tamilnadu templeதிமுக ஆட்சியில் அமர்வதற்கு முன்பே இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்து பிஜேபியினரையே வாயை பிளக்க வைத்தது.

திமுகவிற்கு இப்போது உள்ள ஒரே பிரச்சினை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்பதைவிட தன் மீது இந்துத்துவவாதிகளால் குத்தப்பட்டுள்ள இந்து விரோத முத்திரையை இல்லாமல் ஆக்குவதுதான்.

அதற்காக அது மெனக்கெட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர் பாபு அவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்பு என்ற செய்தி வராத நாளே இல்லை என்னும் அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

நிச்சயம் கோயில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கோயில் நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என்று பெயரில் வெளியேற்றப்படுபவர்களில் பலர் வீடற்ற, நிலமற்ற சாமானிய மக்கள் என்பதை பார்க்கும் போது இந்த அரசு உண்மையில் கடவுளுக்காக வேலை செய்கின்றதா இல்லை கஞ்சிக்கு வழியில்லாதவர்களுக்காக வேலை செய்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

வடபழநி கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 5.52 ஏக்கர் நிலம் மற்றும் சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் என தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அங்கே பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள் தற்போது வீடற்றவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு அவர்கள் 'இது டிரெய்லர் தான்; இனி தான் மெயின் பிக்சரை பார்க்கப் போகிறீர்கள்...' என, பேட்டி அளித்துள்ளார்.

அப்படி என்றால் இன்னும் பல ஆயிரம் குடும்பங்கள் கடவுளின் பெயரால் வீடற்றவர்களாக ஆக்கப்பட போகின்றார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கோயில் நிலங்களில் இருந்து சாமானிய மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வழக்கு தொடுப்பவர்களும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பவர்களும் யாரும் ஒரு வேளை சோற்றுக்கு வழியற்ற சாமானிய பக்தன் இல்லை என்பதையும் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு தின்று கொழுத்த பன்றிகள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் கோயிலை சுற்றவும், பாதயாத்திரை போகவும் பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேற்ற அரசுக்கு கோரிக்கை வைக்கின்றார்கள். அவர்களை பொறுத்தவரை அங்கு வசிக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது.

பஞ்சைபராரிகள். அவர்கள் கோயிலின் அழகையும் தங்களின் ஆன்மீக அரிப்பையும் கெடுக்கின்றார்கள். எனவே அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற வேண்டும்.

இதுவரை 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 5.25 ஏக்கர் சொத்துக்கள் இருந்ததாகவும்.

ஆனால் தற்போது 4.75 ஏக்கர் நிலங்கள் மட்டுமே அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மீதமுள்ள 50,000 ஏக்கர் நிலம் மாயமாக மறைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். இப்போது பிரச்சினை மீட்கப்பட்ட கோயில் நிலங்களையும் இன்னும் கோயிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்களையும் இந்த அரசு என்ன செய்யப்போகின்றது என்பதுதான்.

தமிழ்நாட்டில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடின்றி, வீட்டுமனையின்றி, சாலையோரங்களில், ஆற்றுக்கரைகளில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

சென்ற அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை (நிலை) எண்.318, நாள்.30.08.2019 படி ஆட்சேபகரமற்ற புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த இடத்தையே வரன்முறை செய்து பட்டா வழங்கிடவும், கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிடவும், நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற இடங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துத்தரவும், மேய்கால், மந்தைவெளி உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கிடவும் உறுதி அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 26 வகையான புறம்போக்கு நிலங்களில் பெரும்பகுதி வசதி படைத்தவர்கள், உள்ளூர் ஆதிக்க சக்திகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதில் ஒருபகுதியை சிலர் முறை கேடாக பட்டா பெற்று வைத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளில் அப்படி வருவாய் நிலை ஆணைக்குப் புறம்பாக (Revenue Standing Order) பணபலத்தாலும், அரசியல் பலத்தாலும் வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்தும், மனை இல்லாதவர்களுக்கு மனைகளையும் இந்த அரசு வழங்க முன்வர வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் நிலம் இல்லாமல் தினக்கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஊரகக் குடும்பங்களின் எண்ணிக்கை 56% ஆகும். இவர்களுக்கும் நிலங்களை பிரித்துக் கொடுக்கலாம்.

மேலும் கோயில் நிலங்களை முரட்டுத்தனமாக மீட்கும் திமுக அரசு மனசுத்தியோடு நேர்மையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களையும் மீட்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில் பட்டியலின, ஆதி திராவிடர் இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் 12 லட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலத்தில் தற்போது 1 இலட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம்தான் இருப்பதாக நில நிர்வாகத் துறை கூறுகிறது. மீதியுள்ள 10 இலட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோயில் நில ஆக்கிரமிப்பைவிட பஞ்சமி நில ஆக்கிரமிப்பு அளவில் பிரமாண்டமானதாக உள்ளது. மேலும் இது நேரடியாக தலித் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பொருளாதார விடுதலையோடும் நேரடியாக சம்மந்தப்பட்டது.

ஆனால் ஆன்மீக தொந்திகளின் ஆசிர்வாதத்தை பெற மெனக்கெட்டு எடுக்கப்படும் நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட இதற்காக செய்யப்படுவதில்லை.

எனவே முற்போக்கு திமுக அரசு உடனடியாக கோயில் நிலங்களில் வீடற்ற ஏழை மக்களுக்கு பட்டா போட்டு தருவதோடு பஞ்சமி நிலங்களையும் மீட்டு அதற்கு உரிய மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

மற்றபடி 1000 கோடி ரூபாயை கோயில் புனரமைப்புக்காக செலவிட்டாலும் ஆன்மீக சுற்றுலா செல்ல நிதி உதவி அளித்தாலும் அதைப்பற்றி எல்லாம் நமக்கு கவலையில்லை.

நமது கவலை எல்லாம் கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களை கடவுளை காப்பாற்றுகின்றேன் பேர்வழி என்ற பெயரில் அடித்து விரட்டி அவர்களை வீடற்றவர்களாக ஆக்க வேண்டாம் என்பதுதான்.

கடவுள் தூணிலும் இருந்து கொள்வான் துரும்பிலும் இருந்து கொள்வான். ஆனால் சாமானிய உழைக்கும் மக்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் நாகரீகமாகவும் வாழ ஒரு வீடு தேவை என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It