காஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்? - 2

இந்திய ராணுவத்தை எதிர்கொள்வதை விட ஆர்எஸ்எஸ் இந்துத்துவக் கும்பல் பரப்பும் கருத்தியலை எதிர்கொள்வது நமக்கு மிகப்பெரிய சவால்.

இந்துத்துவ பாசிச கும்பல் தன்னுடைய கருத்தை பொதுமக்களின் கருத்தாக மாற்றுவதற்கான கருத்து உருவாக்க அடியாட்களை மிகச் சரியாக பயன்படுத்துகின்றனர்.

Amit Shah in parliamentகருத்துருவாக்க அடியாட்களைப் பற்றிய புரிதல் நமக்கு போதுமானதாக இல்லை, நம்முடைய எதிரிகள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். ஓர் உதாரணத்திற்கு மோடி முதன் முறையாக பிரதமராக வந்தது எப்படி என்பதை ஆய்வு செய்தாலே நமக்கு கருத்துருவாக்க அடியாட்களின் பணியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.

சமூக வலைதளத்தில் மோடி என்று டைப் செய்தாலே குஜராத் படுகொலை என்று தான் நமக்கு முன்பெல்லாம் காட்டும். ஆனால் அவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டவுடன் மோடி என்று கூகுளில் தேடினால் வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தை காட்டத் தொடங்கியது. இது எப்படி சாத்தியமானது?

மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தவுடன் அவர்கள் ஒரு ஏஜென்சியைப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்தால் போதும் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பார்கள்.

மோடியை உலகமெங்கும் இருக்கக்கூடிய தலைவர்களை பாராட்டிப் பேச வைத்தார்கள், அவரைப் பற்றி புத்தகம் எழுத வைத்தார்கள், அவருக்கு விருதுகள் வழங்க வைத்தார்கள், அவரைப் பற்றி மூலைமுடுக்கெல்லாம் பேச வைத்தார்கள், செய்தித்தாள் வார இதழ் மாத இதழ் தொலைக்காட்சி உள்ளிட்டு சமூக வலைதளங்கள் அனைத்திலும் குசராத் இந்தியாவின் முதன்மை மாநிலமாக வளர்ந்துள்ளதாகப் பரப்பினார்கள்.

வளர்ச்சி நாயகன் - என்று அவர் புகழே பாடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் காங்கிரசைப் பற்றி காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி மிகவும் மோசமான பிம்பத்தை வீடு வீடாக கொண்டு போய் சேர்த்தார்கள். இதுதான் கார்ப்பரேட் பாணி கருத்துருவாக்க அரசியல்.

கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மூளைக்குள் அவர்கள் நினைத்ததை திணிப்பார்கள், பிறகு நம்ப வைப்பார்கள் பிறகு ஆதரவாகப் பேச வைப்பார்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஆதரவாக களம் இறங்க வைப்பார்கள். இதுதான் கருத்துருவாக்க அடியாட்களின் பணி.

இந்த கருத்துருவாக்க அடியாட்கள் உலக அரசியல் முதற்கொண்டு உள்ளூர் அரசியல் வரை பேசுவார்கள். இவர்கள் செய்தியாளர்களாக, பேராசிரியர்களாக, பத்திரிகையாளர்களாக, எழுத்தாளர்களாக, அறிவுஜீவிகளாக, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சமூக சேவகர்களாக, பெண் உரிமை, குழந்தை உரிமை, சுற்றுச்சூழல் இப்படி பல்வேறு துறைகளைப் பற்றி பேசக்கூடிய போராளிகளாக.... இவர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் நீதிபதிகள் கூட இந்துத்துவ பாசிச கும்பலுக்கு கருத்துருவாக்க அடியாட்களாகத் தான் இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய ஒருவர் பதவி முடிந்தவுடன் அந்த அரசின் துணையோடு ஆளுநராக எப்படி பதவி அமர்த்தப்படுகிறார்? உயர் மன்ற நீதிபதி ஒருவர் கிறிஸ்தவர் நிறுவனங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆபத்து இருக்கிறது என்று எப்படி கூற முடிகிறது?

ஒரு நாயைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தால் அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டது என்று ஊர் முழுக்க பரப்புவார்கள். இப்படித்தான் கருத்துருவாக்க அடியாட்கள் தங்களுடைய வேலை முறையைக் கையாண்டு வருகின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கியதில் இவர்களுடைய பங்கு அளப்பரியது. ஈழ விடுதலைக்கு எதிராக உலகமெங்கும் ஏகாதிபத்திய சிங்கள அரசுக்கு ஆதரவாக இவர்கள் வேலை செய்தார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் அது இனப்படுகொலை என்கிற சொல்லாடலோடு புழக்கத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காக "மனிதப் படுகொலை", " போர்க்குற்றம்" என்றெல்லாம் கருத்தைப் பரப்பி இனப்படுகொலை என்ற சொல்லை மறைக்கப் பார்த்தார்கள்.

இன்னும் சிலர் இனப்படுகொலையின் இந்திய பங்களிப்பை மறைப்பதற்கு எல்லா முயற்சியும் எடுத்தார்கள். துக்ளக் சோ, குருமூர்த்தி போன்றவர்களெல்லாம் இந்த வகையறாக்கள் தான்.

இப்படிப்பட்ட கருத்து உருவாக்க அடியாட்களால் காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்பட வைத்தார்கள். இதற்காக காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியாக இந்திய மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் கொஞ்சம்கொஞ்சமாக அந்நியப்பட வைத்தார்கள்.

குறிப்பாக, காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அவர்கள் சார்ந்திருக்கிற மதத்தின் பெயரால் தான் நடத்திக் கொண்டிருப்பதாகப் பரப்பினார்கள்.

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை காஷ்மீரிகளின் போராட்டமாகப் பார்க்க விடாமல் இஸ்லாமியர்களின் போராட்டமாக அதைப் பரப்புவது, காஷ்மீரிகளின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து அவர்களை வழிபாட்டாளர்கள் போலப் பரப்பியது, காஷ்மீரிகளின் போராட்டத்தை பண்டிட்டுகளுக்கு எதிரான போராட்டமாக சித்தரித்து இந்துக்களுக்கு எதிரான போராட்டமாகப் பரப்புவது, காஷ்மீரிகளின் போராட்டத்தை பாகிஸ்தானின் தூண்டுதல் என்று பரப்பி அன்னிய நாட்டு கைக்கூலிகள் என்று சித்தரிப்பது, காஷ்மீரில் இடம் வாங்க முடியாது, திருமணம் செய்ய முடியாது, இந்திய சட்டத்தை அவர்கள் மதிப்பதில்லை, அவர்களுக்கென்று சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று எளிய மக்களின் குரலாகப் பேசுவது.... இப்படியாகத்தான் கடந்த 70 ஆண்டு காலமாக காஷ்மீரைப் பற்றி இந்த கருத்துருவாக்க அடியாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை மக்களிடம் புகுத்தியுள்ளார்கள்.

அதனால் தான் அவர்களுடைய 370 சட்டப் பிரிவு (சிறப்பு அந்தஸ்து) பறிக்கப்பட்டு அவர்கள் தனித்து ஒதுக்கப்பட்டு இந்திய ராணுவத்தின் துப்பாக்கி முனையில் வாழ்கிற நிலைமை வந்திருக்கும்போது கூட இந்தியாவின் மற்ற தேசங்களிலிருந்து அவர்களுக்கு ஆதரவுக் குரல் மிகப்பெரிய அளவில் எழவில்லை என்பதை நாம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் முடிவுக்கு பிஜூ ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுபோலவே சிவசேனா, அதிமுக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்துள்ளார். அகாலி தளம், அசாம் கண பரிஷத் போன்ற கூட்டணி கட்சிகளின் பெரும் பலத்துடன் இந்த தீர்மானத்தை மோடி அரசால் நிறைவேற்ற முடிந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே ஆதரவு தெரிவிக்கக் கூடிய நிலைமையில் தான் காஷ்மீர் சிக்கல் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காஷ்மீர் விடுதலைப் போராட்டக்காரர்கள் இந்தியாவிலுள்ள மற்ற பிற மக்களிடம் நேர்மறையான கருத்தை விதைக்கத் தவறி உள்ளனர் அந்த இடத்தை இந்துத்துவ பாசிச கருத்துருவாக்க அடியாட்கள் மிகச்சரியாக எதிர்மறையாக விதைத்துள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த கருத்துருவாக்க அடியாட்களை நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். இது ஒரு ஊடகப் போர். இந்த ஊடகப் போரை நாம் நடத்தாவிட்டால் நாமும் இப்படித்தான் அழிக்கப்படுவோம்.

இந்தப் போரின் முக்கியத்துவம் தெரிந்ததால்தான் எல்லாக் கட்சிகளும் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கி விடுகிறார்கள். எல்லா பெரிய முதலாளிகளும் தங்களுக்கென ஒரு ஊடகத்தை நிறுவியுள்ளனர்.

ஆனால் நமக்கென்று என்ன ஊடகம் இருக்கிறது சமூக வலைதளங்களை தவிர? இந்த அரசு நினைத்தால் இந்த சமூக வலைதளத்தை தடை செய்துவிட முடியும். நம்முடைய பதிவுகளை நமக்கே தெரியாமல் அழித்து விட முடியும் அல்லது மாற்றிவிட முடியும். நமது பக்கத்தையே முடக்கிவிட முடியும்.

எனவே இந்த கருத்துருவாக்க அடியாட்கள் எப்படி எல்லாம் செயல்படுகிறார்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு மாற்றான கருத்துகளை நாம் உருவாக்கிக் கொள்ளாவிட்டால்... இந்த ஊடகப் போரில் நாம் பங்கெடுத்து அவர்களுக்கு எதிரான போரை தொடங்காவிட்டால் நாம் முற்றாக அழிக்கப்பட்டு விடுவோம்.

ஊடகப் போர் என்பது வெறும் "லைக்" போடுவதோ, "கமென்ட்" பண்ணுவதோ, "ஷேர்" செய்வதோ அல்ல.

(தொடர்வோம்)

- க.இரா.தமிழரசன்

Pin It