ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டு நடுங்குகிறது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. தங்களிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், முகநூல் பதிவாளர்களைக் கைது செய்யும் ‘இட்லரிச’ அடக்குமுறைகளைக் கொடூரமாகக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இதற்காக தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்ற அறவுணர்வு இல்லாத நபர்களை ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் பீமாகோரேகானில் உள்ள தலித் மக்களின் நினைவிடத்துக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். பீமாகோரேகான் பகுதியில் பேஷ்வா பார்ப்பனர் ஆட்சி நடந்த போது கொடூரமான ஜாதி அடக்குமுறைகளை சட்டமாக்கியிருந்தனர்.
அப்போது பிரிட்டிஷார் படையில் இணைந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ‘பேஷ்வா’ படையினருடன் போரிட்டு அவர்களை வீழ்த்தியதன் நினைவாக அங்கே நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. 2018 ஜனவரி முதல் நாள் அங்கே வீர வணக்கம் செலுத்த வந்தவர்கள் மீது இந்துத்துவ ஜாதி வெறியர்கள் நடத்திய தாக்குதல் அது.
தாக்கியவர்களைக் கைது செய்யாமல் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றம் சாட்டி, அந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய ஒரே காரணத்துக்காக இடதுசாரி சிந்தனையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்களான மூத்த குடி மக்களை கைது செய்து 3 ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ளது, பா.ஜ.க. ஆட்சி. அவர்கள் மீது போடப்பட்டுள்ள ‘சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை’ என்ற ‘உபா’ (UAPA) சட்டம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலேயால் கொண்டு வரப்பட்டு, இப்போது அந்த நாட்டிலேயே கைவிடப்பட்ட ஒரு சட்டம்.
30 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் 3 மாதம் வரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலும் பிணை பெறும் உரிமையோ, ‘நடுவர் குழு’ (Board) விசாரணையோ இல்லாமலும் வழக்கு விசாரணை முடியும் வரை வெளியே விடாமல் தடுக்கும் ஆள் தூக்கி சட்டம் அது. ‘இந்துத்துவா’ என்ற ‘வேத மனுவாத’ பார்ப்பனியத்தைக் காப்பாற்ற அமுல்படுத்தப்படும் நவீன ‘மனு சாஸ்திர’ சட்டம்.
ஆனந்த் டெல் டும்பே (அம்பேத்கர் பேத்தியை திருமணம் செய்தவர்), கவுதம் நவ்லகா, வெர்னோன் கன்சால்வஸ், கவிஞர் வரவரராவ், ஸ்டேன் சுவாமி பாதிரியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடும் உடல் நோய்களுக்கு உள்ளாகியுள்ள வயது முதிர்ந்த சிந்தனையாளர்கள் சிறையில் வாடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, 70 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தாலே பா.ஜ.க. ஆட்சி ‘தேச துரோகிகள்’ என்று முத்திரை குத்துகிறது. பகுத்தறிவாளர்களும் இடதுசாரி சிந்தனையாளர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களுமான தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்ற கொலைகாரர்கள், சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் ‘சனாதன் சான்ஸ்தா’ என்ற ஒரே பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று சிறப்பு புலனாய்வுக் குழு உறுதி செய்த பிறகும் அந்த அமைப்பை ‘தீவிரவாத’ அமைப்பு என்றோ, ‘தேசவிரோத’ அமைப்பு என்றோ அறிவிக்கவோ தடை செய்யவோ ‘தேசபக்தி’ பா.ஜ.க. ஆட்சி தயாராக இல்லை.
ஜனவரி 26இல் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரத்தைத் தூண்டிவிட்டதாக ‘இந்தியா டுடே’ ராஜ்தீப் சர்தேசாய், நேஷனல் ஹெரால்ட், மூத்த ஆசிரியர் மிருளாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்’ ஆசிரியர் ஜாஃபர் சூகா, ‘கேரவன்’ ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆசிரியர் குழுவினரான வினோத் கே. ஜோஸ் ஆகிய பத்திரிகையாளர்கள், தேச துரோகம், வகுப்புவாத அமைதியின்மையை குலைத்தல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் என்ற கொடூர பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீதும் நடுவண் ஆட்சியின் ஒடுக்குமுறைகள் பாயத் தொடங்கியிருக்கின்றன.
சமூக ஊடகங்களின் ‘சுதந்திரமான கருத்துரிமை வெளி’ பார்ப்பனிய மனுதர்ம கூட்டத்துக்கு இப்போது பெரும் சவாலாகி விட்டதால் ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடுகிறவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, அமெரிக்காவைச் சார்ந்த உலகப் புகழ் பாப் பாடகி ரிஹானா, விவசாயிகளின் நியாயமான போராட்டம் பற்றி நாம் ஏன் பேசுவதில்லை என்ற ஒரே வரி ‘டிவிட்டை’ பதிவிட்டார். அவரை காலிஸ்தான் தீவிரவாத இயக்க ஆதரவாளர் என்ற முத்திரை குத்துகிறது “தேசபக்த’ பா.ஜ.க. ஆட்சி! காரணம், அந்த ஒரு வரி டிவீட், விவசாயிகள் போராட்டத்தை உலகம் முழுதும் கொண்டு சேர்த்து விட்டதே என்ற அச்சமும் அவமானமும் தான்.
சுவீடன் நாட்டின் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் 18 வயதே நிரம்பிய இளம் பெண் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், டெல்லி விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு மனம் குமுறினார். போராட்ட செய்திகளை வெளி உலகத்துக்கு கொண்டு செல்ல, ஒரே தொகுப்பாக்கித் தரும் ‘டூல் கிட்’ ஒன்றை உருவாக்கினார்.
அந்த ‘டூல் கிட்’டைப் பயன்படுத்தி பெங்களூரைச் சார்ந்த 21 வயதே நிரம்பிய திஷா ரவி என்ற மாணவி, விவசாயிகளின் போராட்ட செய்திகளை பதிவிட்டார் என்பதற்காக அவர் கைது செய்யப்பட்டு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, 5 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பார்ப்பன ஊடகங்களுக்கு இல்லாத ‘அறமும் - நேர்மையும்’ நாடு கடந்த மனித உரிமை சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது. இதற்காக ‘மனுவாத’ கூட்டமும் அதன் ஊதுகுழலான ஊடகங்களும் வெட்கப்பட வேண்டும். ‘சம்பூகன்’ தலையையும் ‘ஏகலைவன்’ கட்டை விரலையும், ‘நந்தனின்’ தீக்குளிப்பையும் தங்கள் ‘தர்மங்களைக்’ காப்பாற்ற விலையாகக் கேட்டக் கூட்டமாயிற்றே!
சமூக வலைதளங்களில் செய்திப் பரிமாற்றங்களுக்கான ‘உலகம் தழுவிய’ செயலியாக செயல்படும் ‘டிவிட்டரும்’ இப்போது இவர்களின் கண்களை உறுத்துகிறது. ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்போரின் பதிவுகளை அனுமதித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகிறது நடுவண் ஆட்சி. அந்தப் பதிவுகளை நீக்கச் சொல்லி மிரட்டுகிறது.
கோரிக்கையை ஏற்று 250 பதிவுகளை நீக்கியது ‘டிவிட்டர்’ நிறுவனம். இப்போது, ‘அது போதாது; சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் பதிவிடும் கருத்துகளையும் ஆட்சிக்கு எதிராக இருந்தால் நீக்க வேண்டும், இல்லையேல் ‘டிவிட்டர்’ நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று மிரட்டுகிறது.
‘இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரானது இந்த கோரிக்கை. இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரான இந்த கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று இந்தியாவுக்கே ‘பாடம்’ எடுக்கிறது ‘டிவிட்டர்’ நிறுவனம். இதைவிட இந்தியாவுக்கு அதன் ‘தேச பக்தி’ கூச்சலுக்கு வேறு அவமானமோ, தலைகுனிவோ இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் எந்த அடிப்படை காரணமும் இன்றி ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் பா.ஜ.க. ஆட்சியின் அடக்குமுறை மதவெறிக் கொள்கைகளை எதிர்த்து பரப்புரை செய்வதாக அந்த அமைப்பு ஒரு தீர்மானம் நிறைவேற்றியதால் அவர்கள் ‘தேசத் துரோகி’களாகிவிட்டனர்.
இந்த வழக்குகளில் ‘தேசிய புலனாய்வு நிறுவனம்’ என்ற மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பு, வழக்குகளை மோசடியாக தயாரிக்கிறது என்ற அதிர்ச்சியான செய்திகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோனா வில்சன் என்ற ஆய்வாளரின், கணினியில் முறைகேடாக ஊடுருவி (ஹேக்), மோடியை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டுக்கான போலி ஆவணங்களை ‘என்.அய்.ஏ.’ அமைப்பு திணித்திருக்கிறது. இந்த மோசடியை ‘ஆர்சினல் கன்சல்ட்டிங்’ (Arsenal consulting) என்ற அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறுவனம் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க.வின் ‘இந்துத்துவ’, ‘மனுவாத’ தேசபக்தி இப்படி சர்வதேசங்களிலும் அம்பலப்பட்டு நிற்கிறது.
“வேதத்தை மறுப்பவர்களை தேவர்களை எதிர்த்தவர்களை ‘அழிப்பதே தர்மம்’ அதுவே ராஜநீதி” என்ற கொள்கை அப்படியே மீண்டும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
“ஓ இந்திரனே! சோமனே! ராட்சதர்களை எரி! எரி! நசுக்கு! இருண்ட காடுகளில் ஒன்று, பத்து, நூறாய்ப் பெருகி வரும் அந்த ‘அரக்க’க் கூட்டங்களை அடக்கு; சின்னாபின்னப்படுத்து! அக்கினிச் சுவாலையில் பொசுக்கு! சித்திரவதை செய்! துண்டு துண்டாக வெட்டு! - (ரிக்வேதம் 8வது மண்டலம் 1004வது மந்திரம்)
வேதங்கள் கூறும் அடக்குமுறைகள் அவர்களின் வாரிசுகளால் ‘நவீன’ வடிவமெடுத்து செயல்படுகின்றன. இந்தப் புரிதலோடு அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்