கடந்த ஜுன் மாத புதிய காற்று மாத இதழில் நான் இந்திய இடதுசாரிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி கேரளாவை முன்வைத்து நீண்ட ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு இரு இதழ்கள் கழித்து கடந்த ஆகஸ்ட் இதழில் சி.பி.எம்யைச் சார்ந்த தோழர் ஆர்.பிரேம்குமார் மறுப்பு எழுதியிருந்தார். அதற்கான என் பதிலை நான் புதியகாற்றுக்குத் தான் எழுத வேண்டும். ஆனால் சூழல் அதன் நிறம் நோக்கி இழுக்கும் காரணமாக அந்த பத்திரிகையில் நான் எழுத முடியாத நிலையில் இருப்பதால் கீற்றுவில் எழுதுகிறேன். இது தேவையின் பொருட்டு எழுந்த ஒன்றே. நான் கேரளா பற்றி விமர்சன கண்ணோட்டமாக என் உள்ளார்ந்த அனுபவ, வாசிப்பு மற்றும் காட்சி பிரதிகள் சார்ந்து முக்கியமான சில கேள்விகளை முன் வைத்திருந்தேன். அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு நான் கேரளா பற்றி கொடுத்த தரவுகளுக்கான பதிலை முன்வைத்திருக்கிறார் பிரேம்குமார்.

அடிப்படையில் இந்திய பாராளுமன்ற மரபில் இடதுசாரிகளுக்கென ஒரு தத்துவார்த்த மரபும், நடைமுறை செயல்பாடும் இருக்கின்றது. இவை சில சமயங்களில் இந்திய மூலதன அதிகாரத்தில் சமரசத்திற்குட்பட்டாக வேண்டிய நிலைக்கு கொண்டு சேர்க்கின்றன. இந்திய தேசிய சமூக அமைப்பிற்கென தனித்த தத்துவதரிசனமும், பார்வையும், சமூக ஒடுக்குமுறை மரபும் இருக்கும் சூழலில் அவற்றில் மார்க்சிய அடிப்படையிலான புரட்சிகர மாற்றத்தை கொண்டு வருவது மிக சவாலான விஷயம். இந்தக் கூட்டமைப்பில் கேரளாவும், மேற்கு வங்கமும் ஓர் அங்கம் தான். இந்திய சமூகத்தில் முரண்பாடுகள் மிகக் கூர்மையாக முற்றி இருக்கும் சூழலில் எந்த புரட்சிகர தத்துவமும் அதன் முழுமுதல் வடிவில் இயைந்து விட முடியாது. இருக்கிற சமூக அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது அல்லது அதை அப்படியே புரட்டி போடுவது என்பதற்கு முன் அந்த சமூக அமைப்பை பற்றியும் அதன் கூட்டு பிரக்ஞை பற்றியும் பகுத்துணர்தல் அவசியம்.

கேரளாவில் முதன் முதலாக அமைந்த இடதுசாரி அரசான இ.எம்.எஸ் அரசு இந்த இடத்தில் தான் வழுவியது. கேரளா இன்று முழுமையான எழுத்தறிவு அடைவதற்கான அடிப்படை வித்து திருவிதாங்கூர், கொச்சி ராஜ்ஜிய மன்னர்களாலும் மற்றும் கிறிஸ்தவ மிஷினரிகளாலும் ஏற்கனவே இடப்பட்டு விட்டதை நாம் கவனிக்க வேண்டும். இதனால் தான் சுதந்திரத்திற்கு பிந்தைய நேருவின் அரசாங்கம் வெளியிட்ட இந்தியாவின் கல்வியறிவு புள்ளிவிபரத்தில் கேரளா முன்னணியில் இருந்தது. கேரள இடதுசாரிகள் அதை முன்னெடுத்துச் சென்றார்கள். கன்னியாகுமரி மாவட்ட உதாரணத்தில் இருந்தே இதனைத் தொடங்கலாம். உலகின் பெருமதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை இந்தியாவில் முதன் முதலாக கால்பதித்தது கேரளாவில் தான். இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டடையும் பொருட்டு 1498ல் வாஸ்கோடகாமா முதன் முதலாக கேரளாவின் கோழிக்கோடு துறைமுகத்தை வந்தடைந்தபோது அங்கு கிறிஸ்தவர்கள் இருப்பதைக் காண்கிறார். ஒரு பெருங்கனவை அடையும் பொருட்டான வாஸ்கோடகாமாவின் பயணத்தில் இது அவருக்கு ஆச்சரியமானதாக இருந்தது.

சல்மான் ருஷ்டியின் "The moors last sight" நாவலில் அவர் கொச்சியில் உள்ள யூத தெருவொன்றை கதைக்களத்தில் காட்டுகிறார். கேரள இடதுசாரிகள் இந்த வரலாற்று விமர்சனப் பார்வையை எட்டுவதில் ஏதோ ஒருவிதத்தில் தவறினார்கள் என்றே சொல்ல வேண்டும். அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடானது முழுக்க முழுக்க சோவியத் சார்பாகவே இருந்தது. அதனின் தாக்கம் தான் கல்வியமைச்சர் ஜோசப் முண்டசேரியின் கல்வி மசோதா. ஒன்று அதன் பயன்பாடு பற்றிய பார்வை. இன்னொன்று அதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். இவை எல்லாம் கணக்கில் எடுக்கப்படாததால் இடதுசாரிகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏகாதிபத்திய சார்பாளர்களாலும், அடிப்படைவாதிகளாலும் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் ஆட்சியை இழக்க கூடிய அளவிற்கு முதன் முதலான நம்பூதிரிபாடு அரசாங்கம் சென்றது.

அதே அரசின் பரிணாமம் தான் கேரளாவில் இன்று சிறுபான்மை சார்பு நிலையை எடுக்க வைத்திருக்கிறது. பிரேம்குமார் இதை சாதி/மத நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து கல்வியை விடுவிக்க ஜோசப் முண்டசேரி முயற்சித்தார் என்று மேலோட்டமாக சொல்லி விட்டுச் சென்று விடுகிறார். இது இவரின் தீவிர சார்பு நிலை வெளிப்பாட்டை தவிர வேறொன்றுமில்லை. தரமான கல்வி ஆரம்பம் முதல் உயர்படிப்பு வரை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே சோசலிச சமூக கட்டுமானத்தின் அடிப்படை. இதில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் உள்ளடங்கும். இந்த இலக்கை கூடுமானவரை அடைய கேரளா முயற்சிக்கலாம்.

கேரளாவில் உயர்கல்வி நிலை குறித்து கேள்வியை எழுப்பியிருந்தேன். அவர்கள் தமிழ்நாட்டில் கல்வித் தந்தைகளை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். பிரேம்குமார் அதை மிக லாவகமாகத் தவிர்த்து விட்டார். குறைந்த பட்சம் அவர் சீனாவின் உதாரணத்தையாவது காட்டியிருக்கலாம். உயர்கல்வி தனியார்மயமாதலின் ஆபத்துகளை இந்திய சமூகம் கடந்த இருபதாண்டுகளாக பார்த்து வருகிறது. கல்வி என்பது சமூகத்தின் அடிப்படை உரிமை. அது சமூக தன்னிலை சார்ந்து இருக்கிறது. அது தனிநபரின் மூலதனமாகவும் கண்காணிப்பு இயந்திரமாகவும் மாறும் சூழலில் சமூக அளவில் தராதரங்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் ஜனத்தொகை, அதில் கல்விக்கான தேவையின் அதிகரிப்பு, புறச்சூழல் இவற்றை கணக்கில் எடுத்து அரசே உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். கேரளா இது குறித்து முன்னரே யோசித்திருக்க வேண்டும். அதற்கான மாற்று வழிகள் குறித்தும் யோசித்திருக்கலாம்.

உணவு கலாசாரம் மற்றும் விலைகள் குறித்து நான் சொன்ன கருத்தை அவர் ஓரளவு ஒத்துக்கொண்டது ஆச்சரியமானதாக இருக்கிறது. கேரளாவில் மட்டுமே உணவு பொருட்களின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. அது இடதுசாரிகளின் பெரும் வெற்றி என்று புளகாங்கிதமடையும் தமிழ்நாட்டு அடிப்படைவாதிகளை நான் அதிகம் கண்டிருக்கிறேன். (இதில் பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் போன்றவை கூட மிக மிகக் குறைவாக இருக்கின்றன என்று சொல்கிற வேடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.) இதன் பின்னணியை கேரள இடதுசாரிகளின் ஆரம்ப கால நிலசீர்திருத்தம், விவசாய வளர்ச்சி, நிலங்களின் இருப்பு இவற்றிலிருந்தே தொடங்க வேண்டும். கேரளாவில் இடதுசாரிகளின் நிலச்சீர்திருத்தம் இன்னும் முழுமையடையாத, அரைகுறை சீர்திருத்தமாகவே இருக்கிறது.

நிலமும் அதன் பலனும் ஒருங்கிணைந்த ஒன்றே. இதை கேரளாவில் அவர்கள் காணத் தவறினார்கள். இது தான் விவசாயிகளின் தற்கொலையில் கேரளா கணிசமாக இருந்ததற்குக் காரணம். இதை பிரேம்குமார் பார்க்காமல் தற்போது அங்கு தற்கொலைகள் இல்லை என்கிறார். நான் கட்டுரையில் சொன்னதே கடந்த கால ஈ.கே நாயனார் ஆட்சியின் போது நடந்த சம்பவத்தைத் தான். இன்றும் கேரளாவில் நிலமற்ற ஆதிவாசிகள், தலித்கள் கணிசமாக இருக்கிறார்கள். தற்போது செங்கறை, முத்தங்காவு, ஏளரம் போன்ற இடங்களில் நடைபெற்று வரும் அவர்களின் போராட்டமே அதற்கு உதாரணம். கேரளாவில் தற்போது நிலங்களும் அதன் பலன்களும் பெரும்பகுதி மாபியாக்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. இதற்காக கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கட்டுரையாளர் சொல்ல வேண்டாமா என்கிறார். பிரேம்குமார்.

அதாவது கேரள அரசு விவசாய நிலம் மற்றும் ஏரி, குளங்கள் மீது கட்டிடங்கள் எழுப்புவதைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இது மிகத் தாமதமான ஒன்று. மேலும் இது புதிய சட்டமல்ல. மாறாக இது சட்டத்திருத்தம் தான். ஏற்கனவே இருக்கும் சட்டத்திற்கு காலங்கடந்து உயிர்கொடுக்கும் நடவடிக்கை தான். மேலும் என் முந்தைய கட்டுரை எழுதப்பட்டு இருமாதங்களுக்கு பிறகு தான் இது கொண்டுவரப்பட்டது. அதனால் பிரேம்குமாரின் வாதமே அர்த்தமற்றது. மூணாறில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கதை பற்றி பிரேம்குமார் சொல்கிறார். மூணாறு ஆக்கிரமிப்பு நிலமீட்பு என்பது அரசின் சுயவிருப்ப நடவடிக்கை அல்ல. அது பற்றி ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியது. அவ்வளவு தான். இதில் டாட்டாவின் ஆக்கிரமிப்பு நிலத்தை நாங்கள் கைப்பற்றி விட்டோம் என்று புளகாங்கிதமடைந்தார்கள். பின்னர் அது எங்கள் நிலமல்ல என்று டாட்டா சொன்ன காமெடியும் அங்கு நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சரின் அறிவிப்பு இந்த காமெடிக்கு மேலும் வலுசேர்த்தது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமும் புல்டோசருக்குள் உட்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை கேரள வரலாற்றின் மாபெரும் துயரம். இதற்கு இன்னொரு காரணம் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட ஜனத்திரள் கேரளாவில் அதிகம் என்பது தான். இந்தத் திரளின் நலன்கள் குறித்து முந்தைய இடதுசாரி அரசுகள் கவலை கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் தோல்வி அதனை அரித்துச் சென்றிருக்கிறது. மேற்கு வங்க புத்ததேவ் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை "நில சீர்திருத்தத்தின் பலன்கள் முழுமையாக போய்ச் சேர வேண்டும்" என்று மிக உறுதியாக பட்டாச்சார்யாவுக்கு அங்கீகாரம் கொடுத்த ஏ.கே.ஜி பவன் (நந்திகிராம் சம்பவத்தின் போது இந்த வாக்கியம் அதனிடமிருந்து மீண்டும் மீண்டும் ஒலிக்கப்பட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யா 2002ல் ஆட்சிக்கு வந்த போது அவருக்கு முந்தைய 25 ஆண்டுகால மேற்குவங்கத்தின் நிலவரம் குறித்த அறிக்கை ஒன்றை அரசு சார்பாக வெளியிட்டிருந்தார். தான் அதன் அடிப்படையில் தான் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகச் சொன்னார். அந்த அறிக்கை நந்திகிராம் விவகாரத்தின் போது தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்படவில்லை. நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஒன்றில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். நந்திகிராம் விவகாரம் குறித்த தகவல்கள் புத்தக வடிவில் முழுமையாக வெளிவந்திருக்கும் நிலையில் அது குறித்து தனி கட்டுரையாக பின்னர் எழுதலாம் என்றிருக்கிறேன்.) அரசு இயந்திரத்தின் படுகொலைகளை நியாயப்படுத்தும் அளவுக்கு சென்றது.

கேரள விவசாயிகள் தற்கொலை மற்றும் நந்திகிராம் விவகாரம் இரண்டுமே தர்க்கரீதியான தொடர்ச்சி தான். குட்டநாடு சம்பவத்தை பிரேம்குமார் அவரது கட்சிக்கே உரிய நுணுகலோடு அணுகுகிறார். அவர்கள் நில முதலைகள் அல்ல. மாறாக நடுத்தர விவசாயிகள். கேரளாவில் கணிசமான விவசாய கூலிகள் தற்கொலைகள் காலத்தில் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இதையும் அவர் லாவகமாக மறைத்து விட்டார். நெல்லைக் கொய்வதற்கு ஆளில்லாமல் தான் அறுவடை இயந்திரத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது விவகாரம் ஆன காலகட்டத்தில் தான் பெரும் மழைப்பொழிவு நெற்கதிர்கள் பெரும்பாலானவற்றை அடித்துச் சென்றது. இது கேரளாவின் சிறிய கிராமம் ஒன்றின் ஒரு நாள் உணவிற்கானது. இதை குட்டநாட்டவரே என்னிடம் சொன்னார்.

தொழிற்துறை பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு மொண்ணைத்தனமான எடுத்துக்காட்டுகளை தருகிறார் பிரேம்குமார். கேரளாவின் மிக முக்கிய சறுக்கலே பெரும்பகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார புலப்பெயர்வு தான். இது குறித்து விவாதங்கள் கேரளாவில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை என் கட்டுரையில் புள்ளிவிபரமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர் தவிர்த்து விட்டார். இவை எல்லாமே விவசாயம் சாராத சமூகத்தின் பிரச்சினை தான். மத்திய அரசின் ரயில் பெட்டி தொழிற்சாலை கேரளாவில் வர இருப்பது பற்றி பிரேம்குமார் மிகுந்த உவகைக்கு ஆளாகிறார். தொழிற்சாலை வரவேண்டுமென்றால் மத்திய அரசு கேட்கும் ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேரள அரசு கொடுக்க வேண்டும். அதற்கான உகந்த சூழல் தற்போது இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கேரளாவின் நிலங்களும், அதன் எதிர்ப்பரசியலும் மாபியாக்களால் கைப்பற்றப்பட்டு விட்டன. இதே மாதிரி தான் கொச்சியில் துபாயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் "Smart city" எனப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்கா. இதுவும் நிலப்பிரச்சினை காரணமாக தீர்வு ஏற்படாமல் இருக்கிறது. கேரள கவர்னர் தலையிட்டாலும் இது நிறைவேறுவது காலம் இன்னும் நகர்ந்த பிறகு தான் தெரியும். என் கட்டுரையில் முக்கியமான ஒன்றாக முல்லைப்பெரியாறு பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டேன். அதில் வர்க்கம்/தேசியம் குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்த்தேன். அதையும் தவிர்த்து விட்டார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கெதிராக முந்தைய உம்மன் சாண்டி அரசை அதிகம் நிர்பந்தித்து சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தை கூட்டி சட்டம் கொண்டுவருவதற்கு அதிக தூண்டலாக இருந்ததே கேரள கம்யூனிஸ்ட் கட்சி தான்.

மேற்குவங்கம் சிறந்த உதாரணமாக இருக்கும் நிலையில் இலங்கை விவகாரத்தில் எளிமைப்படுத்தப்பட்ட வாதங்களை முன்வைப்பது தான் விநோதமாக இருக்கிறது. என்னுடைய வாதமே நீங்கள் தேசியம் பற்றிய விவகாரத்தில் தெளிவான நிலைபாட்டை எடுங்கள். வளைந்து நெளியாதீர்கள் என்பது தான். இதற்காக பவன்களை விமர்சிப்பது தவறு. இல்லங்களும், நினைவகங்களும் தான் இதில் காரியதரிசி. தற்காலச் சூழலில் நீங்கள் தேசியம் குறித்த விவாதத்திற்கு முன்வர வேண்டும். இதை ஒரு சவாலாகவே நான் முன்வைக்கிறேன்.

கம்ப்யூட்டரை கேரளா தீவிரமாக எதிர்த்தது பற்றி நான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கம்ப்யூட்டர் பற்றிய சோவியத் விஞ்ஞானிகளின் ஆய்வு முறைகளை அவர் அதிகம் படிக்கவில்லை என்றே கருத வேண்டியதிருக்கிறது. மேலும் இந்தியா போன்ற வேலை இல்லா திண்டாட்டம் நிலவும் நாட்டில் கம்யூட்டர் வேலைவாய்ப்பை பறிக்கிறது என்பது எளிமைப்படுத்தப்பட்ட வாதம். இது அரசுத் துறைகளை மையமாக வைத்தே அன்று எழுப்பப்பட்டது. மக்கள் தொடர்பு அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் புகுத்தப்பட்ட போதும் தொடர்புறும் மக்களின் அதிகரிப்பால் இன்று அதிக ஊழியர்கள் கோரப்படுவதும், அந்த இடத்தில் அரசுகளின் கொள்கை காரணமாக தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வங்கிகளில் இந்த கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. அதாவது நான்கு பணியாளர் இருந்த இடத்தில் கம்ப்யூட்டர் அதை ஒருவராகக் குறைத்திருக்கிறது என்பதில் தொடங்கும்போது வங்கியில் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பால் இன்று அதே இடத்தில் நான்கு கம்ப்யூட்டர் பணியாளர்கள் கோரப்படுவது ஊழியர் சங்கங்களுக்கு தெரியாமலில்லை.

தொழில்நுட்பத்தை பொறுத்த வரை மார்க்சியம் அதன் பயன்பாட்டில் எப்போதுமே கட்டுப்பாட்டைக் கோருகிறது. மேலும் அது உற்பத்தி சக்திகளுக்கு சார்பாக திருப்பப்பட வேண்டும் என்கிறது. அதன் பலன்கள் உற்பத்தி சக்திகளை அடைய வேண்டும். சீனாவின் குறைந்த விலை கம்ப்யூட்டர்கள், தொலைக்காட்சி பெட்டிகள் இதன் பிரதிபலிப்பே. தீர்க்கதரிசனம் என்பது அதிகபட்சம் இருநூறாண்டுகள் சமூக அமைப்பின் விளைவுகள் குறித்து கணித்து சொல்வது. இருபதாண்டுகளில் தகர்ந்து
போயிருப்பது தீர்க்கதரிசனமல்ல. மாறாக வறட்டு தரிசனம்.

"கட்சியின் கொள்கை ரீதியான எதிர்ப்புக்கும் கம்யூனிஸ்ட் அரசின் கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கும் முரண் ஏதும் இல்லை" என்கிறார் பிரேம் குமார். இந்த வரிகள் சாதாரண தினசரி பத்திரிகை வாசகனுக்கே படிக்கும்போது உள்ளார்ந்து சிரிப்பூட்டும். ஒரு வேளை இது "நாம், நாம்" என்பதற்குப் பிறகானது என்பதை சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன். தோழர் அச்சுதானந்தனுக்கும் கம்ப்யூட்டருக்குமான உறவு செல்லப்பிராணியின் உறவு போன்றது என்பது கேரள தலைமைச் செயலக ஊழியர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம். மேலும் அவர் மடிக்கணினி பிரியர் என்பதும் கூடுதல் தகவல். தற்போது தலைமைச் செயலகத்தில் கணினிமயமாக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். கேரள அரசுத் துறைகள் முழுமையாக கணனிமயமாவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கேரள அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.

உற்பத்தித் துறையில் கம்ப்யூட்டர் ஈடுபடுத்தப்படும்போது பெருமளவில் உழைப்புப் பிரிவினையை குறைக்கிறது என்பது எதார்த்தம். அதே நேரத்தில் சமகால இளைய தலைமுறையின் மூளைகளை பெருமளவு கைப்பற்றி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வங்கிகளின் ஏ.டி.எம்களை நிறைக்கிறோம் என்ற பெயரில் குறைந்த பட்சம் 18 மணிநேரம் வேலை வாங்குவது, அமர்த்து பின் துரத்து கொள்கை (Hire and fire Policy) செயல்திறன் விருத்தி திட்டம் (Performance improvment plan) போன்றவைகளால் இளைய சமூகம் அதிகம் அலைக்கழிப்பிற்கு உள்ளாகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்களில் ஒரு பணியாளரின் சராசரி அதிகபட்ச பணிக்காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்காவில் கூட வேலை நேரம் இந்த அளவிற்கு இல்லை. சில பகுதிகளில் இந்திய பணியாளர்களுக்கே எட்டு மணிநேரமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ஏற்றுமதி திட்டங்களைக் குறைத்து உள்நாட்டு தேவை சார்ந்து திரும்பும் போது இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க டாலர்களையே நம்பி இருக்கின்றன. இதற்கான மாற்றுக்களை அரசுகள் கண்டறிவது அவசியம். மலம் அள்ளுபவன் இன்னும் மலம் அள்ளி கொண்டே இருக்கிறான் என்பதை பிரேம்குமார் இதனூடே சொல்லி விட்டுச் செல்கிறார். காலம்காலமாக ஒரே வேலையை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே செய்ய வேண்டும் என்று திணிப்பது ஒடுக்குமுறை சமூகத்தின் கொடூரங்களில் ஒன்று. இது அவனின் உடல் மீதான திணிப்பாக இருக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு நவீன இயந்திரங்கள் வந்து விட்ட பிறகு அதை இன்னும் முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கும் விஷயம். கழிவுகள் அகற்றும் துறையில் இயந்திரங்கள் புகுத்தப்படும்போது சமூக அளவில் பெரும் உடைப்பை அது ஏற்படுத்தும். அருந்ததியர்களின் தனி இடஒதுக்கீடிற்காக போராட்டம் நடத்தும் சி.பி.எம் இதனை கவனத்தில் எடுத்து கொள்வது விசாலமானதாக இருக்கும். ரிக்ஷாக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த சூழலில் அது குறித்தும் பிரேம்குமார் கவலை கொள்ளலாம்.

கேரள சி.பி.எம்மின் உயர்சாதி அரசியலை குறித்து நான் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பிரேம்குமார் அதை ஈழவக் கட்சி என்கிறார். அவர் இது பற்றி தோழர் அச்சுதானந்தனிடமே அதிகம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தான் அச்சுதானந்தன் முதல்வராயிருக்கிறார். தற்போது பினராயி விஜயனுக்கும் அவருக்கும் நடந்து வரும் பனிப்போர் என் வாதத்தை இன்னும் வலுசேர்க்கும். இதன் உள்ளரசியல் குறித்து நான் அதிகம் விவாதிக்கப் போவதில்லை. காரணம் மிக சாதாரணமாக இருப்பது தான். இதற்கு கேரள காங்கிரஸ் கூட சிறந்த உதாரணம்.

இன்றும் கூட இந்தியாவில் சி.பி.எம் சோவியத் ரஷ்யாவின் தகர்வு குறித்து எந்த ஆக்கபூர்வமான உரையாடல்களை நடத்தவில்லை என்பது இந்திய முழுவதுமான இடதுசாரி அறிவுஜீவிகளுக்குத் தெரிந்த விஷயம். அது சகலவித சாபங்களையும் கோர்பசேவ் மீது இட்டுக் கொண்டு விட்டு சென்று விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி சி.பி.எம்மின் சாதாரண உறுப்பினர்கள் முதல் அறிவு ஜீவிகள் வரை நான் உரையாடி இருக்கிறேன். கேரளாவில் கூட சிபிஎம்யைச் சார்ந்த ஒருவரிடம் பல விஷயங்களை விவாதிக்கையில் இது பற்றியும் உரையாடினேன். பெரும்பாலானோரிடத்தில் கோர்பசேவுக்கு முந்தைய சோவியத் பற்றிய விமர்சனப் பார்வை இல்லை.

ஓர் ஆக்கபூர்வமான, விமர்சனப்பாங்கான உரையாடலை சி.பி.ஐ மட்டுமே நடத்தியது. அதற்கு முந்தைய கால சோவியத் ரஷ்யாவின் சார்பாக தாம் இருந்ததே காரணம். ஸ்டாலினியத்தைக் கூட நிராகரிக்கும் அறிவுஜீவிகள் சி.பி.ஐ இல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேவபேரின்பன், மறைந்த தொ.மு.சி ரகுநாதன் ஆகியோர்களையும் அகில இந்திய அளவில் மறைந்த தோழர்கள் ராஜேஸ்வரராவ், இந்திரஜித்குப்தா ஆகியோரையும் குறிப்பிடலாம்.

லெனினியம், ஸ்டாலினியம், டிராஸ்கியம் போன்றவை குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் நடைபெற்றிருக்கின்றன. தற்போதும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தோழர் பிரேம்குமார் படிப்பது நல்லது. இந்திய இடதுசாரிகள் பட்டியலைக் குறிப்பிட்டு இவர்களையெல்லாம் பீர்முஹம்மது கருத்தில் கொள்ளவில்லை என்கிறார் பிரேம் குமார். (முற்றத்து முல்லைக்கு மணமில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு) குறிப்பாக டி.டி கோசாம்பி குறித்து ஐந்து ஆண்டுகள் முன்னரே நான் எழுதியிருக்கிறேன். டி.டி கோசாம்பியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் அவருக்கும் சி.பிஎம்மிற்கும் என்ன உறவிருந்தது என்பதை பிரேம்குமார் அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.

சிபிஎம்மின் தத்துவார்த்தக் குழு தலைவராக இருந்த இஜாஸ் அகமது தன்னுடைய பல நூல்களில் எட்வர்ட் செய்த்தின் சிந்தனைகளை மேற்கோள்காட்டியிருக்கிறார். மேலும் தாரிக் அலி, இக்பால் அகமது ஆகியோர் இந்தியாவைப் பற்றி எழுதிய நூல்களை, எனக்கு அறிவுரை கூறும் பிரேம்குமார் படிப்பது நல்லது. இந்த வரிசையில் என்னுடைய வாசிப்பானது கெய்ல் ஓம்வெர்ட், காஞ்சா அய்லய்யா மற்றும் கரண்குமார் லம்பாலா வரை நீளும். எம்.என் விஜயன் பற்றி பிரேம்குமார் குறிப்பிடுகிறார். நியூயார்க் பல்கலையைச் சார்ந்த சமூகவியல் ஆய்வாளர் ஒருவர் கேரளாவைப் பற்றி ஆய்வு நடத்த வந்த தருணத்தில் எம்.என் விஜயனையும் சந்தித்தார். அவருடன் நடத்திய உரையாடலில் எம்.என் விஜயன் "மலையாளிகள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார புலப்பெயர்வு குறித்த தன் கவலையை வெளிப்படுத்தியதாக" தன்னுடைய பதிவொன்றில் அந்த ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றியோ அல்லது கம்யூனிஸ்ட் ஆட்சி முறை பற்றியோ யாரும் விமர்சிக்க கூடாது என்று சொல்லவரவில்லை என்கிறார் பிரேம்குமார். இதை அவருடைய மொழியிலே சொல்கிறேன், இது ஒருபாதி மெய், ஒரு பாதி பொய். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை உச்சரித்தாலே கொதிக்கும் மனநிலைகளை நான் அதிகம் கண்டிருக்கிறேன். கருத்து சுதந்திரத்திற்கும் சி.பி.எம்மிற்குமான எல்லை பாரதூரமானது. அதன் நாற்பத்தி நான்கு ஆண்டுகால வரலாற்றைப் படித்தாலே இதை புரிந்து கொள்ள முடியும். இதில் சுய விமர்சனம், மாறுபட்ட கருத்துக்களை அங்கீகரித்தல் என்பதில் சி.பி.ஐ கொஞ்சம் முன்னால் நிற்கிறது. ஆனால் அந்த அளவுகோல் என்பது அதனால் நிறுவப்பட்ட புனிதங்களை கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது வரையில் தான். இதனை நான் நேரடியாகவும், பிரத்யட்சபூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய ஆய்வு முறை மற்றும் விமர்சன அளவுகோல் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்துகிறேன். எப்பொழுதும் என் பார்வை நேராகவே இருக்கிறது. இதில் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை என்ற பிரச்சினையே எழவில்லை. மேற்குவங்கத்தை முதலில் தொடாமல் கேரளாவை தொட்டதன் காரணம் இதுவே. கேரள சி.பி.எம் தற்போது Virtual realityயான தீம்பார்க்கினுள் சென்று நிற்கிறது. அதிலிருந்து கலங்கிய நீரைத் தவிர எஞ்சுவது வேறொன்றுமில்லை. ழீன் பூதிலார் இப்போது இருந்திருந்தால் வெகுவாக வியந்திருப்பார். இன்னும் இன்னும் இயற்கை மீது அது அதிகம் உறவாட வேண்டும். பாறாசாலையிலிருந்து மஞ்சேஸ்வரம் வரை நீண்டிருக்கும் கேரளாவின் இயற்கையமைப்பு, உட்சூழல், அதன் ரம்மியம் இயற்கையின் மாபெரும் கொடை. இதனால் தான் அதை கடவுளின் சொந்த நாடென்றார்கள்.

நான் நுனிப்புல் மேய்வதாகவும் அது உழவாகாதும் என்கிறார் பிரேம். நான் மேய்வது உழவுக்காக அல்ல. மாறாக பால் கறப்பதற்காக. முழுச்செம்பு பாலே எனக்கு அவசியம். மாட்டைக் கொடுத்து இதன் மாமிசத்தை புசித்துக் கொள் என்பதே மார்க்சியத்தின் பெயராலும், சோசலிசத்தின் பெயராலும் பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெற்றிருக்கிறது. இதை வெளிப்படுத்தியதே என் கட்டுரை. இக்கட்டுரை வேலி தாண்டிய வெள்ளாடாய் ஓடி மூச்சிரைத்து நிற்கிறது என்கிறீர்கள். கட்டுரையின் பரிமாணம், தரவுகள், வீச்சு இவைகள் சார்ந்து எனக்கு மாஸ்கோ, டெல்லி, திருவனந்தபுரம், தியாகராயநகர் என்று பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது. வேலி தாண்டிய வெள்ளாடு என்ற உங்களின் வரிகளை உங்கள் பார்வையில் உள்ள பிரச்சினையாகத் தான் நான் கருதுகிறேன்.

Pin It