அன்பார்ந்த தோழர்களே!

பு.ஜ.தொ.மு மாநிலச் செயலாளர் ‘திருவாளர் சுப.தங்கராசு அவர்கள் ரூ. 100 கோடி வீட்டுமனை ஊழலில் ஈடுபட்டார்’ என்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்ட பின்னர் "சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்!!!" என்ற எங்கள் விமர்சனக் கட்டுரையை கீற்று இணைய தளத்தில் வெளியிட்டோம். அந்தக் கட்டுரைக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையானது “மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுகளுக்கு கண்டனமும் எமது மறுப்பும்”, என்ற தலைப்பிட்டு மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எமது கட்டுரையில் “சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜு அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியதைப் பற்றி அந்தப் பகுதி தோழர்கள் அதன் அரசியல் தலைமைக்குத் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை ‘அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்’ என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேட்டதுதான்” என்று எழுதியிருந்தோம்.

ஆனால், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமது எதிர்வினையில் கட்டுரையில் உதாரணமாகத் தரப்பட்ட இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அது ஆதாரம் இல்லாத அவதூறான செய்தியாகும் என்று எழுதியுள்ளனர். அதற்கான ஆதாரத்தையும் கேட்டுள்ளனர். “மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்க வேண்டும்”, என்று கீற்று இணையதள ஆசிரியருக்கு மிரட்டும் தொனியில் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளனர். ‘வழக்கு போடுவோம், இழுத்தடிப்போம்’ என்று பா.ஜ.க தனது அதிகார நிறுவனங்களைக் காட்டுவது போல தமது அமைப்பு பலத்தைக் காட்டி ஊடகத்தை மிரட்டி வருகின்றனர்.

பகுதித் தோழர்கள் திருவாளர் ராஜு அவர்கள் சொத்து வாங்கியதைப் பற்றி தலைமைக்கு தகவல் தெரிவித்த போது தலைமை அதைக் கையாண்ட விதத்தைத்தான் நாங்கள் எமது கட்டுரையில் சுட்டிக் காட்டினோம். அந்தப் பணம் தவறான வழியில் வந்தது என்று நாங்கள் கூறவில்லை. இந்தத் தகவலை நாங்கள் சூறாவளி இணைய தளத்தில் இருந்து எடுத்தோம். அந்தக் கட்டுரையிலும் திருவாளர் ராஜு அவர்கள் அந்தப் பணத்தை தவறான வழியில்தான் சேர்த்து சொத்து வாங்கினார் என்றும் எழுதியிருக்கவில்லை. வெளியில் இருக்கும் அமைப்பு ஆதரவாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்காகத்தான் அந்தத் தோழர்கள் தலைமையிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள். அந்த அரசியல் தலைமைதான் அந்தப் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டதன் மூலம் இந்த பிரச்சனையில் ‘தவறான வழியில்’, என்ற வார்த்தையை முதன் முறையாக வலிய திணித்தது. எனவே, திருவாளர் ராஜு அவர்களை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியது அந்த அமைப்பின் அரசியல் தலைமையே தவிர, நாங்களோ அல்லது சூறாவளி தோழர்களோ அல்ல.

சூறாவளி இணையதளத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த கட்டுரைக்கு திருவாளர் ராஜூவோ, அதற்குப் பின்னர் உருவான மக்கள் அதிகாரம் தலைமையோ இது வரை எந்த மறுப்பும் எதிர்ப்பும் வெளியிட்டிருக்கவில்லை. எனவே, அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த அமைப்புகளின் போக்கை விளக்குவதற்கு உதாரணமாக அதை எடுத்தாண்டிருந்தோம்.

மேலும், எங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் அந்த அமைப்பைப் பற்றி பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். அந்தக் கட்டுரைகளில் ஒன்று மக்கள் அதிகாரத்தின் அடிப்படைக் கோட்பாடான கட்டமைப்பு நெருக்கடி என்பதையே கேள்விக்குள்ளாக்கி இருந்தோம். மேலும், அதன் அரசியல் தலைமையும், சகோதர அமைப்புகளும் எந்த அளவிற்கு அரசியல், கோட்பாடு இல்லாமல் சீரழிந்து சிதறிக் கிடக்கின்றன என்பதையும், அதன் தலைமையிலேயே தேர்தல் அரசியல் கட்சிகளைப் போன்று தனிநபர் நலன்களுக்கு இடையிலான குழு மோதல்கள் வெடித்து சிதறிக் கிடக்கிறது என்பன பற்றியெல்லாம் எழுதியுள்ளோம். அப்படி வெளியிட்ட கட்டுரைகளின் பட்டியலை கீழே தருகிறோம்.

  1. "ம.க.இ.க தோழர்களுக்கு ஒரு அறைகூவல்"
  2. “மத்தியத்துவத்திற்கு எதிராக வேலை செய்வதா?” – கேள்வி – பதில்
  3. "அவசரத்தில் அள்ளித் தெளித்த மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி"
  4. "அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்"
  5. "மருதையன் உள்ளிட்ட ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் செயல்பாடுகள்"
  6. "ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?”

ஒரு புரட்சிகர அமைப்பு என்றால் அங்கே தனி நபர்களை விட, அமைப்பும், அதன் கோட்பாடுகளுமே அனைத்திலும் மேலானதாக இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆனால் அப்படிப்பட்டதாக சொல்லிக் கொள்ளும், அவ்வாறு நம்பி நூற்றுக் கணக்கான தோழர்கள் இணைந்திருக்கும் அமைப்பையும், அதன் கோட்பாட்டையும் கடுமையாக நாங்கள் விமர்சித்த போதெல்லாம் வாயை இறுக மூடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறிதும் கோபமோ, அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற நேர்மையான சிந்தனையோ அவர்கள் எவருக்கும் வரவில்லை. ஆனால், திருவாளர் ராஜு விவகாரத்தில் அந்த அமைப்புத் தலைமையின் அணுகுமுறை குறித்து எழுதியவுடன் திரு ராஜூ என்ற தனி நபருக்காக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இதே விவகாரத்தைப் பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன்பு சூறாவளி எழுதிய போது அதை ‘சீந்துவார் யாரும் இல்லாததால்’ [அப்படித்தான் தங்களது மறுப்பு அறிக்கையில் இதைக் குறிப்பிடுகிறார்கள்] இவர்கள் அதற்குப் பதில் சொல்லவில்லையாம்.

ஒரு புரட்சிகர அமைப்பு உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கி அனைத்து செயல்பாடுகளும் அமைப்பின் கோட்பாட்டையும், விதிமுறைகளையும் தமது உயிர் மூச்சாகக் கருதும் சுய கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எவ்வித வெளிப்புற நெருக்கடி இல்லாவிட்டாலும் அவ்வாறு செயல்படுவதுதான் அவ்வமைப்பை உயிரோட்டமாக வைத்திருப்பதோடு, எப்படிப்பட்ட நிலையிலும் வெல்லற்கரிய ஆற்றலை அந்த அமைப்பிற்கு வழங்குகிறது.

தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத பல கம்யூனிஸ்டு கட்சிகளில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஆயிரக்கணக்கான தோழர்கள் அவ்வாறு வாழ்ந்திருக்கின்றனர், வாழ்ந்து வருகின்றனர். தங்களது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்குத் தந்துவிட்டு, ஒவ்வொரு வேளை உணவுக்கும் கட்சியையும், மக்களையுமே சார்ந்து நின்று, தம்மை இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கமாக உயர்த்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் இந்த நேர்மை வெளியில் இருந்து அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல.

இது கம்யூனிஸ்டுகளின் இயல்பான பண்பு என்பதால், இதில் அதிசயிப்பதற்கு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் கக்கன், காமராசர் ஆகிய இரு காங்கிரசுகாரர்கள் கூட கம்யூனிஸ்டுகளைப் போன்று தனிச் சொத்துடைமை விவகாரத்தில் தன்னளவில் நேர்மையாக வாழ்ந்தார்கள். இவர்கள் அரசின் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் தமது வாழ்நாள் முழுவதும் சொந்த வீடுகூட இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்கள்.

அரசியல் செயல்பாட்டாளர்களுக்கான மேலே சொன்ன நேர்மைக்கான அளவுகோல், ‘சீந்துவார் இல்லாததால்’, எங்கள் மீது வரும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்று பிரகடனப்படுத்தி இருக்கும் மக்கள் அதிகார குழுமத்திற்கு ஒரு துளி அளவாவது பொருந்துமா என்று ஒருமுறை பொருத்திப் பாருங்கள்.

நூறு கோடி ரூபாய் ஊழல் அம்பலமான பின்னரும் கூட எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இவர்களால் இன்னமும் பொது வெளியில் சவடால் அடித்துக் கொண்டிருக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?

முதலாவதாக, நிலவுகிற இந்த சமுகத்தின் ஒவ்வொரு அணுவும் எப்படி ஊழல் மயமாகி அதுவே எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறதோ, அதன் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இவர்கள் ஆகி விட்டார்கள் என்பதைத்தான் அது காட்டுகிறது. கம்யூனிஸ்டுகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கான முன் மாதிரியாகத் திகழ்கிறார்கள் இவர்கள்.

இரண்டாவதாக, அரசியல் கோட்பாடு பற்றிய இவர்களது பார்வை...

ஒரு உதாரணத்திலிருந்து தொடங்கலாம். “வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன் விளைவாய் தோன்றியதே அரசு!”. இது அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டின் சுருக்கமான வரையறுப்பு. ஒருவர் இந்த வரையறுப்பைப் புரிந்து கொள்வது புரட்சிகர அமைப்பில் இணைந்து செயல்பட்டுக் கொண்டே இது தொடர்பான கோட்பாட்டு நூல்களை தொடர்ந்து பயில்வதன் மூலம்தான் சாத்தியமாகிறது.

தமது அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இருக்கும் பெருவாரியான உழைக்கும் மக்கள் இத்தகைய கோட்பாட்டு வரையறுப்புகளை நேரடியாகப் புரிந்து கொள்வது சாத்தியமற்றதாக உள்ளது. எனவே, அரசியல், கோட்பாட்டு ரீதியான விமர்சனக் கட்டுரைகளை நாங்களோ, மற்றவர்களோ பக்கம், பக்கமாக எழுதினால் கூட யார் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று மக்கள் அதிகாரம் குழுமத்தினர் அலட்சியப்படுத்துகின்றனர். எனவே, அவர்களைப் பொருத்தவரை அவை 'சீந்துவாரற்ற'வையாக ஆகி விடுகின்றன. அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

பொதுவான உழைக்கும் மக்கள் கம்யூனிஸ்டுகள் என்றால் நேர்மையானவர்கள், நியாயமானவர்கள், சொத்து சேர்ப்பதில் அக்கறை காட்டாதவர்கள் என்று புரிந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் புரிதலின் அடிப்படையே அரசியல் கோட்பாட்டு ரீதியிலான செயல்பாடுகள்தான் என்பதை மக்கள் அதிகாரம் அமைப்பினர் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். எனவே மக்களின் இந்தப் புரிதலுக்கு அரசியல், சித்தாந்த ரீதியான விமர்சனக் கட்டுரைகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது என்று கருதுகின்றனர். ஆனால், அரசியல் ஓட்டாண்டித்தனங்கள் செயல்பாட்டுச் சீரழிவுகளாக வெளிப்படும் போது, அது மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தான் யதார்த்தம். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

அப்படிப்பட்ட சீரழிவு வெளிப்படும் போது, மக்கள் மத்தியில் புரட்சிகரமாக தாங்கள் முன் வைக்கும் அமைப்பின் தலைவரே முறைகேடு செய்துவிட்டார் என்ற செய்தி இந்தச் சீரழிவை ஒரு நொடிப் பொழுதிலேயே அனைவருக்கும் உணர்த்தி விடுகிறது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்?

இவர்கள் புரட்சி செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிற புரட்சிகர சக்திகள், ஆதரவாளர்களிடமிருந்து வரும் கேள்விக் கணைகளை எதிர் கொள்வார்கள்; தமது கேள்விகளையும் முன் வைப்பார்கள்.

அத்தகைய புரட்சிகர சக்திகளை தக்க வைத்துக் கொள்ளவும், ஆதரவாளர்களின் அரசியல் ஆதரவையும், நிதி உதவிகளையும் தொடர்ந்து பெறுவதற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் பெரும்பான்மை மக்களுக்கு நேரடியாகப் புரியாத அரசியல், சித்தாந்த ரீதியாக மட்டுமே விமர்சனங்களை வெளியிடுபவர்களைப் புறக்கணித்து வந்திருக்கிறார்கள். ஆனால், நேரடியாக தங்களை அம்பலப்படுத்தும் பொருளாதார ரீதியான முறைகேடுகளைப் பற்றி எங்களைக் கேட்காமல், அது தொடர்பாக புலன்-விசாரணை செய்யாமல் செய்திகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடுகிறார்கள். இப்படியான முறைகேடுகளைப் பற்றி எங்களிடம் விளக்கம் கேட்டால், நாங்களே அதற்கு சப்பைக்கட்டு விளக்கம் தந்து விடுவோம், அவற்றைப் பொதுவெளியில் பேசக் கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

சரி அவர்களின் விருப்பப்படியே இந்த விவகாரத்தை அணுகுவோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்சினையை முன் வைத்து விருத்தாசலம் பகுதித் தோழர்கள் முதலில் அமைப்பிடம் தானே விளக்கம் கேட்டார்கள்? அப்போதே அமைப்புத் தலைமை விசாரணை நடத்தி நேர்மையாக பதில் சொல்லியிருக்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை? திருவாளர் ராஜு அவர்கள் சொத்து வாங்கியதை அமைப்புத் தலைமை அன்றும் மறுக்கவில்லை, இன்றும் மறுக்கவில்லை. அப்படி மறுக்கவும் முடியாது! [சொத்து வாங்கியது மறுக்க முடியாத, அசையா சொத்து என்ற வடிவத்திலே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிறதே.] அதற்கு மாறாக, சொத்து வாங்கிய பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரத்தைக் கேட்டு விளக்கம் சொன்ன தோழர்களை வாயடைத்திருக்கிறார்கள்.

அந்த அமைப்பின் விதிகளின்படி கட்சி உறுப்பினர் இப்படி சொத்து சேர்ப்பது தவறு. இப்படி சொத்து சேர்ப்பவர் உறுப்பினராக அல்லாமல் ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும். மேலும், முன்பு அதாவது ம.க.இ.க குழுமமாக இருந்தவரை அரசியல் அமைப்பு உறுப்பினராக இருக்கும் ஒருவர் மட்டுமே அந்தக் குழும அமைப்புகள் எந்த ஒன்றிலும் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும்.

இந்த விதியின்படி சொத்து சேர்க்கும் [அதாவது சொத்துடைமை வர்க்கத்தைச் சேர்ந்த] திருவாளர் ராஜு அவர்கள் அந்தக் குழுமத்தின் எந்த ஒரு அமைப்பிலும் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது, வரக்கூடாது. அமைப்புத் தலைமையோ இந்த அமைப்பு விதிக்குப் புறம்பாக, முறைகேடான வகையில் அவரை ஓர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அமர்த்துகிறது. இதை தலைமையின் விதிமீறல், முறைகேடு என்றுதான் நாங்கள் குறிப்பிடுகிறோம்.

தனது இந்த முறைகேடான செயலை மூடி மறைக்கவும், திசை திருப்பவுமே திருவாளர் ராஜு சொத்து வாங்கிய விவகாரத்தை நிதி முறைகேடாக நாங்கள் சொன்னதாக அந்த அமைப்பின் தலைமை மடை மாற்றியது. இப்போதும் அந்த விவகாரத்தை ராஜு, ஜெயகாந்த் சிங் ஆகிய இரு தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடாகக் காட்டிடும் கேடுகெட்ட உத்தியை தமது மறுப்பு அறிக்கையிலேயே மக்கள் அதிகாரம் அமைப்பினர் கையாண்டிருக்கிறார்கள்.

இதற்காகத்தான் ராஜு குடும்பத்தில் ஒரு நபராக ஜெயகாந்த் சிங் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் அந்தக் தவறுகளை விமர்சித்தால் எதிரியாகி விட்டார் என்று பொருளாகி விடுமா? யாராக இருந்தாலும் தவறுகளுக்கு எதிரான போராட்டம் தானே சிறந்த தோழமை உறவிற்கான அடிப்படையாக இருக்க முடியும்! குடும்ப உறுப்பினரின் நலன், அமைப்பின் நலன், இவை இரண்டில் எது முக்கியமானது என்று ஒரு கம்யூனிஸ்டைக் கேட்டால் அவர் அமைப்பின் நலனே முக்கியமானது என்றுதான் கூறுவார், கூறவும் முடியும். இந்த பாட்டாளி வர்க்கப் பண்பை அமைப்புத் தோழர்களிடையே வளர்ப்பதுதான் உண்மையான பாட்டாளி வர்க்கத் தலைமைக்கான தகுதியாகும். இதற்கு மாறாக ஒருவரின் தவறுக்கு எதிரான விமர்சனங்களையும், போராட்டத்தையும் இரு தனி நபர்களுக்கு இடையிலான முரண்பாடாக சிண்டு முடிந்து விடுவது உடைமை வர்க்கத்தின் இயல்பான குணாம்சமாகும்.

சமூகத்தில் நிலவும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பாட்டாளி வர்க்க அமைப்பிலும் எதிரொலிக்கவே செய்யும். இப்படி வருகின்ற மாற்று வர்க்கப் பண்புகளுக்கு எதிரான ஆரோக்கியமான உட்கட்சிப் போராட்டம்தான், அதாவது சரிக்கும், தவறுக்குமான போராட்டமே ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த ஊட்டச் சத்தாக இருக்கும்.

இதற்கு மாறாக, உட்கட்சிப் போராட்டத்தையே தனி நபர்களுக்கு இடையிலான சண்டையாக, அதாவது தோழர்களுக்கு இடையிலான தனி நபர் முரண்பாடாக சித்தரித்து, தன்னுடைய தவறுகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு பயன்படுத்துகிறது அமைப்புத் தலைமை. அதன் மூலம் தலைமையைத் தக்க வைத்து கொள்வதற்குமான சிறந்த ஆயுதமாக, உத்தியாகப் பயன்படுத்துகின்றனர். அந்த வர்க்கப் பண்பை தமது கட்டுரையிலேயே எவ்வித உறுத்தலும் இல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வெளியிட்டிருக்கிறார்கள். அதை மூடி மறைக்கும் எந்த முயற்சியையும் அவர்கள் செய்யவில்லை. அதற்காக நாங்கள் அவர்களுக்கு எங்களது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பானையில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்!

நாங்கள் முந்தைய கட்டுரையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், தான் உருவாக்கிய திட்டத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, புதிதாக எதையும் உருவாக்காமல், கடந்த இருபது ஆண்டுகளாக, தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதால் அந்த அமைப்பை காலி பெருங்காய டப்பா என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எமது அந்த வரையறுப்பு கூட தவறு என்பதை அவர்களின் மறுப்புக் கட்டுரையின் மூலம் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அத்தகைய பெருங்காய வாசனை கூட அந்த மறுப்பு அறிக்கையின் ஒரு எழுத்தில் கூட வரவில்லை. எனவே அந்த அமைப்பைப் பற்றிய எமது மிகை மதிப்பீட்டிற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். இனி இப்படியான மிகை மதிப்பீட்டு தவறு ஏதும் நடக்காமல் இருக்க கவனமுடன் செயல்படவும் உறுதியளிக்கிறோம்.

கூட்டுத்துவ சிந்தனா முறை பாட்டாளி வர்க்கப் பண்பாகும். தனி மனித சிந்தனா முறை, தனி நபரை சமுதாயத்தின் பொருளாதார அலகாகக் கொண்டிருக்கிற நிலவுகிற உடைமை வர்க்க சமூகத்தின் இயல்பான சிந்தனா முறையாகும். மேலும், மனிதர்களின் பொருளாயத வாழ்வியல்தான் அவர்களின் சிந்தனா முறையைத் தீர்மானிக்கிறது.

பாட்டாளி வர்க்க சிந்தனாமுறை துளியுமற்ற, உடைமை வர்க்கப் பிரதிநிதிகள், அத்தகைய பொருளாயத வாழ்வியலில் மூழ்கி விட்டவர்கள் தாங்கள் என்பதை அவர்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போன்று தங்களைத் தாங்களே அவர்கள் தமது கட்டுரையின் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புதிதாக, முதன் முறையாக இந்தப் பண்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டு விடவில்லை. மாறாக பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் அரசியல் தலைமை “அந்தப் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்று கோரிய அதிகாரத்துவ வாசகத்திற்கு உள்ளேயும் இந்தப் பண்பு ஆழப் புதைந்து கிடக்கிறது.

சொத்து சேர்க்கும் திருவாளர் ராஜு அவர்களை குழும அமைப்புகளில் ஒன்றின் தலைமைப் பொறுப்புக்கு நியமித்தது விதி முறைகேடு (அது நேர்மையான வழியில் வந்த பணமாக இருந்தாலும் முறைகேடுதான்). ஒரு தனிமனிதர் நேர்மையான வழியில் சொத்து சேர்ப்பதை யாரும் விவாதப் பொருளாக ஆக்கப் போவதில்லை. ஆனால், ஒரு புரட்சிகர அமைப்பின் உறுப்பினராக, அதன் தலைமைப் பொறுப்பில் செயல்படும் ஒருவரது செயல்பாடுகள் அந்த அமைப்பின் விதிமுறைகளால் சோதிக்கப்படக் கூடியவை. அமைப்புக்கு வகுத்துக் கொண்ட விதி முறைகளை தானே மீறுவதற்கோ, யாருக்கும் விதி விலக்கு தருவதற்கோ அமைப்புத் தலைமைக்கு எந்த உரிமையும் கிடையாது. அவற்றைப் பிசகில்லாமல் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரத்தை மட்டுமே அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பெற்றுள்ளனர்.

ஆனால் மக்கள் அதிகாரம் குழும அமைப்புகளின் அரசியல் தலைமையோ, அமைப்பை தங்களது தனிச் சொத்தாகக் கருதுகிறது. இந்தத் தனிச் சொத்துடைமை கண்ணோட்டமே தனது சொத்தை தான் விரும்பியதைப் போன்று எப்படி வேண்டுமானாலும் கையாளத் தூண்டுகிறது. அதனால்தான் தலைமையின் முறைகேடான செயல்களைப் பற்றி விமர்சிக்கும், மற்றும் கேள்வி எழுப்பும் அமைப்புத் தோழர்களைப் பழி வாங்கும் செயல்களில் ஈடுபடுகிறது. தனக்கு விசுவாசமாக இருக்கும் பிள்ளைக்கு மட்டுமே தனது சொத்துக்களைத் தரும் தகப்பனை போலத்தான், அமைப்புத் தலைமையும் அமைப்பை தனது சொத்தாகக் கருதுகிறது.

எனவே, அமைப்பு என்ற தமது சொத்துக்களுக்கு வாரிசாக வருவதற்கான தகுதி தனி மனித விசுவாசமே தவிர, அமைப்பு மற்றும் அதன் விதிமுறைகள் மீதான விசுவாசம் அல்ல. அப்படிப்பட்ட அமைப்பின் தலைமைக்கு விசுவாசமான பிள்ளைகளாக திருவாளர்கள் சுப.தங்கராசுவையும், ராஜுவையும் கருதித்தான் தமது சொத்துக்களாகிய பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளை ஆளுக்கு ஒரு தலைமை என்று தாரை வார்த்திருக்கிறார்கள்.

இப்படி தான் விரும்பியபடி அமைப்பின் விதிமுறைகளை மீறுவதற்கு அந்த அமைப்பு ஒன்றும் அவர்கள் அப்பன் வீட்டு சொத்தல்ல. அமைப்புத் தலைமையின் விதிமுறைகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்கு அமைப்பிலுள்ள தோழர்கள் ஒன்றும் அவர்களின் கொத்தடிமைகளும் இல்லை. இவற்றைப் பற்றி கேள்வி எழுப்பாமல் இருக்க வேண்டுமானால், அப்படி கேள்வி எழுப்பாமல் இருக்கும் அளவிற்கு அவர்கள் அப்பாவிகளாகவோ அல்லது காரியவாதிகளாகவோ மட்டுமே இருக்க முடியும். அவ்வாறு இல்லாதவர்கள் தலைமையின் தவறுகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். அதனாலேயே தலைமைக்கு கட்டுப்படாத அடங்காப்பிடாரிகளாக தலைமையால் சித்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படவும் செய்கிறார்கள்.

இது வரையில் நாம் பரிசீலித்தவற்றை தொகுப்பாகப் பார்த்தால், மக்கள் அதிகாரக் குழுமத்தின் அரசியல் தலைமை புரட்சிகர பாட்டாளி வர்க்கத் தலைமை அல்ல; அது சொத்துடைமை வர்க்கத்தின் கைப்பாவை.. நாங்கள் எமது பாட்டாளி வர்க்க சிந்தனாமுறையான கூட்டுத்துவ தன்மையின் அடிப்படையிலேயேதான் சுப.தங்கராசு மற்றும் ராஜு ஆகியோரின் விவகாரங்கள் தொடர்பான எங்கள் கருத்துக்களை கீற்றில் கட்டுரையாக வெளியிட்டோம்.

ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையோ தமது உடைமை வர்க்க சித்தாந்தத்தின் காரணமாக, எமது கட்டுரையின் உள்ளடக்கத்தை மிகவும் இயல்பான முறையில் விதி முறைகேடாக அல்லாமல், நிதி முறைகேடாகத் திசை திருப்பியுள்ளது. அதைத் தனி நபர் வாதமாக உருமாற்றியுள்ளது. இப்படி திருவாளர் ராஜு சொத்து வாங்கிய விவகாரத்தை நிதி முறைகேடாக மாற்றியுள்ள மக்கள் அதிகாரக் குழுமத்தின் தலைமைதான் தனது சித்தரிப்பிற்கான ஆதாரத்தை தரக் கடமைப்பட்டவர்கள்!

இதற்கிடையில் பு.ஜ.தொ.மு சார்பாக சுப.தங்கராசு மீதான முறைகேடு குற்றச்சாட்டு பற்றிய விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதற்கும் சேர்த்து கீற்று தளத்தில் செங்கனல் என்பவர் ஒரு விளக்கமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றை நாங்களும் அங்கீகரிக்கிறோம்.

முறைகேடுகளில் ஈடுபடுவது, அமைப்பு முறையை மீறுவது, அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களை மிரட்டுவது என்ற ஆளும் வர்க்கக் குணங்கள் அனைத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பிடம் வெளிப்படுகிறது.

பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் போன்றவை இத்தகைய கீழ்த்தரமான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதை அதில் செயல்படும் தோழர்களும், அந்த அமைப்புகளின் ஆதரவாளர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடாது; அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

(தொடரும்)

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

Pin It