புதிதாய் உலகம் பூத்த போதில்
சாதியும் மதமும் ஆதியில் ஏதாம்
பொதுவாம் இயற்கையே புத்தேள் அந்நாள்
மோதலும் இல்லை நோதலும் இல்லை
கதிரும் கடலும் மதியும் மழையும்
புதிராய் மாந்தனுள் புதைந்த காலம்
மீண்டெழும் வேட்கையில் வேண்டினன் பலவும்
கண்டனன் கடவுளும் கண்மூடி வழக்கமும்
உணர்த்தப் பற்பல ஒண்மைகள் படைத்தான்
நுண்மை யோடதை உண்மை யாக்கினான்
தணியா தூக்கிப் பணியச் செய்தான்
வண்மை பொய்த்தது வண்ணஞ் சிதைந்தது
மண்ணுல கெங்கும் மண்டிய வெறியில்
மாண்டது நேயம் மூண்டது போரே!
பூத்த = தோன்றிய; புத்தேள் = கடவுள்;
ஒண்மை = விளக்கம்; நுண்மை = நுட்பம்;
வண்மை = வளப்பம் (வளம்), ஈகை; வண்ணம் = அழகு, தன்மை;
- அர.செல்வமணி