Ecuador - ஈகுவேடார் நம்மில் பலருக்குப் பரிச்சயம் இல்லாத பெயர். ஆனால், மிகப் பிரபலமான ஆண்டிஸ் மலைத் தொடர்களையும், அமேசான் காடுகளையும் கொண்ட வளம் மிக்க இயற்கை எழில் சூழ்ந்த தென் அமெரிக்க நாடு அது.

இன்றும் பல அரிய வகை உயிரினங்களுக்கும், மரம் செடி கொடிகளுக்கும் உயிர் ஆதாரமாக இந்த நாட்டின் மழை வனக்காடுகள் திகழ்கின்றன.

Nemonte Nenquimoபெரும்பாலும் பழங்குடி மக்கள் வாழும் நாடான ஈக்வடாரில் 1968'ஆம் ஆண்டில் முதல் முறையாக அமெரிக்காவின் டெஸ்கோ நிறுவனம் பெட்ரோலியத்தைக் கண்டுபிடித்தது. இன்று அந்த நாட்டின் பொருளாதாரத்தில் எண்ணெய் ஏற்றுமதி 40% ஆக உள்ளது.

எண்ணெய் வளங்களைத் திருட அமெரிக்க ஏகாதிபத்தியமும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களும் வழக்கமாக என்னென்ன அயோக்கியத்தனங்களையும், அடாவடிகளையும் செய்யுமோ அதை ஈக்வேடாரிலும் குறைவின்றி செய்தனர்.

பழங்குடிகள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று உலகம் சொன்னாலும் மிகுந்த பகுத்தறிவோடு ஈகுவேடார் மக்கள் விரைவாகவே அமெரிக்கா மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டார்கள்.

தங்களது இயற்கை வளங்களையும், எதிர்கால சந்ததியையும் பாதுகாக்கப் பழங்குடி மக்கள் தொடர் போராட்டங்களை அந்த நாட்டில் நிகழ்த்திக் காட்டினார்கள். ஜனநாயக வழிப் போராட்டங்கள் மட்டுமல்லாது சட்ட ரீதியாகவும் பல்வேறு போராட்டங்களை பழங்குடி மக்கள் நிகழ்த்தினார்கள்.

ஈகுவேடாரின் நீதிமன்றங்களிலும், ஐநா மன்றங்களிலும் பழங்குடி மக்கள் தங்கள் கலாச்சார ஆடைகளோடு அமர்ந்திருந்த புகைப்படங்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொடர் போராட்டங்களுக்கு வெற்றியாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டு நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி Waorani பழங்குடி மக்களிடமிருந்து எண்ணெய் எடுப்பதற்காக பிடுங்கப்பட்ட நிலங்களைத் திருப்பி ஒப்படைக்கும்படி அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காடுகளின் நிலங்களை எண்ணெய் எடுப்பதற்காக அபகரிக்கும் முன் அங்குள்ள பழங்குடி மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் மழை வனக்காடுகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டங்களில் முன்னணியில் நின்ற Waorani Nationality Ecuador Pastaza (CONCONAWEP) அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் Nemonte Nenquimo செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் "The government's interests in oil is not more valuable than our rights, our forests, our lives." என்று கூறியுள்ளார். இவர் ஒரு பழங்குடி பெண் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2012' ல் ஈகுவேடாரில் என்ன நடந்ததோ அதே தான் இன்று தமிழ்நாட்டில் தஞ்சை டெல்டா பகுதிகளில் நடந்துகொண்டு இருக்கிறது. பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க, நமது வயல்வெளிகளையும், நமது மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க தேச நலன் என்ற முகமூடியோடு ஆளும் வர்க்கம் வந்திருக்கிறது.

"Our territory is our decision, and now, since we are owners, we are not going to let oil enter and destroy our natural surrounding's and kill our culture." என்ற அமேசான் பெண்களின் கோசத்தை முன்வைத்து நம் வளங்களை மீட்க நாமும் போராடுவோம்.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It