சென்ற சூலை 29 வியாழன் காலை சென்னை அரும்பாக்கம் இராதாகிருஷ்ணன் நகர் குடிசைப் பகுதிக்குள் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடனும் பெரிய இடிபொறிகளுடனும் நுழைந்து வீடுகளை அகற்றத் தொடங்குகிறார்கள். மக்களின் கதறலை அவர்கள் பொருட்படுத்தவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகர்கள் அதிகாரிகளிடம் கேட்கும் போது ”இவர்களுக்கு முன்பே அறிவிக்கை கொடுத்து விட்டோம். புளியந்தோப்பு கே.பி. பூங்கா பகுதியில் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது” என்ற விளக்கம் கிடைக்கிறது. தங்களுக்கு முறையான முன்னறிவிப்பு தரப்படவில்லை என்று மக்கள் முறையிடுகின்றார்கள்.கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான கீதா நேரில் சென்று எதிர்ப்புத் தெரிவித்தும் பயனில்லை. அவர் மக்களில் சிலரை அழைத்துக் கொண்டு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் மனுக் கொடுக்கப் புறப்பட்டுச் செல்கிறார். யாராவது வந்து இந்த வீடுடைப்பைத் தடுத்த நிறுத்த மாட்டார்களா? என்று மக்கள் தவித்து நிற்கின்றனர்.
இங்குள்ள கிட்த்தட்ட 400 குடியிருப்புகளில் அரசு 243 குடியிருப்புகளை மட்டும் அங்கீகரித்துள்ளது. இவற்றுள் முதல் கட்டமாக 120 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் 93 குடும்பங்களுக்கு மட்டும் கே.பி. பூங்காவில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கிட்டத்தட்ட 25 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. அவர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை! இப்படி விடுபட்டவர்களுக்கு வேறிடத்தில் (பெரும்பாக்கம் அல்லது கண்ணகி நகர்) ஒதுக்கீடு செய்வதாக மாநகராட்சி உறுதியளித்துள்ளது. இது அவர்களுக்குத் தண்டனை போலத்தான்!
இதற்கிடையில் இராதாகிருஷ்ணன் நகரில் அடுத்தக் கட்ட வெளியேற்றத்துக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அங்கிருப்பவர்களில் சிலர் மறுகணக்கெடுப்பு செய்யுமாறு கேட்டுள்ளனர். எத்தனைக் குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன என்ற புதிய கணக்கை வெளியிட்டு அதற்கேற்ப மீள் குடியேற்றம் செய்யக் கோரியுள்ளனர். அருகிலுள்ள திருமங்கலத்திலேயே வீடு ஒதுக்கித்தர இயலும். கே.பி. பூங்காவில்தான் என்றாலும் புதிய கணக்கெடுப்பின் படி மீள் குடியேற்றம் செய்யலாம். ஆனால் வீடுகளை இடிப்பதாக இருந்தால் முன்னறிவிப்புச் செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் நியாயமான கோரிக்கை. ஆக, அரும்பாக்கம் இராதாகிருஷ்ணன் நகர் சிக்கல் இன்னும் முடியவில்லை. அரசு உடனடியாகத் தலையிட்டு மக்களின் அல்லலுக்கும் அலைக்கழிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் இயக்கங்கள் கோர வேண்டும்.
பெருந்தொற்றுக் காலத்தில் எல்லா வகையிலும் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகித் தவித்துக் கொண்டிருக்கும் போது இந்த அதிரடி வீடகற்றல் தேவைதானா? என்று கேட்டால், கூவம் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை அகற்றா விட்டால் மழை வெள்ளத்தில் நீர்வழி தடைப்படும் என்று காரணம் சொல்லப்படுகிறது. சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், குடிசை மாற்று வாரியத்தைக் கொண்டு மாற்றுக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதாகவும், ஒரே ஒரு குடும்பம் கூட நடுத்தெருவில் நிற்க நேரிடாது என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதியளிக்கிறார்.
11 மாடி மற்றும் 9 மாடி அடுக்ககத்தில் குடியிருப்பு ஒதுக்கப் பெற்றவர்கள் பெரும்பாலும் மன நிறைவடைந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஆற்றங்கரைக் குச்சுடன் ஒப்பிட்டால் ஓங்கியுயர்ந்த அடுக்ககம் என்பது அவர்களுக்கு மகிழ்வாகத்தான் இருக்கும். கடந்த காலத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் ஊருக்கு வெளியே பெரும்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் என்று தூக்கி வீசப்பட்டது போல் இல்லாமல் இப்போது சென்னை நகருக்குள்ளேயே குடியிருப்பு கிடைத்திருப்பது பெரிய ஆறுதல்தான். ஆனால் அடுக்ககத்தில் குடியிருப்பதால் வரக்கூடிய சிக்கல்களை இவர்கள் விரைவில் பட்டறிவார்கள். இந்த உயர்ந்த பலமாடிக் கட்டடங்கள் நிலத்தடி நீரை வற்றச் செய்து விடும். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் போது பெரும்பாடாகி விடும். இந்த அடுக்ககங்களுக்கு இடைவெட்டில்லா மின்சாரம் இல்லாமல் முடியாது. மின்தூக்கி இயங்காமல் போனால் மாடிக் குடியிருப்பகங்களுக்குப் போய்வர முடியாது.
இந்த அடுக்ககங்களில் முன்பு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் அவர்களது பங்களிப்பாக வீட்டுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வீதம் தண்டியுள்ளனர். இப்போது இலவச ஒதுக்கீடு பெற்றவர்களும் மாதந்தோறும் பேணுகைக் கட்டணம் (இப்போது ரூ.700/- அளவில்) செலுத்த வேண்டுமாம். அவர்களுக்கு இதுவே பெருந்தொகைதான். முப்பது நாற்பது ஆண்டுகளாக வசித்த இடத்தை இழந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் போது எந்தப் பெயரிலும் எவ்விதக் கட்டணமும் தண்டலாகாது. மீள்குடியேற்றப்படுகிறவர்களுக்குப் புதிய குடியிருப்பின் மீதான அவர்களின் உரிமை முறையாக எழுத்து வடிவில் உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் அல்லது அரசியலாரின் தயவில் அவர்கள் வாழும் நிலை கூடாது.
பல்லாண்டு காலம் ஓரிடத்தில் குடியிருந்து இப்போது வசிப்பிடத்தைப் பறிகொடுத்துத் தெருவில் நிற்கும் குடும்பங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவதில் நியாயமில்லை. வசிப்பிடத்தால் மட்டும் வயிறு நிறைந்து விடாது. பிழைப்பு வழியை இழந்து தொடர்பற்ற தொலைதூரத்தில் வசிப்பிடம் பெறுவதால் என்ன பயன்? இந்த மக்கள் பெரும்பாலும் அன்றாடங்காய்ச்சிகள். தாங்கள் வசிக்கும் பகுதியை ஒட்டியே வேலை செய்கிறவர்கள். இவர்களில் சிலரைத் தொலைவாகத் தூக்கி வீசினால் பிழைப்பு போய் விடும். முன்பு இப்படித் தூக்கி வீசப்பட்டவர்கள் பட்டு வரும் துன்பத்தையே இவர்களும் பட வேண்டியிருக்கும். இராதாகிருஷ்ணன் நகர் நிகழ்ச்சிகளுக்குப் பின் அதிகாரிகள் பெரும்பாக்கம், கண்ணகி நகர் என்று பேசுவதைக் குறைத்துள்ளனர். பெரும்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர் கல்குட்டை மக்களின் நெடுநாளைய கோரிக்கைகள் நிறைவேறவும் இந்தத் தருணம் பயன்பட வேண்டும்.
செய்யும் வேலை அல்லது தொழிலைப் பொறுத்து அண்மையிலேயே அவர்களுக்கு வாடகை இல்லாமலோ மிகக் குறைந்த வாடகைக்கோ குடியிருப்பு வழங்குவது அரசின் கடமை.
அனைத்துக்கும் முதலாவதாகக் குழந்தைகளின் கல்வியை மையப்படுத்தி அரசு இச்சிக்கலை அணுக வேண்டும். எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்து எண்ணும் எழுத்தும் இல்லாமல் வளர்த்து விடுவது அவர்களுக்கோ பொதுக் குமுகத்துக்கோ நல்லதன்று. வசிப்பிட உரிமையை உறுதி செய்யாமல் கல்வியுரிமையை உறுதி செய்ய முடியாது.
சென்னைக்கு நடுவில் மக்களுக்குக் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க இடமில்லை என்பது பொய். கிண்டி குதிரைப் பந்தயத் திடல், கால்ஃப் விளையாட்டுத் திடல், இராயப்பேட்டையில் ஆற்காடு நவாப் அரண்மனை, நகரின் பல பகுதிகளிலும் பெருஞ்செல்வந்தர்களின் விரிந்து பரந்த மாளிகைகள் … இவற்றையெல்லாம் அரசு கைப்பற்றி அடித்தட்டு இடைத்தட்டு மக்களுக்கு வீடு கட்டித் தரலாம். நகரப்புற நில உச்சவரம்பு என்னாயிற்று?
இராதாகிருஷ்ணன் நகரில் போலவே அடுத்தடுத்து இன்னும் பல பகுதிகளில் வீடுகள் அகற்றப்படவுள்ளன என்று செய்தி! எடுத்துக்காட்டாக கோட்டூர்புரத்தில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை இடிக்கத் திட்டமாம். ஆற்றங்கரைச் சேரிகளை அகற்றுவதாக இருந்தால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து அவர்களை அங்கு குடியேறவும் செய்து விட்டு அவர்களின் ஒப்புதலுடனேயே பழைய வீடுகளை அகற்ற முடியுமே! இடிபொறிகளும் காவல் தடிகளும் திடீர்ப் படையெடுப்பும் தேவையில்லையே? நீர்வழிகளைப் பாதுகாப்பதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் குடிமக்களை முழுமையாக ஈடுபடுத்தலாமே? மழை வெள்ளத்தில் பாரிய அளவில் துயரப்படுவது ஏழை எளிய மக்கள்தாமே? அது அவர்களுக்கே தெரியும்தானே?
அரசிடம் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதிகார வர்க்கத்தையும் அரசியல் பிழைப்பாளர்களையும் பேட்டை ’பிஸ்தா’க்களையும் சார்ந்து செயல்படாமல், உழைக்கும் மக்களைச் சார்ந்து செயல்படுவதே எந்தத் திட்டத்தின் வெற்றிக்கும் வித்தாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஏழை எளிய ஒடுக்குண்ட மக்களை ஆறு குளம் ஏரி ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டுவது போன்ற பொய்மை வேறில்லை. சென்னை நகரத்தில் ஆனாலும் பிற பகுதிகளில் ஆனாலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், விண்மீன் உல்லாச விடுதிகள், உச்சப்பேரங்காடிகள், கேளிக்கை அரங்குகள், சொகுசுக் குடியிருப்புகள் பலவும் ஆறு குளம் ஏரி கண்மாய்ப் படுகைகளிலும் சதுப்பு நிலங்களிலும் கட்டப்பட்டிருப்பது கண்கூடு. குடிசைகளை அகற்றுவதற்கு முன் இவற்றைத்தான் அரசு முதலில் அகற்ற வேண்டும்.
பார்க்கப் போனால், ஆறு குள ஏரி ஆக்கிரமிப்பில் அரசே முதல் குற்றவாளி என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது கடந்த சில ஆண்டுகளில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் பெரும்பாலும் ஏரி நிலங்களில் கட்டப்பட்டவையே என்று சுட்டிக்காட்டப்படுகிறது. சென்னை அம்பத்தூர் ஏரியில் தனியார் ஆக்கிரமிப்பு ஒருபுறமிருக்க அரசின் வீட்டுவசதி வாரியமும் பெரும் அடுக்ககங்களைக் கட்டியிருப்பதை சான்றாகக் குறிப்பிடலாம்.
அரசு தன் ஆக்கிரமிப்புகளைத் திட்டமிட்டு விரைவில் அகற்றிக்கொண்டு குடிமக்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெரும்படியான தனியார் ஆக்கிரமிப்புகளை எவ்விதப் பக்கச் சார்புமின்றி அப்புறப்படுத்த வேண்டும். இவற்றை வெளிப்படையாகவும் மக்கள் ஆதரவுடனும் நிறைவேற்றுவதாக இருந்தால் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குமுகத் தேவை கருதி அப்புறப்படுத்த வேண்டியவற்றை மக்களின் மனமார்ந்த ஒத்துழைப்புடனேயே அப்புறப்படுத்த இயலும். இது குறித்து மக்களுடன் அரசு வெளிப்படையாகவே உரையாடலாம். மக்களின் வசிப்பிட உரிமையை அறிந்தேற்று அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை அரசே செய்து தர இயலும். இல்லையேல் குடியாட்சியம் என்று பேசுவதில் பொருளில்லை.
வரம்போ வரையறையோ இல்லாத நகரமயமாக்கம் என்பது முதலிய ’வளர்ச்சிப் பாதை’யின் உடன்பிறப்பு ஆகும். குறிப்பாக இன்றையப் புதுத் தாராளியப் பொருளியல் அமைப்பு முழுக்க முழுக்கத் தனியார்மயத்தையும் அதிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில பெருங்குழுமங்களின் ஈட்ட வெறியையும், மக்கள்நல மறுப்பையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் நகரமயமாக்கத்தின் கொடுவிளைவுகளைக் கோரமாக்கி விடுகிறது.
உலக மயம், தனியார் மயம், தாராள மயத்தின் பகைப்புலத்தில் இன்றைய நகரமயம் நிகழ்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் பொருள் இந்த நகரமயத்தையும் அதன் கொடுவிளைவுகளையும் இவற்றுக்கு அடிப்படையான அரசுக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதோ முடியாது என்பதோ அல்ல. மக்கள் போராட்டங்களைக் கொண்டு அரசுக் கொள்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்த்துப் போராடவும் மாற்றவும் முடியும் என்ற நம்பிக்கையோடு களமாட வேண்டும்,
புதுத் தாராளிய வளர்ச்சிக் கொள்கையின் மற்றக் கூறுகள் எப்படியோ அப்படியே இந்த வரைமுறையற்ற நகரமயமும் அதன் விளைவான அதிரடி வீடகற்றல் கொள்கையும் பொதுவாக அடித்தட்டு, இடைத்தட்டு மக்களைத் துயர்படுத்தும் படியானவை என்னும் போதே ஒடுக்குண்ட தலித்து மக்களுக்கே மிகப் பெரிய துன்பச் சுமையாகின்றன. சேரிகளைக் கற்காரையாக்குவது பொருளியல் துன்பத்துக்கோ குமுகியல் ஒதுக்கலுக்கோ முற்றுப்புள்ளி வைத்து விடுவதில்லை. பட்டிக்காட்டில் ஆனாலும் பட்டணத்தில் ஆனாலும் வசிப்பிட உரிமைக்கான போராட்டம் குமுக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் ஆகிறது.
தமிழ்நாடு தமிழ்மக்களின் தாயகம் என்ற வரலாற்று உரிமைக்கு முரணின்றியே உழைத்துப் பிழைக்கத் தமிழகம் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியமான வசிப்பிட உரிமையையும் ஆதரித்து நிலைநாட்ட வழிவகை காண வேண்டும்.
உலகளாவிய முறையில் இப்படி நடந்துள்ள போராட்டங்களின் வெற்றிப் பதிவுகளை உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரிமையும் ஐநா ஆதரவிலான பன்னாட்டு உடன்படிக்கைகளும் தாங்கியுள்ளன. இந்திய அரசமைப்பின் முகப்புரையையும் அடிப்படை உரிமைகளையும், குறிப்பாக உறுப்பு 21 சாற்றிடும் வாழ்வுரிமையையும் வசிப்பிட உரிமைக்கு அடிப்படையாகச் சுட்டும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. வலுக்கட்டாயமான அப்புறப்படுத்தலுக்கு எதிராகவும் கண்ணியமான வீட்டுவசதி கோரியும் நாட்டின் பிற பகுதிகளில் நடந்துள்ள போராட்டங்களும் நமக்கு ஊக்கமளிக்கும்.
வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் ஓர் இன்றியமையாக் கூறாக வசிப்பிட உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க மக்கள்நலம் நாடும் அனைத்து இயக்கங்களுக்கும் ஆர்வலர்களுக்கும் காலம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்போம்!
- தியாகு