச்சோந்தியின் கூரியக் கண்கள்
எனை வெறிக்கின்றன..
கிளைகளெங்கும் கம்பளி பூச்சிகள்
படையெடுத்த வண்ணமிருக்கின்றன..

எப்போதும் தீ அனலால்
கம்பளி பூச்சியை வேட்டையாடும்
அப்பாவின் கரங்கள்
கோடாரியோடு அடிமரத்தை
சிதைக்கின்றன..

நான் ஊர்ந்து ஊர்ந்து
கம்பளி பூச்சியை இறுகப்பற்றுகிறேன்..
வேர்களின் அலுகை குரல்களை
பூச்சியின் முட்கள்
அப்படியே கடத்துகின்றன..

உச்சிக் கொம்பு வரை பயணித்த
என்னால் மீண்டும் தரையை
நோக்கி விழுந்து அப்பாவின்
வேட்டியை பற்றிக் கொள்வதைத்
தவிர வேறு வழியேயில்லை..

- சிபி சரவணன்

Pin It