என் கவிதையின் சொற்களைக் கொண்டு
பழைய காலத்தை மீட்க முடியுமாவென்று கேட்கிறார்கள்
பசித்த நிலங்களுக்கு நீர் வார்க்க முடியுமாவென கேட்கிறார்கள்
ஒரு நாட்டின் விடுதலையை கவிதையின் சொற்கள்
வாங்கித்தருமா என்கிறார்கள்
எனக்கும் என் கவிதைக்குமிடையே எவ்வித கடிதத் தொடர்புமில்லை
ஒரு கவிதையின் வேலை என்னவென்று கவிதைக்குத்தான் தெரியும்
சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமென்று
யாரும் மதவாதிகளைக் கேட்டதில்லை
வேதங்கள் புராணங்கள் புனித நூல்கள்
இறைவசனங்கள் இன்ன பிற இத்தியாதிகள் எல்லாவற்றிலும் சொற்கள்
அந்த சொற்களின் ஆயுள் நீளம் எவ்வளவோ
அவ்வளவு காலத்திற்கு உண்மை போராட வேண்டியிருக்கும்
கவிதைகள் எலி வலையல்ல; யுத்த கால முகாம்கள்
கனவுகளை கவிதையில் வைக்கப் பழகியிருக்கிறோம்
போராட்டங்களை போர்க்களங்களை சொற்கள்தான் சொல்கின்றன
மீனவர்கள் வலைகளோடு சென்றிருக்கிறார்கள்
தென்கடல் சிவந்து கொண்டிருக்கிறது இரத்தத்தினால்
எதிரியால் சுடப்பட்டு வீடு திரும்புகின்றன தமிழர்களின் பிணங்கள்
வெறும் அழுகையைத்தான் கவிதையில் வைத்திருக்கிறோம்
துப்பாக்கியையல்ல
கவிதையில் ஆயுதங்கள் இருக்குமிடத்தில்
கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்
போராட்டங்கள் உலவும் இடத்தில் தேசப்பற்றை வைத்திருக்கிறோம்
எங்களுக்குத் தெரியும் நாங்கள் அதிகமாக இழந்திருக்கிறோமென்று
இராமேஸ்வரம் கடலில் மிதக்கும் குருதி யாருடையது
கவிதையில் சொற்களின் மீதிருக்கும் குருதியைத் துடைத்துவிட்டு
அந்த இடத்தில் இறையாண்மையை வைத்திருக்கின்றோம்
வெளியேயும் உள்ளேயும் போராடிக்கொண்டுதானிருக்கின்றன சொற்கள்
அநீதிகளை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன
கவிதை யாரிடமும் சென்று முறையிடுவதில்லை
காவிரியில் தண்ணீர் இன்றோ நாளையோ
சாகப்போகும் கிழவனைப்போல நடந்து வருகிறது
கவிதை திருவரங்கநாதனிடம் முறையிடவில்லை
முல்லைப் பெரியாறில் உரிமை இழந்துகொண்டிருகிறோம்
கவிதை பத்நாபசாமியிடம் முறையிடவில்லை
மீனவர்களின் படகில் சடலங்கள் வருகிறது
கவிதை ராமேஸ்வர ஈசனிடம் முறையிடவில்லை
இந்த நிலத்தில் கடவுளைப் போலத்தான் தலைவர்களும் இருக்கிறார்கள்
எல்லாவித உபசரணைகளுடன்
கவிதை அவர்களிடமிருந்து விலகியிருக்கிறது
கவிதை யாரையும் கொலைசெய்வதில்லை
அல்லது தற்கொலை செய்யத் தூண்டுவதில்லை
கவிதைகள் கூடாரங்களாகத்தான் இருக்கின்றன
எங்களுக்காக காத்திருக்கின்றன
இந்த தேசத்தில் அடிக்கடி நாங்கள் காணாமல் போய்விடுகிறோம்
அப்போது எங்கள் கவிதைகள்தான் எங்களை கண்டுபிடித்துத் தருகின்றன
- கோசின்ரா