சி.ஆர். பிஜாய் ஒரு சுயாதீனமான ஆய்வாளர், சிந்தனையாளர் மற்றும் சுற்றுச்சூழல், ஆதிவாசி மக்கள் ஆகிய சொல்லாடல்களில் மதிப்பிற்குரிய செயல்வீரர். 2002இல் காடுகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு பன்னாட்டு மற்றும் அதிகார வர்க்கத்தினரிடமிருந்து அதிகமான அழுத்தங்கள் ஏற்பட்ட போது களமிறங்கியவர். உயிர்வாழ்தலுக்கும் மாண்பிற்குமான பரப்புரையில் நேரடியாகப் பங்குபெற்று ஆதிவாசி மக்களின் போராட்டத்தில் தீவிர பங்காற்றியவர். 2006 வனப் பாதுகாப்புச் சட்டம் மூலம் ஆதிவாசி மக்களுக்கு நில அதிகாரத்தைப் பெற்றுத்தந்ததில் இவருக்கும் பங்கு இருக்கிறது. இந் தியக் காடுகளில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்த சில நபர்களில் இவரும் ஒருவர். அதனாலேயே முக்கியத்துவம் பெறுகிறார்.

சி.ஆர்.பிஜாயுடன் நேர்காணல் - இரா. முருகவேள்

தமிழில்: சங்கர்

 ஆதிவாசிகளுடான உங்கள் உறவு எப்படி எவ்வாறு தொடங்கியது? ஆதிவாசிகளின் பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனை என்று எப்போது உணரத் துவங்கினீர்கள்?

CR Bijoy மக்கள் நல்வாழ்வுத் துறையிலான என்னுடைய வேலை (மக்கள் விஞ்ஞானத்தைத் தழுவி ‘சமூகநல் வாழ்வு’த் திட்டம் ஒன்றை வளர்த்தெடுக்கும் பணி) ஆதிவாசிகளுடன் முதல் கலந்துறவாடலை உருவாக்கித் தந்தது. என்னுடைய, நல்வாழ்வுத்துறைப் பணி நடந்து கொண்டிருந்த பகுதியில், அவர்கள் ஒரு சிறிய சிறு பான்மையினராக இருந்தனர். பணியின் காரணமாய் மலைக்குன்றுப் பகுதியில் வசிக்க நேர்ந்ததில், என்னைச் சுற்றியுள்ள சூழலையும், வியாபாரிகள், விவசாயிகள் (மண்ணில் இறங்கி நேரடி விவசாயம் செய்யாத நில உரிமையாளர்கள்), செங்கற்சூளைத் தொழிலாளர்கள், நல்வாழ்வுத்துறை, வனத்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், அரசியல் கட்சித் தொண் டர்கள் உள்ளிட்ட அந்தப் பகுதியின் அனைத்து மனிதர் களையும் அறிந்திருந்தேன். 1980களில், அந்தப்பகுதியின் அரசியல் பொருளாதாரம் முழுமையும், பண்ணையார்மாபியா கும்பல்களால்தான் வழி நடத்தப்பட்டது.

 காட்டு மாபியாக்கள் (உள்ளூர் வாசிகள் அல்லாத சமவெளியிலிருந்து வந்தவர்கள்) கையில் அதிகாரம், நிலங்கள், விவசாய விளைபொருட்கள் இருந்தன. வணி கம், சமவெளிகளிலிருந்து வந்த இடைநிலைச் சாதியின ரால் கட்டுப்படுத்தப்பட்டது. மற்றைய மாநிலங்களைப் போலல்லாது, தமிழ்நாட்டில் ஆதிவாசிகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாததால் அவர்களது நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக, கிராமப்புற சமவெளி களிலிருந்து வந்த வேற்று மனிதர்களால் அபகரிக்கப் பட்டுக்கொண்டே இருந்தன. அரசு சேவைகள் ஏதும் கிடைக்காமலிருந்தன அல்லது மிக மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்து வந்தன.

ஆதிவாசிகள் அணி திரட்டப்படாமலேயே இருந்தனர் (இந்தப் பகுதியில், தொடக்க நிலை பழங்குடி வகையினரான இருளர்கள் இருந்தனர்; அவர்களைத் தமது உணவு சேகரிப்பதி லிருந்தும், வேட்டையாடுதலிலிருந்தும் பலவந்தமாக வெளியேற்றி, அவர்களுக்குப் பழக்கமேயில்லாத, நிலைத்த விவசாயத்தில் ஈடுபடும்படி நிர்பந்திக்கப்பட்ட னர்.) ஆதிவாசிகளின் காட்டுக்குள் நுழையும் உரிமை மிக மோசமாகப் பறிக்கப்பட்டதும்; அவர்களைப் பல வகைகளில் ஏமாற்றி மோசடி செய்தும், உடல்/மன ரீதியில் கடுமையாய் ஒடுக்கியும் வரும், அரசு அதிகாரி களை எப்போதும் கெஞ்சிக் கூத்தாடவேண்டிய நிலை யிலிருப்பதும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. சமவெளிகளிலிருந்து, (அதிலும் மிகக்குறிப்பாக அசுரவேகத்தில் வளர்ந்தும், விரிவடைந்தும், வருகிற கோயம்புத்தூர் நகரிலிருந்து) அதிகரித்து வரும் தேவைகள், காட்டு வளங்களை வேக மாகக் கொள்ளையிட பெரும் உதவி செய்கின்றது. காடு களிலிருந்து, எரி விறகளுக்கான மரங்களைக் கோரிய, செங்கற் சூளைகள், வெகுவிரைவில், இந்தப் பகுதி முழுவதும் கிளைத்து முளைத்தன. இந்தச் சூளைகள் முழுவதும் பக்கத்துச் சமவெளி ஊர்களில் உள்ளவர் களுக்குச் சொந்தமானது. சட்டவிரோத வடிசாராயம் வேறொரு வகையில் ஆதிவாசிகளைச் சுரண்டியது.

 பட்டியல் பழங்குடியினரின் பிரச்சனைகள், முன்னெடுத்தப் போராட்டங்கள் மற்றும் அதன் வரலாறு குறித்த உங்கள் பார்வைகள்...?

 பக்கத்து மாநிலமான கேரளாவில் 1975ல் இயற்றப் பட்டு 1986லிருந்து நடைமுறைக்கு வந்துவிட்ட சட்டத்தின் மூலம், ஆதிவாசிகளின் நிலங்கள் விற்கப்பட முடியாது என்றும் அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்ட ஆதிவாசி நிலங்கள் மறுபடியும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதும் உறுதியாயிற்று. இது “வெளியாட்களுக்கு” குறிப்பாக பக்கத்து தமிழ் நாட்டுச் சமவெளிக்காரர்களுக்கு, பெரும் ஊக்கத் தடையாக மாறியது. எனவே, அவர்கள் கவனம், அந்தப் பிரதேசத்திலுள்ள வளங்குறைந்த தமிழ்நாட்டுப் பகுதி நிலங்களை நோக்கித் திரும்பியது. மேலும், 1986ல் முதன்மையாக ஆதிவாசி இளைஞர்களால் தலைமை தாங்கப்பட்ட ‘கிரிஜன் சேவக் சமிதி’ என்ற ஆதிவாசிகள் அமைப்பு, அட்டப்பாடியில்(கேரளா) ‘இலச்சிவலை நிலப் போராட்டத்தைத்’ துவக்கி வைத்தது. அதே சமயத்தில், மிகவும் சக்தி வாய்ந்த வணிகநலன்கள், இந்தப்பகுதியின் மீது கண் வைக்கத் துவங்கியது. நில அபகரிப்பை, கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், (கோடை) வாச ஸ்தலங்கள் என்ற பெயரில் 1980 களின் பிற்பகுதியில் இருந்து தொடர ஆரம்பித்தன. தமிழ் நாட்டுப்பகுதிகளில், காட்டுயிர்களில் நாட்டம் கொண்ட “கோயம்புத்தூர் ஜூவலாஜிக்கல் பார்க்” என்ற அரசு சாரா நிறுவனத் திற்காக, ‘துவைபதி’யில் ஒரு மிகப் பெரிய நில அபகரிப்பு நடந்தேரியது.

நகரம் சார்ந்த இந்த மேட்டுக்குடியினர் நிகழ்த்திய, அமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட, கொடுமைகள், கிராமப் புற பண்ணையார்கள் நடத்தியதையும் மிஞ்சிவிட்டன. இந்தக் கொடுமைகள், அரசு நிர்வாகம், நகர்ப்புற மேட்டுக் குடியினர், ஊடகம் ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுகமான முழு ஆதரவுடனும் செயலூக்க மிக்க பங்கெடுப்புடனும், அதிநவீனமாகவும், மதிநுட்பத் துடனும் மிகநேர்த்தியாகச் செய்யப்பட்டது.

 இந்தக் காலகட்டம், பண்ணைச் சமூக உறவுகளின் மேலாதிக்கத்திலிருந்து, வணிகர் முதலாளித்துவ சமூக உறவுகளின் மேலாதிக்கத்திற்கு மாறிச்செல்வதைக் கண்டது. இதன் விளைவு, காட்டு மாபியாக்கள், ஒற்றை நபர்/குழு/குடும்ப ஏகபோகத்தின் செல்வாக்கிலிருந்து, பல்வேறு அதிகார மையங்களுக்கு மாறிச்சென்றது.

 இந்தப் பகுதியில் (கேரளாவின் சிறுபகுதி மற்றும் தமிழ்நாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய) சிறியதும் பெரியதுமான நில அபகரிப்புகளுக்கெதிரான அனைத்துப் போராட்டங்களும் அந்தந்தப் பகுதி அளவிலேயே நடந்தன. அதில் சில வெற்றியடைந்தன; துவாய்ப் போராட்டத்தைப் போன்று, வேறு சில அதற்கு முன்பிருந்த அதே நிலையைத் தொடர்ந்தன. நிலங் களையும், காடுகளின் வளங்களையும் சட்டப் பூர்வமாகவோ/ சட்ட விரோதமாகவோ அபகரிப்பதற்காக ஒரு பலமான கூட்டணி இருந்தது.

எனவே அதை எதிர்த்து நிற்பதற்கும், பலமான ஒரு எதிர்ப்போராட்ட அணியை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலோ அல்லது வேறெங்காவதோ, காட்டுவள அபகரிப்பை எதிர்த்து யாரெல்லாம் போராடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தான். இது குறித்தத் தேடல்கள், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் 1980களின் இறுதியில் எழுந்தது. இது மிக இயல்பாகவே, மலைத் தொடர்கள், மாநிலங்கள், பிரதேச எல்லைகளையெல்லாம் கடந்து, ஆதிவாசி தலைமையைத் தேடக் காரணமாகியது.

 1980ல் “தொன்மக்குடிகள் மத்தியில் பணிசெய்யும் குழு” ஒன்றை ஐ.நா. மன்றம் உருவாக்கியது, இது, பல்வேறு கண்டங்களுக்கிடையில் உள்ள ஆதிவாசிகளிடையே ஓர் இணைப்பை உண்டாக்கியது. 1996ல் ‘சர்வதேச ஆதிவாசிகள் மாநாடு’ நாக்பூரில் கூட்டப் பட்டது. கூடிச் சந்திப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கு மான உள்ளார்ந்ததொரு தீவிரமானத் தேடல் ஆதிவாசிகள் மத்தியில் இருந்தது. அப்படி ஒரு சந்திப்பு கூட்டம் வயநாடு மாவட்டத்திலுள்ள ‘மனத்தவாடி’யில் 1992ல் 5 நாட்கள் நடந்தது. அதில் தேசம் முழுவதிலு மிருந்தும் 1800 ஆதிவாசி பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். கேரள, கர்நாடக, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கூட்டு ஆதிவாசி தலைவர்கள் இந்தக் கூட்டத் திற்கான முன்முயற்சிகளை எடுத்தனர்.

 இது, “தென் பிராந்திய ஆதிவாசிகள் அமைப்பு” என்ற அமைப்பைத் தோற்றுவிக்கும் எண்ணத்தை கைவிடச் செய்ய வைத்தது. ஆனாலும் கூட, “நாடு முழுவதும் ஆதிவாசிகள் உள்ளனர்; அவர்கள் பல்வேறு யுத்தங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; மாநில மட்டத்தில் நிலத்திற்கான போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள்; ஆதிவாசிகள் பிரச்சனை, கேரளாவில் மாநிலந்தழுவிய அரசியல் போராட்டமாக 1990களில் ஆகியிருக்கிறது. இவை போன்ற எல்லாவற்றை யும் முழுவதுமாக அறிந்துகொள்ள இது உதவியது. அது அவர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை அளித் தது. இந்த காலகட்டம், பழனி மலை,சத்தியமங்கலம், நீலகிரி மலைப் பகுதிகளில், வெள்ளமாய்ப் பாய்ந்து வந்த பல போராட்டங்களைக் கண்டது. இங்கு ஆதிவாசி தலைவர்கள்/ முன்னணிகள் ஒன்றாய்ச் சேர்ந்திருந்து, கேரளாவின் குண்டலாப் போராட்டங்களுடன் (இடுக்கி) ஓர் இணைப்பை ஏற்படுத்தினர்.

 தேசம் தழுவிய கிராம சுயாதிகாரத்திற்கான போராட்டத்தைத் துவக்கும் விதமாகவும், கிராம சுயாதிகாரத்தை ஆதிவாசிப் பகுதிகளுக்கு, (குறிப்பாக, மத்திய இந்தியப் பகுதி) முன்னெடுத்துச் செல்வதற்காக வும் ‘தேசிய ஆதிவாசிகள் சுய அதிகார முன்னணி’ என்ற அமைப்பு, 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் போராட்டம்தான், பின்னாட்களில் சுயாதிகாரச் சட்டம் என்றழைக்கப்பட்ட, பஞ்சாயத்து ராஜ் (ஷெட் யூல்ட் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்ட) சட்டம் 1996 இயற்றப்படக் காரணமாகியது. இந்த செயல்முறைகளுடன் முழு ஒத்திசைவு உள்ளவர்களும் அல்லது ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையுவர்களும் பல்வேறு கட்டங் களில் தங்களுடன் இணைப்பை வைத்துக் கொண்டதின் மூலம் செயல்முறைகளின் வெவ்வேறு பகுதிகளை இணைத்துக் கொண்டே இருந்தார்கள்.

 ஆதிவாசிகள் தொடர்பானதோ இல்லையோ, எல்லாப் பிரச்சனைகளுமே அரசியல் பிரச்சனைகள்தான். எப்போது அது அரசியல் பிரச்சனையாய் இல்லாமல் இருந்தது?

 ஆதிவாசிகளின் மிக முக்கியமான சிறப்பியல்பு என்னவென்றால், அவர்களது கூட்டுச்சமூக வாழ்க்கை தான். அதாவது, அவர்களிடம் தனிச்சொத்துடமை இல்லாதது; கூட்டாகச் சேர்ந்து பொது முடிவுகள் எடுக் கும் தன்மை; கிராமசபையின் உயர்மேன்மை; சமத்துவ வாழ்க்கைமுறை; வணிக நலன்களற்ற உறவுமுறைகள் என்பவற்றை உள்ளடக்கிய வாழ்க்கை முறை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தங்களுக்குள் வர்க்க வேறுபாடுகளற்ற சோசலிச சமூகத்தின் சாரத்தை உள்ளடக்கியிருந்தனர். இதைத்தான், ‘புராதன கம்யூனிச சமூகம்’ என்று கோட்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.

 ஆதிவாசிகள், சமவெளிகளில் நிலவிய பண்ணையடிமை உறவுமுறையின் ஒரு பகுதியாகவோ அல்லது அதனுடன் எங்காவது இணைக்கப்பட்டவர்களாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் அதேநேரத்தில்,நடைமுறை வாழ்க்கையில், வெளி உலகத்தோடு தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததால், வெளியிலிருந்து வரும் பண்ணையடிமைமுறையின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுத்தான் இருந்தனர். எனவே, வெளியில் உள்ள ‘இந்துக்கள்’ என்றழைக்கப்படுபவர்களின் சாதி ஒழுங்கின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்திருக்கவில்லை.சில நேரங்களில், பண்ணைமுறைச் சமவெளிகள், ஆதிவாசிகளின் பிரதேசங்களுக்குள்ளும் ஆக்கிரமிப்பு செய்தன. ஆதிவாசிகள் பின்வாங்கினார்கள்.

 வெளியார்களின் பலவந்த ஆக்கிரமிப்புகள் 1960களில் இருந்துதான் துவங்க ஆரம்பித்தன. ஆனால் அதற்குமுன்பே, காலனி ஆதிக்க சட்டவிதிமுறைகளின் உதவியோடு, அரசு, வனத்துறையை முன்னிறுத்திப் பெரும்பாலான ஆதிவாசி நிலங்களைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இந்திய அரசுக்கும், ஆதிவாசிகளுக்குமிடையில் நிலம் சம்பந்தமான சச்சரவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. எது எப்படியிருந்த போதிலும், தொடர்ந்து கொள்ளையிடவும், சுரண்டிக்கொழுக்கவும், நன்கு திட்டமிடப்பட்டு சீரமைக்கப்பட்ட ரீதியில், ஆதிவாசிகள் மீதும் அவர்கள் நிலங்களின் மீதும், வனத்துறை தனது மேலாதிக்கத்தை வன்மையாக நிறுவியிருக்கிறது. நிலைத்த வேளாண்மை யில் ஈடுபட்ட சில ஆதி வாசிகளைப் போலல்லாது, வேளாண்மையில் இன்னமும் காலூன்றியிராத இருளர் இன மக்கள், வனத்துறையின் வன்மையான மேலாதிக் கத்தை எதிர்த்துப் போராடும் பலமில்லாமல், அவர்களுக்கு எளிதில் இரையாயினர்.

 பண்பாடு, மொழி முதலானவற்றைப் பொறுத்த மட்டில், ஆதிவாசிகள், அவர்கள் சுயாதிகார பிரதேச வரம்பிற்குள்ளேயே இறுக்கமாகப் பிணைக்கப் பட்டிருந்தனர். இது மிகவும் முக்கியமானது. ஆதிவாசிகள் ஒரு தன்னுறுதிச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும்வரை தான், அவர்கள் பண்பாடும் மொழியும் அதன் பாரம் பரிய பொருளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இல்லையெனில், மற்றைய பண்பாடுகளுக்கும் மொழி களுக்கும் நேர்ந்தது போல், தங்கள் சாரத்தை இழக்க நேரிடும். எடுத்துக்காட்டாக, இப்போது கடைச்சரக்காகிப் போன, மைய நீரோட்டப் (தற்சமயம் பெரும்பாலான மக்களிடம் புழங்கிக் கொண்டிருக்கும்) பண்பாடு தனது உள்ளடக்கத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்து பாசிசவாதிகள் அல்லது வலதுசாரிகளின் வெற்று மதச் சின்னமாகச் சீரழிந்து விட்டது. நுகர்வுக் கலாச்சாரம், மக்கள் பண்பாடுகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது அல்லது அவற்றின் தோள்களின்மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. பண்பாடு என்பது சமூக வயமான இனத்தின் வெளிப்பாட்டுணர்வுகளாகும்.

cr bijoy

 ஆதிவாசிகள், பண்ணைச்சமூக முறையின் ஒழுங்கிற் குள் தங்களை இணத்துக்கொண்டவர்களில்லை. ஆனால் முதலாளித்துவம், அவர்களது சொந்த வாழ் விடங்களை அபகரித்துக்கொண்டு அவர்களை வெகுவேகமாக காலனிமயமாக்கி விட்டது. ஆதிவாசிகள் போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டம். மேலும் அதை வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். ஆதிவாசிகள் பகுதிகள் என்பது, இப்போது கடைசியாய் மிஞ்சி இருக்கக் கூடிய ‘பொதுவிடங்கள்’ ஆகும். ஆதிவாசிகளல் லாத இதர மக்களின் பொதுவிடங்கள், இப்படித்தான், முதலில் நிலப்பிரபுக்களிடமும் பின்பு முதலாளிகளின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது.

 ஆதிவாசிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? தலைவனிலும் மேலாக ஒரு தோழராகப் பார்த்தார்களா?

 இந்தப் பகுதியில் வசிப்பவன் என்கின்ற வகையில் மக்களோடும் அவர்கள் பிரச்சனைகளோடும், எந்த அளவுக்கு அல்லது எப்போதெல்லாம் முடியுமோ அப் போதெல்லாம் இணைத்துக்கொள்வது (அவரவர் உணர்வு நிலைக்கேற்ப) ஒருவருக்கு மிகவும் இயல்புதானே. எனக்கும் அப்படித்தான். ஆதிவாசிகள் என்னை எப்படி பார்க்கிறார்கள் (அதாவது. என் பிம்பம் பற்றி) என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அப்படியன்றும், எனக்கு நேரவும் இல்லை; அதற் கானத்தேவையும் அங்கிருக்கவில்லை. உண்மையில், நான் எனக்கிடப்பட்ட ஒரு வேலையைச் செய்வதற்காக அங்கிருந்தேன். நகரத்திலிருந்து மறுநடவு செய்யப்பட்டி ருந்தாலும் கூட, ஓரு வகையில் பார்த்தால், நானும் உள்ளூர்வாசிதான். படித்த நகரவாசி ஒருவர் தம் பணியின் நிமித்தம், அவர்களூரில் வசிக்க நேர்ந் ததும், அதன் தொடர்ச்சியாய் உள்ளூர் பிரச்சனைகளோடும் அதன் அரசியலோடும் சிக்கிக்கொண்டவனாகத்தான், மக்கள் என்னைப் பார்த்திருக்கக் கூடுமென்றே, நான் யூகிக்கிறேன்.

 உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

 1980களில் ஆனைக்கட்டி பிரதேசத்தில் தொண்டு நிறுவனங்கள் ஏதுமில்லை. அதனால் அதைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. 1990களில்தான். தொண்டு நிறுவனங்கள் வனங்களுக்குள் துளிர்விடத் துவங்கி னார்கள். ஆனால், தொண்டுநிறுவனங்களுக்கு வரை யறைக்குட்பட்ட பங்குபாத்திரம், பலம், சாத்தியங்கள் மட்டுமே இருந்தன. வரையறைக்குட்பட்ட இலக்குப் பகுதி, முன்னமே தீர்மானிக்கப்பட்ட திட்ட நடவடிக்கை கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் திட்ட நிதி ஆதாரங்களைச் சார்ந்தி ருத்தல் என்பவைகள் போன்ற தடைகளும் அவர்களுக்கு இருந்தன. மிகவும் நல்லவித மாகச் சொல்வதானால், பிரச்சனைகளைத் திசை திருப்புதல் அல்லது அரசியலற்று நீர்த்துப் போகச்செய்தல் அல்லது நலன்சார்ந்த, வளர்ச்சி சார்ந்த நடவடிக்கை களுக்கு அரசு இயந்திரங் களைச் செவிசாய்க்க வைத்தல் போன்றவற்றுக்கே அவர்கள் உதவினார்கள்.

 இதில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கக் கூடியதென்னவென்றால், வெற்று கோஷங்கள் மூலம் முற்போக்கான செயல்களுக்கு ஆதரவானவர்கள் போல் அவர்கள் நாடகமாடுவதுதான். சில தொண்டு நிறுவனங்கள் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆதரவாளர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டார்கள். ஆனால் அவற்றுக்குள்ளும் வேறுபாடுகள் இருந்தன.

 சில, தங்களை முதன்மையானவையாகக் காட்டிக் கொண்டன. வேறு சில தொண்டுநிறுவனங்கள் துணை நிற்பவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டன. அவற்றில் சில பொருளுதவிகள் செய்தன. வேறு சில அறிவு/தகவல் சார்ந்த விசயதானங் களைத் தந்துதவின. 1990களில் தொண்டு நிறுவனங்கள் எண்ணிக்கையிலும், வகைமாதிரிகளிலும் பாய்ச்சலாய் வளர்ந்திருந்தன; தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அவைகளின் பங்கு, அரசுகளின் ஒப்புதலையும், இரு தரப்பு, பலதரப்பு மற்றும் அரசு உறுப்புகளின் ஏகோ பித்த ஆதரவையும் பெற்றுக்கொண்டிருந்தன. இருந்த போதிலும் இந்த நேரத்தில்தான் தொண்டு நிறுவனங்கள் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டன. இதே நேரத்தில்தான், அரசுகளை நேர்மையற்றதாகவும், சந்தையையும் தனியார் துறையையும் நேர்மையானதாக வும், தொண்டுநிறுவனங்களை வளர்ந்தெழுந்துவரும் தனியார்துறை ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகக் காணும், நவீன தாராளவாதமும் செல்வாக்கு பெறத் துவங்கியிருந்தது. (பார்க்க: http:\\www.openspaceforum.net/twiki/tikiread_article.php?articleId=42)

வனங்களுக்குள் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்னவாக இருந்தது? சமவெளிகளைவிட வனங்களுக்குள் ஏன் அதிகமான தொண்டு நிறுவனங்கள் இருந்தன?

 வனப்பகுதியில் பணிசெய்த தொண்டு நிறுவனங்களைப் பொருத்தமட்டில் அவர்கள் வனத்துறையோடு எவ்வித மோதலும் வைத்துக் கொள்ள முடியாது. ஏனெ னில் வனத்துறையின் அனுமதி இருந்தால் மட்டுமே, அவர்கள் வனங்களுக்குள் பணியாற்றமுடியும். எனவே, பெரும்பாலான தொண்டுநிறுவனங்கள், வனத்துறையோடு பல்வேறு படித்தரங்களில் (அளவுகளில்) ஒத்துழைத்துப் பணியாற்றினர்.

 தொண்டுநிறுவனங்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில் தான் பணியாற்றுகிறார்கள். அதில் இரு பெரும் குழு வினர்களாக ஆதிவாசிகள் மற்றும் தலித்துகள் இருப்பது இயற்கைதான். இதில்ஆதிவாசிகள் குறிப்பிட்ட புவி யியல் பகுதியில்வசிப்பதால், வனங்களுக்குள் அதிகமான தொண்டுநிறுவனங்கள் செயலாற்றுகின்றன என்பதைப் போல் தெரிகிறது. தலித்துகள் உள்ளிட்ட மற்றைய விளிம்புநிலைப் பிரிவினர் புவியின் அனைத்துப் பகுதி களிலும் விரவிக் கிடப்பதால், தொண்டுநிறுவனங்களும் அந்தப் பகுதிகள் முழுவதும் விரவிக் கிடக்கின்றனர். எனவே அங்கு குறைந்த எண்ணிக்கையில் தொண்டுநிறுவ னங்கள் செயலாற்றுவது போல் தெரிகிறது. இது சரி யாகவோ/ தவறாகவோ இருக்கலாம். ஏனெனில் தொண்டுநிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் பணி பற்றிய முறையான ஆய்வுகள் இருந்தால் மட்டுமே சரியாகச் சொல்ல முடியும்.

 மார்க்சியம் பற்றி உங்கள் பார்வை?

 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கையின் வருகையோடு ‘அரசியல் பொருளாதாரம்’ முதன்மை விசயமானது. படிப்படியாக வளர்ச்சியுறும் வரலாற்றுத் தொடரான உலகப்பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வ தற்கான முயற்சிதான் அது. அந்த தொடர்பாடலுக்குள், ஆய்வுகளின் வேர்களும் ஆய்வுக்கான முறையியலும் இருக்கின்றன. அரசியல் அல்லது பொருளாதார தத்துவக் கோட்பாட்டுப் பள்ளிகளின் பின்னணி (எனக்கு) இல்லாததால், வரலாற்றுத் தொடர்பாடலும், உள்ளூர் விசயங்களைப் பற்றிய, நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கிய கூர்மையான அவதானிப்பும், அதுவரை யிலும் பேசப்படாத ஒரு புதுவகை ஆய்வுச் சட்டகத்தை வளர்ப்பதற்கு உதவியது. மார்க்ஸீய இலக்கியங்களை (நான்) முற்றான ஒழுங்கமைவுடன் அதிக அளவில் பயன்படுத்தவில்லை. ‘பொருளாதாரம் மற்றும் அரசியல் வாரந்திரி’ (E PW) இதழ், பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளை நான் புரிந்துகொள்வதற்கு உதவியது; எனது பகுத்தாய்வு செய்திறனிலும் அதன் பாதிப்பிருந் தது. நான் மார்க்ஸீய வாசிப்பின், ஒழுங்கற்ற துவக்க நிலை வாசகன்தான். என்னுடைய எழுத்துகளில் ஊடாடுகிற மார்க்ஸீயம், அளவில் சிறியதுதான். ஆனால், பகுப்பாய்வுக்கான மிக முக்கியமான கருவி, மார்க்ஸீயம் என்று (நான்) உறுதியாக நம்புகிறேன்.

 உலகமயமாக்கலிலிருந்து, வனக் கொள்கைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?

 irulasசமூக மாற்றத்தின் சாரம், வர்க்கப் போராட்டமே என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஒருபுறம், வனங்களின் மீதான தாக்குதல், காட்டுரிமைகளை இனங்காண்பதை முன்னெடுத்துச் செல்வதற்கும், வனங்களின் மீதான கூட்டுச் சனநாயகக் கட்டுப்பாட்டை அதாவது வனாட்சியை சனநாயகப்படுத்துவதை உறுதி செய்வதற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால், அதே நேரத்தில், பெரும்பாலான ‘பொதுவிடங்கள்’ வனங்களில்தான் இருக்கின்றன.

 அவற்றின் நிலஉடைமை உரிமை போதுமான அளவு தெளிவாக இல்லை; அல்லது சரியாக வரையறுக்கப்பட வில்லை. உலகமயமாக்கம், இந்தத் தெளிவின்மையை முதலில் சரிசெய்யவேண்டும் என்கிறது. எனவே, மூல வளங்களைப் பிழிந்தெடுத்து, செய்நேர்த்தியுடன் அதி விரைவாகவும், சந்தைக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, தனியுரிமைகளை வரையரை செய்வதில் அமைப்புகள் அதிக ஆர்வம் காட்டுவது இயல்புதான். (ஒட்டு மொத்த தேசத்திலும், ஒரே ஒரு பட்டா கூட அளித்திராத தமிழ் நாடு தவிர, பெரும்பாலான மாநிலங்களில்,காட்டுரிமைச் சட்ட அமுலாக்கத்தில், இது நிகழ்ந்தது). எதிரெதிர் சக்திகள், எப்போதுமே களத்தில், செயலாற்றிக் கொண்டேதான் இருக்கும்.

 காட்டுரிமைச்சட்டம் (Forest Regulation Act) பயனளிக்குமா?

 காட்டுரிமைச்சட்டம் 2008ல் கொண்டுவரப்பட்டதி லிருந்து இதுவரை, இந்திய வரலாறு கண்டிராத அளவில், மூன்று ஆண்டுகளில், கிட்டத்தட்ட 25 லட்சம் (ஜனவரி 2012 வரை 16, 51, 103 ஹெக்டேர் நிலங்களுக்கு) பட்டா உரிமைகள் வழங்கப்பட்டன. இருந்தபோதிலும், இதன் உண்மைச் சிறப்பு என்னவென் றால், ஆளுகையுரிமைகள் முற்றாக மறுக்கப்பட்டதென்பது தான். ஆனால், அவற்றுக்காக, (சட்ட உரிமைகள் இருந்தாலும் கூட) ஒரு பெரிய யுத்தமே நடத்தினால்தான் வெற்றி பெற முடியும்.

 கார்பன் வணிகம் குறித்தும் இந்தியாவின் பங்குபாத்திரம் குறித்தும் கொஞ்சம் சொல்லுங்கள்.

 தட்பவெட்பநிலை மாற்ற அரசியலைப் பொறுத்த மட்டில், கார்பன் வெளியேற்ற மட்டத்தின் அளவை 1990ன் சராசரி அளவான 5.1% சதவீதத்திலிருந்து குறைப்பது என்பதுதான் அதன் எண்ணம். இது வளர்ச்சியடைந்த நாடுகளுக்குத்தான் பொருந்தும். ஏனெனில், வளர்ச்சியடைந்த நாடுகள்தான் மிகக் குறைவான வெளியில் (space) உட்கார்ந்து கொண்டு மிக அதிக அளவிலான கார்பனை வெளியிடும் நாடுகள். வளர்ந்துவரும் நாடுகளோ, மிக அதிக அளவிலான வெளியில் (space) உட்கார்ந்து கொண்டு மிக மிகக் குறைவான கார்பனை வெளியிடும் நாடுகள். இருந்தபோதிலும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்ப தற்கான ‘க்யாட்டோ (KYOTO) ஒப்பந்தத்தின்’ கட்டாயக் குறைப்பு இலக்கு விதிகள் நடை முறைக்குக் கொண்டு வரப்படவில்லை. மாறாக, கார்பன் வணிகம் என்ற கருதுகோள் உதயமாகியது.

 அதன்படி, கார்பனை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொடர்ந்து அதைச் செய்துகொண்டிருக்கலாம், ஆனால் அதற்காக, அவர்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில், குறைந்த கார்பனை வெளியேற்றும் தொழில்களில் அல்லது மரம் வளர்ப்பு மூலம் கார்பனை உறிஞ்சும் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்தால் போதும். எனினும், நம்பிக்கை நட்சத்திரமாக உதயமாகிய கார்பன் வணிகம், சந்தைத் தேவையின் உடனடி சாத்தியங்கள் ஸ்தம்பித்துப் போயிருந்ததால், டர்பன் பேச்சுவார்த் தையை ஒட்டி வீழ்ச்சியடைந்தது.

 ஏனெனில், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இலக்குகள் நிர்ணயிப்பதில் அரசுகள், தோல்வியடைந்திருந்தன. எனினும், டர்பன் சந்திப்பு, ‘கட்டளையளவு கார்பன் வெளியேற்றத்தின்’ பார்வை வரம்புக்குள் அனைத்து தேசங்களையும் கொண்டுவருவதை ஏற்றுக்கொண்டது. இதற்கான ஒப்பந்தம் ஒன்றை 2015க்குள் உருவாக்கி, 2020 லிருந்து அதை நடைமுறைப் படுத்துவது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் பாத்திரம் தெளிவற்றிருந்தது.

 “சமத்துவப் பிரச்சனை”யை நிலை நாட்டுவதில் இந்தியா முன்னனியில் நின்றது. ‘காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல்’ அமைச்சரின் அறிக்கை இதை எதிரொலித்தது: “நாம் வாழ்வாதாரத்தையும் அதைத் தக்கவைப்பது பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். 120கோடி மக்க ளின் உரிமைகளோடு சம்பந்தபட்ட, சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக் கூடிய ஓர் ஒப்பந்தத்தில், அதில் என்ன சொல்லப்படுகிறது என்று தெரிந்து கொள்ளாமல், நான் எப்படி மொட்டைக் கையெழுத்திட முடியும். சமத்துவமும் CBDR (Common But Differentiated Responsibility எல் லோருக்கும் பொதுவான ஆனால் அதே நேரத்தில் வேறுபட்ட பொறுப்புகள்) எண்ணிக்கையும், இந்த ஒப்பந்தத்தில், எங்கே போனது?

 நான் யாருடைய நேர்மையையும் சந்தேகப்படவில்லை. தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கெதிரான சண்டையில் சமத்துவத்தைக் கைவிடவேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோமா? கண்டிப்பாக, சமத்துவம், CBDRன் தெரிவுக்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும்.” நீண்டகாலநோக்கில், ‘ஒரேஅளவிலான தனிதேச கார்பன் வெளியேற்றக்’ (per capita emission) கோட்பாடே உலக அளவிலான தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கான கன கச்சிதமான சமத்துவ அடிப்படையாக இருக்க முடியும் என்கிற கொள்கையை இந்தியா முன்வைத்தது. ‘ஒரே அளவிலான தனிதேச கார்பன் வெளியேற்றத்தை’, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், வந்தடைய வேண்டுமானால், அனைத்து நாடுகளும் தங்களை நகர்த்திக்கொண்டே வரவேண்டும். ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு, கொள்கை அடிப்படையிலானதில்லை என்பது வெளிப் படை. அதனுடைய விவாதங்கள் நாடுகளுக்கிடையிலான விவாதங்களுக்காகச் சொல்லப்பட்டதே தவிர, உள் நாட்டில் செயல்படுத்தப் படுவதற்காகச் சொல்லப்பட வில்லை. நாடுகளுக்கிடையிலான சராசரிகளுக்கான சமத்துவம், நாட்டிற்குள் உள்ள சமத்துவமின்மையை மறைத்து வைத்தது. இந்தியாவில் அது வெட்ட வெளிச் சமாகத் தெரிந்தது.

 சமத்துவம், சமூகம் முழுவதை யும் உள்ளடக்குதல் மற்றும் சமூக நீதி போன்ற பிரச்சனைகள் தீர்க்கமாக விவாதிக்கப்படவில்லை. தாராளமயமாக்கத் திற்குப் பிந்தைய காலகட்டத்தில் சமூகப்பகிர்மான நீதிக்கான சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு களின் பாதுகாப்பு இவையெல்லாம் இருந்தாலும் கூட, இந்தப் பிரச்சனைகள், இந்தியா அனுபவித்துக்கொண்டி ருக்கும் வளர்ச்சியையும், வளர்ச்சிப் போக்குகளையும் தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டே இருந்தது. இந்தத் துயரமான காட்சி, அரசின் பல்வேறு திட்ட ஆவணங்களில் பிரதிபலித்தது. மேலும், பெரும்பாண்மையான தன் சொந்த மக்களை அநீதியாகக் கையாண்டமை, மக்களுக்குள் வெறுப்பை அதிகப்படுத்தவும் பரவலாக் கவும் செய்தது. இத்தோடு கூடவே, அரசாங்கம், செய லூக்கமிக்க வகையில் தன் சொந்தச் சட்டங்களைத் தானே மதிக்காமல் செயல்பட்டு சட்டப்பூர்வமாக வழங்கியாக வேண்டிய உரிமைகளைக் கூட கூச்சமில்லாமல் மறுத்தது. அது அரசாங்கத்தால் அடையாளமும் காணப்பட்டது. “120 கோடி மக்களின் உரிமைகள்” என்ற போர்வைக்குள் புகுந்து, தன் “சமத்துவ” உரிமையைப் பாதுகாப்பதாக இந்தியா சொல்வது, உண்மையில் உள்ளீடற்றுதான் ஒலித்தது.

சி.ஆர்.பிஜாயுடன் நேர்காணல் - இரா. முருகவேள்

தமிழில்: சங்கர்

(அடுத்த இதழில் நிறைவடையும்)

Pin It