இலையுதிர்க்கால காலைப்பொழுதில்
அலுவலக நுழைவாயிலில்
மஞ்சள் கம்பளம் விரித்திருந்தது
வேம்பு.
கணினியை உயிர்ப்பித்து
பதிவேற்றத்திற்கென அமர்ந்தபோது
விசிலடித்துப் பழகுவதுபோல்
மெதுமெதுவாய்த் தொடங்கி
பெருங் குரலெடுத்துக் கூவியது
குயில்.
முகம்பார்க்கும் ஆவலுடன்
பதுங்கிப் பதுங்கி முன்னேறுகையில்
மொட்டை வேம்பில்
கன்னங்கரேலென்று
ஒற்றையாய்ப் பூத்திருந்தது.
நொடிப்பொழுது
துடுக்காக முகம் காட்டி
வெடுக்கென பறந்து போயிற்று.

இப்போது மீண்டும்
துளிர்க்க ஆரம்பித்துவிட்டது வேம்பு.
காத்திருக்கிறேன்
அடுத்த இலையுதிர்க்காலம் வரை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It