கீற்றில் தேட...

சப்தங்களின் நுரைவடிந்து
கரை ஒதுங்கிய சொற்கள்
இறந்து கிடக்கின்றன
நீ ஏதும் பேசாத
இவ்வேளையில்

மணியோசை கேட்காத
கோயிலைப் போல
ஒலியிழந்து கிடக்கிறது
என் அலைபேசி
உன் அன்பை பேசாமல்..!

பிரிவை வலியுறுத்தி..
நீ பேசிய சொற்களில் எல்லாம்
உன் பிரியங்களே
வழிந்து கிடந்தன..!

அதிகாரம் என்பது
அன்புக்கு எதிரானது
நீ செய்யும் அதிகாரம்
அன்பைப் போல் சுகமானது..!

உறவைப்
பிரார்த்தனை செய்து கொண்டே
பிரிவில் விழுந்தவள் நீ..!

பிரிவை
பிரார்த்தனை செய்து கொண்டே
உறவில் கலந்தவன் நான்..!

- அமீர் அப்பாஸ்