முடைநாற்றம் வீசும் சாதியத் தெருக்களில்
மடைதிறந்து வழிந்தோடுகிறது
கால் வைக்க இடமின்றி அநீதியின் குமியல்கள்
சேரி சனத்தை ஏய்த்துப் பிழைக்கத் தோதுவாய்
சாதி சாக்கடையைக் குடித்து கொப்பளித்து
நாட்டாமை செய்து ஊர்ப் பொதுச் சொத்துக்களை
நக்கிப் பிழைக்கும் வஞ்சக விசமிகளுக்கு
வாரிக்கூட்ட, பீய் அள்ள, ஏண்டவேல எடுத்து வேல செய்ய
பிணம் புதைக்க, குடை பிடிக்க, ஊருக்குள் யாருமின்றி
காலந்தோறும் சேரி மூத்திரத்தையே
குடித்து குடித்து ருசி கண்ட மிருகம்; இப்போது
சேரியினம் தலைநிமிருவதைத் தாங்கமுடியாமல்
ஊரெங்கும் கால்பெருக்கி அடவெடுத்து அலைந்து
சேரிக் குடியிருப்பை சிதைத்தும் சேரி உயிரை வதைத்தும்
தனதிருப்பை தக்கவைக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது
உயிரிழப்புகளையோ சாதியக் கொடுமைகளையோ சந்திக்காத
சேரிகளே இல்லை
சந்தித்த அத்துணை கொடுமைகளுக்கெதிராக குரல் கொடுக்காத
நாட்களும் இல்லை
உரிமைகளை மீட்டெடுக்கவும் அடிமைத்தனங்களை அறுத்தெறியவும்
சாதிக்கெதிரான அறிவாயுதத்தை வாழ்நாள் முழுதும்
கையிலெடுத்து போராடிக்கொண்டிருக்கும் எங்களை
எத்தனை முறை தீயிட்டுக் கொளுத்தினாலும்
காட்டுத்தீ போல் பரவிக்கொண்டேயிருக்கக் கூடும்
எங்களின் உயிரும் உரிமையும்!
- வழக்கறிஞர் நீதிமலர்