I

அகப் பாடல்களின் உள்ளார்ந்த அனுபவங்களை எளிதாக விளக்கிவிட முடியாது. தெரிந்த பொருள்களைக் கொண்டே அவ்வனுபவங்களை ஒருவாறு குறிப்பாக உணர்த்த முடியும். குறிப்பாக உணர்த்தியதிலிருந்தே உண்மையான (ideal love) காதலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். அகம் என்பதே தனிப்பட்ட அல்லது தனிமனிதனின் அனுபவம். அதே நேரத்தில் உலகப் பொதுமை (universal) வாய்ந்ததாகவும் அது அமைகிறது. மொழியியலார்கூட உண்மையான பேசுவோர்- கேட்போருக்கான மொழியைக் கட்டமைத்து அதற்கான இலக்கணம் படைப்பர். உலகப் பொது இலக்கணத்தைத் தேடவும் (Universal Grammar) முயற்சி செய்வர்.

காதல் என்பது உயிரினங்களின் அடிப்படைப் பண்பாக உள்ளது. ஒரு தனி மனிதனின் காதல் ஆளுமை அனைத்து மனித குலத்தையும் ஊடறுத்து மேலோங்கிப் பொதுவாக விளங்குகிறது. அகப் பாடல்களில் உறங்குகின்ற உள்மனம் விழித்துக் கொள்கிற நிலையைக் காண முடிகின்றது. இவ்வாறெல்லாம் நமது சங்க கால அகப்பாடல்களைக் குறித்து பேராசிரியர் தெ.பொ.மீ. (1976, பக். 4) விவரிக்கிறார்.

பல்வேறு மொழிகளில் காணப்படும் இலக்கியங்கள் கொண்டும் கொடுத்தும் வளர்கின்றன என்பது அவர் கருத்து. பிறமொழி இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களையும் உத்திகளையும் கொண்டும், அவற்றைப் பிற மொழிகளுக்குக் கொடுத்தும் வளர்கின்ற இலக்கிய வளர்ச்சி வரவேற்கத் தக்கதே. அவற்றைப் பலவீனமாகப் பார்க்கக் கூடாது; ஒரு வலிமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதில் தெ.பொ.மீ. தெளிவாக இருந்தார்.

II

இனி, தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை அபபிரம்சா பாடல்களோடு ஒப்பிட்டுக் காண்போம்.

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல்லாதே

இப்பாடல் காரிகை இலக்கணத்தில் இணைக்குறள் ஆசிரியப்பா என்னும் பாவகைக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சாரல் நாடனாகிய தலைவனின் கேண்மை இப்பாடலில் விவரிக்கப்படுகிறது. கேண்மை என்ற சொல் கேள் என்ற வேர்ச்சொல் அடியாகப் பிறந்த சொல். நட்பு, காதல், அன்பு, உறவு போன்ற பொருளை உணர்த்தும் பலபொருள் உணர்த்தும் ஒரு சொல். பாடலின் நடைக் கட்டமைப்பு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. நீர் x தீ, தண்மை x வெம்மை, சார்தல் x தீர்தல் ஆகிய முரண்பட்ட பொருள் தரும் சொற்கள் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன. சார்தல், தீர்தல் ஆகிய இரு சொற்களும், இரண்டு, இரண்டு முறை அடுக்கி (reduplicated) நின்று பாடல் களைகட்டித் திகழ்கிறது. இடையின ரகரம் அடிதோறும் திரும்பத் திரும்ப வந்து பாடலுக்கு மெருகேற்றுகிறது.

பாடலில் தலைவி தலைவனின் நட்பைத் தெரிந்த பொருள்களின் குணங்களைக் கொண்டே ஒருவாறு குறிப்பாக உணர்த்துகிறாள். நீரும் தீயும் தெரிந்த பொருள்கள். நீர் குளிர்ச்சி தரும். தீச்சுடும். நீரை நெருங்கினாலும் தீயை நெருங்கினாலும் அவற்றிற்குரிய குணத்தை நாமும் பெற்று விடுகிறோம். அதே சமயம் அவற்றை விட்டு விலகினால் அந்த உணர்வும் குறைந்துவிடும். ஆனால் சாரல் நாடனின் நட்பு நீரின் தண்மையையும், தீயின் வெம்மையையும் பெற்று விளங்குவதோடு, அவற்றினின்றும் வேறுபட்டும் விளங்குகிறது. சாரல் நாடனை நெருங்கும்போது எழுகின்ற காதலுணர்ச்சி அவனை விட்டு விலகும்போதும் மேலும் மேலோங்கி எழுகிறது. காதலியின் புணர்ச்சி இன்பமும் பிரிவாற்றாமையும் இப்பாடலின் வழியாக உணர்த்தப்படுகின்றன.

இதே காதல் அனுபவத்தைத் திருவள்ளுவரும் நமக்கு உணர்த்துகிறார்.

நீங்கின் தெறூஉம் குறுகும்கால் தண்என்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)

இந்தப் பெண்ணை விட்டு நீங்கினால் சூடும் ஆனால், நெருங்கினால் குளிர்ச்சியும் உடைய அதிசயத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்? நெருப்பானது பக்கத்தில் வந்தால் சுடும். விலகியிருந்தால் சுடாது. ஆனால் இவளிடம் பக்கத்தில் வந்தால் குளிர்ச்சியும் விலகினால் சூடும் இருக்கிறதே. ஆதலால் இவள் ஓர் அதிசயமான தீயாக இருக்கிறாள் (வரதராஜன், 1954, பக். 476). காரிகைப் பாடல் தலைவி கூற்றாகவும் குறள் தலைவன் கூற்றாகவும் அமைந்துள்ளன. திருவள்ளுவர் இன்னொரு பாடலில், “நெருப்பானது தன்னைத் தொட்டவர்களைச் சுடுமே தவிர, காமநோய் போலத் தன்னை விட்டவர்களைச் சுடும் ஆற்றலுடையதோ? இல்லை!” என்று கூறுகிறார்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ                   (1159)

திருக்குறளில் பிரிவாற்றாமை அதிகாரத்தில் இக்குறள் இடம்பெற்றுள்ளது.

அபபிரம்சா பாடல் ஒன்று கிட்டத்தட்ட இதே கருத்தை உணர்த்துவதுபோல காணப்படுகின்றது. “தீயினால் உலகம் வெப்பம் அடைகிறது. காற்றால் குளிர்ச்சி அடைகிறது. ஆனால் ஒருவன் நெருப்பின் பக்கத்தில் இருக்கும்போதே குளிர்ச்சியை உணர்கிறான் என்றால் அவனை எவ்வாறு வெப்பமுறச் செய்வது?”1

அக்னினா உஷ்ணம் பவதி ஜெகத்

வாதேன ஷீதலம் ததா!

யஹ புனஹ அக்னீனா ஷீதலஹ

 தஸ்ய உஷ்ணத்துவம் கதம்!!

மேலே உள்ள அபபிரம்சா பாடல் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தரப்பட்டுள்ளது. இப்பாடலில் தீயின் பொதுவான பண்பும் காற்றின் பண்பும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வரியில் காதலனின் பிரிவாற்றாமையை உணர்த்த நெருப்பின் அருகில் இருந்தும் குளிர்ச்சியை உணரும் ஒருவனை எவ்வாறு வெப்பமுறச் செய்வது என்ற கருத்து அமைந்துள்ளது. தீ, நீர் ஆகிய பொருட்களைக் கொண்டு காதலர்களின் மனத்தின்கண் நிகழும் உள்ளக் கிளர்ச்சியினைத் தமிழ்-அபபிரம்சா பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. தலைவி தந்த வேம்பின் காயை மிகவும் இனிக்கிறது என்று ஒரு காலத்தில் கூறிய தலைவன் தற்போது குளிர்ந்த சுனையிலுள்ள தெளிந்த தண்ணிய நீரைத் தந்தாலும் வெப்பமுடையது, உவர்ப்பு சுவையினதாய் உள்ளது என்று கூறினானாம் (குறுந்தொகை 196).

III

நீயின்றி அமைதல் வல்லாமாறே!

நெருப்போடு தொடர்புடைய இன்னொரு அபபிரம்சா பாடலையும் இனிப் பார்க்கலாம். தலைவன் பரத்தமை ஒழுக்கத்தை மேற்கொண்டு இல்லம் திரும்புகிறான். வீட்டிற்கு வரும் தலைவனை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க மறுக்கிறாள் தோழி. இதனை ‘வாயில் மறுத்தல்’ என்று கூறுவர். தலைவி தோழியை அழைத்து தம் தலைவனை வீட்டுள்ளே வருவதற்குச் சம்மதிக்கிறாள். இதனை ‘வாயில் நேர்தல்’ என்பர்.

விப்ரியகாரகஹ யதாஅபி பிரியஹ

ததாஅபி தம் ஆநய அத்யம்!

அக்னினாம் தக்தம் யதாஅபி கிருஹம்

ததாஅபி தேன அக்னினா கார்யம்!!

எம் காதலன் எமக்குத் தீங்கிழைத்திருந்தாலும் அவரை இன்றே அழைத்து வருக. தீ வீட்டை எரித்தாலும் தீயில்லாமல் வாழ முடியாது. அது இன்றியமையாதது. தலைவன் இல்வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவன் என்ற பொருள்பட அபபிரம்சா பாடல் அமைந்துள்ளது. இதே கருத்தை வலியுறுத்தும் ஆனால் சொல்லும் முறையில் பெரிதும் மாறுபட்ட குறுந்தொகைப் பாடல் ஒன்றை நோக்குவோம்.

கைவினை மாக்கள் தம் செய்வினை

முடிமார் சுரும்புண மலர்ந்த வாசம்

கீழ்ப்பட நீடிய வரம்பின் வாடியவிடினும்

கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்

நின்ஊர் நெய்தல் அனையேம்-பெரும!

நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்

நின்னின்று அமைதல் வல்லாமாறே   (309)

உழவுத் தொழில் செய்யும் உழவர்கள் வயலில் இறங்கி தொழில் செய்கின்றனர். நெய்தல் மலர் களைகளாக வயலில் மலர்ந்துள்ளன. அவை வண்டுகள் உண்ணும்படி தேனைக் கொண்டு வாசம் பொருந்தி விளங்குகின்றன. அம்மலர்களைக் களைந்து அவற்றை வரப்பில் வாடும்படி விடுகின்றனர். அவ்வாறு செய்த பிறகும் கொடியவர்களாகிய உழவர்களின் வயலில் நீங்கி பெயர்ந்து உறைவோம் என்று எண்ணாது மீண்டும் அந்த வயலிலே பூக்கும் நெய்தல் மலர்களைப் போல தலைவி தமக்கு இன்னல்கள் பல செய்த தலைவனை ஏற்று உன்னையன்றி பொருந்தி வாழ்வதற்கு ஆற்றல் இல்லாதவளாக இருக்கிறோம் என்று கூறுகிறாள். அபபிரம்சா பாடல் கருத்தை நேரடியாக ஒரு உவமையின் மூலம் உணர்த்துகிறது. உவமைகூட மிகவும் எளிமையானது. குறுந்தொகைப் பாடலில் உவமையும் கற்பனை நயமும் செறிந்து காணப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்

1) By fire the world becomes warm and (it becomes) cold by wind. But (when) one feels cold though near the fire, how can he (ever) become hot (p. 61).

2) Though my lover has offended me, still bring him (here) today; for even though the house is burnt down by fire, still that fire is indispensable (lit-useful). (p. 61).

துணை நூல்கள்

1) Apabhramsa of Hemechandra (edited by Kantilal Baldevram Vyas, Prakrit Text Book Society, Ahmedabad (1982).

2) Tamil-A Birds-Eye View, Meenakshi Sundaran, T.P., Makkal Nalvaalvu Manram, Madurai (1976).

3) திருக்குறள் உரை விளக்கம், ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை (நான்காம் பதிப்பு-1998).

4) குறுந்தொகை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை-17 (1999).

Pin It