சொல்லப்படாத நேசத்தின்
சொற்களும்...
இதழெங்கும் மொய்த்த
முத்தங்களும்...
சந்திப்பின் பொழுதுகளில்
இணைந்தே உதிர்ந்து
தொலைகின்றன

எடை குறைந்த சொற்கள்
எளிதாகக் கண்டடைந்து
நாவேறி காதலைச் சொல்ல...
தயக்கம் உந்த உதிர்ந்தன
மேலும் சில முத்தங்கள்

தொலைந்த முத்தங்கள்
பின்தொடர்வதை உணர்ந்த
பொழுதில்......
நம் எழுத்துகளில்
அமர்ந்து கொண்டன
உதட்டோவியமாக

காதலுக்கும் காமத்திற்கும்
இடையேயான பாலத்தை
கடக்க முடியாமல்
வரிசையாக அமர்ந்திருக்கின்றன
தொலைந்த முத்தங்கள்
தொலைத்த பொழுதின்
சுயவிவரக் குறிப்போடு

கனவுகளின்
முப்பரிமாணத் திரையில்
இதழருகே வரும் முத்தங்கள்...
ஏந்திக் கொள்ளும் முன்
எட்டச் சென்று விடுகின்றன

முத்தம் தொலைந்த
பொழுதுகளை கட்டிஇழுத்து
மனத்தடை ஒடித்து
ஒரு வன்முத்தம்
அரங்கேறும் வரையில்...

மின்திரையில் பகிரப்பட்ட
மெய்நிகர் முத்தங்கள் மட்டும்
தொலையாமல்
ஆறுதலாகின்றன

- சுசித்ரா மாரன்

Pin It