தீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை எப்படிப்பட்டது என்பதைக் காண்பதற்கு முன், இந்தியாவில் தீண்டாதவர்களின் மொத்த மக்கள் தொகை என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும். இதற்கு நாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையைப் பார்க்கவேண்டும்.

ambedkar 456இந்தியாவின் முதலாம் பொதுமக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881-இல் நடத்தப்பட்டது. பல்வேறு சாதிகளையும் சமயப் பிரிவுகளையும் பட்டியலிட்டு இவற்றின் மக்கள் தொகைகளைக் கூட்டி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையைக் கணக்கிட்டதைத் தவிர 1881-இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வேறெதுவும் செய்யப்படவில்லை.

இந்துச் சாதிகளை மேல், கீழ் என்றோ, தீண்டத்தக்கவர், தீண்டாதவர் என்றோ வகைப்படுத்துவதற்கு அதில் முயற்சி செய்யப்படவில்லை. இந்தியாவின் இரண்டாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1891-இல் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில்தான் முதல் முறையாக மக்கள் தொகையைச் சாதி, இனம் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி, மேல், கீழ் என்று தரவரிசைப்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இது ஒரு முயற்சி மட்டுமே.

இந்தியாவின் மூன்றாம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1901-இல் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் ஒரு புதிய வகைப்படுத்தும்

முறை பின்பற்றப்பட்டது. “நாட்டின் பொதுமக்கள் கருத்தினால் ஏற்கப்பட்ட சமூகவரிசைப்படி வகைப்படுத்தல்” என்பது இந்த முறை சாதிகளின் அடிப்படையில் மக்கள் தொகையைக் கணக்கிடுவதைச் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சாதி பற்றிய கேள்வியை விட்டுவிட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இந்த எதிர்ப்பை மக்கள் தொகை ஆணையர் பொருட்படுத்தவில்லை. சாதி அடிப்படையில் மக்கள் தொகையைக் கணக்கிடுவது முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் என்று அவர் கருதினார். ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சாதியின் நன்மை தீமைகள் என்னவாயிருந்தபோதிலும், சாதியை ஒரு முக்கிய அம்சமாகக் கொள்ளாமல், இந்தியாவில் மக்கள் தொகைப் பிரச்சினை பற்றி விவாதிக்க முடியாது என்று மக்கள்தொகை ஆணையர் வாதம் செய்தார் இன்னமும் ‘சாதிதான் இந்திய சமூக அமைப்புக்கு அடிப்படையாக’ உள்ளது.

சாதியைப் பற்றிய பதிவுதான் ‘இந்திய சமூகத்தில் பல்வேறு சமூக அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்குச் சிறந்த வழிகாட்டியாகும்’. ஒவ்வொரு இந்துவும் (இந்தச் சொல் இதன் மிக விரிவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது) ஒரு சாதியில் பிறக்கிறார்; சாதிதான் அவருடைய சமய, சமூக,பொருளாதார, குடும்ப வாழ்க்கையைத் தொட்டில் முதல் சுடுகாடு வரையில் தீர்மானிக்கிறது மேற்கு நாடுகளில் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைத் தீர்மாணிக்கும் விஷயங்களான செல்வம், கல்வி, தொழில் ஆகியவை பிறப்பினாலும், பரம்பரை முறையிலும் வருகின்ற அந்தஸ்துகளின் இறுக்கத்தைத் தளர்த்த உதவுகின்றன.

இந்தியாவில், ஒரு ஆன்மிக, சமூக சமுதாயச் சார்பும் மரபு வழிப்பட்ட தொழிலும் மற்ற எல்லா அம்சங்களையும் விட முக்கியமாகின்றன. மேற்கு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்குகளில் மக்களைப் பொரிளாதார அல்லது தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவுலளாக வகைப்படுத்துவது மக்கள் தொகைப் புள்ளி விவரங்களை இணைத்துத் தொகுப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. இந்திய மக்கள் தொகைக் கணக்கில் சாதி, சமய வேறுபாடுகளே இது போன்ற அடிப்படையாக அமைக்கின்றன. ஒரு தேசிய அல்லது சமூக அமைப்பு என்ற முறையில் சாதியைப் பற்றி என்ன கருத்தைக் கொண்டாலும், அதைப் புறக்கணிப்பது பயனற்றது. ஒரு தனி மனிதனின் அதிகார பூர்வ மற்றும் சமூக நிலையை அடையாளங்காட்டும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகச் சாதி பயன்படுத்தப்படும் வரை, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை அதைக் கணக்கெடுப்பது விரும்பத்தகாத ஒரு அமைப்பை நிரந்தரமாக்க உதவுகிறது என்று கூறமுடியாது.

1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தீண்டாதோரின் மொத்த மக்கள்தொகை பற்றிக் குறிப்பான எண்ணிக்கை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாக, யார் தீண்டாதவர் என்பதைத் தீர்மானிப்பதற்குக் குறிப்பான உரைகல் முறை எதுவும் பின்பற்றப்படவில்லை. இரண்டாவதாகப், பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின் தங்கிய, ஆனால் உண்மையில் தீண்டாதோர் அல்லாத ஒரு பிரிவு மக்கள், திண்டாதோருடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டார்கள்.

1911-இல் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு படி முன்சென்றது. தீண்டாதோரைத், தீண்டத்தக்கவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காண்பதற்குப் பத்து நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நெறிமுறைகளின் படி, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளர்கள் பின்வரும் அடிப்படையில் தனியான சாதிகளையும் பழங்குடிகளையும் கணக்கெடுத்தார்கள்:(1) பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுப்பவர்கள்; (2) பிராமண குரு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்; (3) வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள்; (4) பெரிய இந்துக் கடவுளர்களை வழிபடாதவர்கள்; (5) நல்ல பிராமணர்களின் சேவை அளிக்கப்படாதவர்கள்; (6) பிராமணப் புரோகிதர்களே இல்லாதவர்கள்; (7) சாதாரண இந்துக் கோவில்களில் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள்; (8) தீட்டு ஏற்படுத்துபவர்கள்; (9) தங்களில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள்; (10) மாட்டிறைச்சி உண்பவர்கள், பசுவைப் புனிதமாகக் கருதாதவர்கள்.

தீண்டாதோரை இந்துக்களிடமிருந்து தனியாகப் பிரித்துக் கருதவேண்டும் என்று முஸ்லிம்கள் 1910 ஜனவரி 27-ஆம் தேதியிட்டு அரசுக்களித்த ஒரு மனுவில் கோரியிருந்தார்கள். நாட்டின் அரசியல் அமைப்புகளில் தங்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் தீண்டத்தக்க இந்துக்களின் மக்கள் தொகை விகிதாசாரப்படி இருக்க வேண்டும் என்றும் இந்துக்கள் அனைவரையும் சேர்த்த மொத்த அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறினார்கள். ஏனென்றால், தீண்டாதோர் இந்துக்களல்ல என்று அவர்கள் வாதிட்டார்கள்.

இது ஒரு புறம் இருக்கட்டும். 1911 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தான் தீண்டாதோரின் மக்கள் தொகையைக் கண்டறிவதற்குத் தொடக்கமாக அமைந்தது. 1921 மற்றும் 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் இதே போன்ற முயற்சி தொடர்ந்தது.

இந்த முயற்சிகளின் விளைவாக, 1930-இல் இந்தியாவுக்கு வந்த சைமன் கமிஷன் பிரிட்டிஷ் இந்தியாவில் தீண்டாதோரின் தொகை 4.45 கோடி என்று ஓரளவு நிச்சயமாகக் கூற முடிந்தது.

ஆனால், திடீரென்று 1932-இல், இந்துக்கள் சவால் விடும் மனப்போக்கை மேற்கொண்டு இந்தக் கணக்கை ஏற்க மறுத்தார்கள். அந்த ஆண்டில், சீர்திருத்தப்பட்ட சட்ட சபைகளுக்கான வாக்குரிமை பற்றி ஆராய்வதற்காக லோதியன் கமிட்டி இந்தியாவுக்கு வந்து, தனது ஆய்வுகளைத் தொடங்கிய போது இந்தியாவின் தீண்டாதோர் தொகை என்று சைமன் கமிஷன் கூறிய எண்ணிக்கையை இந்துக்கள் ஏற்க மறுத்தார்கள். சில மாகாணங்களில் இந்துக்கள், தீண்டாதோர் என்று யாருமே இல்லை என்று கூடக் கூறினார்கள். தீண்டாதோர் இருப்பதாக ஒப்புக்கொள்வதன் அபாயத்தை இந்துக்கள் இதற்குள் உணர்ந்து கொண்டதே இதற்குக் காரணம். இந்துக்கள் தாங்கள் அனுபவித்து வந்த பிரதிநிதித்துவத்தில் ஒரு பகுதியைத் தீண்டாதோருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதே இந்த அபாயம்.

1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், போர்க்காலத்தில் நடத்தப்பட்ட அந்தக் கணக்கெடுப்பு ஒரு சுமாரான மதிப்பீடேயாகும்.

கடைசியாக நடந்துள்ளது 1951-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. பின்வரும் புள்ளி விவரங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து எடுத்துத் தரப்படுகின்றன. இந்தியாவில் ஷெட்யூல் வகுப்பினரின் மக்கள் தொகை 513 லட்சம் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் தெரிவிக்கிறார்.

1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 3,567 லட்சம். இந்தக் கணக்கில், ஜலந்தரில் உள்ள மக்கள் தொகை பட்டியலிடும் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்து போன ஆவணங்களில் சம்பந்தப்பட்ட 1.35 லட்சம் பேர் மக்கள் தொகை சேர்க்கப்படவில்லை.

மொத்த மக்கள் தொகையான 3,567 லட்சத்தில் 2,949 லட்சம் மக்கள் கிராமப் பகுதிகளிலும், 618 லட்சம் மக்கள் நகரப் பகுதிகளிலும், வசிக்கிறார்கள். கிராமப் புறங்களில் உள்ள ஷெட்யூல் சாதி மக்களின் தொகை 462 லட்சம்; நகர்ப் புறங்களில் உள்ள ஷெட்யூல் சாதி மக்கள் 51 லட்சம் பேர்.

விவசாய மல்லாத தொழில் செய்யும் வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில், 1,076 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 132 லட்சம்.

முற்றிலுமாக அல்லது முதன்மையாகத் தங்களுக்கச் சொந்தமல்லாத நிலத்தில் பயிரிடுவோரும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு முழுவதிலும் 316 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 56 லட்சம்.

சாகுபடித் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தியா முழுவதிலும் 448 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 148 லட்சம்.

விவசாயமல்லாத தொழில் பிரிவுகளுக்கான புள்ளிவிவரங்கள் வருமாறு:

சாகுபடியல்லாத வேறு உற்பத்தித் தொழில்கள் : மொத்தம் 377 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 53 லட்சம்.

வர்த்தகம் : மொத்தம் 213 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 9 லட்சம்.

போக்குவரத்து : மொத்தம் 56 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 6 லட்சம்.

மற்ற சேவைகளும் பலவகைத் தொழில்களும் : மொத்தம் 430 லட்சம்; ஷெட்யூல் சாதிகளில் 64 லட்சம்.

ஷெட்யூல் சாதிகளின் மொத்த மக்கள் தொகையான 513 லட்சத்தில் 114 லட்சம் பேர் வட இந்தியாவில் (உத்தரப் பிரதேசம்) வசிக்கிறார்கள்; 128 லட்சம் பேர் கிழக்கு இந்தியாவில் (பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா) வசிக்கிறார்கள்; 110 லட்சம் பேர் தென்னிந்தியாவில் (சென்னை, மைசூர், திருவாங்கூர் – கொச்சி, குடகு) வசிக்கிறார்கள்; 31 லட்சம் பேர் மேற்கு இந்தியாவில் (பம்பாய், சௌராஷ்ட்ரா, கட்ச்) வசிக்கிறார்கள்; 76 லட்சம் பேர் மத்திய இந்தியாவில் (மத்தியப் பிரதேசம், மத்திய பாரத், ஹைதராபாத், போபால், விந்தியப் பிரதேசம்) வசிக்கிறார்கள்; 52 லட்சம் பேர் வட மேற்கு இந்தியாவில் (ராஜ்ஸ்தான், பஞ்சாப், பட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் சமஸ்தானங்கள் யூனியன், அஜ்மீர், தில்லி, பிலாஸ்புர், இமாசலப் பிரதேசம்) வசிக்கிறார்கள்.

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 2)

Pin It