இந்த 5ஆவது தொடரை படிப்பவர்கள் இதன் முந்தைய 4 தொடர்களையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிடுவது அவர்களுக்கு ஒரு நியாயமான புரிதலை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என்பதில் அய்யமேதுமில்லை. வரலாற்றின் முன்னும் பின்னும் உடனுக்குடன் பயணித்து உண்மை ஆய்வுகளையும் நிகழ்வுகளையும் கண்டறிய ஏதுவாக நீங்கள் என்னுடன் “டைம் மெஷினில்” பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள் தோழமைகளே.

சரி இப்பொழுது தொடர் ஐந்திற்கு வருவோம். சேரன்மாதேவி குருகுல நிகழ்வுகளும், அதுபற்றிய அக்கிரமங்களை தாம் எவ்வளவு ஆதாரங்களுடன் பலமுறை எடுத்துச் சொல்லியும் அவற்றை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்ததாலும்; வ.வே.சுப்ரமணிய ஐயரின் மேல் டாக்டர் வரதராசுலு நாயுடு அவர்கள் வைத்திருந்த அதீத குருட்டு நம்பிக்கையும் தந்தை பெரியாரைச் சோர்வடையச் செய்திருந்த நிலையில்தான் காங்கிரசில் இருந்துகொண்டே, பெண்ணுரிமை, பெண்களுக்கான கல்வியுரிமை, கைம்பெண் மறுமணம் ,தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்பில் பார்ப்பனரல்லாதோருக்கு முன்னுரிமை மற்றும் குழந்தை திருமணத்தை தடை செய்தல் போன்ற செயல்முறைகளை முன்னிறுத்தி பல போராட்டங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தியது.

இதை மக்களிடையே எளிமையாகக் கொண்டு செல்ல ஏதுவாக தந்தை பெரியார் உண்மை விளக்கம் பிரஸ் எனும் அச்சகத்தை தொடங்கி 2 மே 1925ஆம் ஆண்டு குடிஅரசு என்கிற பெயரில் புதிய வார இதழை தொடங்கினார். இதே ஆண்டில்தான் 22 நவம்பர் 1925இல் நடைபெற்ற காஞ்சிபுர காங்கிரஸ் மாநாட்டிலிருந்து தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதையும் நமது முந்தைய பதிவுகளிலிருந்து மீண்டுமிங்கே ஒருமுறை நினைவுகூர்தல் நல்லது. எது எப்படியிருப்பினும் தந்தை பெரியார் எனும் பேராசானின் மூளையில் இருந்து உருவானதுதான் இந்த மாபெரும் சுயமரியாதை இயக்கம் என்பதில் நமக்கு பெருமையே.

17 டிசம்பர், 1920 முதல் 14 ஜூலை, 1937 வரையிலான 17 ஆண்டு காலங்களில் நடந்த தேர்தல்களில் பதவியேற்ற ஐந்து அமைச்சரவைகளில்; நான்கு முறை நீதிக்கட்சியே அமைச்சரவை அமைத்து, மொத்தம் 13 ஆண்டுகள் அது ஆட்சியில் இருந்து ஆட்சி நடத்தியது. 14 நவம்பர் 1935இல் சென்னையில் திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில்; ஏற்கனவே தந்தை பெரியாரால் அதாவது 29 மற்றும் 30 செப்டம்பர் 1934இல் இரண்டு நாள்கள் நடைபெற்ற சென்னை தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டிற்கு அனுப்பப்பட்ட சம தர்ம வேலைத்திட்டங்களை (ஆதாரம்:பகுத்தறிவு -23.9.1934) பற்றி விளக்கிப் பேசுமாறு தந்தை பெரியாரை திரு. பொப்பிலி ராஜா முன்மொழிந்து கேட்டுக் கொண்டார்.

சம தர்ம வேலைத்திட்டமாவது:-

  1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்தத் தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிகத் தாங்க முடியாததாகவும் இருப்பதால், அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும் மீத்துப் பெருக்கி வைப்பதற்கு இலாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.
  2. பொது ஜனத் தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.
  3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  4. விவசாயிகளுக்கு இன்றுள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
  5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும் படியாகவும். ஓர் அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா சாதி - மதங்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடு செய்வதுடன், இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்துத் தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிருவாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். சாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ, உயர்வு - தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாள்வதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
  7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும், மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்த வேண்டும்.
  8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்பரேட்டிவ் இலாக்கா ஆகிவைகள் இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிருவாகம் செய்ய வசதிகள் செய்து, தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிருவாகம் செய்ய வேண்டும்.
  9. விவகாரங்களையும், சட்டச் சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவுவரி விதிக்கப்பட வேண்டும்.
  10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து, அச்சட்டங்களினால் அமலில் கொண்டுவரக் கூடியவைகளைச் சட்டசபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளைக் கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பெரும் பணக்காரர்கள் இருந்ததாலேயே அவர்களுக்காகத்தான் நீதிக் கட்சி உண்டாக்கப்பட்டது என்று வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசுகிறவர்கள்; எத்தகைய செல்வந்தர்கள், மிட்டா மிராசுகள் அடங்கிய இந்த கூட்டத்தில்தான், இத்தகைய பொதுவுடைமைக் கோட்பாடுகளை உள்ளடக்கிய வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மட்டுமன்றி, இன்றைக்கு சுமார் 83 ஆண்டுகளுக்கு முன்பாகவே வெற்றியுடன் இது நடந்திருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்கிற எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக அரசினரால் அடையாளம் காணப்பட்டு, 1909லேயே சென்னை ராஜதானியின் சட்டசபைக் கவுன்சிலில் நியமன உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். 1935ஆம் ஆண்டு இயற்றபட்ட சட்டப்படி இரட்டை ஆட்சி முறை; அதுவரையில் நடைமுறையில் இருந்த 1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப் படி நடைபெற்ற நீதிக்கட்சி ஆட்சியில் ஒரு முதலமைச்சர் 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 இந்தியர் மட்டுமே அமைச்சர்களாக இருந்த முறை நீங்கப் பெற்று, முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கே இருந்தது என்பதை இங்கே தேவை கருதி நினைவுகூர வேண்டியுள்ளது.

நீதிக் கட்சி ஆட்சியில் அரிசனங்கள் எவரும் அமைச்சராக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி வைக்கிறார். (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் பிற மொழியினர்’ என்ற நூலில் பக்கம் 81). பரவாயில்லை, ஆனால் நாம் கேட்க மறந்துபோன கேள்வியும் இங்கே ஒன்று உள்ளது. அதுதான், 1937இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. எனினும் 10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி பிரகாசம், டாக்டர் டி எஸ் எஸ் இராஜன், வி.வி. கிரி ஆகிய 4 பேர் பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்; சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. இது நியாயமா என்பதை ம.பொ.சி. அன்பர்கள்தான் கூற வேண்டும். இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை பொம்மையாக ஆட்சியில் அமர வைத்துக் கொண்டு, ஆதித்திராவிடர்களுக்கு எதிராகப் பல காரியங்களை இராஜாஜி செய்தாரே, அது நியாயமா? இதைத்தான் இன்று திரு சீமான் போன்றோர்கள் ஆதரிக்கிறார்களா என்றும் வியப்பாக உள்ளது.

எம்.சி.இராஜாவை நீதிக்கட்சியில் சேர்த்த பெருமை திரு. நடேச முதலியாரையே சாரும். ஆம் நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு முனபே நடேச முதலியார், ராஜாவை அரவணைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிக்கட்சியில் பெரும் நிலப் பிரபுக்களும், வர்த்தகப் பிரமுகர்களும், படிப்பாளிகளும் இருக்கையில்; அங்கு சாமானிய மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத குறையை எம்.சி.ராஜாதான் நிரப்பினார். ஒரு பட்டதாரியாக இருந்த ராஜா, உத்தியோக வேட்டையில் இறங்காமல், தமது சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வந்தார். தாழ்த்தப்பட்டோர் முன்னேற இந்து சமூகத்திலிருந்து வெளியேறுவது தாழ்த்தப்பட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என உறுதியாக நம்பினார். நடைமுறை நிலையை உணர்ந்து, தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் பட்டியல் வேண்டும் என தன்னுடைய கோரிக்கையை மாற்றிக் கொண்டு, தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என்று ஒப்புக் கொண்டார். நடேச முதலியாரும், டி.எம். நாயரும் நீதிக் கட்சியில் தாழ்த்தப்பட்டோரின் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பிய நேரத்தில்தான், டி.எம்.நாயரின் மறைவும், தியாகராயச் செட்டியால் நடேச முதலியார் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதும், எம்.சி.ராஜாவுக்கு நீதிக் கட்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், அவர் கட்சியில் நீடித்து வந்தார்.

இதுவொருபுறமிருக்க, 1900-களில் சுமார் 20,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கிய மாபெரும் வாழ்வாதாரமாக விளங்கியது பிரிட்டிஷ்காரரான பின்னி என்பவர் தொடங்கிய ஆலை இது. சுமார் ஒரு லட்சம் குடும்ப உறுப்பினர்கள் அந்த ஒரு மில்லை நம்பி இருந்தனர். அன்றைய சென்னையின் ஜனத்தொகையில் அது கணிசமானது. வட சென்னை மக்களின் மாபெரும் பழக்க வழக்கக் காரணியாகவும் அந்த மில் இருந்தது. ஆண்டாண்டு காலமாகப் பாட்டாளிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் மூலம் அவர்களின் வாழ்வை ஒரு பொம்மலாட்டமாகவே வைத்து வேடிக்கை பார்ப்பதில் கைதேர்ந்தது ஐரோப்பிய ஏகாதிபத்தியம் என்றால் மிகையல்ல. 1921-இல் நடந்த தொழிற் சங்கப் போராட்டம் சாதிப் போராட்டமாக மாறியது!

அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பிரிவாகவும், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அணியாகவும் மாறினர். பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். தலித் மக்கள் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தனர். அது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்தியாவின் முதல் தொழில் சங்கத்தில் இப்படித்தான் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது என்பதை பதிகிறேன். தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில் திரு.வி.க., தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்.

சம்பள உயர்வு பேச்சு வார்த்தை, வேலை நிறுத்தம், மில்லில் நடக்கும் கெடுபிடி, அங்கு நடந்த சுவாரஸ்யம் தான் அவர்களின் பேச்சில் முக்கியப் பங்கு வகிக்கும். ஷிப்டு, சாப்பாடு, தொழிற் சங்கத் தலைவர் குசேலர், சுப்பு இப்படித்தான் பேச்சு இருக்கும். அந்த மில்... அந்தத் தொழிலாளர்களின் வாழ்வின் அங்கம், கலாசாரமாக மாறியிருந்தது. இந்நிலையில் 1921-இல் சென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் மில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது அது பிராமணரல்லாத பிற சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான சண்டையாக உருவெடுத்தது. அதற்கு காரணம் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.சி.ராஜா தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுக்கச் செய்துவிட்டதன் விளைவு அது.

நீதிக் கட்சியின் போக்கால் அதிருப்தியடைந்த ராஜா, 1922-இல் அதிலிருந்து வெளியேறினார். அவரைப் பின்பற்றித் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் நீதிக் கட்சியிலிருந்து விலகினர். 1923-இல் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய ஆதி திராவிடர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராஜா, ‘புளியந்தோப்பு கலவரத்திலிருந்துதான் ஜஸ்டிஸ் கட்சித் தவைர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக எவரும் எண்ண வேண்டாம். அதற்கும் நீண்ட காலம் முன்பிருந்தே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் மேலாதிக்கப் போக்குடன் வெளிப்படையாகவும் மறைவாகவும் தாழ்த்தப்பட்டோரை நசுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள். என்று பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீதிக்கட்சி ஆதித்திராவிடர்களுக்காக செய்தது என்ன? அப்படி என்ன தீங்கிழைத்து விட்டது?

(1) 20 பிப்ரவரி 1922-இல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதித்திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும்” என்பதே அது. எண் 217 சட்டம் (பொது) dated 25.03.1922இல் பிறக்கப்பட்டு நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

(2) ஆதித்திராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. G.O.No.87 dated 6.1.1923.

(3) அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதித்திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்துச் செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. G.O.No.88. dated 16.1.1923.

(4) திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதித்திராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதித்திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. G.O.No.2015 dated 11.2.1924.

(5) இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதித்திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதித்திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 dated 24.10.1923; மேலும் இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதித் திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

(6) 1931க்குள் ஆதித்திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

(7) ஆதித்திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243.dated 5.7.1922).

(8) ஆதித்திராவிட மானவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) dated 17.10.1922).

(9) ஆதித்திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 dated.22.06.1923).

(10) ஆதித்திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் dated 06.11.1923).

(11) ஆதித்திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதித் திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 dated 11.02.1924).

(12) மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதித்திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் dated 17.06.1922).

(13) இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக் கட்சி ஆட்சியில் ஆதித் திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதித்திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதித்திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

(14) கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதித்திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதித் திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதித்திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக்கழகங்கள் (District Boards) 17 வட்டக்கழகங்கள் (Taluk Boards) 66 நகராட்சிகள் (Municipalities) 46 என்க.

(15) ஆதித்திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டை மலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV)) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதித்திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

(16) 1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால்தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

(17) 1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர் அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது; 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

(1்8) பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதித்திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதித்திராவிடர் பதவி உயர்வு பெற்றனர்; 1927 இல் தான் ஆதித் திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (‘Staff Selection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதித் திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42).

(ஆய்வு தொடரும்)

Pin It