அவர்கள் இருட்டில் இருந்தால் என்ன???
உங்கள் ஒளிஉமிழ்
இரு முனையங்களின் திரைகள்
இன்னும் வெளிச்சத்தை
உமிழட்டும்...

அவர்கள் குளிரில் நடுங்கினாலென்ன?
உங்கள் சன்னல்
திரைச் சீலைகளை
இன்னும் சற்று
இறக்கி விடுங்கள்...

அவர்களின் கோசங்களை
உங்கள்
செவிகள் கேட்க வேண்டாம்...

உங்கள் குறுந்தகடுகள்
துள்ளலிசையால்
நிறையட்டும்...

உங்கள் சிந்தனைகள்
எல்லாம் மட்டை சுழற்றுபவனையே சுற்றட்டும்.,

உங்களுக்கு சட்டை
தந்தவனை
சட்டை செய்ய வேண்டாம்...

காலத்தின் பெரும்பரப்பில்
என்றோ ஒருநாள் கனமற்றுப் போன
உங்கள்
தானியக் குடுவைகள்
களவு போகக் கூடும்...

அப்போது
அங்கு எரியும்
பெருநெருப்பின்
துகள்கள்
உங்கள் அடிவயிற்றில் பரவக்கூடும்.,
அப்போது நாமும்
வரலாம் வீதிக்கு...

அதுவரைக்கும்
நீங்கள் லயித்துக் கிடங்கள்
உங்கள் கொண்டாட்டங்களில்...

- கார்த்திகா

Pin It