ம.க.இ.க-விலிருந்து வெளியேறுவதாகக் கூறி மருதையனும், நாதனும் வினவு தளத்தில் நேற்று (24-02-2020) ஒரு கலைப்புவாதக் கடிதத்தை (https://www.vinavu.com/2020/02/24/comrade-maruthaiyan-resignation-letter/) வெளியிட்டிருக்கிறார்கள்.

Marudhiyan 338அமைப்பிலிருந்து வெளியேறிய எந்தத் தோழரும் இதுவரை செய்திராத வேலையை இந்த இருவரும் செய்திருக்கிறார்கள். ஓட்டுக் கட்சிகளில் கூட எந்தக் கட்சித் தலைவரும், தன் கட்சிப் பத்திரிகையிலேயே 'நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன்' என்று அறிவிப்பாரா?

ம.க.இ.க-விலும், வினவிலும் அமைப்பு தமக்கு அளித்திருந்த பாத்திரத்தை கேடாகப் பயன்படுத்தி, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளை கலைக்கும் விதத்திலும், ம.க.இ.க./வினவு முன் வைத்த அரசியலை ஏற்றுக் கொண்டு செயல்படும் ஆயிரக்கணக்கான அமைப்புத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அரசியல் உணர்வை சிதைக்கும் விதத்திலும் மருதையனும், நாதனும் கலைப்புவாத வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் மருதையன், நாதன் இருவரும் வெளியேறுவதாக சொல்லியிருக்கிறார்கள். இது வினவு குழுவின் முடிவா அல்லது மருதையன், நாதனின் தனிப்பட்ட முடிவா? குழு முடிவு என்றால், கடிதத்தில் வினவு குழு என்று குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை. இரண்டு தனிநபர்களின் பெயர்கள் மட்டும் தான் இருக்கிறது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, வினவில் வேலை செய்த பிற தோழர்களையும் கோஷ்டி சேர்த்துக் கொண்டு வெளியேறி இருப்பார்களாயின், அவர்களின் பெயர்கள் ஏன் இல்லை? அப்படியானால் குழுவில் உள்ள சக தோழர்களையே சமமாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் நடத்தாமல் மந்தைகளாகக் கருதி அதிகாரத்துவப் போக்குடன் இவர்கள் இருவரும் தங்கள் முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்று தான் பொருள்.

திருச்சியில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை வினவு முழுமையாக நேரலை செய்தது. அதற்கு முன்னதாக CAA பற்றிய மருதையனின் ஒன்றரை மணி நேர வீடியோவை வெளியிட்டது. ஆனால், மாநாடு முடிந்த மறுநாள் மாநாட்டுச் செய்திகளைக் கூட வெளியிடாமல், இதை அறியாவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்பதைப் போல அவசர அவசரமாக தமது விலகல் கடிதத்தை வினவு தளத்தில் வெளியிட்டுள்ளனர். மாநாடு முடிந்த மறுநாளே வெளியிட வேண்டும் என்று இந்தக் கடிதத்தை முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

வினவு, தமிழக அரசியல் வானில் ஒரு விடிவெள்ளியாக 2008 முதல் செயல்பட்டு வருகிறது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பார்ப்பனிய எதிர்ப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளை கூர்மையாக வெளிப்படுத்தும் கட்டுரைகள் மூலம் லட்சக்கணக்கான பொது வாசகர்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், இந்திய அளவிலான பிரச்சினைகள், உலக அரசியல் பொருளாதார நிகழ்வுகள் இவற்றைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. 2014-க்குப் பின் ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.கவின் கை நாடு முழுவதும் ஓங்கிய போது, அதை எதிர்த்து ம.க.இ.கவும் தோழமை அமைப்புகளும் செய்த பிரச்சாரங்களுக்கு அமைப்பு ரீதியான முகமாக இருந்தது, வினவு. ஆயிரக்கணக்கான தோழர்களின் அத்தகைய அரசியல் செயல்பாடுகளும், பிரச்சாரமும் தான் பிற இணையதளங்களுக்கு இல்லாத முக்கியத்துவத்தை வினவுக்குக் கொடுத்தது.

இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி புதிய கலாச்சாரம், ம.க.இ.க. மையக் கலைக்குழு ஆகியவற்றின் முகமாகவும் இருந்தவர் மருதையன். மேலும், அமைப்பின் பொதுக் கூட்ட மேடைகளில் முக்கிய பேச்சாளராகவும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளிலும், வினவு தளத்திலும் சிறப்புக் கட்டுரையாளராகவும், வினவு தளத்தில் வெளியான வீடியோக்களில் முக்கிய விஷயங்களைப் பற்றி உரை ஆற்றியவராகவும் இருந்தவர் மருதையன்.

சினிமாவில் உருவாக்கப்படும் எம்.ஜி.ஆரின் கதாநாயக பிம்பத்திற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின், கலைஞர்களின் பங்களிப்பு இருப்பது போல மருதையனின் முகத்துக்கும், குரலுக்கும், எழுத்துக்கும் பின்னால் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் அரசியல் செயல்பாடும், உழைப்பும் அடங்கியுள்ளது. ஆனால், இப்போது மருதையன் தன்னை மட்டும் நாயகனாக முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்.

தான் முன் வைத்த அமைப்பு அரசியலால் ஈர்க்கப்பட்டு அமைப்புக்குள் வந்த, அமைப்பு அரசியலை ஆதரித்து நின்ற, முழு நேர ஊழியர்களாக மாறி வாழ்க்கையை அர்ப்பணித்த தோழர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் இந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் மருதையன். தோழர்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எந்த வழிகாட்டலும் இல்லாமல், மிகவும் பொறுப்பற்ற முறையிலும், அமைப்பை மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஓர் அரசியல் இயக்கத்தையும், அதில் இயங்கும் ஆயிரக்கணக்கான தோழர்களையும், அவர்களால் வழிகாட்டப்பட்ட மக்களின் நம்பிக்கைகளையும் படுகொலை செய்திருக்கிறார்.

தன்னுடைய செயலின் விளைவைப் பற்றி துளியும் கவலைப்படாமல் “சீர்குலைவு சக்தி என்று அவர்கள் என்னை அழைக்கக்கூடும். அவர்களால் இவ்வாறு அழைக்கப்படுவதை ஒரு நகைச்சுவையாகவே நான் எடுத்துக் கொள்வேன்" என்று சொற்சிலம்பம் ஆடுகிறார். கடிதத்தின் எந்த இடத்திலும் அமைப்பு நலனை முன்னிறுத்தி அவர் பேசவில்லை. அதன் வாடை கூட அதில் இல்லை. மாறாக கடிதம் முழுவதும் நான், நான், நான் என்கிற மருதையனின் குரல்தான் ஒலிக்கிறது.

கார்ப்பரேட் பாசிசம், காவிப் பாசிசம் என்கிற அரசியல் முழக்கம், அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டேவுடன் அமைப்பின் தொடர்பு, நாடார் வரலாறு என்ற நூல் போன்ற அமைப்பின் முடிவுகள் அனைத்தையும் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு தனக்குத் தானே நாயகப் பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறார் மருதையன். இப்போது கூட கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது பற்றிய தனது கோட்பாட்டு விளக்கத்தை அவர் முன் வைக்கவில்லை, இதற்கு முன்பும் வைத்ததில்லை.

மேலும் "அம்பேத்கரியம் + பெரியாரியம் + மார்க்சியம்" என்ற நீலம், கருப்பு, சிவப்பு சாயத்தையும் தனக்குத் தானே பூசிக் கொண்டிருக்கிறார். இவற்றின் மூலம் தனிப்பட்ட முறையில் மலிவான ஒரு ஆதாயத்தை தனக்கு சம்பாதிக்க முயற்சிக்கிறார்.

"ஓர் ஊழல் சிந்தனை, செயல் வடிவம் பெறும் போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத் துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான்" என்பது 'உங்களுக்குள் குரோனியே இல்லையா' என்கிற (புதிய கலாச்சாரம், ஜூலை 2000) கட்டுரையில் மருதையன் எழுதிய வரிகள். அந்த வரிகள் இப்போது அவருக்குத்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

“ஒரு செங்குத்தான, கடினமான பாதையில் ஆளுக்கு ஆள் கை கோத்துக் கொண்டு ஒரு நெருக்கக் கட்டுள்ள குழுவாக நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாப் பக்கங்களிலும் பகைவர்கள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். அவர்களின் அநேகமாக இடையறாத தாக்குதலுக்கு எதிராக நாம் முன்னேற வேண்டியுள்ளது. சுயேச்சையாக எடுத்துக் கொண்ட முடிவுப்படி பகைவனை எதிர்த்துப் போராடுவதற்காக நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அருகாமையிலுள்ள சதுப்புக் குழியை நோக்கிப் பின்வாங்குவதற்காக அல்ல.”

(லெனின், என்ன செய்ய வேண்டும், பக்கம் 16)

இப்போது மருதையனும், நாதனும் சதுப்புக் குழியை நோக்கிப் பின்வாங்க முடிவு செய்து விட்டதோடு மட்டுமல்லாமல், அரசியல் செயல்பாட்டில் உள்ள அமைப்புத் தோழர்களையும் சோர்வு, அவநம்பிக்கை என்கிற சதுப்புக் குழிக்குள் தள்ளி விடும் கலைப்புவாத வேலையில் இறங்கி இருக்கிறார்கள். வினவு தளத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி அந்தத் தளம் இதுவரை பின்பற்றி வந்த அரசியல் அமைப்புக் கோட்பாட்டை கைவிட்டிருக்கிறார்கள். பிற தோழர்களின், அமைப்பின், உழைக்கும் மக்களின் நலன்களைப் பற்றி துளியும் அக்கறை இல்லாமல், தங்களை மட்டுமே முன்னிறுத்தி செயல்பட்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் சரியான மார்க்சிய லெனினிய அரசியல் பாதையில் உறுதியாக நின்று தொடர்ந்து போராடுவோம். மருதையன், நாதன் கலைப்புவாத கிரிமினல் கும்பல் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள். 

அமைப்பில் செயல்படும் தோழர்களின் கவனத்துக்கு...

வினவு என்பது நூற்றுக்கணக்கான தோழர்களின் உழைப்பாலும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் நிதியாலும் உருவாக்கப்பட்ட, கட்சிக்கு சொந்தமான தளமே தவிர எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. வினவு வேலை என்பது பல தோழர்களுக்கும் கொடுக்கப்பட்டது போல, கட்சியால் நாதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு வேலை, அவ்வளவு தான். அந்த வேலைக்காக கொடுக்கப்பட்ட username-யும், password-யும் நேர்மையும், நாணயமுமற்ற முறையில் முறைகேடாகப் பயன்படுத்தி வினவை தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அதில் கட்சி, அமைப்பு விசயங்களையும், தோழர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள் என்றால், இவர்களுக்கும் கம்யூனிசப் பண்புகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்திருக்குமா? அமைப்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பு இவர்களிடம் இருந்திருக்குமா? இந்தச் செயலை செய்வதற்கு எவ்வளவு திமிரும், கொழுப்பும், தைரியமும் இருக்க வேண்டும்?

அமைப்பு நலனை முன்னிறுத்துகின்ற, அமைப்பை உயர்த்திப் பிடிக்கின்ற தோழர்களாக இருந்திருந்தால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். தலைமைத் தோழர்களின் தவறுகளை அணிகளிடம் கொண்டு போயிருக்க வேண்டும். 'தலைமைத் தோழர்கள் இதுவரை இன்னின்ன தவறுகளை செய்திருக்கிறார்கள், இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தத் தலைமையைத் தகர்த்தெறியுங்கள், தோழர்களே' என்று கட்சித் தோழர்களை நோக்கித் தானே அறைகூவல் விடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து வினவு வாசகர்களுக்கு கடிதம் எழுதியது ஏன்?

40 வருடங்களாக அமைப்பில் செயல்பட்ட மருதையன் 4 மாதங்கள் மட்டும் தலைமையுடன் போராடியதாக சொல்லிக் கொண்டு, பிரச்சினையை நேரடியாக பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார். அமைப்பு முறைப்படி அணிகளிடம் பிரச்சினையைக் கொண்டு செல்ல எங்களுக்கு வழிகளே இல்லை, அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன என்கிற நிலைமை இருந்தால், குறைந்தபட்சம் அணிகளிடம் உரையாடும் வடிவத்திலாவது அந்தக் கடிதத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.

இத்தகைய அடிப்படையான அமைப்பு முறைகளைக் கூட பின்பற்றாமல் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகை தரும் அமைப்புக்கு சொந்தமான தளத்தில் வெளியிட்டது ஏன்? எனில் இவர்களின் நோக்கம் தான் என்ன?

இது ஒரு மிரட்டல் நடவடிக்கை. அமைப்புக்கும், அமைப்புத் தோழர்களுக்கும் வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்தி, தங்கள் முன் மண்டியிடக் கோரும் மிரட்டல் நடவடிக்கை. இது எத்தகைய இழிவான சீர்குலைவு வேலை?  இவர்களின் நோக்கத்தில் துளியேனும் அரசியல் அமைப்பு நலன் இருக்கிறதா? அப்பட்டமான அமைப்பு விரோத, பாட்டாளி வர்க்க விரோத சீர்குலைவு நோக்கம் தான் பளிச்சென்று தெரிகிறது.

அமைப்பை விட்டு வெளியேறுகிறோம் என்று அறிவிப்பதற்கு அமைப்பின் இணையதளத்தையே பயன்படுத்துவது, அமைப்பு அரசியலில் புடம் போடப்பட்ட எந்த ஒரு கம்யூனிஸ்டும், வர்க்க உணர்வுள்ள எந்த ஒரு தோழரும் செய்யக் கூசும் குற்றச் செயலாகும். இதை நாதனும், மருதையனும் செய்திருக்கிறார்கள்.

"மொத்த அமைப்பின் தலைமை நான் அல்ல" என்று சொல்வதன் மூலம் அமைப்பின் உள்விவகாரங்களையும் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார். இது அமைப்பையும், தோழர்களையும் காட்டிக் கொடுக்கும் வேலை என்பதுடன் அப்பட்டமான பொய்யுமாகும். கடிதம் முழுவதும் தலைமைத் தோழர்கள், தலைமைத் தோழர்கள் என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். தலைமைத் தோழர்கள் எங்கே அந்தரத்திலா இருக்கிறார்கள்? அப்படியானால் இவர் யார்? இவர் தலைமைத் தோழர் இல்லையா? எனக்கும் இந்தத் தலைமைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று பொய் பேசுவதன் மூலம் தலைமையாக இருந்து இவர் செய்த தவறுகளிலிருந்து எல்லாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.

மேலும், அமைப்பு முறைக்கு விரோதமாக தனது பெயரையும், தான் அமைப்பில் செய்து வந்த பணியையும் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கிறார் நாதன். இது இன்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

2010-லிருந்து இந்திய சமூகம் பற்றிய ஆய்வை செய்து முடிக்க வேண்டும் என்ற முடிவை அமல்படுத்தத் தவறியது, நடக்காத ஆய்வை நடந்து கொண்டிருப்பதாக பொய் பேசி அணிகளை நம்ப வைத்தது, தலைமைக்கான பணிகளைப் புறக்கணித்து அமைப்பை நெருக்கடிக்குள் தள்ளியது, இறுதியில் சதித்தனமான முறையில் அவசர அவசரமாக பிளீனத்தைக் கூட்டி முடித்தது என்று அனைத்திலும் தலைமைக் குழுவிலிருந்த மருதையன் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இந்தத் தவறுகளை எதிர்த்து பல தோழர்கள் அமைப்புக்குள் நடத்திய போராட்டத்தை திசைதிருப்பி, அது தொடர்பான பரிசீலனையை செய்ய மறுத்ததிலும் முன்னணிப் பாத்திரம் வகித்திருக்கிறார்.

இப்போது, 'தங்களுக்கு உவப்பில்லாத எல்லா முடிவுகளையும் சதிக் கோட்பாடுகளாக மாற்றி அவதூறு செய்கின்றனர்’ என்று பிற தலைமைக்குழு தோழர்களை நோக்கி குற்றஞ்சாட்டுகிறார் மருதையன். தங்கள் மீது விமர்சனம் வைக்கும், தங்கள் முடிவுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் தோழர்கள் மீதும் இதே சதிக்கோட்பாடு என்கிற குற்றச்சாட்டைத்தானே அன்று தலைமையிலிருந்த மருதையனும், நாதனும் வைத்துக் கொண்டிருந்தார்கள். விமர்சனம் வைத்துவிட்டு வெளியேறிய எல்லாத் தோழர்களும் மருதையன் மீது அவதூறு பரப்புவதாகவும், மருதையனுக்கு மட்டும்தான் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது என்பதைப் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

அரசியல் கோட்பாடு, அமைப்புக் கோட்பாடு, ஆய்வுப் பணி, பிளீனத்தை சடங்காக நடத்தி அணிகளை ஏமாற்றி குறுக்கு வழியில் தலைமையைத் தேர்ந்தெடுத்ததில் இன்று தலைமையில் உள்ள தோழர்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், என்ன பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் கட்சியைக் கலைக்கும் விதத்தில் அதைப் பொதுவெளியில் வைக்கவில்லை; அமைப்பு முறைக்குள் நிற்கின்றனர். இவர்களோ அமைப்புக்கு எதிராக அமைப்பைக் கலைக்கும் நோக்கத்தோடு அமைப்புக்குச் சொந்தமான இணையதளத்தையே கைப்பற்றி அதில் தமது கலப்புவாதக் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

வினவு கட்சிக்குச் சொந்தமானது, கட்சியில் உள்ள ஆயிரக்கணக்கான தோழர்களுக்குச் சொந்தமானது, மக்களுக்குச் சொந்தமானது. கட்சியில் இருந்து வெளியேறும் எந்த தனிநபரும் அதை என்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியாது. எனவே, வினவை விட்டு விடாதீர்கள் தோழர்களே. இந்தக் கலைப்புவாதக் கும்பலிடமிருந்து மீட்டெடுங்கள்.

மேலும் கட்சித் தலைமை தொடர்ந்து இதுபோன்ற பல தவறுகளைச் செய்வதற்கும், இவர்களைப் போன்ற கலைப்புவாதிகளை உற்பத்தி செய்வதற்கும் அடிப்படையாக இருப்பது அதன் அரசியல் ஓட்டாண்டித்தனம் தான். இது ம.க.இ.க.வில் மட்டுமல்ல அனைத்து மார்க்சிய குழுக்களிலும் உள்ள பிரச்சினையாக இருக்கிறது. அதற்கெதிராகவும் போராடுங்கள்.

மார்க்சிய - லெனினிய புரட்சிகர நடைமுறை, உழைக்கும் மக்களின் எதிரிகளையும், மருதையன் - நாதன் போன்ற துரோகிகளையும் எதிர்த்த சமரசமில்லாத போராட்டம் - இது மட்டும்தான் எந்தக் காரிருளையும் கிழித்து நம்மை வழிநடத்தும். சதுப்பு நிலத்தின் மத்தியில் நம்மை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும்.

தோழர்கள் ம.க.இ.க, அல்லது வேறு எந்த ஒரு புரட்சிகர அமைப்பில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் அல்லது அரசியல் செயல்பாட்டில் இல்லாமல் ஆதரவாளராக இருந்தாலும் இவர்களைப் போன்ற கலைப்புவாதக் கும்பலை எதிர்த்துப் போராடுவோம். மார்க்சிய லெனினிய அரசியலை தூக்கிப் பிடிப்போம்.

மார்க்சிய லெனினியப் பாதையில் நம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் காவி கார்ப்பரேட் காரிருளை அகற்றும் பணியில் உழைக்கும் மக்களோடு இணைவோம்!

- அமைப்பில் தலைமையின் அதிகாரத்துவத்துக்கு எதிராகப் போராடி வெளியேறிய ம.க.இ.க தோழர்கள்

Pin It