சமீபத்தில் வெளிவந்துள்ள இரண்டு ஆய்வு அறிக்கைகள் பொதுச்சிந்தனை உடையோரை பதைபதைக்க வைக்கும் செய்திகளைக் கொண்டுவந்து தந்துள்ளன. ஒன்று ஐ.நாவின் மானுட மேம்பாட்டு அறிக்கை. இரண்டு ஆக்ஸ்பார்மின் உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை. இரண்டு அறிக்கைகளும் மானுட சமூகம் பற்றியதுதான். இந்தியாவின் நிலைமையையும் அந்த அறிக்கைகளை வைத்து நாம் புரிந்துகொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி, மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தல், சமூக மேம்பாடு என மக்களின் நலனுக்காக செயல்படுவதாக அரசாங்கங்கள் கூறி ஒரு 40 ஆண்டு காலத்தில் இயற்கைச் சூழலை உலகம் தோற்றிய காலத்திலிருந்து இப்படிச் சீர்கேடு அடையச் செய்தது கிடையாது. இந்த 40 ஆண்டு காலத்தில் புவி படைக்கப்பட்டது மானுடத்திற்காக என்ற சிந்தனையில் இயற்கைச் சூழலை சிதிலமடைய வைத்துவிட்டோம். அண்டம் அனைத்தும், அண்டத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கானது என்பதை மறந்து பொருள் சேகரிக்கும் நோக்குடன் அண்டத்தையே நாம் நிலைகுலைய வைத்துவிட்டோம். அதன் விளைவு தொடர்ந்து மானுடம் பேரிடர்களைச் சந்தித்து வருகிறது.
மானுடம் இன்று ஒரு புதிய புரிதலுடன் செயல்பட்டாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மானுடத்திற்கும் அண்டத்திற்கும் உள்ள உறவுமுறை பற்றிய புரிதல், மானுடத்திற்கும் இயற்கைக்கும் உள்ள உறவுமுறை பற்றிய புரிதல் ஏற்பட்டு விரைந்து செயல்படவில்லை என்றால் மிகப்பெரிய பேரழிவை உலகம் சந்திக்கப்போகிறது என்ற அபாயச் சங்கை இந்த அறிக்கை ஊதிவைத்துள்ளது. இதற்கான பொது விவாதம் ஆளுகைத் தளங்களில் நடைபெறுகிறதா என்று ஊர்ந்து கவனித்துப்பார்த்தால் எங்குமே அந்தப் புரிதலுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. நம் தலைவர்கள் அனைவரின் உரைகளிலும் ட்ரில்யன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் முன் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த ஐ.நா. அறிக்கையை உள்வாங்கிப் படித்துவிட்டு இப்படிப்பட்ட உரைகளைக் கேட்கும்போது அடிவயிற்றில் நமக்கு பயம் ஏற்படுகிறது.
இரட்டை இலக்க வளர்ச்சி என்று நம் தலைவர்கள் பேசுகின்றார்கள். இரட்டை இலக்க வளர்ச்சியில் தான் வறுமையை குறைக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். எந்தக் கோட்பாடு வறுமையை ஒழிக்க இரட்டை இலக்க வளர்ச்சி தேவை என்று கூறுகிறது? 3% பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து மானுட வாழ்வு எப்படி வாழ வேண்டுமோ அப்படி மரியாதையான வாழ்க்கையை வாழ வைக்கும் பல நாடுகள் நம் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் அந்த அறிக்கையை நாம் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. அதாவது 8 சதவிகிதம் 8.5 சதவிகிதம் பொருளாதாரம் வளர்ந்தபோது வளர்ந்த பொருளாதாரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்டதா? வறுமையைச் சற்று குறைத்தது என்பது உண்மைதான், அதை மீண்டும் இந்த கொடிய தொற்று தகர்த்து விட்டது. ஆகையால்தான் இந்தியாவில் 80 கோடி மக்கள் அரசு தரும் இலவச உணவு தானியங்களை நம்பி உணவுப் பாதுகாப்பை பெற்றுக் கொண்டுள்ளனர். இந்தப் புள்ளி விபரம் கூறும் செய்தி என்ன? அடைந்த பொருளாதார வளர்ச்சி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற உண்மையைத்தான் அந்த புள்ளி விபரம் கூறுகின்றது.
இந்த உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை இதுவரை உலகம் கண்டிராத ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கிறது என்றும் அடைந்த வளர்ச்சியில் வளர்ந்தவர்கள் ஒரு சிலரே, வளங்கள் சூறையாடப்பட்டது மட்டுமின்றி, சொத்துக்களை தனிமனிதர்கள் கைக்கும் பெருமளவு கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு பெரும்பான்மை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு அரசாங்கம் தரும் இலவசங்களை நோக்கிக் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத்தான் படம் பிடித்து காட்டுகின்றது இந்த அறிக்கை. அது மட்டுமல்ல அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்று மக்களாட்சி கைக்கொண்டு செயல்பட்டு வரும் நாடுகளும் என்ன செய்கிறது என்றால் குடிமக்களுக்குத் தேவையான வாய்ப்புக்களையும் வசதிகளையும் உருவாக்கி அவர்களை செயல்பட வைத்து சுயமரியாதையுடன் கூடிய மானுட வாழ்க்கையை வாழ வழி செய்ய இயலாமல் மக்களை பயனாளிகளாகவே வைத்து இலவசங்களுக்கு ஏங்கும் நிலையில் அவர்களை வாழ வைத்து, அரசாங்கத்தை தன் எஜமானன் எனவும், தங்கள் குடிபடைகள் எனவும் சிந்திக்கும் சூழலிலேயே வைத்து விட்டனர். இந்த இடத்தில் உலக ஊழல் அறிக்கையை சற்றுப் புரட்டினால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். இந்த 40 ஆண்டு காலத்தில்தான் ஊழல் பற்றி பெருவிவாதம் முன்னெடுக்கப்பட்டு, சில நாடுகளில் நாட்டின் அதிபர்களும், அமைச்சர்களும், முதல்வர்களும் சிறைச்சாலை சென்று வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தப் பொருளாதார வளர்ச்சி வந்தபோது எது விவாதப் பொருளாக இருந்திருக்க வேண்டும் என்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதைப் பற்றித்தான். ஆனால் அந்த இடத்தில் எது இருந்தது என்றால் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தம் மற்றும் ஊழல் என்ற இரண்டு மேலோங்கி இருந்தது பொதுத்தள விவாதங்களில். இந்த இடத்தில் நாம் எங்கு தோற்றோம், எங்கு நாம் தவறு இழைத்து விட்டோம் என்று ஆராய வேண்டும். இந்த இடத்தில் இன்னொரு அதிர்ச்சி தரும் கருத்தை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 2012 ஆம் ஆண்டு என்.சி.ஏ.இ.ஆர் (ழிசிகிணிஸி) என்ற அகில இந்திய ஆராய்ச்சி நிறுவனம் மக்கள் கருத்தறியும் ஓர் சர்வே நடத்தியிருக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டும் இந்த நிறுவனமே அப்படிப்பட்ட ஒரு சர்வே நடத்தி புள்ளி விபரங்களை வைத்துள்ளனர். அதேபோல் மக்கள் கருத்தறியும் சர்வே இரண்டை அதாவது 1971லும் 1996லும் சி.எஸ்.டி.எஸ் (சிஷிஞிஷி) என்ற ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ளது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு நடத்தி 2015ம் ஆண்டு வெளியிட்ட சர்வே அறிக்கையில் மக்கள் கூறிய கருத்து நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது மக்களாட்சி பற்றி.
முன்பெல்லாம் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, அரசுத் துறைகள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஓரளவுக்குக் கூறிய மக்கள் தற்போது 2012ல் எங்களுக்கு இவை அனைத்தின் மீதும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அரசியல்வாதிகள் குறிப்பாக நாங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் ஏழைகளுக்காக செயல்படுவதில்லை. அவர்கள் வசதியானவர்களுக்கு, கம்பெனிகளுக்கு செயல்பட்டு ஊழல் செய்வதில் கவனமாக இருக்கின்றார்கள் அது மட்டுமல்ல, ஊரில் உள்ள குற்றப் பின்னணி கொண்டவர்களை அரசியலுக்குள் கொண்டுவந்து மக்களை அடக்க முயற்சிக்கின்றார்கள் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். உங்களுக்கு என்ன வேண்டும் என்றால் எங்களுக்கு ஒரு வலிமையான, மக்களை நேசிக்கும், துணிவுள்ள தலைவன் வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் படிக்கும்போது, நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், நாம் பெற்ற கல்வி, நம் தலைவர்கள் செய்த தியாகம், நாம் அடைந்த வளர்ச்சி யாருக்கானது நம் அரசியல் கட்சிகள் ஏன் இந்த அவப்பெயரை தாங்கி நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
நம் இன்றைய தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகளா, நம் அதிகாரிகளும் ஊழியர்களும் மோசமான ஊழல் புரிகின்றனரா, நம் மக்கள் ஊழலை சகிக்கப் பழகிவிட்டனரா என்று கேட்கத் தோன்றும். நம் கட்சிகளில் இன்றும் தியாகி நல்லக்கண்ணு போன்றவர்கள் இருக்கின்றார்கள். சமீபத்தில் இறந்த மதுரை சட்டமன்ற உறுப்பினர் எப்படிப்பட்ட தியாக வாழ்வு வாழ்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆளும் கட்சியில் இருந்தும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் முடிக்க முடியாமல் கட்சிக்காக உழைக்கும் அரசியல்வாதிகளையும் இன்று பார்க்க முடிகிறது. அதேபோல் செயலர் பதவிவரை வந்தவர்கள் சிலர் கடனுடன் வாழ்வதையும், சொந்த வீடு கட்டுவதை கனவாக வைத்து வாழ்வதையும் டப்பிச் சோறு தங்கள் வீடுகளிலிருந்து எடுத்து வந்து சாப்பிடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இருந்தும் ஏன் இந்த நிலை என்பதுதான் பலருக்கு புரியாத புதிர். நீண்ட நாட்களுக்கு முன் நேரு பிரதமராக இருநத்போது உலகப் புகழ் பெற்ற பொது நிர்வாகவியல் வல்லுனர் பால் ஆப்பில்பி இந்தியா வந்திருந்தார். அவரிடம் நேரு ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் நிர்வாகக் கட்டமைப்பை ஆய்வு செய்து எனக்கு ஒரு பரிந்துரை வழங்குங்கள் என்பதுதான் அந்த வேண்டுகோள். அவரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒரு ஆய்வு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பித்தார். அது மிகப்பெரிய அறிக்கை அல்ல. அது ஒரு சிறிய அறிக்கை. ஆனால் அந்த அறிக்கையில் பிரச்சினையுடன் மூலத்தைத் தொட்டுவிட்டார்.
அவர் கூறியதன் சாரம் “உங்கள் நிர்வாகக் கட்டமைப்பு காலனியாதிக்க காலத்தில் கட்டப் பட்டவை. அது சுரண்டலுக்காக கட்டப்பட்டவை. அது மக்களுக்கு வெகுதூரத்தில் இருந்து மக்களை மேய்த்து சுரண்டி, பதவியில் இருந்தவர்களும் பதவியைத் தந்தவர்களுக்கும் செயல்பட்ட ஒரு அமைப்பை சுதந்திரம் அடைந்த நாட்டில் தொடரச் செய்வது சுரண்டலை வேறு ஒரு வடிவத்தில் செயல்பட வைக்கும். எனவே உங்களுக்கான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்பதுதான். அது மட்டுமல்ல கூடிய விரைவில் அதை உணர்வீர்கள் என்றும் எச்சரித்தார். ஆனால் அன்று நம் நாட்டை இந்தியா என்ற ஒன்றாக உருவாக்குவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. நாட்டு உருவாக்கத்திற்காக கொஞ்சநாள் அந்த நிர்வாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தொடர்ந்த அந்த நிர்வாகம் இன்று வரை தொடர்கிறது. இதில் புதிய பொருளாதாரக் கொள்கையால் வந்த வாய்ப்பு அனைவரையும் சிக்க வைத்து விட்டது.
கார்ப்பரேட், தரகர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசியல்வாதிகள், உயர்நிலை அதிகாரிகள் இவர்களில் ஒரு பிரிவினர் லாபம் பார்க்கும் வலைப்பின்னலில் இயங்குகின்றனர். இவர்களின் பலம் அரசு பலம், இவர்களை நல்லவர்கள் மட்டும் எதுவும் செய்துவிட முடியாது. இதற்கு மிகப்பெரிய மக்கள் திரட்டு காந்தி காலத்தில் நிகழ்ந்தது போல் நிகழ வேண்டி இருக்கிறது. இன்றைக்கு இயங்கும் அரசியல் கட்சித் தலைவர்களால் இந்தப் பணியை செய்ய முடியும் என்று நான் கருதவில்லை. நம் அரசுக் கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் அந்த அளவுக்கு பின்னப்பட்டுள்ளது. அரசியலுக்கும் கார்ப்பரேட் வணிகத்திற்கும் அப்படியொரு பின்னல் பின்னப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியில் உள்ள தனி நபர்கள் நடத்தும் பெரு வணிகத்தில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்குதாரராக இருக்கின்றார்கள். நடக்கும் அரசியல் நகர்வுகள் நமக்குத் தரும் செய்தி கட்சியை தாங்கள் நடத்தும் வணிகத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகத்தான் பலர் கட்சியில் முக்கியப் பதவிகளை பிடித்து செயல்படுகின்றனர் என்பதைத்தான். நீதிமன்றத்தில் கூட இவர்களை ஒன்றும் செய்ய இயலாத அளவிற்கு தங்கள் வழக்கை மறக்கச் செய்து விடுகின்றனர். அந்த அளவிற்கு நிலைமை பரிதாபகரச் சூழலை அடைந்துள்ளது.
இந்தச் சூழலை மாற்ற முதல் பொது நிர்வாகச் சீர்திருத்தக் குழு தந்த அறிக்கையை முற்றிலுமாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. குறைந்த பட்சம் இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கைகள் மீதாவது விரைந்து நடவடிக்கை எடுத்து செயல்பட்டிருந்தால். குறைந்தபட்ச மாற்றங்களை நம் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் கொண்டு வந்திருக்க முடியும். இந்த நிர்வாக சீர்திருத்த அறிக்கைகளை நம் அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் இணைந்து பாதாளத்தில் தள்ளிப் புதைத்து விட்டன என்பது தான் நாம் பார்க்கும் எதார்த்தமான உண்மை. அது மட்டுமல்ல இன்றைய நம் நிர்வாகம் மக்களை நோக்கியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு அதிகாரப் பரவல் என்பது மிக முக்கியமானது. இந்த அதிகாரப் பரவல் என்பது எதோ மாநில அரசிடமிருந்து உள்ளாட்சிக்குச் செல்லும் அதிகாரம் மட்டுமல்ல, மைய அரசிடமிருந்து மாநில அரசுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போது தான் மக்கள் அதிகாரப்படுத்தப்படுவார்கள். மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஆளுகையிலும் மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் ஈடுபடுவார்கள்.
அதிகாரப்பரவல் என்று கூறி மாநில அரசுகளை உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்களை கொடுங்கள் என்று கூறி விட்டு மாநில அரசிடமிருந்து அதிகாரங்களை தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தால் மாநில அரசுகள் எப்படி உள்ளாட்சியை வலுப்படுத்தும் அதிகாரங்கள் கொடுத்து. இன்று மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் என்று வாதிடுவோர் பழைய அறிக்கைகளை வைத்து விவாதம் புரிகின்றனர். அந்த அறிக்கைகள் ஓரளவு உதவ முடியுமேயன்றி இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் புதிய பார்வை தேவைப்படுகிறது, நார்வே நாட்டில் உலகமய பொருளாதாரம் உலகில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒரு வெள்ளை அறிக்கையினை அந்தப் பாராளுமன்ற்ததில் சமர்ப்பித்து, மேல்நிலை அரசு குறைந்த அதிகாரங்களை வைத்து புதிய பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்த முனைய வேண்டும். அதிக அதிகாரங்களை கீழ்நிலையில் இயங்கும் உள்ளாட்சிக்குத் தந்து மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்துச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என முன்மொழிந்து முடிவு எடுத்தனர்.
தற்போது நாம் மைய மாநில உறவுகள் மட்டுமல்ல மைய மாநில உள்ளாட்சி உறவுகளை மேம்படுத்த ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய அரசியலை தயார் செய்ய வேண்டும். அதேபோல் அரசியல் சாசனத்தையும் இந்த பொருளாதாரப் பின்புலத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. அதேபோல் இன்று பொதுத் தளத்தில் இருக்கும் மக்கள் நலப் பயன்கள் என்ற விவாதத்தை மாற்றி கடமைகளும் உரிமைகளும் என்ற விவாதத்தை தொடங்க வேண்டும். எனவே அடிப்படை மாற்றத்திற்கு செயல்பட நம் அரசியலை திருப்ப வேண்டுமே தவிர பிரச்சினையற்றவைகளை பிரச்சினையாக்கி செயல்பட்டு நாட்களைக் கழிக்க முயலக்கூடாது. பொதுத்தளத்தில் இன்னொரு விவாதமும் தொடர்ந்து வைக்கப்படுகிறது. ஆட்சியில் இருந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஊழலில் சிக்கி அதன் சுயதன்மையை இழந்து ஒரு கார்பரேட் போல் லாபப் பங்கீடு செய்து அரசியல் நடத்துகின்றன. இதன் விளைவு இந்தக் கட்சிகளால் வாக்குகள் வாங்க முடிகிறதே தவிர மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ஆகையால்தான் பல மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் பிரச்சினைகளில் பார்வை இருந்தும் அவர்களால் மக்களின் நம்பிக்கையை பெற இயலவில்லை. அரசியலில் மக்களை இணைப்பதற்குப் பதிலாக, அரசியலை மக்களிடமிருந்து விலக்கி சந்தையுடன் நெருங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன அரசியல் கட்சிகள்.
இன்று அரசியல் என்பது வித்தை காட்டும் செயலாக மாறி தேர்தலுடன் நின்று விடுகிறது. இந்த நிலைதான் மக்களாட்சிக்கு ஆபத்தைக் கொண்டு வருகிறது. எனவே ஒரு புதிய மக்களாட்சி படைக்க கட்சி அரசியலைத் தாண்டி, ஒரு மக்கள் அரசியலைக் கட்டி அடிப்படை மாற்றத்திற்கு வித்திட முடியுமா என்பதுதான் இன்றைய தேடுதலாக இருக்கிறது. அதற்கான தலைவர்கள் ஆத்ம சக்தியுடன் யாராவது கிடைப்பார்களா என்பதுதான் பலரின் ஏக்கம். ஒரு சூழலில் நடைபெறும் என்ற நல்லெண்ணத்துடன் நாம் மாற்றத்தை நோக்கி செயல்பட இன்று உள்ள வாய்ப்பினை நாம் பயன்படுத்த முனைய வேண்டும். அந்த வாய்ப்பு உள்ளாட்சியில் உள்ளது, அதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டால் ஒரு மாற்று முறையை நம்மால் உருவாக்கிட முடியும். அதற்கான தலைவர்களைத்தான் நாம் பஞ்சாயத்துக்களில் தேடுகிறோம்.
- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)