என் வீட்டுப் படலில்
படர்ந்துள்ள சுரைக் கொடியில்
இளம்பச்சையாய்க்
காய்த்துத் தொங்குகிறது
சுரைக்காய் வடிவில்
உன் நெஞ்சம்
அதன் கணுக்களில்
வெண்நிறத்தில் பூத்திருக்கிறது
என் பகல்
உன் வீட்டு வாசலில்
படர்ந்திருக்கும் பரங்கிக் கொடியில்
அடர்பச்சையாய் காய்த்திருக்கிறது
எவருமறியாது இலைகளை
இழுத்து மறைத்துக் கொண்ட
என் பச்சைக் காதல்
அதனருகே மஞ்சள் நிறத்தில் பூத்து
மோகப் பிஞ்சுடன் ஆடுகிறது
மஞ்சத்தின் கனவு
நமக்கிடையே நீளும்
தொலைவின் கோடையில்
காலம் இலைகள் உதிர்த்து நின்றாலும்
ஊரறிய உன் நீர்ச்சத்து நிறை
பேரன்பைச் சுமந்து
உருண்டுத் திரண்ட
உச்சிப் பகலாய் உயிரில்
உனைக் காய்த்துக் கிடக்கிறேன்
பூசணியாய் நிலத்தில்...
- சதீஷ் குமரன்