maoகடந்த பிப்ரவரியில், ம.க.இ.க மற்றும் அதற்கு 'அரசியல் தலைமை அளிக்கின்ற அமைப்பிலிருந்து' மருதையன் விலகியதிலிருந்து, ம.க.இ.க, மக்கள் அதிகாரம் மற்றும் அவற்றிற்கு 'அரசியல் தலைமை அளிக்கின்ற அமைப்பு' ஆகியனவற்றில் பிளவும், சரிவும் துவங்கியதாக பலரும் கருதலாம். (இனி சுருக்கமாக 'தலைமை அமைப்பு' என அழைப்போம். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாமலிருப்பதுதானே ஊர்க் கட்டுப்பாடு!)

அதன் விளைவாக, அவ்வமைப்பின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், அரசியல் முன்னணியாளர்களும் அதிர்ச்சியும், வருத்தமும் வெளிப்படுத்துவதை கண்டு வருகிறோம். இவற்றுள் அறியாமையில் வெளிப்படும் அதிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. அறிந்தும் வெளிப்படுகிற வருத்தம்தான் உண்மையில் அயர்ச்சியை அளிக்கிறது. அது குறித்துப் பேசுவதற்கு முன்னால், கடந்த சில மாதங்களாக, பல காண்டங்களாக நிகழ்ந்து வரும் உரிமைப் போராட்ட ராமாயணத்தை சுருக்கமாகக் காண்போம்.

என் அமைப்பு, என் உரிமை, புரட்சிப் போராட்டம்!

மருதையன் விலகலையொட்டி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள், பின்னர் சுப.தங்கராசு மீது கோடிக்கணக்கில் ஊழல் குற்றச்சாட்டு, அவர் அமைப்பை விட்டு நீக்கப்படுதல், அவரது மாறுபட்ட விளக்கம், இடையே மருதையனுடன் மாதக் கணக்கில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக சொல்லப்பட்ட 'மாபெரும்' பேச்சுவார்த்தை, வினவில் வெளிவந்த பொறுப்பு துறப்புகளும், பொறுப்பு ஏற்புகளும், பின்னர் துவங்கிய நீக்குதல் படலம்…

அன்றாடம் இந்த அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார், அந்த அமைப்பிலிருந்து இவர் நீக்கப்பட்டார் என அறிக்கைகள், அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள், இரகசிய அறிக்கைகள், வாய்மொழி அறிக்கைகள், எழுத்துப்பூர்வமான அறிக்கைகள், வினவில் வெளிவந்த அறிக்கைகள், வினவில் வெளிவராத அறிக்கைகள், பத்திரிக்கைகளுக்கான அறிக்கைகள்… ஒரு வழியாக, எல்லா காண்டங்களும் முடிந்து, யுத்த காண்டம் நிகழ்ந்து, இன்று இரண்டு 'மக்கள் அதிகாரங்களும்' பட்டாபிசேகம் முடித்து, போட்டிப் போராட்டங்களை அறிவித்து நிற்கின்றன.

தலைமை அமைப்பில் (இரண்டு தலைமை அமைப்பிலும்) இருக்கும் அணிகளுக்கும், பல இளைஞர்களுக்கும், பல அரசியல் முன்னணியாளர்களுக்கும் ஒரு வேளை தெரியாமலிருக்கலாம். ஆனால், 70-களிலேயே, தலைமை அமைப்பில் இதே போன்றதொரு பிளவு நிகழ்ந்தது.

அன்று தலைமை அமைப்பிலிருந்து தேசிய இனப் பிரச்சினையை முன்வைத்து, தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி என விலகிச் சென்றவர்கள், பின்னர் பல பத்தாண்டுகளுக்கு, 'ஓடுகாலிகள்' என தலைமை அமைப்பினரால் அன்போடு அழைக்கப்பட்டனர். அன்றும் இதே போல போட்டி அமைப்புகள் உருவாயின.

அன்று, இரண்டு மக்கள் கலை இலக்கியக் கழகங்கள். இன்று இரண்டு மக்கள் அதிகாரங்கள். அன்று இரண்டு புதிய கலாச்சாரங்கள் வெளிவந்தன. இன்று, இரண்டு வினவுகள் மட்டும் சாத்தியப்படவில்லை.

ஏனெனில், இணைய தள முகவரி ஒன்றுதான் இருக்க முடியும். இது போன்ற மாபெரும் உரிமைப் போராட்டங்களின் தேவைகளை, இணையத்தை முறைப்படுத்திய டிம் பர்னர்ஸ் லீ முன்கூட்டியே அறிந்திருக்க வாய்ப்பில்லாமற் போனது, ஒரு வரலாற்றுப் பிழைதான்.

ஆக, வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. ஒரு நல்ல விசயம், இந்த முறை யாரும் யாரையும் 'ஓடுகாலிகள்', 'ஆடுகாலிகள்' என 'கோட்பாட்டு ரீதியாக' விமர்சிக்கவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாகவும், ஒரு வகை பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு முன்னேற்றமாகவும் கருத வேண்டியிருக்கிறது.

தலைமை அமைப்பின் அமைப்பு முறைகள், கீழிருந்து மேல் வரை பொறுப்பாளர் சொல்வதாலேயே விதிகளாக மாறி விடும் அமைப்பு முறைகள் ஆகியவற்றை அறியாத தமிழக அரசியல் சக்திகளுக்கு - தஞ்சை திலகர் திடல் மாநாடுகள், பாடல்கள், கட்டுரைகள் மூலமாக மட்டுமே அவ்வமைப்பு குறித்து அறிந்த, மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்தில் இருந்த நபர்களுக்கு - இந்தப் பிளவும், சரிவும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். ஆனால், அவற்றை அறிந்த முன்னாள், இந்நாள் தோழர்கள் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்?

மனுதர்மமும், மார்க்சிய தர்மமும்!

முதலாவதாக, மருதையனின் கடிதத்தின் மூலம் அவர் சொல்ல வரும் பிரச்சினை என்ன? மருதையன் பிரிவினருக்கும், அவர் பெயர் சொல்லாத இன்னொருவரின் பிரிவினருக்குமிடையே சில நடைமுறை மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சார்ந்த பிரச்சினை.

நிச்சயமாக எவ்வித காழ்ப்புகளுமின்றி, அவர் எழுதிய அடிப்படையிலேயே பரிசீலித்தால் கூட, அரசியல், தத்துவம் சார்ந்த கோட்பாட்டு பிரச்சினைகளல்ல. இதனைத் தீர்க்க வேண்டிய தலைமைக் குழுவின் பெரும்பான்மைத் தோழர்கள், நடுநிலை வகிக்க முடிவெடுக்கின்றனர், உடனடியாக மருதையன் வெளியேற முடிவெடுக்கிறார். அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

"நான் உள்ளேயிருந்து போராடவே விரும்பினேன். 'தலைமைப் பொறுப்புகளிலிருந்து விலகி, உறுப்பினராக அமைப்பில் இயங்குகிறேன்' என்ற எனது கோரிக்கையை 4 மாதங்களாக முடக்கி வைத்திருந்தார்கள். தம் தவறை நியாயப்படுத்த எந்த அளவுக்கு நிலை தாழ்ந்து செல்வார்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில் பார்த்து விட்டேன். நான் 'வெளியேறுகிறேன்' என்று சொல்வதை விட, 'வெளியேற்றப்படுகிறேன்' என்பதே உண்மை."

முதல் வரிக்கும், பின்னர் அதற்கான விளக்கத்திலும் உள்ள முரண்பாட்டைக் கவனியுங்கள். போராட விரும்புபவர் எதிர்த்தரப்பினர் எவ்வளவு நிலை தாழ்ந்து சென்றாலும் போராடத் தானே செய்வார்? ஏனெனில், கட்சி என்பது எதிர்த் தரப்பினர் மாத்திரம் இல்லையே? இன்னும் சொல்லப் போனால், அமைப்பின் தலைமைக் குழுவே எந்த அளவுக்கும் 'நிலை தாழ்ந்து செல்வார்கள்' எனும் சூழலில், கட்சியைக் காப்பாற்றும் பொறுப்பு இன்னமும் அதிகரிக்கத்தானே செய்யும்? எனவே 'உள்ளேயிருந்து போராட விரும்பினேன்' என்பது பொதுவெளியில் ஒப்புக்கு சொல்லும் சமாதானம். இதன் உச்சம், அவரது கடிதத்தை வினவில் வெளியிட்டது. அச்செயல் எத்தகைய அராஜகப் போக்கு எனப் பலரும் ஏற்கனெவே கீற்று முதலான பல தளங்களிலும் எழுதியுள்ளனர்.

உள்ளேயிருந்து போராட விரும்பி, "வெளியேற்றப்பட்டேன்" என வருந்தும் ஒருவர், அவ்வமைப்பின் தளத்திலேயே கடிதம் வெளியிடுவதை எப்படிப் புரிந்து கொள்வது? அமைப்புக்கு எதிராக பல தளங்களிலும் எழுதுபவர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராடிய ஒருவர், அமைப்பை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தமது விலகல் கடிதத்தை அவ்வமைப்பு தளத்திலேயே வெளியிடுவது ஒரு பகிரங்க சவால் என்பதைத் தாண்டி வேறென்ன? இதனை விட செவ்வியலான சீர்குலைவு நடவடிக்கை இருக்க முடியுமா? போல்ஷ்விக் கட்சி அமைப்பு முறைகளின்படி சொன்னால், இது ஒரு கட்சிக் கலைப்புவாத நடவடிக்கை.

உடனே, மாவோ "தலைமையைத் தகர்த்தெறியுங்கள்" எனச் சொன்னார் எனும் உதாரணத்தை கொண்டு வந்து முட்டுக் கொடுக்காதீர்கள். அப்படியா மருதையன் சொன்னார்? கட்சியை விட்டு விலகுகிறேன் என்றுதானே சொன்னார்? சொன்னவர் ஏன் போட்டி மக்கள் அதிகாரத்தை உருவாக்குவானேன்? மாவோவைப் போல உள்ளிருந்தே 'தலைமையைத் தகர்த்தெறிய' அழைப்பு விட்டிருந்தால் அது ஒரு உண்மையான கலகம்.

maruthaiyan 1 1மேலும், மருதையன் என்ன ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு புனைபெயரில் அடையாளமற்று வாழும் 'சராசரி' முழு நேரப் புரட்சியாளரா? அவர்தான் ஊரறிந்த தலைவராயிற்றே! அவர் தகர்த்தெறியச் சொன்னால், அணிகள் பொங்கியிருக்க மாட்டார்களா? அதனை விடுத்து விலகுகிறேன் என்று சொல்லி நகர்ந்த பின்னால், போட்டி மக்கள் அதிகாரம் உருவாக்குவது, மாவோ சிந்தனையின் பாற்பட்டதா?

இத்தனை காலமாக, எத்தனையோ அணிகளின் கடிதங்களை, எத்தனையோ மாதங்கள் இழுத்தடித்த மருதையன், தலைமை அமைப்பின் பிளீனங்கள் ஆண்டுக்கணக்கில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை தள்ளிப் போடப்பட்ட பொழுது பதறாத மருதையன், தனது கடிதத்திற்கு நான்கு மாத கால காத்திருப்பு தாளாமல் பொங்கி எழுந்தார் என்பதுதான் மாபெரும் வேடிக்கையாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தானே! நம்மைப் போன்ற மந்தைகளுக்கு அத்தனை சமத்காரம் இல்லை பாருங்கள். நாமெல்லாம் அமைப்பு முறை தவறாமல், முறையாகக் கடிதம் கொடுத்து, முறையாக விலகி வந்தது எவ்வளவு பெரிய தவறு? நெற்றியில் பிறப்பதென்றால் சும்மாவா? மனுதர்மத்தில் மாத்திரமல்ல, மார்க்சிய தர்மத்திலும் கூட, இத்தகைய எளிதில் விளங்கக் கூடிய, நேரடியான அராஜகங்களுக்கான விளக்கம், வர்ணத்திற்கேற்ப மாறும் போலிருக்கிறது.

ஆக, மருதையன் செய்ததுதான் குற்றமா? தலைமை அமைப்பில் அதிகாரத்துவப் போக்கே இல்லை என்கிறீர்களா எனக் கேள்வி எழும். தலைமை அமைப்பின் அதிகாரத்துவப் போக்குக்கு பிறகு வருவோம். உண்மையில் தலைமை அமைப்பின் சமூகப் பங்களிப்பு என்ன, அதன் அரசியல் பாதை சாதித்தது என்ன எனும் அடிப்படைக் கேள்விகளைப் பரிசீலிப்போம். அதன் மூலம்தான் அதன் சரிவு ஏன் ஏற்பட்டது எனும் புரிதலை அடைய இயலும்.

நமது மக்கள் திரள் வழி நடந்து வந்த பாதை!

70-களின் பிற்பகுதியில் துவங்கப்பட்ட தலைமை அமைப்பு, ஏற்கெனவே சொல்லப்பட்டது போல, துவங்கிய சில ஆண்டுகளிலேயே பிளவை சந்தித்தது. பின்னர், நக்சல்பாரி அனுபவத்தின் அடிப்படையில் கோட்பாட்டு முடிவுகளை வந்தடைவதை பிரதான வேலையாக எடுத்துக் கொண்டு, அதனை ஒருவகையில் நிறைவேற்றவும் செய்தது.

இப்போக்கில், முதலில் மனித உரிமைகளுக்கான மக்கள் திரள் (ம.தி) அமைப்பு, பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க), விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு), 90-களின் துவக்கத்திலிருந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (பு.ஜ.தொ.மு), பெண்கள் விடுதலை முன்னணி (பெ.வி.மு) ஆகிய ம.தி.அமைப்புகளையும் உருவாக்கியது.

துவக்கத்திலிருந்தே இவ்வமைப்புகள் எவையும் சுயேச்சையாக இயங்கியதே கிடையாது. உதாரணமாக, அடிப்படை ஜனநாயக அமைப்பு முறையான செயற்குழு, பொதுக் குழுவை முறையான கால இடைவெளியில் கூட்டுதல், புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், மாநில மாநாட்டை நடத்துதல் ஆகியனவற்றை பல ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க-வும், பிற ம.தி. அமைப்புகளும் நடத்தவேயில்லை.

நடைமுறையில், தலைமை அமைப்பு முன்வைத்த மக்கள் திரள் பாதையின் (Mass line) அடிப்படையிலான போராட்டங்கள் 90-களின் நடுப்பகுதியோடு முடிந்து விட்டன. இறால் பண்ணை அழிப்பு போராட்டம், வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம், கருவறை நுழைவுப் போராட்டம் முதலான செயல்தந்திரம் - போர்த்தந்திரம் அடிப்படையிலான பொதுத் திசைவழிப் போராட்டங்கள், எதிர்பார்த்த வகையில் மக்களை அணிதிரட்டவில்லை.

ஆனால், அமைப்பு பிரபலமடைவதற்கு உதவியது. அதே வேளையில், 80-களின் மத்தியிலிருந்து 90-களின் இறுதி வரை தடா, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டது முதலான அடக்குமுறைகளும் நிகழ்ந்தன.

தலைமை அமைப்பின் கட்சித் திட்டத்தின் மொழியில் சொன்னால், செயல் தந்திரத் திசை வழி அடிப்படையிலான நான்கு கட்ட (பிரச்சாரம், கிளர்ச்சி, செயல், ஆணை) போராட்டங்கள் எவையும், இரண்டாம் கட்டத்தையே கூட முழுமையாக எட்ட இயலவில்லை என்பதை, அவ்வமைப்பின் முதல் இருபது ஆண்டு கால அனுபவங்கள் துல்லியமாகக் காட்டின. பின்னர் நடைபெற்ற கங்கை கொண்டான் கோகோ கோலா ஆலைக்கு எதிரான போராட்டமும் அதனை மீண்டும் நிரூபித்தது.

எனவே, 90-களின் இறுதியிலிருந்து 2000-இன் நடுப்பகுதி வரை, இவ்வமைப்புகளின் அரசியல் செயல் வழி, முழுமையாக பிரச்சாரத்திற்குப் பின்வாங்கியது. மாநாடுகள், ஆவணப் படங்கள், மேம்பட்ட ஒலிப்பதிவுடன் கூடிய பாடல்கள், அச்சுத் தரம் மற்றும் கட்டுரைகளின் மேம்பட்ட தரம் என தொழில்முறை நேர்த்தியுடன் கூடிய பிரச்சாரங்கள் நிகழ்ந்தன. அதன் பின்னர், விவிமு, புமாஇமு, பெவிமு போன்ற அமைப்புகள் பல்வேறு காரணங்களால் இருந்த சிறிய வலுவையும் இழக்க, புஜதொமு, மனித உரிமை பாதுகாப்பு மையம் (ம.உ.பா.மை) போன்ற ம.தி அமைப்புகள் முன்னிலைக்கு வந்தன. சில ஆண்டுகளில் புஜதொமு-வும் வலுவிழந்தது.

அடிப்படையில், கட்சியின் பலத்தை அதிகரிப்பது, அரசியல் கோரிக்கைகளுக்காக அணிதிரட்டுவது மாத்திரமல்ல, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக கூட தாம் பிரதிநிதித்துவப்படுத்திய வர்க்கங்களை அணிதிரட்டவோ, தக்க வைக்கவோ அவ்வமைப்புகளால் இயலவில்லை.

அரசியல்ரீதியாக தம்மிடம் உள்ள குறுங்குழுவாதமும், வறட்டுவாதமும் மக்களை அணிதிரட்டுவதில் தடையாக இருக்கிறது என்பதைக் கூட உணரவியலாமல், ஒரு கட்டத்தில் தமது தேர்தல் புறக்கணிப்பு பிரச்சார வெளியீட்டொன்றில் மக்களைத் திட்டவும் துவங்கினர்.

ஒரு கட்டத்தில், தமது அரசியல், இராணுவப் பாதைக்கு அடிப்படையான திட்டத்தில், தாம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதை தலைமை அமைப்பு உணர்ந்தது. மேலும், பிற ம.தி அமைப்புகள் வலுவிழந்த நிலையில், 'மக்கள் அதிகாரம்' என ம.உ.பா.மை-வை புனரமைப்பதே வழி எனத் தீர்மானித்து, அதற்கு ஒரு நிலைப்பாட்டு முலாம் பூசுவதற்காக 'கட்டமைப்பு நெருக்கடி' எனும் கருத்தை, புதிய கண்டுபிடிப்பு போல வெளியிட்டனர்.

கட்டமைப்பு நெருக்கடி: நாட்டிற்கு ஏற்பட்டதா, அமைப்புக்கு ஏற்பட்டதா?

முதலாளித்துவம் தொடர்ந்து நெருக்கடிகளுக்கு ஆளாவது, சில பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தீவிர நெருக்கடிக்கு மீண்டும் மீண்டும் ஆளாவது தவிர்க்கவியலாதது என மார்க்ஸ் முன்வைத்த நெருக்கடி கோட்பாட்டை விரித்து, சுற்றுச் சூழல் கண்ணோட்டத்தில் மேற்கத்திய உலகமய அறிவுஜீவிகளால் அரசியலற்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கத்தை உள்ளவாறே கடன் வாங்கி, புள்ளி விவரங்களையும், சமூக அவலங்களையும், சிக்கல்களையும் அள்ளித் தெளித்து, அதனை ஒரு புதிய விசயமாக முன்வைத்தனர்.

குறைந்தபட்சம் மார்க்சிய அடிப்படையில் அளவு மற்றும் பண்பு அடிப்படையில் பார்த்தால் கூட, பண்பு மாற்றம் என வரையறுப்பதற்கான பாரிய அம்சங்கள் எதனையும் இக்கருத்து முன்வைக்கவில்லை. மாறாக, அளவு மாற்றத்தையே பண்பு மாற்றமாக மிகைப்படுத்தும் மெனக்கெடலே வெளிப்பட்டது. இது 'கட்டமைப்பு நெருக்கடியில்' மாத்திரமல்ல, இதற்கு முன்பாக 'மேல்நிலை வல்லரசுகள்' என உலக அரசியலில் பண்பு மாற்ற இடைக் கட்டம் தோன்றி விட்டது என இவர்கள் முன்வைத்த கண்ணோட்டத்திலும் வெளிப்பட்டது.

90-களில், ஆங்கிலத்தில் அக்கருத்தாக்கத்தை இவ்வமைப்பு முன்வைத்த பொழுது, நாடு தழுவிய அளவில் அனைத்து மா-லெ அமைப்புகளும், அதனை பொருட்படுத்தாமல் நிராகரித்தன. எதிர்வினையாற்றிய ஓரிருவரும் கூட நிராகரிப்பதை தெளிவாக வெளிப்படுத்தினர். எனினும், அந்த எதிர்வினைகளையெல்லாம் அவர்களது புரிதல் குறைபாடாகவே தலைமை அமைப்பு கருதிக் கொண்டது.

ஆக, “சமரச-சந்தர்ப்பவாத சக்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதே” செயல் தந்திர அரசியலை உந்தித் தள்ளும் பொதுத் திசை வழி எனும் தமது பல்லாண்டு அரசியல் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக, எவ்வித விளக்கமோ, சுயவிமர்சனமோ அணிகளிடம் கொண்டு செல்லாமல், திடீரென எல்லா அமைப்புகளிடமும், அறிவுஜீகளிடமும் இணக்கமாக முற்பட்டனர்.

40 ஆண்டுகளாக எந்த மார்க்சிய, மா-லெ, தலித் அமைப்புகள், அறிவுஜீவிகளையெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சனம் என்ற பெயரில் வசைபாடினார்களோ, அவர்களுடன் எவ்விதக் கூச்சமோ, சுயவிமர்சனமோ இல்லாமல் கூட்டமைப்புகளில் இணைந்து கொண்டார்கள்.

கடந்த காலங்களில் 'தன்னெழுச்சிக்கு வால் பிடிப்பது' என எல்லா வகை மார்க்சியக் கட்சிகளையும் ஏளனமாக தமது பத்திரிக்கைகளில் எழுதியவர்கள், நேர் எதிராக டாஸ்மாக் முதல் தூத்துக்குடி வரை தன்னெழுச்சியான போராட்டங்களில் முனைப்புடன் இறங்கினர்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திய அரசு, நீண்ட நாட்களாக நடைபெற்ற மெரினாப் போராட்டம் முதல் தூத்துக்குடி வரை இவர்களது பங்கேற்பு நிகழ்ந்தவுடன், நக்சலைட்டுகள் ஊடுருவல் என திசை திருப்பியது. அதன் விளைவாக, அணிகள் மீது அரசின் அடக்குமுறைகளும் நிகழ்ந்தன. தமிழக முற்போக்கு சக்திகள் கடந்த கால கசப்புகள் அனைத்தையும் மறந்து இவ்வமைப்புக்கு ஆதரவாக நின்றனர்.

ஊழல் என்பது பணக்கையாடல் மாத்திரமல்ல!

'இரகசிய அமைப்பு முறைகள்' எனப் பீதியூட்டப்பட்டதாலும், நமது பின்தங்கிய சாதிய, சமூக அமைப்பின் விசுவாசம் குறித்த பிரமையிலும் உழலும் அணிகள், அதிகாரத்தின் உதவியுடன் நிகழும் அறிவுசார் சுரண்டல், ஊழலாக அரங்கேறும் பொழுது, அதனை விமர்சிக்கவோ, தட்டிக் கேட்கவோ இயலாத நிலையில், ஓர் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை முழுமையாக இழந்து, ஒரு மதக்குழுவின் (cult) தன்மையை அடைந்து விடுகிறது. அதன் பின்னர், அதிகாரத்துவத்தின் எல்லைகள் முடிவற்று விரியத் துவங்கி விடுகின்றன.

ஒரு அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலான தோழமை, அமைப்பு உணர்வு என்பதைத் தாண்டி, அணிகளின் மொத்த வாழ்வும் அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடத் துவங்குகிறது. என்ன சினிமா பார்க்கலாம், எவருடைய நூலைப் படிக்கலாம், படிக்கக் கூடாது என்பது தொடங்கி, யாரைத் திருமணம் செய்யலாம், எப்படித் திருமணம் செய்யலாம், முழுநேரமாக இருப்பவர்கள் குழந்தை பெறக் கூடாது, கருவுற்றிருந்தால் என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பார்க்கவியலாத வகையில் நீள்கிறது. ஒரு தனிமனிதருக்கான வெளி என்பது முற்றிலும் இல்லாமாலாக்கப்பட்டு விடும் பொழுது, அமைப்பு என்பது ஒரு மூடுண்ட மதக்குழுவாக மாறி விடுகிறது.

அதனால் தான், ம.க.இ.க-விலிருந்து வெளியேறும் தோழர்கள் வேறு அமைப்புகளில் இணைவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. ஏனெனில், அமைப்பே உலகமாகிப் போன பின், வெளி உலகம் என்பது ஏற்புடையதாக இருப்பதில்லை. நம்பிக்கையிழந்து, செய்வதறியாது அரற்றும் அன்னை தெரசாவின் கடிதங்களை முன்வைத்து பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய கலாச்சாரத்தில் கட்டுரையொன்று வெளிவந்தது. இன்று அதன் தீர்க்கமான சாயல்களை இணைய வெளியில் எழுதும் பல முன்னாள், இந்நாள் தோழர்களின் கட்டுரைகள், குறிப்புகளில் காண முடிகிறது.

அதிகாரத்துவத்தின் தவிர்க்கவியலாத அம்சம், சுய முரண். அதனால் தான் எளிய தோழர்களின் குடும்பம், நட்பு, காதல், திருமணம், பொருளாதாரம் என அனைத்தையும் விதிகளால் அளக்கும் தலைமை, அதே வேளையில் தலைவர்கள் என அறியப்படுபவர்களிடமும், நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கங்களிடமும், விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவதைக் காண முடிந்தது.

தலைமை அமைப்பு, இத்தகையதொரு மதக்குழுவின் தன்மையை ஆரம்ப காலங்களிலிருந்தே, தன்னுள்ளே தெளிவாகக் கொண்டிருந்தது. பெரிய உதாரணங்கள் வேண்டாம், தம்மைத் தவிர அனைத்து அமைப்புகளையும் கீழாகப் பார்ப்பது, வாய்க்கு வந்தபடி விமர்சிப்பது என 80-களிலிருந்து, புதிய ஜனநாயகத்திலும், புதிய கலாச்சாரத்திலும் இவர்கள் படைத்த விமர்சன இலக்கியங்களே சாட்சி.

எனவே, அணிகளை ஏமாற்றியதில் இதுவே முதல் ஊழல் இல்லையென்றாலும், முத்தாய்ப்பான ஊழல் என்ற வகையில், 'கட்டமைப்பு நெருக்கடி' எனும் தலைமை அமைப்பின் கருத்தாக்கம், அரசியல்ரீதியாக, மிகத் தெளிவாக, வலது சந்தர்ப்பவாதத்தை நோக்கி அது அடியெடுத்து வைத்ததையும், தனது இடது தீவிரவாத நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒரேயடியில் கைவிட்டதையும் குறித்தது. இடது தீவிரவாதம் எப்பொழுதும் வலது சந்தர்ப்பவாதத்திலேயே முடியும் எனும் லெனினின் கோட்பாடு மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.

மற்றபடி, இவ்வமைப்பின் எண்ணிலடங்கா பிளீனக் கதைகள், 1,2,3 என எண்கள் அடிப்படையிலான கதையாடல்கள், பத்தாண்டுகளாக துவங்கிய இடத்திலேயே நிற்கும் இந்திய நிலைமைகள் குறித்த ஆய்வு, எந்தவொரு மூடுண்ட குழுவிலும் நாம் பின்னர் காணக் கிடைக்கும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் ஆகியவை பொருட்படுத்தத்தக்கவையே அல்ல. மாறாக, தலைமை அமைப்பின் அரசியல்ரீதியிலான தோல்வியே, இந்த அதிகாரச் சண்டைக்கு அடிகொள்ளி என்பதை நிதானமாகப் பரிசீலிக்கும் எவராலும் உணர முடியும்.

அரசியல் தோல்வியே சரிவுக்கு இட்டுச் சென்றது, தனிநபர் மோதலல்ல!

massmobilizationசாரமாக கூறுவதானால், தலைமை அமைப்பின் அரசியல் கண்ணோட்டத்தில் ஆரம்பம் முதல் குடிகொண்டிருந்த குறுங்குழுவாதமும், வறட்டுவாதமும்தான், இயல்பாகவே அமைப்பில் அதிகாரத்துவமாக வெளிப்பட்டது. அரசியல் குறுங்குழுவாதத்தின் வேர்கள் தனிநபர்களாகத்தான், அவர்களது வர்க்கப் பின்புலமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அது ஒரு வரலாற்றுச் சூழலில் கூட உருவாகியிருக்கலாம். ஆனால், அதனைப் பரிசீலிக்கவும், மாற்றிக் கொள்ளவும் 43 ஆண்டுகளாக வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால், அறிந்தே குறுங்குழுவாதத்தைப் பேணி நின்றனர் என்றுதான் பொருள்.

எனவே, தற்பொழுது தலைமை அமைப்பில் நிகழ்ந்து கொண்டிருப்பது ஏதோ தனிநபர்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினை அல்லது அமைப்பு சிக்கல் எனக் கருதுவது அப்பாவித்தனமானது. குறைந்தபட்ச ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்தாலே, கீழ்க்காணும் சில உண்மைகள் எளிதில் புரியும்.

1. தலைமை அமைப்பு, அரசியல்ரீதியாக காலாவதியாகி விட்டது. எனவேதான், முன்னெப்போதையும் விட சிக்கலான அரசியல், பொருளாதார நிலைமைகளில், அரசியல், சித்தாந்த நிலைப்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், கோஷ்டிப் பிரச்சினையின் அடிப்படையில் பிளவுகள் நிகழ்கின்றன.

2. சீன, இரசிய அனுபவங்களைத் தொகுத்து, குழு-கூட்டக் குழு ஆகிய பிந்தைய நக்சல்பாரி பாதைகளுக்கு மாற்றாக தலைமை அமைப்பு முன்வைத்த மக்கள் திரள் பாதை மூலம் மக்களைத் திரட்ட இயலவில்லை என்பது இருபது ஆண்டுகளுக்கு முன்பே நிரூபணமானாலும், அதனை ஒத்துக் கொள்ளும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் துணிவும், நேர்மையும் அவ்வமைப்புக்கு இல்லை. கட்சித் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இலக்குகளில், குறைந்தபட்சமாக செல்வாக்கு பகுதிகளைக் கூட உருவாக்க முடியவில்லை. உருவாக்கினாலும், தக்க வைக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

3. புதிய நிலைமைகளுக்கேற்ப, ஓர் அமைப்பு தம்மை வளர்த்தெடுக்கவோ, மறுவார்ப்பு செய்து கொள்வதற்கோ எந்த ஓர் அமைப்புக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவசியம். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமல்ல, ம.தி. அமைப்புகளின் தலைவர்கள் கூட முழுமுற்றான விசுவாசிகளாகத்தான் இருக்க வேண்டும்; கருத்து மாறுபாடுகள் அல்ல, சிறு முணுமுணுப்புகள் கூட இருக்கக் கூடாது எனும் அதிகாரத்துவ மனநிலையின் விளைவாக, அதற்கான தகுதியுடன் கூடிய தோழர்கள் உருவாகும் போக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தரமாக நின்று போனது.

4. தலைமை அமைப்பு, தனது இடது தீவிரவாதப் போக்குடன், இத்தனை ஆண்டு காலம் செயல்பட முடிந்ததற்கு, தமிழகத்தின் தனிச்சிறப்பான முற்போக்குப் பின்புலமும் ஒரு முக்கியக் காரணம். மதக்குழுக்களை ஒத்த அமைப்புகள் எல்லாவித அரசியல் பிரிவுகளிலும், எல்லா நாடுகளிலும் உண்டு. அதுவும், நம்மைப் போன்ற 99% குடும்ப வன்முறைகள் இயல்பாக இருக்கும் சமூகங்களில் இத்தகைய குழுக்களில் அணிகள் வருவதும், போவதும் இயல்பு.

5. நேர்மறையில், கடந்த 20 ஆண்டுகளில் தலைமை அமைப்பு நிகழ்த்திய பிரச்சாரங்கள், பல வகைகளில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் சக்திகளுக்கு பயனுள்ளதாகவும், இளம் தலைமுறையினருக்கு இடதுசாரி, இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டு சேர்த்தது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

6. தலைமை அமைப்பின் சரிவு என்பது, 80-களின் துவக்கத்திலிருந்து, சித்தாந்தம், அரசியல் மற்றும் நடைமுறையில், உலகப் பாட்டாளி வர்க்க முகாமில் நிகழ்ந்த தேக்கத்தின் விளைவாக, உலகமெங்கும் நிகழும் மார்க்சிய அமைப்புகள் சரிவுப் போக்கின் ஒரு பகுதியாகும்.

நமது நாட்டிலேயே தலைமை அமைப்பு போன்ற எத்தனையோ மா-லெ குழுக்கள் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் முழுமையாக முடங்கிப் போய் விட்டன. மாவோயிஸ்டுகள் தண்டகாரண்யாவுடன் முடக்கப்பட்டு விட்டனர். அண்டை நேபாளத்தில், மாவோயிஸ்ட் கட்சி மூன்று கட்சிகளாக மாறி பத்தோடு பதினொன்றாகப் போனது.

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தா, இலங்கை முதலான நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், பெரு, சிலே போன்ற தென்னமெரிக்க நாடுகளில் செயல்பட்ட மார்க்சிய - லெனினிய அமைப்புகள், மாவோயிச அமைப்புகள், ஏன் மிதவாத மார்க்சிய அமைப்புகள் கூட முழுமையாக செயலற்றுப் போயின. உலகம் முழுவதும் அரசியல்ரீதியாக வலதுசாரியமே மேலாதிக்கப் போக்காகவும், பொருளாதார ரீதியாக ஏகபோக முதலாளித்துவத்தின் மூலதனம் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிப் பார்க்க முடியாத வகையில் பெருகுவதும் நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.

இந்நிலையில், 'சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்' என எண்ணும் இளைஞர்களும், மார்க்சியத்தை வெறுமனே வாழ்நாள் அடையாளத்துக்காக அல்லாமல் உளமார ஏற்றுக் கொண்டவர்களும், அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, முதலில் அறிவுரீதியாக விடுதலை பெற வேண்டும். என்னதான் மார்க்சையும், லெனினையும் உருப்போட்டிருந்தாலும், அடிப்படையில் நமக்குள் ஊறிக் கிடக்கும் நிலபிரபுத்துவ சமூக விழுமியங்களை சற்றே யோசித்துப் பாருங்கள்.

“தலைவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அவர் என் அப்பாவைப் போன்றவர், அவரை நான் என் அப்பாவை விட அதிகமாக மதிக்கிறேன்” என்பதான தந்தை வழி ஆதிக்க வழிபாட்டு மனநிலை (patriarchal worship), அறிவின் அதிகாரம் குறித்த நமது குறைவான புரிதல்கள், அதன் விளைவாக "சுதந்திர சிந்தனையும், ஈவிரக்கமற்ற விமர்சனமும்" (தோழர் பகத்சிங்) நம்மிடம் எத்தனை பலவீனமாக இருக்கிறது என சிந்தியுங்கள்.

இந்த அறிவுரீதியான விடுதலை மூலம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது மாத்திரமே, கடந்த கால வரலாற்றை பகுத்தறிவுடன் பரிசீலித்து, முன்கூட்டிய முடிவுகளின்றி, மார்க்சியத்தை இன்றைய நிலைமைகளுக்கேற்ப நம்மால் வளர்த்தெடுக்க முடியும். இதனைத் தாண்டி எந்த உடனடித் தீர்வோ, போராட்ட அறிவிப்போ எங்களிடமில்லை.

இறுதியாக, அணிகள் என்று குறிப்பிடப்படும், நாங்கள் அறிந்த, அறியாத எத்தனையோ தோழர்களை, முழுநேரப் புரட்சியாளர்களை, தமது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் உறுப்பினர்களை எண்ணிப் பார்க்கையில் வருத்தம் ஏற்படுகிறது. ம.க.இ.க-வின் பாடலொன்று தான் நினைவுக்கு வருகிறது.

"காலங்கள் மாறும்,
கரங்கள் ஒன்று சேரும்,
இது போராட்ட காலம்
புரட்சி வெற்றி கொள்ளும்!"

கட்டுரை ஆசிரியர்கள்: பரமானந்தம் & சரவண ராஜா

(பரமானந்தம் தஞ்சையில் வசிக்கிறார். கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தலைமை அமைப்பு, மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக, முழு நேரமாக செயல்பட்டவர். குறிப்பாக, 1997-2010 வரை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தவர்.

பல்வேறு மாணவர் போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள், மாநாடுகள், கோகோ கோலா ஆலைக்கு எதிரான போராட்டம் முதலானவற்றில் போரட்டக் கமிட்டியில் செயல்பட்டவர். தில்லை விளாகம் இராசயன உப்பு ஆலைக்கு எதிரான போராட்டம், கால்ஸ் சாராய ஆலைக்கு எதிரான போராட்டம் மற்றும் பல்வேறு பகுதிப் போராட்டங்களை ஒருங்கிணைத்து, முன்னிலை வகித்தவர். அரசியல் மற்றும் அமைப்பு நடைமுறை குறித்த கருத்து வேறுபாடுகளால், 16 ஆண்டுகள் செயல்பாட்டுக்குப் பின், 2012-ல் அவ்வமைப்பிலிருந்து விலகினார்.

சரவண ராஜா சென்னையில் வசிக்கிறார். கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தலைமை அமைப்பு, பு.மா.இ.மு, ஆகியனவற்றில் உறுப்பினராக செயல்பட்டவர். அரசு எனும் அமைப்புப் பெயரில் இயங்கியவர். அவ்வமைப்பின் பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள் பங்களிப்பு, ஆவணப்படங்கள், மாநாட்டு மொழிபெயர்ப்புகள், பிற மாநிலங்களில் நடைபெற்ற கூட்டமைப்பு நிகழ்வுகளில் செயல்பட்டவர்.

அமைப்பின் அரசியலை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்வதற்கான Spring Thunder எனும் இணைய தளத்தையும் நடத்தியவர். 1998 முதல் 2011-வரை 14 ஆண்டுகள் அவ்வமைப்பில் செயல்பட்டு, பின்னர் அரசியல் கருத்து வேறுபாடுகளால் விலகினார். தற்பொழுது தகவல் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றுகிறார். Mind Matters Circle எனும் மனநல ஆதரவுக் குழுமமொன்றையும் நடத்தி வருகிறார். அவரது எழுத்துக்களின் தொகுப்பை சந்திப்பிழை எனும் தளத்தில் காணலாம்.)

Pin It