காரணமின்றியும் அழுகை உனக்கு
காயமின்றியும் வலிக்கும் எனக்கு
மேகமின்றியும் மழை நமக்கு
மேட்டாங்காட்டிலும் மயில்தோகை இருக்கு

பிரிய முடியவில்லை என்பதை
பிரிந்திருக்கையில் கொஞ்சமும்
சேர்ந்திருக்கையில் அதிகமும்
யோசிக்கிறோம்

வழி நெடுக முத்தம் விதைக்கும்
உனக்குத்தான்
வழி நெடுக மஞ்சள் வானம்
பதிக்கிறேன்

குரல் தளும்ப
வார்த்தை உடையும் உன்னிடம் தான்
பரல் உடைந்த
கண்ணகியின் கால்கள் இருக்கின்றன

வெகு தூரத்தில் கேட்கும்
பாடல் ஒன்றை காற்றிசைக்கும்
வெகு அருகில் உன் மௌனம்
அதை இசைக்கும்

மெகந்தி சர்க்கஸ் பார்த்தால்
நான் வேண்டும் உனக்கு
நெடுநல்வாடை பார்த்தால்
நீ வேண்டும் எனக்கு

காலத்தை மறைத்த காட்டுக்குள்
மனம் வளர்க்கிறாய்
உன் மனதில் வளர்ந்த நானோ
உனக்கு காடு வளர்க்கிறேன்

கடலைமிட்டாய் கைவீசி
பாவாடை சட்டையில் நீ ஓடிய
தெருவில் கோலி குண்டு விளையாட
கனா கண்டேனடி தோழி
கனவு கலைந்தும்
கடலை மிட்டாய் இனித்ததை இனி
எப்படி சொல்வேனடி நீலி...!

- கவிஜி