(திருச்சூரிலிருந்து வெளியிடப்படும் மாதாந்திர மலையாள இதழான கேரளீயம்  சமூக-சுற்றுச்சூழல் நீதி, மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஆதிவாசிகள் போன்ற விளிம்புநிலை சமூகங்களின் போராட்டங்களில் கவனம் செலுத்துகிறது.  அந்த வகையில் கடந்த மாதம் பழங்குடியின வரலாற்றாசிரியரும் சமூக ஆர்வலருமான சி ஆர் பிஜாயை ஒரு நீண்ட பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் இது)

நமது அரசுக் கொள்கைகள் ஆதிவாசி வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன அல்லது ஆதிவாசி வாழ்க்கைக்கும் அவர்களின் பண்பாட்டுக்கும் எதிராக எவ்வாறு இயங்குகின்றன – இவை இரண்டும் இங்கு வெவ்வேறு வழிகளில் நடந்து வருகின்றன. இந்த நேரத்தில் இது தொடர்பான ஒரு விவாதத்திற்குள் 'கேரளீயம்' செல்கிறது.

அகில இந்திய அளவில் ஆதிவாசி வாழ்க்கை மற்றும் ஆதிவாசிச் சட்டங்கள், சிறப்புச் சட்டங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்துள்ள, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள, ஆதிவாசிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகக் காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து வருபவருமான சி.ஆர். பிஜாய் முதல் விவாதத்தில் இன்று கலந்து கொள்கிறார்.cr bijoyகேரளத்தில் இந்த ஆதிவாசி விவகாரங்கள், நிலம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் இயக்கங்கள் ஆகியவற்றுடன் எப்போது முதல் நீங்கள் தொடர்பு கொள்ளத் தொடங்கினீர்கள்?

நான் 1980-களில் தமிழ்நாட்டில் அட்டாப்பாடிக்கு அருகில் உள்ள மாங்கரை என்கிற பகுதியில், மக்கள் சுகாதாரம் என்ற ஒரு விஷயத்துடன் தொடர்புடைய ஒரு திட்டத்திற்காக பணியாற்றினேன். மக்களின் அறிவின் அடிப்படையில் ஒரு மக்கள் சுகாதாரத் திட்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்று அத்திட்டத்தை சோதனை முயற்சியாக ஒரு பைலட் புராஜெக்ட் நடத்த முயன்று கொண்டிருந்தேன். அதற்காக நான் முக்கியமாகத் தங்கியிருந்த இடம் ஆதிவாசி பகுதியான, தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த மாங்கரை என்ற பகுதியாகும்.

அதுவரை ஆதிவாசிகளைப் பற்றியோ அது போன்ற விஷயங்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. அந்த ஊரில் தங்கியிருந்து அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு அவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது, அவர்களோடு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அங்குதான் அவர்கள் நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சமூகத்தினர் என்பதையும், உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வையும் மனித உறவுகளைப் பற்றிய அவர்களின் புரிதலும் வித்தியாசமானவை என்பதையும் நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன்.

அந்த சமயத்தில் இந்த சுகாதாரப் பணிகளின் தொடர்பாக அட்டாப்பாடியில் இருந்த 'கிரிஜன் சேவக் சமிதி' போன்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1980-களில் அங்கு எலச்சிவழி போராட்டம், நிலப் போராட்டம் நடைபெற்றது. அப்போது நிலப் போராட்டங்கள், நிலப் பிரச்சினைகள் மற்றும் வனம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படி அந்தத் தொடர்பு மேலும் அதிகரித்ததன் காரணமாக, நான் எனது முந்தைய வேலையை விட்டுவிட்டு, அட்டப்பாடியில் தொடங்கி வயநாட்டிற்குச் சென்று, பிறகு கொடகு, மைசூர், மத்திய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா எனப் பல்வேறு மாநிலங்களின் பல ஆதிவாசி அமைப்புகளுடனும் செயல்பாட்டாளர்களுடனும் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன்.

அதன் பிறகு அதிக ஈடுபாட்டின் காரணமாக 1989-க்குப் பிறகு நான் முழுநேரமாக இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது அனைவரும் கேட்கும் முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால், "இது ஆதிவாசிகளுக்காகவா?" கண்டிப்பாக அவர்களுக்காக இல்லையென்று சொல்லுவேன். நான் புரிந்து கொள்வது என்னவென்றால், ஜனநாயகம் என்ற விஷயத்தில் வித்தியாசமான பார்வையையும் அனுபவத்தையும் அறிவையும் கொண்ட ஒரு சமூகம் நமக்கு அருகாமையில் வாழ்கிறது.

அந்தச் சமூகத்தின் ஜனநாயகக் கருத்து என்பது மைய நீரோட்டச் சமூகத்தை விட வலிமையானது, சிறப்பானது என்பதைப் புரிந்து கொண்டு, அந்தக் கருத்தியலை வளர்த்தெடுக்கவும், பலப்படுத்தவும், அதனை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளச் செய்யவும் வேண்டும் என்ற ஒரு ஆவலோடுதான் நான் இதில் இறங்கினேன்.

வயநாட்டிற்கு எப்போது செல்கிறீர்கள், 90-களின் தொடக்கத்தில் சி.கே. ஜானு களத்திற்கு வந்திருக்கிறாரே?

ஆமாம், அங்கே வயநாட்டில் சி.கே. ஜானு தன் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். தென்னிந்தியாவில் உள்ள ஆதிவாசிச் சமூகங்களின் மையம் என்று அழைக்கப்படுவது இந்த நீலகிரி, வயநாடு, மைசூர், கொடகு ஆகிய குறிப்பிட்ட பகுதியாகும். தென்னிந்தியா என்று சொல்லும்போது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மட்டும்தான் ஆதிவாசிகளின் நிலப்பகுதியாக இருக்க முடியும். இந்தியாவின் மொத்த ஆதிவாசி மக்கள் தொகையில் சுமார் நான்கு சதவீதம்தான் தென்னிந்தியாவில் உள்ளனர். இதில் மிக அதிகமான ஆதிவாசிகள் வாழ்வது இந்த மூன்று மாநிலங்கள் இணையும் இந்தப் பகுதியில்தான்.

எனவே, அரசியல் ரீதியாக ஒரு வலிமையான அமைப்பும் போராட்டமும் உருவாகும் சாத்தியம் அங்குதான் இருக்கிறது என்கிற புரிதலின் அடிப்படையில்தான் அங்கே தேடிச் சென்றேன். இப்படி மிக வலிமையான ஆதிவாசி இயக்கங்களும் போராட்டங்களும் உருவாகச் சாத்தியமுள்ள இடங்களைத் தேடிச் சென்ற நேரத்தில்தான், வயநாட்டில் சி.கே. ஜானுவின் செயல்பாடுகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு 1992-ல் ஆதிவாசி சங்கமம் நடைபெற்றது. அந்த ஆதிவாசி சங்கமக் கருத்தாக்கத்தின் மிக முக்கியமான ஒரு சிறப்பு என்னவென்றால், ஒருபுறம் தென்னிந்தியாவைப் பார்க்கிறோம், மறுபுறம் வடகிழக்குப் பகுதிகளைப் (North East) பார்க்கிறோம். வடகிழக்குப் பகுதி ஆதிவாசிகள், குறிப்பாக இளைய தலைமுறையினர், மாணவர்கள் அரசியல் கட்சிகளை விட அரசியல் ரீதியாக மிக வலிமையான அமைப்பைக் கொண்டுள்ள சூழ்நிலையைப் பார்க்கிறோம். இவை இரண்டும் நேரெதிரான துருவங்களில் உள்ளவையாகும்.

அவர்களுக்குக் கல்வி கிடைக்கவில்லையா?

பதில்: வடகிழக்கு மாநிலங்களில் எழுத்தறிவு, கல்வியறிவு என்பது மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக மிசோரம் கேரளாவை விட அதிகமாகவே உள்ளது. ஆதிவாசிகள் பெரும்பான்மையாக 90%, 85%-க்கும் மேல் செறிந்து வாழும் வடகிழக்குப் பகுதிகளில்தான் அதிக எழுத்தறிவும் கல்வியறிவும் உயர்கல்வியும் மட்டுமல்ல, மனித மேம்பாட்டுக் குறியீடும் மற்ற வளர்ந்த மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

எனவே இங்கே எழும் முதல் கேள்வி என்னவென்றால், ஆதிவாசிகள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வளர்ந்த மாநிலங்களை விட அதிகமான மனித மேம்பாட்டுக் குறியீட்டையும் வறுமை இல்லாத நிலையையும் கொண்டுள்ளதும், அஸ்ஸாம் தவிர மற்ற எந்த வடகிழக்கு மாநிலத்திலிருந்தும் யாரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேறு மாநிலங்களுக்குச் செல்வதைக் காண முடியாததும் ஏன் என்பதுதான்.

ஆதிவாசிகள் செல்வதில்லையா?

ஆம், ஆதிவாசிகள் செல்வதில்லை; ஆதிவாசிகள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அங்குள்ள மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் செல்கிறார்களா?

ஆம். அஸ்ஸாம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் யாரும் வெளியே சென்று வாழ வேண்டிய அவசியமில்லை. வெளியே செல்வதாக இருந்தால் உயர்கல்விக்காகவோ அல்லது நல்ல வேலைவாய்ப்புகளுக்காகவோ மட்டுமே செல்வார்கள்.

அப்படியானால் ஆதிவாசி பகுதிகளில் கூலியும் அவர்களின் வாழ்க்கைத் தரமும் அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறதா?

ஆம் என்று சொல்ல முடியும். என் இத்தனை ஆண்டுகால அனுபவத்தின் புரிதலில் அதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களின் பூர்வீக நிலத்தையும் அவர்களின் பூமியையும் அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்; அதுதான் அதற்குக் காரணம். அங்கே அந்த நிலம் என்பது தனிச்சொத்து அல்ல, சமூகத்தின் சொத்து, சமூகத்தின் எதிர்காலம் என்ற முறையில் அந்த நிலமும் அங்கிருக்கும் இயற்கை வளங்களும் சமூகம் இணைந்து அனுபவிக்கும் பழைய பாரம்பரியத்தின் ஆதி பொதுவுடமை அடிப்படையில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அதைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தியும் அவர்கள் வரலாறு படைத்துள்ளனர்.

அடிப்படையில் அங்கு ஏன் இவ்வளவு வளர்ச்சி என்று கேட்டால், அங்கே பெரிய தொழில்மயமாக்கல் நடைபெறவில்லை; பெரிய நெடுஞ்சாலைகளோ, இரயில் பாதைகளோ இல்லை; அது போன்ற எந்த வளர்ச்சியும் இல்லை.

வேளாண்மையில் நவீனமயமாக்கலும் வளர்ச்சி பெற்றிருக்கிறதா?

இல்லை. நவீனமயமாக்கல் என்பது விஷயமல்ல. விஷயம் என்னவென்றால், அங்கிருக்கும் இயற்கை வளங்கள் முழுமையும் மக்களின் கையில்தான் உள்ளன. அங்கே பல நிலங்களில் வருவாய் சட்டங்களோ வனச் சட்டங்களோ பொருந்தாது. ஒவ்வொரு சமூகமும் தங்கள் பாரம்பரிய முறையின் அடிப்படையில் அந்த நிலத்தைக் கூட்டாகப் பாதுகாத்து, தங்கள் பாரம்பரிய முறைப்படி அதை அனுபவித்து வருகிறார்கள். நிலம் சொந்தமானது என்பதை விட, அவர்கள் அனைவரும் அந்த நிலத்திற்குச் சொந்தமானவர்கள் என்கிற அடிப்படையில் அங்கே வாழ்கிறார்கள். அதன்படி அனைவரும் அதில் உள்ளவற்றை அனுபவிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பிரிட்டிஷ் காலத்தில் 1870-களிலேயே 'உள்ளக அனுமதிப் பத்திரம்' (Inner Line Permit) என்று சொல்லக்கூடிய ஒரு நடைமுறையைக் கொண்டுவந்தனர். அந்த இன்னர் லைன் என்பது நாகாலாந்து, மிசோரம், மணிப்பூரின் மலைப்பகுதிகள், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதியாகும். அந்தக் கோட்டைத் தாண்டிச் செல்ல வேண்டுமென்றால் அனுமதி பெற வேண்டும். விசா போல காவல் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். அங்கே சென்றாலும் வெளியில் உள்ளவர்கள் நிலம் வாங்க முடியாது.

அங்கு நிலத்தை வாங்குவது, விற்பது என்ற முறையே கிடையாது. அவர்களின் பாரம்பரிய முறையில், ஒரு நபர் விவசாயத்திலிருந்து விலக வேண்டுமென்றால், அந்த நிலத்தை அந்த ஊரிலோ அல்லது அருகில் உள்ள ஊரிலோ உள்ளவர்களுக்கு ஊர் கிராமச் சபையின் அனுமதியோடு மாற்றிக் கொடுப்பார்; இப்படித்தான் அவர்களின் அமைப்பு முறை உள்ளது. இயற்கை வளங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தினால்தான் கல்வி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

வயநாட்டிலும் அட்டாப்பாடியிலும் ஒரு காலத்தில் ஆதிவாசிகள் மட்டுமே வாழ்ந்த காலம் இருந்ததே, அப்போது அவர்கள் இந்த வளங்களை இதே முறையில் பயன்படுத்தி வளர்ந்த காலம் ஏதேனும் இருந்ததா?

அட்டப்பாடியைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் மட்டுமே வாழ்ந்த ஒரு காலம் இருந்தது. அந்த காலத்தில் இதே போன்ற வளங்களை அவர்கள் இந்த வடிவில் பயன்படுத்தி, வளர்ச்சியடைந்தும் இருந்த ஒரு காலம் இருந்தது. அதை ஒரு பொதுவான காலமாக நாம் சொல்ல முடியும்.

அட்டாப்பாடியைப் பொறுத்தவரை 1960-களுக்கு முன்பு அங்குள்ள மூப்பர்களும் முதியவர்களும் சொல்வது என்னவென்றால், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தேவையான அளவு உணவு இருந்தது, நாங்கள் பசி அல்லது வறுமை என்பதை அனுபவித்ததில்லை. ஆனால் 60-களுக்குப் பிறகே கேரளப் பகுதியிலிருந்தும் தமிழகப் பகுதியிலிருந்தும் மக்கள் அங்கே திடீரென ஊடுருவத் தொடங்கினர். வனத்துறையும் வந்தது. அப்படி வளர்ச்சியின் பெயரில்தான் வறுமை அங்கே கொண்டுவந்து திணிக்கப்பட்டது. இதுதான் உண்மை.

வடகிழக்கு மாநிலங்களின் அனுபவத்திலிருந்து நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியது என்னவென்றால், ஆதிவாசி பகுதிகளில்தான் இயற்கை வளம் மிக அதிகமாக உள்ளது. இவ்வளவு வளமான இயற்கையின் நடுவில் வறுமையுடன் வாழும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால், அரசாங்கமும் வெளிச் சமூகங்களும் இணைந்துதான் அவர்களை வறுமைக்கோட்டுக்குள் தள்ளியது என்பதுதான் உண்மை.

ஐக்கிய கேரளாவுக்குப் பின், அல்லது கேரளா உருவானதற்குப் பிந்தைய வளர்ச்சிதான் ஆதிவாசிகளை ஏழைகளாக மாற்றியது என்று நாம் சொல்ல வேண்டியிருக்கும்.

ஆம். அதோடு பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வனச்சட்டங்களும் வருகின்றன. பிரிட்டிஷாரின் இந்திய வனச் சட்டம் 1927 எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும். காலனி ஆதிக்கத்தின் நோக்கம் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதாகும். அப்படி ஒரு பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டுமென்றால், முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், அந்தப் பிரதேசத்தின் மீதான அதிகாரத்தை சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் மாற்றி, உரிமையுள்ளவர்களிடமிருந்து ஓரங்கட்டுவதுதான். இரண்டாவதாக, அந்தப் பகுதியில் உரிமை உள்ள சமூகத்தின் உரிமைகளைச் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அந்தப் பகுதியையும் அதன் இயற்கை வளங்களையும் கைப்பற்ற முடியும். இதுதான் வனச் சட்டம்.

1961-ஆம் ஆண்டில் உருவான கேரள வனச் சட்டம் என்பது 1927-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொண்டுவந்த சட்டத்தின் மற்றொரு வடிவம்தான். இப்படி கொண்டுவந்த வனச்சட்டம் ஒருபுறம் அந்தப் பகுதி மக்களை கொத்தடிமையாக்கியதோடு, அவர்கள் அனுபவித்து வந்த நிலத்திற்கு முறையான ஆவண உருவாக்கத்திற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்தது.

அன்று யார் அதிக நிலம் வைத்திருந்தார்கள் என்று கேட்டால், உண்மையில் அன்று அதிக நிலம் வைத்திருந்தது ஆதிவாசிகள்தான்.

1964-ல் டி. மாதவமேனன் ஆட்சியராக இருந்தபோது 300 சர்வே அதிகாரிகளைக் கொண்டு செட்டில்மென்ட் பதிவேடு (Settlement Register) உருவாக்க முயற்சி செய்ததாக சொல்கிறார்களே? பிற்பாடு அது மறைக்கப்பட்டதா? ஏன் பயன்படுத்தப்படவில்லை? ஆவணப்படுத்தலில் செய்யவேண்டியது என்ன?

இங்கு ஆதிவாசிகளின் நிலங்களை ஆவணப்படுத்துவதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி ஆவணப்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பார்வை உள்ளது. அந்தப் பார்வை என்னவென்றால், பெருவாரியான முதன்மைக் சமூகம் (Mainstream) நிலத்தை எவ்வாறு பார்க்கிறதோ, நிலத்தை எந்த முறையில் கைவசம் வைத்துக் கொள்கிறதோ, எந்த முறையில் பயன்படுத்துகிறதோ, அதே கண்ணோட்டத்தில்தான் அவர்களும் அங்கு செல்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு ஆதிவாசி குடும்பம் அல்லது ஒரு ஊரில் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில், தங்களுக்குத் தோன்றும் போது எங்கு வேண்டுமானாலும் விவசாயம் செய்வார்கள், தொடர்ந்து செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனால், அவர்களின் அந்தச் சிந்தனை முறையின் அடிப்படையில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. 1962-64 காலகட்ட செட்டில்மென்ட் பதிவேட்டில் அந்த முறையில் அல்லாமல், மாறாக வேறு வழியில்தான் பதியப்பட்டது; அதுதான் உண்மை. இங்கு மட்டுமல்ல, எங்கும் பாரம்பரியத்தின் அடிப்படையில், பாரம்பரிய வழக்கத்தின் அடிப்படையில், அந்த நில ஆவணங்களை உருவாக்குவதற்கான தனித்த சட்டம் ஏதும் கொண்டுவரப்படவுமில்லை.

அப்போ 1964-ல் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிற அந்த ஆவணங்கள் நீங்கள் சொல்லும் பாரம்பரிய வழக்கத்தின்படி அனுபவ நிலங்களுக்கு உருவாக்கவில்லையா?

இல்லை. இங்கு மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து வேறு எங்கும் அப்படியான ஆவணங்கள் உருவாக்கப்படவில்லை. அங்கிருக்கும் நிலம் முழுவதும் ஊருக்குச் சொந்தமானது; அதில் ஒரு ஆதிவாசி எங்கு வேண்டுமானாலும் விவசாயம் செய்வார். அப்படி ஒரு ஏக்கர் விவசாயம் செய்கிறார்கள் என்றால், அந்த ஒரு ஏக்கர் முழுவதையும் நான் ஆவணக் கணக்கில் கொண்டுவர மாட்டேன். "அந்த ஒரு ஏக்கர்கூட அந்த ஆதிவாசிக்கு எதற்கு, ஆதிவாசிக்கு ஒரு ஏக்கர் என்று கொடுத்தால், அதைக் கொண்டு எப்படிச் சம்பாதிக்க வேண்டும் என்று தெரியாத ஒரு நபருக்கு அது வீண்தான், எதற்கு இங்கிருந்து கஷ்டப்பட வேண்டும், வனத்துக்கு வெளியே வரவேண்டியதுதானே" என்ற வளர்ச்சி என்பது குறித்த தவறான கருத்தில்தான் அங்கு செல்லும் சர்வேயர்கள் இருந்தார்கள். அப்படித்தான் நிலத்திற்கான ஆவணத்தைத் தலைகீழாக உருவாக்கினார்கள்.

அதேபோல, இந்த நிலச் சீர்திருத்தம் (Land Reforms) என்று வரும்போது, குத்தகைதாரர் என்பவர்கள் சொல்லப்படுபவர்கள் வெளிநபர்களாக இருந்தனர், அவர்கள்தான் அங்கு குடியேறியவர்கள். அப்போது அவர்களின் கைகளுக்கு ஆதிவாசிகளின் நிலம் சென்றடைந்தது.

இந்த நிலச் சீர்திருத்தக் காலகட்டத்தில் ஆதிவாசிகள் அட்டப்பாடியில் பூமியை இழந்திருக்கிறார்களா?

ஆம், நிச்சயமாக.

அதற்கென்று கணக்குகள் ஏதேனும் இருக்கிறதா?

இல்லை. ஏனென்றால், அவர்களின் கைவச அனுபவத்தில் உள்ள பாரம்பரியமான நிலத்தை ஆவணப்படுத்துவதற்கான சட்டம் எதுவும் இந்தியாவில் இல்லை. இந்தியாவில் முதன்முறையாக அவர்களின் பாரம்பரியமான நிலங்களின் மீதான உரிமையை ஆவணப்படுத்தும் ஒரு சட்டம் என்றால் அது வன உரிமைச் சட்டம் மட்டுமே. இது 2006-ல் கொண்டுவரப்பட்டது. இது வனத்துறையுடன் தொடர்புடையது. அதுபோல வனப்பகுதிகளில் வருவாய் நிலங்களும் உள்ளன.

அந்த வருவாய் நிலங்களுடன் (ரெவின்யூ நிலம்) தொடர்புடையது போன்ற ஒரு சட்டம் இன்றுவரை வரவில்லை. வன உரிமைச் சட்டத்தைப் போலவே, வருவாய் நிலங்களில் இவர்களுடைய பாரம்பரியமான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து இது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால், அந்த நிலத்தின் பல உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும்.

நாம் 1975-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தோம், அத்துமீறிப் பறிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று. அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது அட்டப்பாடியில்தான். மற்ற ஆதிவாசி பகுதிகளில் அந்த அளவுக்கு நிலம் இருக்கவில்லை. ஆனால் அட்டப்பாடியைப் பொறுத்தவரை, அங்கு 1962-64 சர்வே செட்டில்மென்ட் ரெஜிஸ்டரை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். ஆனால் இதெல்லாம் பரிசீலிக்கப்படாமல் 1975-ன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் போவது நடந்தது. 1975-ன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாததால்தான் அட்டப்பாடியில் இவ்வளவு நில இழப்பு ஏற்பட்டதா?

அப்படிச் சொல்ல முடியாது. ஏனென்றால், இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிலம் சம்பந்தமாக ஏதேனும் சில சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்கள் பல வடிவங்களில் உள்ளன. நான் முன்பே சொன்னது போல, வடகிழக்குப் பகுதிகளில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டுக்கு (Inner Line Permit) அப்பால் யாரும் போக முடியாது, நிலம் வாங்க முடியாது. இது அங்கேயுள்ள நிலைமை.

அதுபோலத்தான் இப்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நிலம் தொடர்பாகச் சட்டங்கள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 'ரெகுலேஷன் 1/70' (Regulation 1/70) என்ற சட்டம் உள்ளது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால், அட்டவணைப் பகுதியில் (Scheduled Area) ஆதிவாசியல்லாத ஒருவரின் கையில் நிலம் இருந்தால், ஆதிவாசியிடமிருந்து நான் அந்த நிலத்தைப் பறிக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அந்த ஆதிவாசியல்லாதவர்தான், ஆதிவாசி அல்ல.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஆதிவாசியின் நிலம் எந்தக் காரணத்துக்காகவும் ஆதிவாசி அல்லாத பிறருக்குச் செல்லக் கூடாது. ஆனால் கேரளத்தில் உள்ள சட்டத்தில் என்ன உள்ளது? ஆதிவாசி நிலம் கலெக்டரின் அனுமதியோடு மற்றவர்களுக்கு விற்கலாம் என்கிறது. கேரளா மட்டுமல்ல, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பான்மையான மாநிலங்களில் ஆதிவாசி நிலத்தை யாரும் தொடக்கூடாது என்று சொல்லும் சட்டம் இல்லை. ஆனால் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் ராஜஸ்தானிலும் சத்தீஷ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் அப்படியான சட்டங்கள் உள்ளன.

அட்டவணைப் பகுதியில் உள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில், ஆதிவாசி அல்லாதவர்கள் நிலத்தை விற்றால், அது ஆதிவாசிக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும். இல்லையென்றால் கலெக்டரின் அனுமதியோடு ஆதிவாசி அல்லாத வேறு நபருக்கு விற்கலாம். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் அட்டவணைப் பகுதியில் உள்ள அரசு நிலத்தை ஆதிவாசி அல்லாதவர்களுக்குக் கொடுக்க முடியாது. அரசு அந்த நிலத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் கூட, அது அந்தப் பகுதியில் உள்ள ஆதிவாசிகளின் நலனுக்காக இருக்க வேண்டும். அதற்கு ஒரு நல்ல உதாரணம் என்னவென்றால், பிர்லா குழுமத்திற்கு ஒரு நிலம் கனிமச் சுரங்கத்திற்காக மாற்றப்பட்டபோது, அது சிக்கலானது, பிறகு வழக்காக மாறியது. அதை 'சமதா தீர்ப்பு' (Samata Judgement) என்று கூறுவார்கள்.

உச்ச நீதிமன்றம் 'இல்லை' என்று கூறியது. ஏனென்றால், அங்கும் ஐந்தாவது அட்டவணையும் இந்த ரெகுலேஷன் 1/70-ம் இணைத்துப் பார்க்கும்போது அரசின் நிலம்கூட ஆதிவாசி அல்லாத ஒரு கம்பெனிக்கு மாற்றப்பட முடியாது. ஏனென்றால் அரசாங்கமும் ஆதிவாசி அல்ல, எனவே வேறு துறைக்கும் அதனை மாற்ற முடியாது. ஒரு கனிமச் சுரங்க (மைனிங்) கம்பெனியைத் தொடங்க வேண்டுமென்றால், ஆதிவாசிகளின் ஒரு கூட்டுறவு நிறுவனமாகத்தான் கனிமச் சுரங்க கம்பெனியைத் தொடங்க வேண்டும். இது போன்ற பாதுகாப்பு அங்கே உள்ளது.

மகாராஷ்டிராவில் 'பெசா' (PESA) சட்டம் வந்தபோது, ஆட்சியரின் அனுமதியுடன் ஆதிவாசி நிலத்தை விற்கலாம் என்று இருந்தது. ஆனால் ஆளுநர் தனது ஐந்தாம் அட்டவணை சிறப்பு அதிகாரத்தைப் (Article 244) பயன்படுத்தி, ஆட்சியர் ஆதிவாசி நிலத்தை வேறு யாருக்குக் கொடுக்க வேண்டுமென்றாலும் ஊரின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதற்குக் காரணம் மகாராஷ்டிராவில் வலுவான ஆதிவாசி இயக்கங்கள் இருப்பதுதான்.

நாம் பார்க்கும்போது, இந்த 75-ன் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய 96-ல் புதிய சட்ட உருவாக்கம் நடந்து சட்டமன்றம் அதற்கு இசைவு தெரிவிக்கிறது. ஆனால் இந்தியாவின் குடியரசுத் தலைவர் அதைத் திருப்பி அனுப்பி, அந்த நிலையில் அன்று அது ரத்து செய்யப்படுகிறது. அப்போது ஆதிவாசிகளால் அதில் தலையிட முடிந்ததல்லவா?

நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கேரளாவில் ஆதிவாசிகளின் மக்கள் தொகை வெறும் ஒன்றரை சதவீதத்திற்கும் குறைவுதான். இந்தியாவின் மொத்த ஆதிவாசி மக்கள் தொகையில் அரை சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான் இங்கு உள்ளனர், மிகவும் சொற்பமான ஒரு தொகை இது.

இப்போது தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், கேரளாவிலுள்ள ஆதிவாசிகளின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான ஆதிவாசி மக்கள் தொகை அங்கே உள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த வழியில் இயக்கங்கள் வரவில்லை.

1975 சட்டம் என்பது மத்திய அரசு சொன்னதனால் மட்டுமே வந்தது கிடையாது. உதாரணமாக, பாலக்காட்டிலேயே 1970-களில் அப்போதைய மன்னார்காடு சட்டமன்ற உறுப்பினர் கொங்கச்சேரி கிருஷ்ணனின் தலைமையில், சி.பி.ஐ கட்சியின் முன்னெடுப்பில் ஆதிவாசிகளின் மாநாடு நடைபெற்றது.

கேரளாவில் இந்த நிலத்தின் மீதான போராட்டங்கள் 1960-களிலேயே பல இடங்களில் தொடங்கிவிட்டன.

கொங்கச்சேரி கிருஷ்ணன் கேரள சட்டமன்றத்தில் ஆற்றிய அனைத்து உரைகளிலும் ஆதிவாசிகளின் நிலத்திற்காகப் பேசினார். இரண்டு மூன்று அறிக்கைகளையும் சமர்ப்பித்தார். அத்தகைய ஒரு இயக்கப் பின்னணியில்தான் 75-ன் சட்டம் வருகிறது. அதுமட்டுமின்றி, சட்டமன்றத்தில் 73-லோ 74-லோ சட்டம் உருவாக்குவதற்கான வரைவை ஒரு எம்.எல்.ஏ.-வே தாக்கல் செய்தார்.

அப்போது அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறியதால்தான் அந்த வரைவு அப்போது மாற்றப்பட்டு, அரசாங்கமே சட்டத்தை இயற்றும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த காலத்தில் ஆதிவாசிகளுக்காக அரசியல் கட்சிகள் முன்வந்து செயல்பட்டன. சி.பி.ஐ-யின் ஒரு வாக்கு வங்கியாக அட்டப்பாடி ஆதிவாசிகள் இருந்தனர் என்பதை அந்த காலக்கட்டத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் அது தொடரவில்லையா?

நாம் இதைக் கேரளாவின் அனுபவத்திலிருந்து பார்க்கும்போது முதலாவது விஷயம் என்னவென்றால், தென்னிந்தியாவிலேயே மிகக் குறைவான ஆதிவாசிச் சட்டங்களைக் கொண்ட மாநிலம் இதுதான் – ஒன்று. இரண்டாவது, அப்படிச் சட்டம் வந்தபின், அந்தச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கும்போது, அதை வலுவாக எதிர்த்து நீதிமன்ற வழக்குகள் சென்றன. அதன் பிறகு நிலமற்ற ஆதிவாசிகளுக்கு நிலம் வேண்டும் என்று ஒரு போராட்டம் நடைபெறுவதும் நடக்கிறது, அந்தப் போராட்டத்தின் அடிப்படையில் 10-20 ஆயிரம் குடும்பங்களுக்கு ஏதேனும் நிலம் கிடைத்ததாகத் தெரிகிறது.

எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது; 96-ல் சட்டம் வரும்போது ஒரு ஹெக்டேர் வரை ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 99-ல் சட்டம் வரும்போது அது இரண்டு ஹெக்டேராக உயர்த்தப்பட சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.-க்களால் முடிந்தது. ஆனால் 96-ல் எதிர்த்த ஆதிவாசி அமைப்புகள் எவையும் 99-ல் வலுவான எதிர்ப்புடன் களமிறங்கி அந்தச் சட்டத்தையே எதிர்க்கும் நிலைக்கு வரவில்லை. அதேசமயம் 96-ல் அத்தகைய முயற்சி நடந்தது. அப்படியானால் 99-ல் ஆதிவாசி இயக்கங்கள் தளர்ந்துபோகக் காரணம் என்ன?

அந்த வகையில் ஒரு தனித்துவமான, பலமான ஆதிவாசி இயக்கம் என்ற முறையிலான எழுச்சி என்பது, வயநாட்டைச் சேர்ந்த சி.கே. ஜானு, கீதாநந்தன் மற்றும் ஆதிவாசி கோத்ர மகா சபா போன்றோரின் காலத்தில்தான், அதாவது 2000-த்திற்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்கிறது. எனவே, அத்தகையதொரு அரசியல் பிரதிபலிப்பு ஆதிவாசிகளிடமிருந்து உருவாவதற்கான அதற்கேற்ற சூழல் கனிந்து வருவதுதான் காரணம் என்று நான் குறிப்பாகச் சொல்கிறேன்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிவாசி சமூகங்கள் ஒன்றுதான்; ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை இத்தகைய நிலம் தொடர்பான எந்தவொரு அஜெண்டாவோ அல்லது பிரச்சினையோ எழுப்பப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி, நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அட்டவணைப் பகுதி (Scheduled Area) உள்ள 10 மாநிலங்களைத் தவிர்த்துப் புதிதாக ஒரு முன்மொழிவு முதலாவதாகவும் கடைசியாகவும் வந்திருப்பது கேரளாவில்தான் (2001).

அப்படியானால் நான் கேட்பது என்னவென்றால், 99-ல் இல்லாத வகையில் அல்லது அமைப்பற்றவர்களாக இருந்த ஆதிவாசிகள், 2001-ல் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் குடிசை கட்டும் போராட்டம் என்றவுடன் மிகவும் தீவிரமாகக் களமிறங்கினார்களே, வெறும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அது எப்படி சாத்தியமானது? 2001-ல் இவ்வளவு தீவிரமான ஒரு ஆதிவாசி இயக்கம் உருவெடுக்கக் காரணம் என்ன?

முதல் காரணம், 1975-ஆம் ஆண்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளும்தான். குறிப்பாக, அரசாங்க மட்டத்தில் நடந்த செயல்களும், 1999-ல் நடந்த சட்ட மாற்றங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு எதிரான ஒரு எதிர்வினையாகத்தான் அந்த காலகட்டத்தில் இது வெடித்தெழுந்தது.

ஆனால் அந்த அரசாங்கத்துடன் மிகவும் ஜனநாயக ரீதியாக அந்தப் போராட்டம் உரையாடியிருந்தாலும், அல்லது விவாதித்திருந்தாலும், அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லவா?

ஆம், அரசாங்கம் ஒப்பந்தத்தைக் காப்பாற்றுவது என்பது, அடிப்படையில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டால், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது என்பது நிலவிவரும் அரசியல்-சமூக அமைப்பின் கட்டமைப்புக்குள்தான் நடக்கிறது. இப்போது ஒரு எளிய விஷயம் என்னவென்றால், கேரளத்தில் இதுபோன்ற ஒரு சட்டம் உள்ளது; அதுதான் 1975-ஆம் ஆண்டுச் சட்டம். மற்ற பல மாநிலங்களிலும் சட்டங்கள் இருக்கலாம். ஆனால், நாம் இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்தந்த மாநிலங்களில் உள்ள இந்தச் சட்டங்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதுதான்.

உதாரணமாக, ஆந்திராவில்தான் மிகவும் சக்திவாய்ந்த சட்டம் உள்ளது. ஆனால் அங்கேயுள்ள அறிக்கைகளும், ஊடகங்களும், அமைப்புகளின் புகார்களும் என்னவென்றால், அந்தச் சட்டம் மீறப்படுகிறது என்பதுதான். எனவே, நல்லதொரு சட்டம் மட்டும் போதாது; அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஒரு அரசியல் சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட வேண்டும். அதை யார் செய்ய முடியும்?

அதை யார் உருவாக்க முடியும்? ஜனநாயகச் செயல்பாட்டில் இதுபோன்ற ஒரு சூழலை உருவாக்குவதில் ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், சிறுபான்மையினரான இந்தச் சமூகம் தங்கள் சொந்தக் காலில் மட்டுமே நின்றால், உதாரணமாக, சமீபத்திய ஒரு விவகாரம் என்னவென்றால், இதே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆதிவாசிகள் அல்லாத நூற்றுக்கணக்கானோர், 'இந்த 1/70 ஒழுங்குமுறைச் சட்டம் எங்கள் அடிப்படை உரிமைகளை மீறுகிறது; ஏனெனில், எங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் சென்று எந்த நிலத்தையும் வாங்கி விற்கக்கூடிய சுதந்திரம் உண்டல்லவா? அது இங்கே இல்லாமலாக்கப்படுகிறது?' என்று கூறி இப்போது உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். ஆதிவாசிப் பகுதியில் நிலம் வாங்குவதற்கான சுதந்திரம் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். 'ரெகுலேஷன் 1/70' சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது (Unconstitutional) என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், இந்த மாதிரியான போக்குகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து நிற்கும் வகையிலான ஆதிவாசிப் போராட்டங்களும், அதேபோல மற்ற ஜனநாயக சமூகங்கள் அதனுடன் இணைந்து ஆதரவளிக்கும் போக்கும் இருந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

2001-ன் தலைமைச் செயலகப் போராட்டத்திற்குப் பொதுமக்களின் பெரிய ஆதரவு கிடைத்தது. அதனால்தான் அந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. ஆனால் 2003-ல் நடந்த முத்தங்கா போராட்டம் அதன் ஒரு தொடர்ச்சியாக இருந்தபோதிலும், அந்தப் போராட்டம் ஒரு வகையில் தோல்வியடைந்துவிட்டதா என்ற சந்தேகம் கேரளாவில் இன்றும் நிலவுகிறதே?

முதலாவதாக, ஒரு போராட்டமோ அல்லது எந்தவொரு சம்பவமோ, அது சிறியதொரு காலகட்டத்தில்தான் (டைம் பிரேம்) நிலைத்து நிற்கும். எனவே, இவற்றுக்கிடையேயான அரசியல் ரீதியான தொடர்புகள் என்ன, இந்த வரலாற்றில் இதன் கண்ணிகளை எவ்வாறு இணைக்க வேண்டும் என்ற வகையில் நாம் அரசியல் ரீதியாகச் சிந்தித்துப் புரிந்து கொண்டால் மட்டுமே அது புரியும். அதாவது, இந்த குடில் கட்டும் போராட்டமும் முத்தங்கா போராட்டமும் ஒரே நிகழ்வின் வெவ்வேறு பகுதிகள் என்ற புரிதல் அத்தகைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் வரவில்லை. முத்தங்கா போராட்டம் நடந்து முடிந்த பிறகு, சிறிது காலம் கடந்த பின்னர்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கினர்; ஓ, இந்தச் சம்பவம் வேறாக இருந்தது என்று. முத்தங்கா போராட்டத்திற்கு எதிரான தொடக்க நிலை எதிர்வினை பின்பு மாறி, அதற்கு ஆதரவான மற்றும் பரிதாபமான ஒரு பார்வைக்குப் பின்னர்தான் வந்தது.

நாம் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தோம், ஏனெனில் அந்தப் போராட்டம் ஆதிவாசிப் பகுதியில் நடக்கவில்லை, அது தலைமைச் செயலகத்தின் முன்னால் நடந்தது. நகரவாசிகளான மனிதர்களைப் பொறுத்தவரை ஆதிவாசிப் பிரச்சினையை ஒரு ஜனநாயகப் பிரச்சினையாகக் காண முடிந்தது. ஆனால் வயநாட்டின் வனப்பகுதிக்குள் அந்தப் போராட்டம் விரிவுபடுத்தப்பட்டபோது, வயநாட்டிலுள்ள குடியேற்ற விவசாயிகள், ஆதிவாசிகள் அவர்களுக்கு எதிரிகள் என்ற நிலையில் வைத்துதான் பல பிரச்சினைகளையும் பார்த்தனர். இந்தக் குடியேறிகள்-ஆதிவாசி முரண்பாட்டை முத்தங்காப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் திறம்படப் பயன்படுத்திக் கொண்டனவா?

அரசியல் கட்சிகள் என்று பார்க்கும்போது, அவர்களின் மிகப்பெரிய சமூகத் தளம் ஆதிவாசி சமூகம் அல்ல. ஆதிவாசிகள் அதன் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர்கள் அதில் மிக முக்கியமான முடிவெடுக்கும் சக்தியாக இல்லை. எனவே இது கேரளா மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பொதுவாக நாம் காணக்கூடிய நிலைமைதான். இரண்டாவது என்னவென்றால், சத்தீஸ்கரில் ஆதிவாசிகள் செறிந்து வாழும் பஸ்தர் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கும்; அதே கட்சி பஸ்தருக்கு வெளியே சத்தீஸ்கரின் பிற பகுதிகளில் வேறொரு நிலைப்பாட்டை எடுக்கும். தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை அது ஓட்டு வங்கியுடன் தொடர்புடையதாக மாறுகிறது.

இந்தியாவைப் பொறுத்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தத் தேர்தல் ஜனநாயகம் என்பதில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. அதாவது, இந்தியாவின் ஆட்சி அமைப்பைத் தேர்ந்தெடுத்த அரசாங்கங்கள் மட்டுமே இயக்குவதில்லை; ஆட்சியின் முழுமையான கயிறு அதிகாரிகளின் (பியூரோக்ராட்ஸ்) கையில்தான் உள்ளது. இது காலனித்துவ அமைப்பின் தொடர்ச்சியாகும்.

எனவே எப்போதும் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இந்த அதிகார வர்க்கத்திற்கும் இடையே ஒரு பதற்றம் நிலவுகிறது. இதை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் ஜனநாயகமயமாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடிக்கல்லிட்டது சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முயற்சியாகக் கொண்டுவரப்பட்ட 73-வது பஞ்சாயத்து ராஜ் மற்றும் 74-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள்.

அந்த அரசியலமைப்புத் திருத்தம் என்ன கூறுகிறது என்றால், உள்ளாட்சி அமைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்தின் கீழ் 29 துறைகளும், அது தொடர்பான முழு அமைப்புகளும் வர வேண்டும், அதன் கட்டுப்பாடு முழுமையாகப் பஞ்சாயத்திடம்தான் இருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பின் நோக்கமாகும். ஆனால் பஞ்சாயத்து என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எனவே மாநிலங்கள், அந்தச் சட்டத்தை உருவாக்கியபோது, அரசியலமைப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதை முழுமையாகப் பின்பற்றவில்லை. பஞ்சாயத்தின் கீழ் துறைகள் வருவதற்குப் பதிலாக, துறைகளின் கீழ் பஞ்சாயத்துகள் வரும் ஒரு செயல்முறைதான் நடைமுறைக்கு வந்தது.

இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் 1996-ல் பெசா (PESA) சட்டம் வந்தபோது, அட்டவணைப் பகுதியில் அந்த முறையில் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் ஒரு வித்தியாசமான சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் கேரளாவைப் பொறுத்தவரை, மற்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு – அதாவது கல்வி நிதி மற்றும் பிற நிதிகள் – மிகவும் வெளிப்படையாகச் செலவிடப்பட்டு 100 சதவீதத்தையோ அல்லது 110 சதவீதத்தையோ எட்டும் நிலைக்குச் செல்கிறது. ஆனால் இந்தத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல நிதி (SC/ST Fund) மட்டும் செலவிடப்படாமல் விடப்படுகிறது, வேறு தேவைகளுக்கு மாற்றப்பட்டுச் (Diversion) செலவிடப்படுகிறது. அப்படிச் செலவிடப்பட்டவற்றிலும் ஒரு பெரிய பகுதி தட்டிப் பறிக்கப்படுகிறது. இது கேரள ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடியாகும். எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, யார் எங்கே செலவழித்தார்கள், அது எப்படி விநியோகிக்கப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு விவரமும் ஆதிவாசிகளுக்குக் கிடைப்பதில்லையே?

ஒதுக்கப்பட்ட பணம் முறையான வழியில், உத்தேசிக்கப்பட்ட செயலுக்குச் செலவிடப்படுகிறதா, நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று பார்க்கும் பொறுப்பை நாம் யாருக்குக் கொடுத்திருக்கிறோம்? நாம் தேர்ந்தெடுத்த அரசுக்குத் தான் கொடுத்திருக்கிறோம். அப்படியானால், இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, இந்தச் செயலைச் செய்வதற்கான அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது இல்லாத வரையில் என்ன செய்ய முடியும்?

பல துறைகளில் பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கப்படுவது, உதாரணமாக பெசா (PESA) சட்டத்திலுள்ள ஒரு விதிமுறையைப் பற்றிச் சொல்கிறார்கள். அரசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் கிராமசபையின் அனுமதி வேண்டும். நடைமுறைப்படுத்தி முடித்துவிட்டதென்றால், அந்த நிதிக்கான பயன்பாட்டுச் சான்றிதழை (யுட்டிலைசேஷன் சர்டிபிகேட்) வழங்க வேண்டியது கிராமசபையாகும்.

ஒரு உண்மையான மக்களாட்சி என்பது, இந்தத் திட்டங்களை உருவாக்குவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம், அதாவது ஜனநாயகத்தின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, அதன் அதிகார வரம்புக்குள் கொண்டுவருவது மூலமாக மட்டுமே அது சாத்தியமாகும்.

இதற்கு அட்டப்பாடியிலிருந்து ஒரு நல்ல உதாரணத்தைக் கூறலாம். அட்டப்பாடியில் உள்ள பின்னலாடைப் பூங்கா (Apparel Park) என்பது ஐந்தாறு கோடி ரூபாய் செலவழித்துத் தொடங்கப்பட்டது. இதற்கு பழங்குடியினர் நலத்துறை அனுமதி அளித்தது. 100 இயந்திரங்களை வாங்கி, 250 ஆதிவாசிப் பெண்களுக்குப் பயிற்சி வழங்குகிறார்கள். அதன்பிறகு இவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்கும் உரிய ஒரு தொழில் தொடங்கும் என்று அரசு பிரகடனம் செய்கிறது, அமைச்சர் அதை ஆமோதித்துப் பேசுகிறார். ஆனால், அதில் ஒரு அடிகூட அது முன்னோக்கிப் போகவில்லை. இப்போது நாம் பழங்குடியினர் நலத்துறையை அணுகினால், 'பெண்களுக்காக ஒரு சொசைட்டியை உருவாக்கி அவர்களுக்குப் பணம் வழங்கி அவர்கள் செலவழிக்கிறார்கள்' என்கிறார்கள். அந்தச் செலவழித்ததற்கான கணக்கும் அதற்கான செயல்பாடுகளும் அந்தச் சொசைட்டிக்கு மட்டுமே தெரியும், பழங்குடியினர் நலத்துறையில் இதற்கான கணக்கு இல்லை என்கிறார்கள். இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களான பெண்களைக் கேட்டால், இதைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்கிறார்கள். அவர்களைக் கூட்டி உட்கார வைத்து ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளனர், மீதமுள்ள அனைத்து விவரங்களும் பழங்குடியின நலத்துறை அலுவலருக்கு மட்டுமே தெரியும் என்கிறார்கள்.

பழங்குடியின நலத்துறை அலுவலர் என்ன செய்கிறார் என்று கேட்டால், இவர்களுக்குப் பயிற்சி நடத்துவது முதல், துணி வாங்குவது வரை எல்லாமே செய்கிறார். துணி வாங்கியிருப்பது என்பது கேரளா முழுவதும் உள்ள குழந்தைகளுக்குச் சீருடைக்கான துணியை வாங்கியுள்ளனர், ஏனெனில் இவர்களுக்குக் கற்றுக்கொள்வதற்காக என்று கூறுகிறார்கள். எனவே, இவையனைத்தையும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரே தீர்மானிக்கிறார். ஆனால் பணம் முழுவதும் கொடுத்தது இந்தச் சங்க செயலாளர்தான் அல்லது தலைவர்தான் கையெழுத்திட்டு வாங்குகின்றனர்.

உண்மையில் கடனாளிகளாக மாறியிருப்பது இந்தச் சங்கத்தின் தலைவரும், செயலாளரும் மற்றும் உறுப்பினர்களும் அடங்கிய நபர்கள்தான். சிக்கல் வெளியானால் பழங்குடியினர் நலத்துறைக்கு இதில் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டோ அல்லது எங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை என்று கூறிவிட்டோ பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் கைகழுவி விடுவார்கள்.

அதனால் பழங்குடியின நலத்துறை அலுவலர் இந்த வழக்கில் குற்றவாளி பட்டியலுக்குள் வரமாட்டார். கேரளத்தில் இந்த சிஸ்டம் அமைப்பு முறை நடைமுறையில் இருக்கிறது.

கேரளத்தில் இத்தகைய ஒரு மோசமான அமைப்பே நிலவுகிறது. ஆனால், இதைவிட முற்றிலும் மாறுபட்ட, வெற்றிகரமான முறைகள் இந்தியாவின் பிற பகுதிகளில் நடைமுறையில் உள்ளன.

எங்கே உள்ளது அது, அங்கே எப்படிச் செய்யப்பட்டது?

உதாரணமாக, கல்வி நிலையங்கள், பாலவாடி தொடங்கி நடுநிலைப் பள்ளி வரை எல்லாமே அந்த ஆதிவாசி ஊர்களின் கைகளிலேயே ஒப்படைக்கும் முறை உள்ளன.

அரசு மாதிரி உண்டுறைவிடப் பள்ளிகள் (Model Residential School) போலவா?

இல்லை. கேரளாவின் மாதிரி உண்டுறைவிடப் பள்ளிகள் போலல்ல இது. அரசின் கைகளில் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் அரசுப் பள்ளிகள் கல்வித்துறையின் கையிலிருந்து ஊரின் கைக்கு மாற்றிக் கொடுக்கப்படுகிறது. முற்றிலுமாக ஆதிவாசி ஊரின் கட்டுப்பாட்டின் கீழ் கொடுக்கப்படுகிறது.

உதாரணமாக நாகாலாந்தில் 2002-ல் சமூகமயமாக்கல் சட்டம் (Communitisation Act) என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் அங்கு கல்விக்கான அறிவிப்பாணை வெளியிடுகிறார்கள்.

எந்த வகுப்பு வரை அப்படிக் கொடுத்தார்கள்?

பாலவாடி தொடங்கி நடுநிலைப் பள்ளி வரையிலான வகுப்பு வரை. மேலும் அந்தந்த கிராமத்தில் அவர்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எங்கு தொடங்க வேண்டும் என்பது வரை அவர்களே தீர்மானிக்கிறார்கள்; அவர்கள் என்றால் கிராமமே தீர்மானிக்கிறது.

நாகாலாந்தின் கட்டமைப்பு என்பது பஞ்சாயத்து முறையல்ல. அங்கே இருப்பது கிராம வளர்ச்சி வாரியம் (Village Development Board), கிராம மன்றம் (Village Council) என்பதாகும். இந்த வாரியத்திடமும் மன்றத்திடமும்தான் பள்ளிகளின் நிர்வாகத்தை ஒப்படைக்கிறார்கள்.

வாரியத்திடமும் ஊரிடமும் ஒப்படைப்பது என்னவென்றால் அந்த நிறுவனம், அந்த கட்டிடம், அந்த சொத்து, அதன் நிர்வாகம், அங்கே நடக்கும் நியமனம் (Appointment), அதன் கண்காணிப்பு (Monitoring) என எல்லா விஷயங்களும் அந்த சபைக்கே கொடுக்கப்படுகிறது.

இது பழங்குடி நலத்துறைக்குக் கீழ் கொடுக்கப்படுகிறதா, ஆதிவாசி ஊருக்குக் கொடுக்கப்படுகிறதா?

இல்லை. அந்த ஆதிவாசி ஊரிடம் ஒப்படைக்கப்படுகிறது; நேரடியாக ஒப்படைக்கப்படுகிறது. அதேபோலவே சுகாதாரத் துறையில், சிறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரையிலான அனைத்து விஷயங்களும் ஊரின் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அதுபோல இதே சட்டத்தின் வழியாக மின்சார சேவைகள், இணைப்பு பழுதுபார்ப்பு, இதையொட்டி வரும் பிற விஷயங்கள், எல்லாமே ஊரின் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. கல்வித் துறையிலிருந்து அதிகாரத்தை ஊர்சபைக்குக் கொடுத்த பிறகு, கல்வித் துறையில் மிக வேகமான வளர்ச்சியையும் நல்ல முன்னேற்றத்தையும் நாகாலாந்து கண்டது.

இந்தப் பள்ளிகளில் ஆதிவாசி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனரா அல்லது வேறு ஆசிரியர்கள் உண்டா?

ஆசிரியர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கலாம். அங்கிருப்பது ஆதிவாசி ஆசிரியர்களா இல்லையா என்பதை விட முக்கியம், அது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். கல்வித்தரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை அங்கீகரித்து யுனெஸ்கோ (UNESCO) நாகாலாந்து அரசுக்கு விருது கொடுக்கிறது. அதேபோல சுகாதாரத் துறையில் மக்களின் கைகளில் ஒப்படைத்ததன் மூலம், பல்வேறு முன்னேற்றங்களை அடைந்தது. அதில் ஏற்பட்ட மாற்றங்களை, முன்னேற்றங்களை அங்கீகரித்து உலக சுகாதார அமைப்பு (WHO) நாகாலாந்துக்கு விருது கொடுக்கிறது.

இதைக் கேரளத்திலும் இதுபோல் பரிசோதிக்கலாமா?

எங்கு வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். கேரளத்தில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் இதைச் செய்து பார்க்கலாம்.

அட்டாப்பாடியிலும் வயநாட்டிலும்கூட பள்ளிகளை இந்த ஆதிவாசி ஊர்களுக்குக் கொடுத்து ஒரு பரிசோதனையைக் கேரளத்தில் நடத்த முடியுமா?

முடியும். இதில் அடிப்படையான விஷயம் என்னவென்றால், ஜனநாயக நடைமுறையில் ஒரு பொது சேவை, அது பள்ளியாக இருக்கலாம், நியாய விலைக் கடையாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

நம்முடைய ஜனநாயகத்தில் இரண்டு வடிவங்கள் உள்ளன. ஒன்று நேரடியாக மக்கள் மூலமாகச் செய்வது, இன்னொன்று மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் மூலமாகச் செய்வது.

ஆனால், நிலவும் தற்போதைய அமைப்பு முறையில் இந்த இரண்டு தரப்பினருக்குமே எந்தப் பங்கும் இல்லை. இரண்டாவதாக, இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையிலான உறவு என்ன? அதாவது, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இந்தத் துறைக்கும் இடையிலான உறவு என்னவென்றால், அது வெறும் நூலிழை போன்ற ஒரு பலவீனமான உறவுதான். பொதுவான ஒரு நிலைமை என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இந்தத் துறைகளைச் சார்ந்து வாழும் ஒரு நிலையில்தான் உள்ளது. "என் தொகுதியில் ஏதேனும் ஒரு வேலை நடக்க வேண்டுமென்றால், நான் இந்தத் துறை அதிகாரிகளின் பின்னால்தான் ஓட வேண்டும்" என்ற நிலையே உள்ளது. எனவே, இந்திய ஜனநாயகச் செயல்பாட்டில் இந்த மக்களாட்சிக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு அல்லது இணைப்பு என்பது உண்மையில் வலுவாக இல்லை. ஒரு உண்மையான ஜனநாயகத்தில் என்ன இருக்க வேண்டும் என்றால், இந்தச் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் மக்களாட்சியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க முடியும், அவர்களாலும் அதைச் செய்ய முடியும். இப்போதைய நிலை என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதைச் செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அதைச் செய்வதற்கான அமைப்புமுறையும், சட்ட அமைப்புமுறையும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாது, ஆனால் செய்தது போல் காட்டவும் வேண்டும்.

எனவே, தற்போதிருக்கும் இந்த முறையை மாற்றி, சமூகத்தின் மிகவும் கீழ் அடுக்குகளில் உள்ளவர்களிடம் அதிகாரத்தைக் கொண்டு சென்றால் மட்டுமே இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.

அப்படியென்றால், தலித்துகளின் வறுமையும், சீரழிவுகளும், எல்லாவற்றையும் சரிசெய்வதற்கான ஒரு வழி இதுதானா?

வேறு... என்னவென்று சொல்ல, உச்சபட்ச ஜனநாயகம் மட்டுமே இதற்குப் பரிகாரமாக இருக்க முடியும். அதுவும் குறிப்பாக, ஆதிவாசி மக்களுக்கு என்று சில சமூக அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகளில் மிகக் கீழான அடுக்குகளில் உள்ளவர்கள்தான் மிகவும் அதிகமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக அவர்களின் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும். இந்த பஞ்சாயத்து ராஜ் வந்தபோது, தாமஸ் ஐசக்கும், இடதுசாரிகளும் முன்னெடுத்தது என்னவென்றால், கிராமசபைகள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதாகும். இப்போது சொல்வதின்படி பார்த்தால், ஆதிவாசிகளின் விஷயங்களில் ஊர்சபைகள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதாகும். இந்தக் கிராமசபைக் கருத்தை அதிகாரத்தை ஊர்சபைக்கு மாற்றி அமைத்தால், சரிசெய்யக்கூடிய விஷயம்தானே?

இல்லை, நான் இதை அப்படிப் பார்க்கவில்லை. இடதா வலதா என்று நான் பார்க்கவில்லை. நாம் உறுதியாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடிப்படையில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒருபுறத்தில் அரசியல், அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றன. இன்னொரு புறத்தில் சட்டங்கள் இருக்கின்றன.

கேள்வி என்னவென்றால், நாம் விரும்பும் வகையில், நாம் சொல்லும் ஜனநாயக வழியில், மக்களின் விருப்பத்திற்கேற்பப் பஞ்சாயத்துகளை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு சட்டம் ஏதேனும் இங்கு உள்ளதா என்று கேட்டால், சட்டம் இல்லை. இதில்தான் பிரச்சினையே இருக்கிறது. இருக்கும் சட்டத்தில் பெரிய குறைபாடு இருக்கிறது. இப்போது அந்த சட்ட கட்டமைப்பை எடுத்துப் பார்த்தோமென்றால், மாவட்டத்திலுள்ளவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் இருக்கும். அதற்கு மேல் உள்ள துறைக்கு அதைவிடக் கூடுதல் அதிகாரம் இருக்கும். ஆனால், கிராமசபைக்கு என்ன இருக்கிறது? கிராமசபை என்று சொல்வது அனைத்து மாநிலங்களிலும் பெயருக்கு மட்டும்தான் இருக்கிறது. வருடத்தில் இரண்டோ மூன்றோ முறை கிராமசபை கூடும். அந்த கிராமசபை என்று அவர்கள் வைத்திருக்கும் வரையறைகூட, வழக்கமான பஞ்சாயத்து அடிப்படையில்தான். கிராமசபை என்பதன் வரையறையே பஞ்சாயத்தின் அடிப்படையில்தான் உள்ளது. ஒரு பஞ்சாயத்தில் 10,000 முதல் 20,000 மக்கள் வசிக்கிறார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்டு (10,000 - 20,000 மக்கள்) ஒரு கிராமசபை இயங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று; அது சரியான முறையில் இயக்கப்படவும் முடியாது.

நம்முடைய கலாச்சாரத்தில் 'கிராமம்' என்ற கருத்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்கள் தங்கள் கிராமத்தை பஞ்சாயத்தின் அடிப்படையிலோ அல்லது வருவாய்க் கிராமத்தின் அடிப்படையிலோ பார்ப்பதில்லை; மாறாக, 'ஊர்’ என்பதன் அடிப்படையில்தான் கிராமத்தை உணர்கிறார்கள். அதுதான் நடைமுறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஊரில் ஏதேனும் விவகாரங்கள் நடக்க வேண்டுமென்றால் – அது ஒரு திருவிழாவாக இருக்கலாம் அல்லது அங்கு நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் – அது ஊர்க் கூடி பேசித் தீர்க்கும் விஷயம்தான். அது ஏற்கனவே நம்மிடம் உள்ள முறைதான். எனவே, இதற்காக யாரும் புதிதாக கிராமசபையை உருவாக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு ஊர் என்று இருந்தால், அங்கு கிராமசபை ஏற்கனவே இருக்கிறது; அந்த அமைப்பு இயங்கிக் கொண்டும் இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்பெல்லாம் கிராமசபை சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, அதிகமான செயல்பாடுகள் இருந்தன. ஆனால், கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களோ அந்த இயற்கையான செயல்பாட்டை இல்லாமல் செய்துவிட்டன. இயங்கிக் கொண்டிருந்த கிராம சபைகளுக்குப் பதிலாக, உருமாற்றம் அடைந்து கொண்டிருந்த ஒரு அமைப்பாகச் சட்டங்கள் மாற்றப்பட்டு வந்தன.

அந்த இயக்கத்தைச் செயலற்ற ஒரு அமைப்பாக மாற்றவும் செய்கிற வழியைத்தான் இந்தச் சட்டங்கள் செய்தன. இதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தையே இல்லாமலாக்கும் ஒரு ஆட்சி முறை சட்டத்தின் மூலமாகவே கொண்டுவரப்பட்டது.

இது தெரியாமல் நடப்பதா என்ன? இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தானே; இதுவொரு சாதாரண பொது அறிவு. சாதாரண மனிதர்களுக்குக் கூட இது நன்றாகப் புரியும். இன்றும் கூட அந்தப் பாரம்பரிய முறைப்படியேதான் சமூகங்கள் இயங்குகின்றன. அப்படியானால் உண்மையில் நமக்கு என்ன தேவை? இப்போது ஆதிவாசி பண்பாட்டில், அவர்களின் ஆட்சிமுறை அமைப்பின் அடிப்படையில், ஒரு ஊர் இருந்தால், அந்த ஊர் தீர்மானிக்கும் காரியங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஒருவர் இருப்பார். இருளர்களிடத்தில் மூப்பன், குருதல, பண்டாரி என்று சொல்லும் அரசியல் அமைப்பு (சிஸ்டம்) உள்ளது. ஊர் தீர்மானிக்கும் காரியங்களைச் செய்ய மூப்பன் வைத்திருக்கிறார்களே அல்லாமல், மூப்பன் சொல்லும் விஷயத்தைச் செய்ய ஊர் இல்லை. இதுதான் அனைத்து ஆதிவாசி சமூகங்களிலும் வேரூன்றியுள்ள உண்மையான ஜனநாயகக் கோட்பாடாகும்.

நம்முடைய பொது ஜனநாயகச் சமூகத்தில் (Mainstream) என்ன நடக்கிறது? மக்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் சொல்வதை மக்கள் கேட்க வேண்டும். தேர்தல் நேரத்தில், நாம் சில கோரிக்கைகளை வைக்கவும், அவர்கள் சொல்கிற கோரிக்கைகளையெல்லாம் செய்து தரலாம் என்று சொல்லவும் செய்வார்கள்; பின் அவர்கள் வேறு என்னவோ செய்கிறார்கள். சில காரியங்களுக்கு நாம் சொல்வது கிடைக்கவும் செய்கிறது. இதுதான் நடக்கிறது.

ஆனால், உண்மையில் என்ன வரவேண்டும்? கிராமசபைகளுக்குத்தான் அதிகபட்ச அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்கொரு மிக எளிய உதாரணம், கேரளத்தில் நடைபெற்ற 'பிளாச்சிமடை போராட்டம்' ஆகும்.

பிளாச்சிமடை போராட்டத்தில், அங்குள்ள ஆதிவாசிகளின் பார்வை மற்றும் அந்தப் போராட்டத்தின் மையக் கருத்து என்னவென்றால் – நிலத்தடி நீர் மீதான முழுமையான அதிகாரம் அந்தந்த ஊருக்குத்தான் இருக்க வேண்டும் என்பதுதான்! ஆனால், சட்டம் மூலமாக அந்த அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. பின்னர், நிலத்தடி நீரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டபோது, ஆட்சியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஆரம்பத்தில் அதைப் பெரிதுபடுத்தாமல் உதாசீனப்படுத்தினர்; "அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றனர். அதன் பிறகே அந்த உண்மையை ஒப்புக்கொண்டனர். பிளாச்சிமடை பிரச்சினையின் தீர்வு என்பது கோகோ கோலா கம்பெனியை மூடுவது மட்டுமல்ல. அந்தந்த ஊரின் நீரின் மீதான அதிகாரம் அந்தந்த உள்ளூர்வாசிகளின் கைகளில் இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மாதிரியான உண்மையான ஜனநாயகமயமாக்கல் முறைக்குச் சென்றால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். அதுவும் குறிப்பாக, மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில்தான் முதலில் இந்த ஜனநாயகமயமாக்கல் தொடங்க வேண்டும். ஏனென்றால், பெருவாரியான முதன்மைக் சமூகத்துக்கான திட்டங்களை எடுத்துக் கொண்டால் – உதாரணமாக 'ரேஷன் கடை' முறையை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் இது 'வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கானது' என்றுதான் கொண்டுவரப்பட்டது. ஆனால் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றோம் என்றால், 'ஏழைகளுக்காக மட்டுமே' ஒரு திட்டத்தை மட்டும் தனியாக நடைமுறைப்படுத்துவது இன்றைய சமூக அமைப்பில் சாத்தியமில்லை! அதில் நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஒரு பங்கு அல்லது ஈடுபாடு இருந்தால் மட்டுமே அந்த அமைப்பு முறையாக இயங்கும். இதற்குச் சிறந்த உதாரணம்: ஒரு பஸ் நிலையம், ஒரு ரயில் நிலையம் மற்றும் ஒரு விமான நிலையம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். இவற்றில் சமூகத்தின் யதார்த்த நிலை மிகத் தெளிவாகப் புரியும்.

இந்தச் சமூக எதார்த்தத்தின் உள்ளே, இந்தப் புறக்கணிக்கப்பட்ட சமூகம் தாங்கள் கோருவது சட்டப்பூர்வமாக நிறைவேற வேண்டும் என்று விரும்பினால் – அது எவ்வளவு நல்ல நோக்கங்களைக் கொண்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது இடதுசாரியாக இருந்தாலும் சரி, வலதுசாரியாக இருந்தாலும் சரி, அல்லது எத்தகைய நல்ல அதிகாரிகள் பதவியில் இருந்தாலும் சரி – அந்தச் சமூகத்திற்கு அதன் மீது முழுமையான அதிகாரம் வழங்கப்படாத வரையில், எதுவும் மாறப் போவதில்லை! ஏனெனில், நம் சமூக அமைப்புமுறை அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழில்: இலட்சுமணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.