“ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை” (குறள் - 478)

‘பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை’ என்று வள்ளுவனின் குறளுக்கான விளக்கத்தைத் தருகிறார் தமிழறிஞர் மு. வரதராசன் அவர்கள். ஆனால், திருவள்ளுவரின் பொருள் (பணம்) சிக்கனக் கையாடல் பற்றிய சிந்தனைக்கு மாற்றாக அமைவது பூட்ஸ் கோட்பாடு ஆகும்.

பூட்ஸ் கோட்பாடு என்பது Sam Vimes Boots Theory என்றும் Cheap shoes theory என்றும் அழைக்கப்படும். இக்கோட்பாடு குறைந்த அளவு பணம் இருப்பதால் மலிவான பொருட்களை வாங்கும் மக்கள் வருங்காலங்களில் அதிக பணம் செலவழிக்க நேரிடும் என்பதை விளக்கும் ஒரு பொருளாதாரக் கோட்பாடாகும். இந்தக் கோட்பாடானது 1993-ஆம் ஆண்டு டெர்ரி பிராட்செட் (Terry Pratchett) அவர்கள் எழுதிய Men at Arms என்ற நாவலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது. மேலும், இக்கோட்பாடு பரவலாக பொருளாதாரம், தனிநபர் நிதி மேலாண்மை, சமூக நீதி, நுகர்வோர் நடத்தை மற்றும் வறுமை சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.consumption frenzyஇந்தக் கோட்பாட்டின் மையக்கரு என்பது இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகைக்கு ஏற்ப நிலப்பரப்பு இல்லாமல் உள்ள வளரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஏழைகள் அதிக அளவில் காணப்படுவதற்கும், அவர்கள் ஏழைகளாகவே தொடர்வதற்கும் அவர்கள் செலவு செய்வதில் காட்டும் சிக்கனமான மனநிலையே காரணம் என்கிறது. மேலும், குறைந்த விலை கொடுத்து வாங்கப்படும் தரமற்ற பொருட்களை வாங்குவதன் மூலம், எதிர்வரும் காலங்களில் அப்பொருட்களால் ஏற்படும் துன்பத்திற்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அத்தோடு அவர்கள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டிய கட்டாயமும் நேரிடுகிறது என்பதைத்தான் இக்கோட்பாடு தெளிவாக விளக்குகிறது.

ஒரு தனிநபர் பணக்காரனாகவே இருப்பதற்கும், ஏழையாகவே தொடர்வதற்கும் அவர்களின் வருமானம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. மாறாக அவர்கள் நினைத்த பொருட்களை வாங்குவதற்கு காட்டும் ஆர்வம் மற்றும் அதற்காக அவர்கள் செலவு செய்யும் பணம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதன் அடிப்படையிலேயே இந்த பூட்ஸ் கோட்பாடு செயல்படுகின்றது.

இக்கோட்பாடு ஒரு பணக்காரர் தொடர்ந்து பணக்காரராகவே இருப்பது எப்படி? என்பதையும், அவர்களிடம் வருமான உயர்வு இல்லாத சூழலிலும் கூட தன்னை பணக்காரராகவே தக்க வைத்துக் கொள்வதன் சூட்சமம் என்ன என்பதையும் தெளிவாக விளக்குகிறது. பணக்காரர் வருமானம் இல்லாத காலத்தும் தரமான பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் செய்யும் செலவானது, தரமற்ற பொருட்களை வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும், தொடர்ச்சியான செலவுகளில் இருந்தும் விடுவிக்கின்றது. அதன் மூலம் அவரின் தொடர்ச்சியான செலவினங்களில் இருந்து வருமானம் சேமிக்கப்பட்டு அவர் எப்பொழுதும் பணக்காரராகவே இருக்க முடிகின்றது என்பது இக்கோட்பாட்டின் தத்துவம் எனலாம். ஏழைகள் பெரும்பாலோரின் மனநிலை என்பது, ஒரு தரமான பொருளுக்கு ஈடான பொருள் குறைந்த விலையில் கிடைக்கும் போது, தரமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க விரும்புவதில்லை. இதன் விளைவாக அவர்கள் குறைந்த விலையுடைய தரமற்ற பொருட்களையே வாங்கிக் கொண்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் பணத்தினை தொடர்ந்து இழக்க நேரிடுகிறது. இதனால் அவர்களுக்கு சேமிப்பு என்பது எட்டாக்கனி ஆகிவிடுகின்றது.

ஒருமுறை நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் எப்பொழுதும் நாகரிகமாகவே உடையணிவார். அவரின் உடைகள் அனைத்தும் விலை உயர்ந்தவை. ஆனால் அவரோ சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். அப்போது "உங்களுக்கென்ன பணக்காரர் நீங்கள்; எங்களைப் பாருங்கள் சாதாரண ஆடைகளைத் தவிர விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது" என்றேன். அதற்கு நண்பர் சிரித்துக் கொண்டு, "நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த மாதிரியான ஆடைகளெல்லாம் வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்க முடியும் என்ற மனநிலை என்னிடமும் இருந்தது. ஒருமுறை நாம் ஏன் அந்த ஆடைகளை வாங்கக் கூடாது என நினைத்து வாங்கிப் பார்த்தவுடன் முதலில் எனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை அகன்றது; பின்பு பணக்காரரும் நானும் ஒன்றுதான் என்ற எண்ணம் உருவானது. மேலும், குறைவான விலையுடைய ஆடைகளின் ஆயுட்காலத்தை விட நான் வாங்கும் ஆடைகளின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன். எனவே என்னால் தன்னம்பிக்கையுடன் இருக்க முடிகிறது. அதேசமயம் என்னைப் பார்ப்பவர்களின் பார்வையில் சிறப்பானவனாகவும், வசதி படைத்தவனாகவும் தெரிகின்றேன்" என்றார். அவருடைய வார்த்தையில் எவ்வளவு உண்மை, எவ்வளவு யதார்த்தம் இருக்கின்றது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. ஆகவே, ஒரு ஏழை ஏழையாகவே இருக்கக் காரணம் அவர்களின் சிந்தனையில் தெளிவு இல்லாமை என்பதும், பணக்காரர் வருமானம் குறைவாக இருந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் தெளிவான சிந்தனையால் பணக்காரனாகவே இருக்கின்றார் என்பதும் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இந்தக் கோட்பாட்டினை விளக்கிட ஒரு சிறந்த உதாரணம்: ஒரு நல்ல பிராண்டில் ஒரு நபர் ஷூ ஒன்றை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அதன் விலை ரூபாய் 5,000 என்றால், அதன் பயன்பாட்டுக் காலம் என்பது ஐந்து வருடங்கள் வரும். அதேசமயம் மற்றொரு நபர் 1,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் வாங்கும் ஷூ என்பது ஆறு மாத காலம் மட்டுமே உழைக்கிறது. எனவே இரண்டாம் நபர் முதல் நபரைக் காட்டிலும் ஐந்தாண்டுகளில் ஷூவுக்காக மட்டும் ரூபாய் 10,000 செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், 5,000 ரூபாய் கொடுத்து ஷூ வாங்கும் நபர் 1,000 ரூபாய் கொடுத்து ஷூ வாங்கும் நபரைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் 5,000 ரூபாய் குறைவாக செலவு செய்கிறார். எனவே அவர் மீதமுள்ள இந்த 5,000 ரூபாயை சேமிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் 1,000 ரூபாய்க்கு ஷூ வாங்கும் நபர் குறைவாக செலவு செய்வது போல் தோன்றினாலும் அவரின் தொடர் செலவுகளின் மூலம் முதல் நபரை விட 5,000 ரூபாய் அதிகமாக செலவு செய்ய நேரிடும். எனவே அவர் சேமிக்கும் வாய்ப்பையும் இழக்கிறார். இதன் மூலம் இரண்டாம் நபரின் பொருளாதாரம் பின்னடைந்து அவர் எப்போதும் ஏழையாகவே தொடர வாய்ப்புள்ளது. இதனைப் போலவே iPhone வாங்குபவர்களுக்கும் சாதாரண போன் வாங்குபவர்களுக்குமான வித்தியாசத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும், இந்த பூட்ஸ் கோட்பாட்டினை ஆழ்ந்த பகுப்பாய்வு செய்வதன் மூலம் இன்னமும் சில உண்மைகள் புலப்படும். அதாவது நுகர்வோர் பொருளைத் தெரிவு செய்யும் போது அதிக விலை கொடுத்து வாங்கும் அனைத்து பொருட்களும் தொடர் செலவினங்கள் இன்றி நமக்கு அதிக பயன்பாட்டை வழங்கும் என்று முழுவதுமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாம் அளிக்கும் விலை அதிகமாக இருக்கும் போது அதற்கு நிகராக தரம் அதில் உள்ளதா? என்பதை அறியும் பொறுப்பு நுகர்வோருக்கு உண்டு என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. அதன் மூலம் இந்த கோட்பாடு கூறும் நன்மைகளை நாம் பெற முடியும்.

அதே போன்று நுகர்வோரில் சிலர் அடிக்கடி பொருட்களை மாற்றுவதன் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அந்தப் பொருளினால் ஏற்படும் முன்னேற்றங்களை அடைய விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கோட்பாடானது பொருந்தாது. ஏனென்றால் இவர்கள் நீண்ட நாள் ஒரே பொருளைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். உதாரணமாக கார், இருசக்கர வாகனங்கள், மொபைல் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.

நிறைவாக, ஒரு நுகர்வோரின் முக்கியக் கடமையாகப் பார்க்கப்படுவது நாம் அளிக்கும் விலைக்கு ஏற்ற தரமான பொருட்களை வாங்கினோம் என்ற மனநிறைவும், தொடர்ந்து தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும்தான். நல்ல சிந்தனைகளால் நம்மைப் பாதுகாக்கும் போது, உண்மையில் நம் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

“பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்” (குறள் - 675)

- முனைவர் வீ. கிருஷ்ணகுமார், உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை, ஏ.வி.சி. கல்லூரி, போடிநாயக்கனூர்.

Comments

1 comment

1
Jeyabalan Rajan
புதிய சிந்தனை. தொடரட்டும் தங்களின் முயற்சி பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.