100 years cpiகடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், அரசியல் இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் – குழுக்கள் இணைந்து இவைகள் நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.

இன்று உள்ள பல பொருளாதார சமத்துவ, சமூக நீதி, மனித உரிமைகள், அதற்கான பல சட்டங்களும் இந்த போராட்டங்களால் தான் ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் மக்களுக்கு அளித்துள்ளன.

தலைவர்களின் தனிப்பட்ட கருணையால், தாராள குணத்தினால் அவைகள் கிடைக்கவில்லை. இந்த போராட்டங்கள் கம்யுனிஸ்டுகள் இன்னுயிர்களை ஈந்தும், வாழ்க்கையை இழந்து, உறவுகளை இழந்து, செல்வத்தை இழந்து, பெரும் உழைப்பு செல்வத்தை ஈடாக கொடுத்தும், கொடூர சித்ரவதைகள் அனுபவத்தும், பெருந்துயர் பட்டும் நடத்தப்பட்டவைகள். அவர்களின் இலட்சியங்களும், விழுமியங்களும் தான் இவைகளை முன்கொண்டு நடத்தின.

இவைகள் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் என்றாலும் கூட இந்த நேரத்தில் இவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள் அனைவரையும் ஒவ்வொருவராக தனித்தனியாக நினைவு கூர்வது நமது கடமையாகும். இவைகள் கம்யூனிஸ்டுகளின் ஒளிபொருந்திய, புகழ் மிக்க, பெரு மதிப்பு மிக்க வரலாற்று பங்களிப்புகளாகும்.

இந்த அடிப்படையான புரிதல் கண்ணோட்டத்தின் மீதுதான் இந்த கம்யூனிச இயக்கத்தின் பிளவுகள் பின்னணியும் அவைகளின் ஒர்மையும் இருக்கும் என்பதை அனைவருக்கும் நினைவு படுத்திக் கொள்கிறேன். அதற்கு முன் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோட்பாடுகள், அரசியல், தனிமனித காரணங்களால் கம்யுனிஸ்ட் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள் பிளவு படுகின்றன. இந்த பிளவுகள் சமூகத்திலும், மக்கள் மத்தியிலும், தோழர்களிடம் குறிப்பாக கம்யுனிஸ்ட் தோழர்களிடம் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை. ஆழ்ந்த துயரத்தை தருபவை. தனிப்பட்ட முறையிலும், பல்வேறு கட்சிகளின் பிளவுகளின் சந்தர்ப்பங்களில் அத்தோழர்களின் மனநிலையை பார்த்தவன், உணர்ந்தவன் என்ற முறையிலும் இதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பார்ப்பனீய இந்துத்துவ பாசிச வாதிகள் அதிகாரத்தில் வந்துள்ள நிலையில் கூடுதலான பொறுப்பும், கடமையும் மாற்று இயக்கங்களின் நண்பர்கள் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பெயரில் பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்கள் அதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (மாநில அமைப்பு கமிட்டி). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (லிபரேசன்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (மக்கள் விடுதலை), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (ரெட் ஸ்டார்), மக்கள் சனநாயக குடியரசு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ), தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ)(போல்ஷ்விக்), தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி போன்றவைகள் உள்ளன.

மேலும் சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா, கத்தார் கட்சி, டிராக்ஸ்ட் கட்சி, சோசலிச மையம், தமிழ்தேச கம்யூனிஸ்ட் குழுக்கள், இடதுசாரி பெரியாரிய - தமிழ்தேசிய அமைப்புகள், இடதுசாரி தலித் அமைப்புகள் என்று கம்யூனிசம், மார்க்சியம் கொள்கையாக கொண்டு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை பரந்துபட்ட ஒரு சித்திரம் தான். இன்னும் கூட பல குழுக்கள் கம்யூனிசம், மார்க்சியத்தைக் கொள்கையாக கொண்டு இயங்குகின்றன.

இப்படி பல பிளவுகளாக இருப்பது பற்றி எனது அனுபவ, வரலாற்று, கோட்பாடு புரிதலை, பகிர்ந்து கொண்டு பின் விரிவாக ஆய்வோம்!

கம்யூனிசம் என்பது என்ன என்பதற்கு தோழர் மாவோவின் எளிய ஆனால் காத்திரமான பதில் “தனி மனிதனை சமூக மனிதனாக மாற்றுவது” அதாவது இதற்கு முந்தைய வளர்ச்சியின் அனைத்து வளங்களையும் தன்மயமாக்கிக் கொண்ட மனிதன் ஒரு சமூக உயிரியாக, உண்மையான மனித உயிரியாக ஒரு முழுமையான, உணர்வுபூர்வமான உயிரியாக திரும்ப வருவதுதான் என்பதாகும். இதைதான் மாமேதை கார்ல் மார்க்ஸ் விரிவாக விளக்க முயன்றார். அதுதான் மார்க்சிய தத்துவம். இயக்கவியல் வரலாற்று பொருளியல் கோட்பாடு.

மனித குல வரலாற்றில் ஆதி கம்யூனிச சமூகம் தான் முதலில் உருவானது. இந்த வர்க்கமற்ற சமூகம் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள், இலட்சம் ஆண்டுகள் நீடித்து இருந்தது. இன்றும் கூட ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் பல பகுதிகளில் இந்த புராதன கம்யூனிச சமூகங்களும், அதன் தொடர்ச்சிகளும் பழங்குடி மக்களிடம் தொடர்கின்றதை நாம் காண முடியும்.

இன்றைய நாகரிகத்திற்கான பல அறிவியல் கண்டு பிடிப்புகள், மொழி, படைப்புகள், கலைகள் இந்த சமூகத்தின் பங்களிப்புகள் பிரதானமானதும், அதன் தொடர்ச்சியும் தான்! அதே நேரம் மனித அறிவால், உழைப்பு கருவிகளால் உருவான மேம்பட்ட உழைப்பின் விளைவாக கிடைக்கப்பெற்ற ‘உபரி’ வர்க்க சமூகத்திற்கு வழி வகுத்தது.

ஆண்டான் – அடிமை சமூகம், நிலப்பிரபுக்கள் - பண்ணையாள் சமூகம், முதலாளி – தொழிலாளி சமூகம் என்பதாக மனித குலத்தின் வர்க்க சமூகங்களின் வரலாறு வளர்த்துள்ளது. இப்படியான வளர்ச்சிப்போக்கில் அறிவியல் பூர்வ கம்யூனிச சமூகம் மலரும் என்பது கார்ல் மார்க்சின் ஆய்வு, பங்களிப்பாகும். இவை கம்யூனிச தத்துவம், மார்க்சியம் என்று அழைக்கப்பட்டன.

வர்க்க சமூகத்தில் மனிதன் தனது உழைப்பின் பயனில் இருந்தும், அவனால் உருவாக்கப்பட்ட செல்வத்தில் இருந்து அந்நியப்பட்டு, சமூகத்தில் இருந்தும், சக மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுகிறான். அந்நியப் படுத்தப்பட்டான். இப்படி தனிமனிதர்களாக மாறியவர்கள் ஒர்மையுள்ள அதாவது ஒற்றுமையுடைய சமூக மனிதர்களாக மாறுவதுதான் கம்யூனிசம். இந்த ஒர்மைக்கு (Conscious) அடிப்படை மனிதர்கள் அனைவரும் இயக்கவியல் வரலாற்று பொருண்மை சிந்தனையை உட்கிரகித்துக் கொள்வதும், அதனை காலம்தோறும் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு சமூகத்தையும், தனது இந்த உயிர் கோளத்தையும் உயிர்ப்புடன் முன் கொண்டு செல்வதாகும். இந்த வழிமுறையில், ஊடாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு, வழிகாட்டுதல், தலைமை இன்றியமையாதவைகளாகும்.

இயக்கவியல் வரலாற்று பொருளியல் சமூக அறிவியலை உட்கிரமிப்பதில் நவீன தொழிற்சாலை தொழிலாளர்கள் என்பது புற நிலையாக அந்த வர்க்கத்தின் பண்பு அமைந்து இருக்கிறது. அதனால் கம்யூனிச தத்துவத்தினை இந்த தொழிலாளர் வர்க்கம் முதன்மையாக பற்றிக்கொள்ளும். இதைதான் பாட்டாளி வர்க்க தலைமை என்கிறது மார்க்சியம்.

இதன் முன்னணி படையாக கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையும் இருந்தலும் முதன்மையானதாக இருத்தல் சமூக மாற்றத்திற்கான, புரட்சிக்கான வழிகாட்டலுக்கு அவசியமானதான ஒன்றாகிறது என்பதும் அடிப்படையான மார்க்சிய புரிதலாகும்.

மூலதனத்தை, செல்வத்தை முதன்மையாக கொண்ட அரசியல் பொருளாதாரத்திற்கும், அதன் அடிப்படியிலான சமூக கட்டமைப்புக்கு மாற்றாக உழைப்பை முதன்மையாக கொண்ட அரசியல் பொருளாதாரத்தையும், அதனை உட்கிரகிக்கும் ஆளுமை உழைப்பை மட்டுமே வாழ்வின் ஆதாரமாக கொண்ட தொழிலாளர் வர்க்கம் கட்டியமைக்கும் சமூக கட்டமைப்புதான் மானுட விடுதலைக்கும், இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவான சமூக அமைப்பை உருவாக்க முடியும்.

இந்த புரிதல் பின்னணியில்தான் கம்யூனிச இயக்கத்தின் பிளவுகள் பின்னணியும் அவைகளின் ஒர்மையும் என்ற இந்த கட்டுரை அமையும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) கட்டுரை 1920 ஆம் ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சோவியத் யூனியன் நாட்டில் உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தானின்) தலைநகர் தாஷ்கண்ட் நகரில் மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. எம்.என். ராய், அவரது துணைவியார் ஈவ்லின் டிரெட் (Evelyn Trent), அபானி முகர்ஜி, அவரது துணைவியார் ரோசா ஃபிட்டிங் கோவ், (Ray Roza Fittingoff), அகமது ஹசன் எனப்படும் முகம்மது அலி, முகம்மது ஷபீக் சித்திக், எம்.பி.டி. ஆச்சார்யா, முகம்மது ஷபி ஆகிய ஏழு உறுப்பினர்கள் கொண்டதாக இந்த கமிட்டி இருந்தது. கட்சியின் பொதுச் செயலாளராக முஹம்மது ஷபீக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.என். ராய் துருக்கேஸ்தானில் உள்ள கட்சி கமிட்டியின் செயலாளராகவும், ஆச்சார்யா தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். மூன்றாவது அகிலத்தின் முடிவுகளைச் செயல்படுத்துவது இந்திய கட்சித் திட்டத்தை இந்தியாவின் சமூக நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் தொகுத்து எழுதுவது, கட்சியை அகிலத்துடன் இணைந்துச் செயல்படுவதற்காக பணிகளைச் செய்வது என்று தீர்மானங்களை இந்தக் கூட்டம் தீர்மானித்து. இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இந்த கட்சி செயற்குழு முடிவு செய்து களத்தில் இறங்கியது.

பிரிட்டிஷ் காலனியில் இருந்து முழு விடுதலை பெறுவதை தனது இலட்சியமாக இக்கட்சி அறிவித்தது. இதேபோல, அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள இந்திய அறிவு துறையைச் சேர்ந்த வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து, போல்ஷ்விக்குகள் உடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி அமைத்து நாட்டை விடுதலைச் செய்ய விழைந்தனர்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக போராடியதோடு, சோசலிச சோவியத்து யூனியனுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.

இத்துடன் அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய கொடுங்கோன்மை அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்தது. இன்னும் குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் காலனிய அரசு மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

இருப்பினும், பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, தோழர்கள் சிங்காரவேலர், சம்புர்ஜி சங்கத்வாலா, முசாபர் அகமது, டாங்கே, சவுகத் உஸ்மானி ஆகியோர் உழைப்பில் முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேராயம் கான்பூர் நகரில் 1925 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி நடந்தது. 500 பேர் பங்கேற்ற இம்மாநாடு தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டதை அறிவிப்பதாக இருந்தது.

அதன் பின் நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு 1964 ஆம் ஆண்டுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் நடைபெற்றது. இந்த நீண்ட கால கட்டம் முழுவதும் கம்யுனிஸ்ட் கட்சி ஒரு குறிப்பிட்ட திட்டத்தின், மூலயுத்தி, செயல்யுத்தி அடிப்படையிலோ ஒருகிணைந்த முறையில் செயல்படவில்லை.

கம்யூனிஸ்ட் அகிலங்களின் வழிகாட்டுதலான சனநாயக மத்திய கோட்பாடும் இங்கு செயல்படுத்தப்படவில்லை. 1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த இந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே, அவரது ஆதரவாளர்களின் காங்கிரஸ் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகவும் ,பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த 32 மன்ற உறுப்பினர்கள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலி நகரில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் உட்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். தெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்ட வாரியான கலந்தாய்வை நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களில் போர்க்களமானது. கல்கத்தாவின் மாவட்டக் கலந்தாய்வில் பரிமள் தாஸ் குப்தா (தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவுத் திட்டத்தை முன்வைத்தார். மற்றொரு மாற்றுத் திட்டத்தை ஆசிசுல் ஹாக் கொல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர்.

கொல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம். பாசவ புன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவுத் திட்டத்தை எதிர்த்தனர். இப்படி கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தங்கள் மாறுபட்டக் கொள்கைகளை வரைவாக எழுதி மாநாட்டில் வைத்து உட்கட்சி விவாதங்கள் நடத்துவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டு வந்தது.

சில்குரி மாவட்டக் கலந்தாய்வில், கட்சித் திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்கத்தைச் சார்ந்த காத்திரமான இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது.

இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற முழக்கத்தை கலந்தாய்வில் தவிர்த்தார். பரிமள் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநிலக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

கல்கத்தா மாநாடு 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாடு மும்பையில் நடத்தினர்.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கட்சிகளாகப் பிளவுண்டது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சி திட்டத்தையும் அமைத்துக் கொண்டது. பி.சுந்தரையா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து சர்வதேச நாடுகள் அளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குருச்சேவ் தலைமையிலான திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் விவாதங்கள் தீவிரமாக நடந்தது. இது சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு உள்ளேயும் எதிரொலித்தது.

மார்ச் – 18, 1967 சிலிகுரி மாவட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையில் விவசாயிகள் சங்க மாநாடு கூடியது. மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி க்கு எதிராக கலகக் கொடி ஏற்றப்பட்டது. “நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகள் உடையதுதான்.
இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பை சமாளிக்க நாம் ஆயுதங்கள் ஏந்த வேண்டும். நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகள் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கானு சன்யால் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர். இது பெரும் எழுச்சியாக வெடித்து எழுத்தது. வசந்தத்தின் இடி முழக்கமாக அது முழங்கியது.

இந்த நக்சல்பாரி புரட்சிகர மக்கள் திரள் எழுச்சி இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடன், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று உருவானது. இதன் பொது செயலாளர் சாரு மஜீம்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் மிருகத்தனமான அடக்குமுறைகளை நக்சல்பாரி கட்சி மத்திய - மாநில அரசுகளின் இருந்து சந்தித்தது.

தோழர் சாரு மஜீம்தார் தியாகியான பின்பு இ.க.க(மா-லெ) மூன்று பிளவுகளாகப் பிரித்தது. 1. நிலப்பிரபுக்களை அழித்தொழிக்கும் ஒரே வழி என்ற பழைய பாதை, 2. மக்கள் திரள் வழி என்ற பாதை, 3. கூட்டக் குழு எனும் நிலப்பிரபுகளை அழித்தொழிக்கும் பாதையும், மக்கள் திரள் வழியும் இணைந்த பாதை என்பதாகும்.

நிலப்பிரபுகளை அழித்தொழிக்கும் ஒரே வழி என்ற பாதை பின்பு இ.க.க (மா-லெ) (லிபரேசன்) கட்சியாகவும், மக்கள் திரள் வழி என்ற பாதை என்பது இ.க.க (மா-லெ) மாநில சீரமைப்பு குழுவாகவும், தமிழ்நாடு சீரமைப்பு குழுவாகவும் மாறியது.

தமிழ்நாடு சீரமைப்புக் குழு இன்று தமிழ்நாடு மார்க்சிய - லெனினிய கட்சியாக உருமாறி உள்ளது. கூட்ட குழு ஆந்திராவின் கொண்டபள்ளி சீதாராமையா தலைமையிலான கட்சியுடன் இணைந்து இ.க.க (மா-லெ) (மக்கள் யுத்தம்) கட்சியாக மாறியது.

பின்பு அதிலிருந்து தோழர் ஏ.எம்.கே தலைமையில் சிலர் பிரிந்து இ.க.க (மா-லெ) (போல்ஷ்விக்) குழுவாக மாறியது. சனநாயக மத்தியத்துவம் கோட்பாட்டை எப்பொழுதும் கட்சிக்குள் நடைமுறைப்படுத்தாத இக்குழு பல பிளவுகளை கடந்த 30 ஆண்டுகளில் சந்தித்தது. கடைசியில் தோழர் ஏ.எம்.கே மறைவுக்கு பின்பு மூன்று, நான்கு குழுக்களாக பிரிந்து போய் கிடக்கின்றது

உட்கட்சி விவாதங்களை முறையாக நடத்தாதல் இ.க.க(மா-லெ) (மக்கள் யுத்தம்) கட்சியில் இருந்து தோழர்கள் தமிழரசன், புலவர் கலியபெருமாள் தலையில் ஒரு குழு பிரிந்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. இதுவும் கூட கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வழிமுறைகளையும், பேராயங்களையும் சனநாயக பூர்வமாக, உட்கட்சி விவாதங்களை கையாண்டு கொள்கையை ஒருமை படுத்தாமல் போனதால் இன்று பிளவுண்டு பல குழுக்களாக மாறி, அவைகள் சில சீரழிந்து போய் விட்டன.

இ.க.க (மா-லெ) (மக்கள் யுத்தம்) கட்சியானது பார்ட்டி யுனைட்டி கட்சியுடன் 2003 யில் இணைந்து இ.க.க(மா-லெ) (மாவோயிஸ்ட்) கட்சியாக மாறியது. இதிலிருந்து தோழர் துரைசிங்கவேல் தமிழக தலைமையில் இருந்த சிலர் வெளியேற்றப்பட்டு, அவர்கள் தனி குழுவாக மாறி இயங்குகின்றனர்.

அவர்களும் இன்று மக்கள் சனநாயக குடியரசு கட்சி, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)வும், சோசலிச மையம் குழுவாகவும் கட்சி அமைப்பு வழிமுறைகளையும், பேராயங்களையும் சனநாயக பூர்வமாக நடத்தாத, உட்கட்சி விவாதங்களை சனநாயக பூர்வமாக நடைமுறைப் படுத்தாதலினால் தனித்தனியாக் பிரிந்து செயல்படுகின்றனர்.
தோழர்கள் இல.கோவிந்தசாமி, நீண்ட பயணம் சுந்தரம், இன்னும் சிலர் இ.க.க (மா-லெ) (செங்கொடி) கட்சியுடன் இணைந்து செயல்பட்டனர். இதுவும் பின் பிளவுண்டு இ.க.க (மா-லெ )(ரெட் ஸ்டார்) கட்சியாக தோழர் கே.என்.இராமசந்திரன் தலைமையில் செயல்படுகிறது

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யில் இருந்து பிரிந்து MCPI கட்சி உருவானது. இதிலிருந்த மணியரசன், வெங்கட்ராமன் போன்றோர் தனி குழுவாக சென்று இன்று முதலாளித்துவ தேசியவாதத்திற்கு பலியாகி விட்டனர்.

இவை தமிழ்நாட்டின் நிலைமைதான்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி , இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) ஆகிய கட்சிகளில் இருந்து வெளியேறி குழுக்களாகவும், கட்சிகளாகவும் மாறுவது தொடர்கதைகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது இந்த பிளவுகளுக்கான பின்னணி, இவைகள் ஒற்றுமை அடைய வாய்ப்புகள் என்ன என்று எனது அனுபவம், கல்விக்கு எட்டிய அளவிற்கு காண்போம். இது முடிந்த முடிவல்ல, தொடக்கமானதும், பரிசீலனைக்குமானதாகவும் எடுத்து கொள்வோம்!

மக்கள் திரள் தான் புரட்சி செய்யும்! கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையும் அதற்கு வழிகாட்டும்! அதாவது கோட்பாட்டு - அரசியல் - போர் யுத்தி – செயல் யுக்தி - திட்ட வரையறைகள் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையும் பருண்மையான தரவுகளுடன் ஆய்வு செய்து வரையறை செய்து மாநாடுகளில் இறுதி செய்யும். இந்த திட்டத்தை பரப்புரை செய்து நடைமுறையில் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைமையும் வழிகாட்டும்.

1920 இல் சோவியத் யூனியனில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் செயற் குழு இரண்டு தீர்மானங்களை இயற்றியது. இந்திய நாட்டின் சமூக - பொருளாதார - அரசியலை ஆய்வு செய்து திட்டம் தயாரிப்பது, சனநாயக மத்தியத்துவம் கோட்பாடு அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி பேராயங்களை நடத்தி திட்டங்களை தீர்மானிப்பது, மூல யுக்தி – செயல் உத்திகளை வகுத்து நடைமுறை படுத்தி, கட்சி உறுப்பினர்களை பெருமளவில் சேர்த்து, அவர்களில் இருந்து அவர்களின் வர்க்க - சமூக (சாதி) பின்னணி அடிப்படையில் தலைமைகளுக்கு படிப்படியாக உயர்த்தி செல்வதுமாக இந்த தீர்மானங்கள் இருந்தன. இன்று வரை இந்த தீர்மானங்கள் முழுமையை நோக்கி எந்த அளவிற்கு முன்னேறி உள்ளன என்பது கேள்விக்குறியே!

மேற்கத்திய நாடுகளின் சமூக வளர்ச்சி படிநிலைகளும், இந்தியாவின் சமூக வளர்ச்சி படிநிலைகளும் ஒன்றல்ல. மேற்கத்திய நாடுகளின் சமூக கட்டமைப்பும், இந்தியாவின் சமூக கட்டமைப்பும் ஒரே மாதிரி கிடையாது. இயக்கவியல் வரலாற்று பொருளியல் சமூக அறிவியலை உட்செறித்து இந்தியாவின் வரலாறு, இந்தியாவின் சமூக வளர்ச்சியின் படிநிலைகள், இந்தியாவின் சமூக கட்டமைப்பு பற்றிய ஆய்வுகளை தொடக்க கால கம்யுனிஸ்டுகள் செய்யவில்லை.

முழுமையான ஆய்வுகள் இன்றியும், ஐரோப்பிய நாடுகளின் மாதிரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டங்களை அப்படியே நேரடியாகப் பெயர்த்து இந்திய நாட்டின் புரட்சிக்கான திட்டங்களை, உத்திகளை வகுக்க முயன்றனர். அதே சமயத்தில் உருவான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவுக்கான குறிப்பான திட்டத்தை பகுப்பாய்வு செய்து சரியான திசையில் முன்னேறி வெற்றியும் பெற்றது.

பணக்கார வர்க்கங்களிலும், உயர் சாதிகளில் இருந்து உருவான படிப்பாளிகள் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் உயர் படிப்பிற்காக சென்றபொழுது மார்க்சிய தத்துவத்தால், சோவியத் புரட்சியால் ஈர்க்கப்பட்டனர்.

காலனியாதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் ஈர்க்கப்பட்டு பின்பு அதற்காக மார்க்சிய தத்துவம் சரியான வழிகாட்டும் என்று மாறினர். ஆய்வு – நடைமுறை - பரிசீலனை - ஆய்வு - நடைமுறை என்ற சுழல் வட்டத்திற்கு மாறாக நடைமுறைக்கான கொள்கைகள், அதற்கான செயல்பாடுகளை மட்டும் மேற்கொண்டனர்.

தோழர் லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்” என்ற தனது நூலில் பக்கம் 47 -யில் “தொழிலாளிகளிடையே சமூக - ஜனநாயக வாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமை பற்றிய துணிபு மட்டும் வளர்த்துக் கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோசலிசத்தின் கொள்கை, மெய்யறிவு வகைப்பட்ட, வரலாறுவழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர் அவற்றை வகுத்து விளக்கினர். நவீன அறிவியல்பூர்வ சோசலிசத்தின் மூலவர்கள் மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளி பகுதியினரை சேர்ந்தவர்கள்" என்கிறார்.

மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதினரைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் ஐரோப்பிய சமூகத்தின் சோசலிசத்தின் கொள்கை, மெய்யறிவு வகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட, பொருண்மை வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து தொடங்கி திட்டத்தை வகுத்து தந்தனர். ஆனால் இங்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் இந்த முயற்சி குறைவாக இருந்தது என்பதுதான் உண்மை.

இதைத்தான் தோழர் மாவோ, “புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள் ? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். முந்தைய அனைத்து புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம்.

உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்து கொள்ளத் தவறியது ஆகும். புரட்சிகர கட்சி ஒன்றே மக்கள் திரளுக்கு வழிகாட்டி. அந்த புரட்சிகர கட்சி அவர்களுக்குத் தவறானதாக வழிகாட்டும் போது எந்தப் புரட்சியும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை வெற்றி அடைய, மக்கள் திரளைத் தவறாக வழி நடத்தாமல், நமது உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கு, நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம் அவசியம் கவனம் செலுத்துவது என்பதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத் திட்டவட்டமாகச் சாதிப்போம்.

உண்மையான எதிரிகளிடமிருந்து நண்பர்களை பிரித்தறிய சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலையும், புரட்சி குறித்து அவைகளின் மனப்பான்மைகளும் நாம் பொதுப் பகுப்பாய்வு செய்வது அவசியம்” 1926 மார்ச் மாதத்தில் இப்படியாக வழிவகுத்து சீனப்புரட்சியை முன்கொண்டு செல்ல வழிகாட்டுகின்றார். இப்படியானதொரு பகுப்பாய்வை 1925 யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்தார்களா என்றால் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதனால்தான் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதன் பின்னரும் வீறுகொண்டு எழுந்த பெரும் மக்கள் திரள் எழுச்சிகள் முட்டு சந்தில் முட்டி நின்று திணறியது. புரட்சியை நோக்கி முன் நகரவில்லை.

இந்திய சமூகம் பன்முகத்தன்மை வாய்ந்தது. வரலாறு, சமூக கட்டமைப்பு இந்தியா முழுவதும் அந்தந்த தேசிய இனங்கள், மொழிக் குடும்பங்கள், பிரதேச சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெவ்வேறாக இருந்ததை அங்கீகரித்து மார்க்சியர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வரலாற்றை அதன் இயங்கியல் வளர்ச்சியை, அதன் குறிப்பான சமூக - அரசியல் - பொருளாதாரத்தை ஆய்வுகள் செய்யவில்லை. இந்த போதாமை இன்றுக்கும் வரையில் நீடிக்கிறது என்பதுதான் வருத்ததிற்கு உரியதாகும்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் தியாகங்களை கம்யூனிஸ்டுகள் செய்த பொழுதும், சுதந்திர போராட்டத்தில் முதன்மையான சக்தியாக, தலைமை தாங்கும் ஆற்றலாக தன்னை கம்யூனிஸ்ட் கட்சி வளர்த்துக் கொள்ள முடியவில்லை.

ஆரம்பித்திலேயே லெனினுக்கும், எம்.என்.ராய்க்கும் இந்திய சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் திட்டம், காங்கிரஸ் கட்சியை எப்படி அணுகுவது என்ற பார்வையில் முரண்பாடு இருந்தது. இந்த குழப்பம் தொடர்ந்து தலைமைக்கு வந்த அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் இருந்தன. ஒன்று காங்கிரஸ் கட்சியை முற்றிலும் எதிரியாக பார்க்கும் கண்ணோட்டம் அல்லது அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாலாக, அதன் தொங்கு சதையாக மாறிப்போகும் கண்ணோட்டம் இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உள்முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியால் சரியாக கையாள முடியவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர்களின் ஒருவராக தோழர் முஜாபர் அகம்மது தனது நினைவாக சீன கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு போதிய கோட்பாட்டு புரிதல் இல்லை என்பதுடன், ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்க தலைமை, சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு, தேசிய இனங்கள் பற்றிய புரிதல், சர்வதேசியத்திற்கும் தேசியத்திற்கும் உறவு, முதலாளித்துவத்தின் பங்கு போன்றவைகளில் மிக குறைவான மார்க்சியப் புரிதல் மட்டுமல்ல, மார்க்சியம் அல்லாத புரிதலும், இயங்கவியலுக்கு எதிரான புரிதலும் இருந்தன என்று குறிப்பிடுகிறார். இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனைத்து பிளவுகளுக்கும் மேற்சொன்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை இந்த ஒரு நூற்றாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை பகுத்தாய்பவர்கள் யாராக இருப்பினும் சதாரணமாக புரிந்து கொள்ள முடியும்.

-
வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்ற தீரமிக்க பெரும் மக்கள் திரள் எழுச்சி சுதந்திர போராட்டத்தில் இந்தியாவின் முதலாளிகள், தரகு முதலாளிகள் கூட ஆதரித்த போராட்டத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகி இருந்தது. பிரிட்டன் இந்தியாவை விட்டு போனால் பாசிச கூட்டணியை சேர்ந்த ஜப்பான் நாடு இந்தியாவை ஆக்கிரமிக்கும் என்றும், சோசலிச தாய் நாடான சோவியத் நாட்டை காப்போம் என்ற தவறான புரிதலில் இப்படி பெரும் வீரமிக்க மக்கள் திரள் எழுச்சிப் போராட்டங்களில் இருந்து விலகி நின்று கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் திராவிடம் இருந்து தனிமைப் பட நேர்ந்தது.

தோழர் யேன் மிர்தால் தனது “இந்தியா: காலத்தை எதிர்நோக்கி” என்கின்ற நூலில் பக்கம் 410 யில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையிலான தீர்மானகரமான வேறுபாடு என்னவென்றால், இந்தியப் புரட்சியாளர்கள் ஐரோப்பியரின் ஆதிக்கத்தில் இருந்து என்றுமே விடுபட இயலாதவர்களாக இருப்பதுதான். கம்யுனிஸ்ட் அகிலத்திடம் இருந்தும், அதன் பிரதிநிதிகளிடம் இருந்தும் சீனா கற்றுக்கொண்டு, அதன்பின் தனக்கென்று சொந்தமான ஒரு வழியில் அது பயணம் செய்தது. அவர்கள் செய்த தவறுகளும், குறைகளும் அவர்களின் சொந்தத் தவறுதான். அதை அவர்களே சரி செய்து கொள்ள முடிந்தது.

கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்த எம்.என்.ராய் அகிலத்தின் நிதி பொறுப்பாளர் ஜாட்னிட்ஸ்கியை விமர்சித்ததால் அகிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் இந்திய கம்யூனிஸ்டுகள் பிரிட்டன் கம்யுனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டனர், இந்தியப் புரட்சிக்குத் தடையாக இருந்ததே அவர்களின் அன்றாட வேலைகளில் இருந்து. தங்கள் சொந்த நாட்டு அரசியல் போக்குகள் மீது எந்த பாதிப்பையும் செலுத்த முடியாத பிரிட்டன் கம்யுனிஸ்டுகள், இலட்சக்கணக்கான இந்திய மக்களின் சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற சிந்தனையே ஒரு அற்பமான காலனியச் சிந்தனைதான்.

இது இந்தியாவில் மோசமான அதாவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இருபதுகளில்( 1920களில்) கூட மாஸ்கோ அந்நிய நாடுகளில் உண்மையான புரட்சியாளர்களை உருவாக்க விரும்பி இருந்ததா என்று அய்யப் படும் அளவிற்கு அதன் விளைவுகள் இருந்தன. இந்த சூழ்நிலையிலும், இந்தியாவில் புரட்சியும், தேசியம் என்றுமே ஒன்றிணையவில்லை.

பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்ற யதார்த்தத்தையும் தாண்டி கம்யூனிஸ்ட் தலைவர்கள் இங்கு பழுப்பு நிற வெள்ளையர்களாகவே இருந்தனர்….”: என்று விளக்கி கொண்டு செல்கிறார். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைக்கும் எதார்த்தமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல!!

இவையெல்லாம் நமக்கு காட்டுவது என்பது 1951 வரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமூகத்தை பகுப்பாய்வு செய்து ஒரு திட்டத்தை தயாரிக்க முடியவில்லை. அதை தோழர் ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்கிறார். இந்த பலவீனம் தான் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளுக்கான பின்னணியாக இருந்தது.

பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்ற யதார்த்தத்தையும் தாண்டி கம்யூனிஸ்ட் தலைவர்கள் பழுப்பு நிற வெள்ளையர்களாகவே இருந்தனர் என்கிறார் யேன் மிர்தால். அவர்கள் இயங்கவியலை, வரலாற்றை தங்கள் சமுகத்திலிருந்து வளர்த்தெடுக்க முடியவில்லை என்கிறார். இன்றளவும் பெரும்பாலும் இது உண்மையாகவே உள்ளது. அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களில் இவை அப்பட்டமான உண்மைகள். அதனால்தான் 2020ஆம் ஆண்டில் மோடி ஆட்சி ஒரு இலட்சம் பேர் கட்டாய விருப்ப ஓய்வு அளித்த போதும் மத்திய அரசு ஊழியர் சம்மேளனம், அதன் தலைமையும் வாய்மூடி கிடத்தது.

அரசியல் சுதந்திரம், சமூக நீதி அல்லது சமூக ஜனநாயகம் ஆகிய இரண்டும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் நிகழ்ச்சி நிரலில் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் சுதந்திரத்திற்காக மெனக்கெட்ட அளவிற்கு சமூக நீதிக்காக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படவில்லை. தமிழ்நாட்டில், தென் இந்தியாவில் சில பகுதிகளில் இதில் சில மாறுபாடுகள், முன்னேற்றம் இருந்தது. இருக்கிறது.

இந்திய அளவில் இது கள யதார்த்தமாக இல்லை. இந்திய சமூகம் என்பது சாதிய படிநிலை வர்ணாசிரம நிலவுடைமை சமூகமாக இருந்தது. சமூக வளர்ச்சியில் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களால் இதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்டுகள் இயக்கவியல் வரலாற்று பொருளியல் அறிவியல் அடிப்படையில் இங்குள்ள சமூகத்தை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்று வகைப்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு குறிப்பான கொள்கைகளை ஏற்ப வகுத்து திட்டங்களை தீட்டினர்.

மேற்கத்திய படிப்பாளிகளாக இருந்த, பிரிட்டனிலும், அமெரிக்காவிலும், அயோரோப்பாவிலும் கல்வி கற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அங்குள்ள நாடுகளின் பருண்மையான சமூக சூழலில் பகுப்பாய்வுகள் செய்ததை அப்படியே பெயர்த்தெடுத்து இயந்திரகதியான இந்தியாவிற்கு, இந்திய சமூகத்தை வரலாற்று - இயக்கவியல் - பொருண்மை பகுத்தாய்வு செய்யாமல் அயோரோப்பா மாதிரியாக மாற்றி பொருத்தி காட்ட முயன்றனர்.

சாதி என்பது மேற்கட்டுமானம் என்றும், வர்க்க போராட்டம், புரட்சி நடந்தால் தானாக சாதி மாறி விடும் என்று விளக்கங்கள், கொள்கைகளாக வகுத்து கொண்டிருந்தனர். ஆரம்பம் முதல் (1987 யில் நடந்த அனைத்திந்திய புரட்சி பண்பாட்டு இயக்கத்தின் கருத்தரங்கத்தில்) தோழர் ஏ.எம்.கோதண்டராமன் வரை சாதியம் என்பது மேற்கட்டுமானம் என்பதாகவே நிலைப்பாடு இருந்தது.

பின்னர் நடந்த விவாதங்கள், சமூக மாற்றங்கள், போராட்டங்களுக்கு பிறகு தான் சாதி அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்று இரண்டிலும் செயல்படும் கட்டமைப்பு என்ற கருத்து கம்யூனிச இயக்கத்தில் வலுபெற்றது. இப்படி குறிப்பிடுவதால் கம்யுனிஸ்டுகள் சாதிக் கொடுமைகள், தீண்டாமைக்கு எதிராக நடத்திய வீரம் செறிந்த போராட்டங்கள், தியாகங்களை குறைந்து மதிப்பீடுகள் செய்வது இன்னொரு திசை விலகலுக்கு வழிவகுக்கும்.

சாதி கொடுங்கோன்மை களுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் வீரமிக்க போராட்டங்கள் ஒளி பொருந்தியவைகளாக ஓளிர்கிறது என்பதே உண்மை! மேலும் இத்தகைய கம்யுனிஸ்ட்களின், நக்சல்பாரிகளின் போராட்டங்கள் வரலாற்றில் பதிவுகள் செய்யப்படாமல், ஆய்வுகளுக்கும், மீள்பகுப்பாய்வுகளுக்கும் போதுமான அளவிற்கு உட்படுத்தப்படாமல் இருப்பதுதான் மார்க்சிய அறிவுத்துறை வரலாறாக இங்கு இருக்கின்றது

டாக்டர் அம்பேத்கர் பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய பொழுது அப்பொழுதைய டாங்கே தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி அதை கடுமையான எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து எதிர்த்தது. ஆனால் டாக்டர் அம்பேத்கருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பிளவு உருவெடுத்து அது தொடர்ந்தது. இந்த கோட்பாட்டு பிரச்சனை தீர்வுக்காக வழி, பிளவை சரி செய்தல் நக்சல்பாரி எழுச்சிக்கு பின்புதான் இந்திய புரட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது.

மாபெரும் பாட்டாளி வர்க்க பண்பாட்டு புரட்சி, தலித் பாந்தர் இயக்கம் இன்னும் பிறவும் இதற்கு வழி வகுத்தது. 80 களில் சாதி கட்டமைப்பின் வரலாறு கோட்பாடுகளாக விவாதிக்கப்பட்டன. 90 களுக்கு பிறகுதான் கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கும், அம்பேத்காரிஸ்டுகள், தலித் அமைப்புகளுக்குமான உறவும், ஆரோக்கியமான கருத்து விவாதங்களும் நடந்து வருகின்றன. இன்றும் தொடர்கிறது. அதை வளப்படுத்தி முன் கொண்டு செல்வது கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முன் நிற்கும் இன்றியமையாத மகத்தான பணி என்பதை இங்கு குறிப்பிடப்பட வேண்டும்

சமூக நீதி, சமூக ஜனநாயகம் பற்றிய கண்ணோட்டமும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுகளுக்கு பின்னணி காரணங்களில் ஒன்றாகும். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் 17 புரட்சிக்கு முன் சமூக சனநாயக தொழிலாளர் கட்சி என்ற பெயரில் தான் இயங்கியது. இது மட்டுமல்ல. பல கட்சிகளும் அப்பொழுது மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் காலத்தில் சமூக ஜனநாயகம் என்ற பெயரில்தான் இயங்கின.

சோவியத் புரட்சி க்கு பின்பு தான் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிடும் வழக்கம் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவில் உள்ள சமூக அமைப்பு சாதி படிநிலை ஒடுக்குமுறை அமைப்பு என்ற கொள்கையும் அதற்கு மாறாக சமூக ஜனநாயகம், சமூகநீதி, சோசலிச ஜனநாயகம் கம்யூனிஸ்ட் கட்சிகள், குழுக்கள் திட்ட வரைவு, நடைமுறை போராட்டங்களில் இருக்க வேண்டும். இல்லையெனில் பிளவுகள் தவிர்க்க இயலாது என்பது சமூக யதார்த்தம்.

அதே போல் இந்தியா என்பது ஒரு தேசியமா, பல்வேறு தேசங்களின், தேசிய இனங்கள் சேர்ந்த கூட்டமைப்பா என்பதும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தேசிய தன்னாட்சி உரிமை என்பதும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுகளுக்கு காரணியாக உள்ளது. சிபிஎம் கட்சியிலிருந்து MCPI கட்சி 80களில் பிரிந்து தனி கட்சியாக இதனால் உருவானது.

1950-60 களில் 13 நாடுகளில் சோசலிசமும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கம்யூனிஸ்டுகள் ஆளுகையில் இருந்தன. சோசலிச கட்டுமானங்களை நிர்மாணங்கள் செய்யும் பிரச்சனையில் இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்த தவறுகளால் வலது - இடது திரிபுகளால் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபுவாத கட்சிகளாகவும், பின்பு முதலாளித்துவ கட்சிகளாகவும் சீரழிந்தன.. சோவிய யூனியனுக்கும், சோசலிச சீனாவுக்கும் இடையில் “மாபெரும் விவாதம்” உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளை இரண்டு முகாம்களாக பிளவு படுவதற்கு காரணமாகின.

மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்ட பின்பு இந்த 13 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் அகிலம் கட்டுவதற்கு எந்த முன்முயற்சியும் பெரிய அளவில் செய்யவில்லை. குருச்சேவ் கோட்பாட்டை பின்பற்றும் கட்சிகள் சிபிஅய் போன்றவைகள் தனியாகவும், மாவோவின் கோட்பாட்டை பின்பற்றும் மா-லெ கட்சிகள் தனியாக இரண்டு நீரோட்டங்களாக அனைத்து நாடுகளிலும் பிளவுண்டு கிடைக்கின்றன. இந்தியாவில் உள்ள சிபிஎம் மட்டும் இந்த நீரோட்டங்கள் எதிலும் இல்லாமல் தனியாக இந்தியாவில் மட்டும் செயல்படுகிறது. அதற்க்கான காரணம் என்ன என்பதை ஆய்வுகள் செய்ய வேண்டும்.

தோழர் ஸ்டாலின் இறப்புக்கும் 1952க்கும் தோழர் மாவோ மறைவுக்கும் 1975 க்கும் இடையிலான காலம் உலக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமானது. இந்த காலத்தில் நடந்த விவாதங்கள், திசை போக்குகள், வலது-இடது திரிபுகள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரதிபலித்தன. தமிழ்நாட்டிலும் இந்த விவாதங்கள் நடந்தன. 1964 யில் சிபிஎம் கட்சியும், 1969யில் இ.க.க(மா-லெ) கட்சியும் உருவானது.

இவை மூன்று கட்சிகளும் தேசிய சனநாயக புரட்சி, மக்கள் சனநாயக புரட்சி, புதிய சனநாயக புரட்சியை முறையே தங்களின் திட்ட இலக்காக கொண்டு செயல்படுபவை.

நக்சல்பாரி எழுச்சி யில், வசந்ததின் இடி முழக்கத்தில் உருவான இ.க.க(மா-லெ) கட்சி பல அடிப்படையான கொள்கைகள் சரியான நிலைபாடுகளை எடுத்தாலும், பலவற்றில் இடது திசைவிலகல், இடது சாகசவாத கவர்ச்சியில் மூழ்கியது.

இந்தியாவில் புரட்சியும், தேசியம் என்றுமே ஒன்றிணையவில்லை என்று தோழர் யேன் மிர்தால் விமர்சனம் செய்வது இ.க.க (மா-லெ) கட்சிக்கும் கூட பொருந்தும். சீனாவின் தலைவர் நமக்கும் (இந்தியா நாட்டிற்கும்) தலைவர் என்ற முழக்கம் ஒரு நாட்டின், தேசத்தின் மக்களை முழுவதும் கம்யுனிஸ்ட் இயக்கத்தில் இருந்து தனிமை படுத்தியது. ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டிற்கு தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற அடிப்படை கூட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களாக இருந்து பெரும் தியாகங்களை செய்தவர்களுக்கு தெரியவில்லை என்பது துரதிர்ஷ்டமானது.

இந்தியா என்பது பல தேசங்களின் சிறைக்கூடம் என்று இ.க.க (மா-லெ) கட்சி தனது திட்டத்தில் எழுதினாலும் நடைமுறை முழக்கமாக சீனாவின் தலைவர் நமக்கும் (இந்தியாவிற்கும்) தலைவர் என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்திய பிழை என்பது அக்கட்சி தலைவர்களுக்கு புரியவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்ற மா-லெ கட்சி தலைவர்களுடன் நேரிடையாகவும், கடிதம் வாயிலாகவும் இதை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தும் சாருமஜீம்தார் தலைமையிலான கட்சி உடனடியாக அந்த தவறை திருத்தவில்லை. இந்திய தேசியம், தமிழ் தேசியம், புரட்சிக்கான இந்தியா பற்றி பல தேசங்கள் வாழும் இந்திய துணை கண்டத்தில் - இந்திய நாட்டில் இன்னமும் கோட்பாடு ரீதியில் தீர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது..

காவிரி பிரச்சனையில் சிபிஎம் கட்சி தமிழ்நாட்டில் ஒர் அணுகுமுறையும், கர்நாடாகவில் இன்னொரு அணுகுமுறையும் கொண்டு இருக்கிறது. முல்லை பெரியாறு அணை, நீட் தேர்வு பிரச்சனைகளில் கேரள இடதுசாரி அரசாங்கத்திற்கும் தமிழ்நாடு சிபிஎம் கட்சிக்கும் வேறுபாடான நிலைபாடுகளே இருக்கின்றன. இதனால்தான் தமிழ்நாட்டில் தமிழரசன், மணியரசன், மசகுக, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா), த.நா.மா.லெ கட்சி உட்பட கம்யுனிஸ்ட் கட்சிகள் தங்களது புரட்சியின் எல்லையை காலப்போக்கில் தமிழ் தேசியமாக வரையறுக்கின்றன.

நக்சல்பாரி எழுச்சியின் பொழுது எழுந்த மக்கள் திரள் உடன் இணைந்த வீர செறிந்த போராட்டங்கள் இ.க.க.(மா-லெ) கட்சியாக மாறிய பிறகு மக்கள் திரள் பாதையை விட்டு அழித்தொழிப்பு பாதை ஒன்றை மட்டுமே தங்களது செயல் தந்திரமாக மாற்றியது. சீனாவின் நீண்ட மக்கள் யுத்த பாதை என்னும் போர் தந்திரம் இங்கு தனிநபர் அழித்தொழிப்பு பாதையாக இ.க.க.(மா-லெ) கட்சியின் தலைமை மாற்றி சுருக்கி சிதைத்து விட்டது. இந்த பாரதூரமான தவறான திசைவழியில் தோழர் சாருமஜீம்தார் செல்வாக்கு அதிகமாக இருந்தாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிரியின் இரத்தத்தில் கை நனைக்காதவர்கள் கம்யூனிஸ்டுகளே இல்லை, அடுத்த 10 ஆண்டுகளில் புரட்சியின் ஆண்டு என்று சாருமஜீம்தார் இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். இதன் விளைவாக நக்சல்பாரிகள் தலைமையில் இருந்த தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், மக்கள் திரள் அமைப்புகள் தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கலைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் நிலப்பிரபுகளை அழித்தொழிப்பு பாதை முதன்மையான தாக்கப்பட்டு சில அழித்தொழிப்பு நிகழ்வுகள் நடந்தன. இதனை காரணமாக்கி அன்றைய கருணாநிதி ஆட்சி பெரும் அடக்குமுறையை ஏவியது. கியு பிரிவு என்ற சட்டவிரோத உளவு பிரிவை உருவாக்கியது. இன்றுவரை ஈழப்போராளிகள், தமிழ்தேசிய அமைப்புகள், சிறுபான்மையினரை, பல நேரங்களில் எதிர் கட்சிகளையும் கூட ஒடுக்க கியு பிரிவு பயன்படுத்தப்படுகிறது. 70 களில் அடக்குமுறை அதிகமாகி பெரும் பின்னடைவை இ.க.க.(மா-லெ) கட்சி தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் சந்தித்தது.

இந்த அழித்தொழிப்பு பாதை கேரளாவில் குனிக்கல் நாராயணன், அஜீதா தலைமையிலான ஆயுதக்குழு பாதையாகவும், ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் பகுதியில் வேறு ஒரு பாதையில் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. 1971-72 க்குள் இந்திய அளவில் இ.க.க.(மா-லெ) கட்சியின் தலைமையும், தொண்டர்களும் பலர் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டு தியாகியானார் கள்.

மாவோவின் சீன கம்யூனிஸ்ட் கட்சி நக்சல்பாரி தலைவர்களுக்கு 1970 இல் வழங்கிய அறிவுரைகளில் ஒன்று "ஐக்கிய முன்னணி பற்றிய எம்.எல் கட்சி கருத்து தவறானதாகும். சில தளப்பகுதிகளை உருவாக்கிய பின்னர்தான், ஐக்கிய முன்னணி செயலுக்கு வரும் என்று நக்சல்பாரி தலைவர்கள் சொல்லியுள்ளீர்கள். இது இயந்திரகதியான புரிதலாகும். ஐக்கிய முன்னணி ஒரு நிகழ்வு போக்காகும்.

ஐக்கிய முன்னணி போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் செயல்படுத்த படுவதாகும்: மீண்டும் மீண்டும் ஐக்கிய முன்னணி உருவாகும். உடைந்து உருமாறும். ஐக்கிய முன்னணி ஒரு நிரந்தர அமைப்பு கிடையாது.

தொழிலாளர்களின், விவசாயிகளின் அடிப்படையாகும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் ஐக்கிய முன்னணிக்கு பின்னுள்ள முக்கிய புரிதலானது சுரண்டலாளர்க்கும் சுரண்டப்படுபவர்க்கும் ( அத்தகைய சுரண்டலாளர்கள் புரட்சியின் முதன்மையான இலக்காக இல்லாதவர்கள்) இடையிலான அய்க்கியம் என்பதாகும். முதலாளித்துவ வர்க்கம் முழுவதையும் தரகு முதலாளித்துவ வர்க்கம் எனப் பண்பு மையப்படுத்துதல் தவறாகும்” என்கிறது இந்த ஆவணம்.

50 ஆண்டுகளுக்கு பிறகும்கூட இதை புரிந்து கொள்ள முடியாத, நடைமுறை படுத்தாத மா-லெ கட்சி தலைமைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும் இங்கு உள்ளன. ஐக்கிய முன்னணியில் இடது –வலது திசை விலகல்கள் தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1933 யில் ஜெர்மன் பாராளுமன்ற கட்டிடம் கொளுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நாசிகளின் நீதிமன்ற கூண்டில் நிறுத்தப்பட்ட ஜார்ஜ் டிமிட்ரோவின் நீதிமன்ற உரை கம்யூனிச வரலாற்றில் ஈடு இணையற்றது. அந்த நீதிமன்ற வழக்கை பயன்படுத்தி கம்யூனிச சித்தாந்தத்தை காத்து அவர் ஆற்றிய வீரஞ்செறிந்த உரையில்,

“கம்யுனிஸ்டுகளின் நடைமுறைத் தந்திரத்தின் ஆரம்பம், முடிவு அனைத்துமே மக்கள்திரள் பணி (வெகுசனப்பணி), மக்கள் திரள் (வெகுசன) செயல்பாடுகள், ஐக்கிய முன்னணி ஆகியவை தானே தவிர அசட்டுத் துணிச்சல் நடவடிக்கைகள் அல்ல” என்கிறார். இ.க. க (மா-லெ) கட்சி செயல் தந்திரம் இன்றுவரை இதற்கு மாறாகவே உள்ளது. இப்படி விமர்சிப்பதனால் சட்ட வரையரைக்குள் நமது மக்கள்திரள் போராட்டங்கள் சுருக்கி கொள்ள வேண்டும் என்ற திசைவிலகலுக்கு நாம் புரிந்து கொள்ள கூடாது..

அய்க்கிய முன்னணி- 1. கீழிருந்து அய்க்கிய முன்னணி 2. மேலிருந்து அய்க்கிய முன்னணி, 3. நீண்ட கால அய்க்கிய முன்னணி 4. குறுகிய கால அய்க்கிய முன்னணி கூட்டு நடவடிக்கை-1.ஒரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சனைக்கான கூட்டு நடவடிக்கை 2. பகுதி பிரச்சனைக்கான கூட்டு நடவடிக்கை, 3. பொருளாதார பிரச்சனைக்கான கூட்டு நடவடிக்கை : ஒரு கட்சி -அமைப்பு தங்கள் செயல்படுத்தும் கூட்டம் - போராட்டத்திற்கு பலரை- பல அமைப்புகளை அழைத்தல், தேர்தல் கூட்டணி, தேர்தல் தொகுதி உடன்பாடு கூட்டணி.. இப்படியாக பல உள்ளன. சமூக மாற்றத்திற்கு மக்களை ஒன்று படுத்த, வலியை - இழப்பை குறைக்க, அல்லது ஒரு பிரச்சனையில் மக்களை ஒன்று படுத்த, வலிகளை - இழப்புகளை குறைக்க இத்ததைய செயல் உத்திகள் தேவையாகின்றன.

எல்லாவற்றையும் ஒரு குடுவையில் போட்டு குலுக்கி ஒன்றாக்கி ஒரே ஒரு அய்க்கிய முன்னணியாக புரிந்து கொள்வது குழப்பத்திற்கு இட்டு சென்று விடும்.. ஒவ்வொன்றுக்கும் அதற்க்கான முக்கியத்துவமும், காலமும், சூழ்நிலைமைகளும், தேவைகளும் சமூகத்தில் உள்ளன....

அரசியலை ஆணையில் வைப்போம் என்ற முழக்கத்தின் மையத்தை கம்யுனிச இயக்கம் உட்கிருகித்து கொள்வது அவசியம் இதை புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது

இ.க.க (மா-லெ) கட்சி பின்னடைவுக்கு பின் 1972 களில் மூன்று பிளவுகளாக பிரித்தது. நிலப்பிரபுகளை அழித்தொழிக்கும் ஒரே வழி என்ற பழைய பாதை, மக்கள் திரள் வழி என்ற பாதை, கூட்ட குழு எனும் நிலப்பிரபுகளை அழித்தொழிக்கும் பாதை, மக்கள் திரள் வழி இணைந்த பாதை என்பதாகும். இது கூட பிரதேசங்களாக முறையே தென்பிராந்திய குழு, மேற்கு பிராந்திய குழு, வட பிராந்திய குழு வாக பிரிந்தன என்பது கூடுதல் தகவலுக்காக. அதாவது பிராந்தியம், பிரதேச வாரியக தமிழ்நாட்டில் நக்சல்பாரி கட்சி பிளவுபட்டது. பின்பு கால போக்கில் தமிழ்நாடு முழுவதும் இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டன.

அவசர கால நிலைமை 1976யில் மக்கள்திரள் போராட்டங்களால் முடிவுக்கு வந்ததும், நாடு முழுவதும் பேரெழுச்சி அலைஅலையாக எழுந்தன. இவைகள் தந்த உற்சாகம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள் அணி அணியாக வீறுகொண்டு போராடினார்கள். இடதுசாரி மக்கள்திரள் அமைப்புகள் பெரும் எழுச்சிகளை பெற்றன. இந்த போக்கு 90 கள் இறுதி வரையிலும் அதற்கு பிறகும் கூட நீடித்தது.

லிபரேசன் கட்சி அழித்தொழிப்பு பாதையை கைவிட்டு மக்கள்திரள் வழிக்கு திரும்பினர், தேர்தல்களிலும் பங்கு கொண்டனர். மக்கள் யுத்தம், லிபரேசன் கட்சிகளின் மக்கள்திரள் அமைப்புகளில் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் திரண்டனர். வட இந்தியாவில் லிபரேசன் கட்சியும் தென் இந்தியாவில் மக்கள்யுத்த கட்சியும் மக்கள்திரள் போராட்டங்களை அனைத்து தளங்களிலும் பெரும் எழுச்சியுடன் நடத்தின.

80 களில் டெங்சியோ பிங் தலைமையினால முன்வைக்கப்பட்ட மூன்று உலக கோட்பாடு, உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம் முழக்கம், நீண்ட மக்கள் யுத்த பாதை திட்டம், சாருமஜீம்தாரின் இடதுசாகச வாதமும், சீனாவின் தலைவர் எங்களுக்கு (இந்தியாவிற்கு) தலைவர் என்ற புரட்சிக்கும், தேசியத்திற்கும் உள்ள உறவை துண்டித்த முழக்கம் போன்றவைகள் எல்லா மா-லெ கட்சிகள், குழுக்களிடம் உட்கட்சி விவாதங்களாக மாறின. இவைகள் பருண்மையான ஆய்வுகள், சுயபரிசீலனை, விமர்சனம்-சுயவிமர்சனம், சனநாயக மத்தியத்துவம் அடிப்படையில் நடைமுறை படுத்தவில்லை. இதனால் தமிழ்நாட்டில், இந்திய அளவில் மக்கள் யுத்த கட்சி பிளவுக்கு உள்ளானது.

2006 யில் மாவோஸ்ட் கட்சியாக மாறி இருந்த மக்கள் யுத்த கட்சியில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பலர் வெளியேறினர். இவர்கள் இன்னொரு அமைப்புகளாக பரிணமித்து தங்கள் செயல்பாடுகளை தொடர்ந்தனர்.. பின்பு அதுவும் இரண்டு பிளவுகளானது. லிபிரேசன் கட்சியும் சில பிளவுகளை சந்தித்தன. பெருந் தலைவராக புகழப்பட்ட தோழர் ஏ.எம்.கேவின் போல்ஷ்வீக குழு பத்திற்க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து போனது பரிதாபகரமானதாகும். மக்கள் கலை இலக்கிய கழகத்தில் இருந்து அரசியல் முரண்பாடுகள், சனயாகமின்மை காரணங்களால் அதன் 20 ஆண்டுகால செயலாளர் தோழர் மருதையன், நாதன், ஆம்புளி முனிராஜ ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

இப்படியான கம்யுனிஸ்ட் இயக்கத்தின் பிளவுகள் மூன்று மட்டங்களில் தோன்றும் முரண்கள் பின்னணியாக உள்ளன.

1. சர்வதேச அளவியிலானது. மூன்றாம் அகிலம், அதின் பின் சோவியத்து, சீன கம்யுனிஸ்ட் கட்சிகள் மாபெரும் விவாதங்கள் தொடர்ச்சியானது

2. இந்தியா முழுமைக்கான முரண்கள்..இந்தியா முழுவதும் கம்யுனிஸ்ட் கட்சி கட்டியமைத்தல், அதற்கான திட்டம், மூல, செயல் யுத்திகள், போராட்டங்கள்

3. தமிழ்நாட்டிற்க்கான குறிப்பான முரண்பாடுகள் அதாவது இந்தி மொழி திணிப்பு, நீட் தேர்வு, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை சிக்கல் என்பனவும், இந்திய கட்சி கட்டமைப்புக்கும் தமிழ்நாட்டில் கட்சி கட்டியமைப்புக்குமான உறவுகளும், விரிசல்களுக்கான பின்னணிகள்

மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதல்கள், தோழர்கள் லெனின் வழிகாட்டல் அகிலம் 1943யில் கலைக்கப்படும் வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு இருந்தது. தோழர் ஸ்டாலின் இறக்கும்வரை அவர் வழிகாட்டினார். அல்லது அவரது ஆலோசனைகள் இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பெற்று வந்தனர்.

இயக்கவியல் வரலாற்று பொருள்முதலியல் சமூக அறிவியல் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் பொதுவானது. ஆனால், சமூக வளர்ச்சி, வரலாறு, கட்டமைப்புகள் என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடாக இருக்கும் என்பதால் மார்க்சிய அறிவியல் குறிப்பான அந்தந்த சமூகத்திற்கான பருண்மையானதாக மாற்றுவது, வியாக்கானம, கருத்துரை கோட்பாடாக மாற்றுவது அந்தந்த சமூகத்தில் வாழும் கம்யுனிஸ்ட்டு கட்சி, அதன் தலைமை, தொண்டர்கள் என்று அனைவருக்கான கடமையாகும். இதைச் சரியாக நடைமுறைப்படுத்திய நாடுகள் புரட்சிகளில் வெற்றியை அடைந்தன. மற்ற நாடுகள் முட்டு சந்தில் தேங்கியும், பின்னடவை சந்தித்தும் நிற்கின்றன.

இந்தியா என்ற நாடு பிரட்டன் வருக்கைக்கு முன்னர் கிடையாது. மன்னர்களின் கோடுங்கோல் ஆட்சிகள்தான் இந்திய துணைகண்டம் முழுவதும் நிலவின. பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் காலனிய எதிர்த்த மக்கள்திரள் போராட்டங்கள், எழுச்சியின் ஊடகத்தான் இந்தியா என்றொரு நாடு உருவானது. தேசம், தேசிய இனம் பற்றிய மார்க்சிய கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பினால், மக்கள்திரள் எழுச்சினால் உருவாகும் எல்லைப்பரப்பும் கோட்பாடாக வளர்ச்சி அடைந்தது.

இந்திய நாட்டின், துணை கண்டத்தின் சமூக வளர்ச்சி ஒரே மாதிரி இல்லை. நால்வர்ணம் கங்கை சமவெளியில் கடும் கோட்பாட்டுடன் நிலவிய மாதிரி தமிழ்நாட்டில், தென்னிந்தியாவில் கிடையாது. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பழங்குடி அரசுகள்தான் 15 ஆண்டு நூற்றாண்டு வரை நிலவின. அதன் பிறகுதான் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் மன்னர்களால் பிராமணர்கள் கூலிக்கு கங்கை சமவெளியில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டனர்.

நால்வர்ணமும், சாதி படிநிலையும் ஆளும் மன்னர்கள் எளிதாக கருத்தியலாக தங்கள் ஆட்சி கீழுள்ள மக்களை ஆதிக்கச் செய்ய முடியும் என்பதே இதன் முதன்மை காரணம். அதேயே இந்திய பெருமுதலாளிகளும், கார்பரேட் கம்பெனிகளும், ஏகாதிபத்தியங்களும் 130 கோடிகள் மக்கள்கொண்ட ஒற்றை பெரும் சந்தைக்காக அந்த பார்ப்பனீய கலாச்சாரத்தை, பார்ப்பனிய மத வாழ்வியலை இந்திய பண்பாடு, வாழ்வியல் என்பதாக தொடர்ச்சியாக கட்டியமைக்க முயற்சி எடுக்கின்றன

சி.பி.அய் -யை பொருத்தவரை 1950 களில் வரை திட்டம் கிடையாது. பின்னர், தோழர் ஸ்டாலின் மற்றும் சோவியத் கட்சியின் வழியின் வழிகாட்டுதலில் திட்டம் மற்றும் செயல் உத்தி வழி தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இவை எவராலும் செயல்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தோழர் ஸ்டாலின் இயற்கை எய்தினார். குருச்சேவ் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சி சோவியத்து யூனியன் ஆட்சியை கைப்பற்றியது. இச்சமயத்தில் உலக அளவில் சோசலிச முகாமில் பிளவு ஏற்பட்டது. குருசேவ் தலைமையிலான சோவியத் கட்சி சமாதான சகவாழ்வு கொள்கையை, அதாவது சமாதானத்தின் மூலமே உலக சோசலிச புரட்சி வெற்றி அடைய முடியும் என்ற திரிபுவாத கோட்பாட்டை முன்வைத்தனர். அதை சி.பி.அய். கட்சி தலைமை அப்படியே ஏற்றுக்கொண்டது. மேலும், இந்திய பெருமுதலாளி வர்க்கத்தை தேசிய முதலாளி வர்க்கம் என்று வரையறுத்தது. காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியது. இதன் உச்சமாக “எமர்ஜென்சி” யை ஆதரித்து. “இந்திரா கம்யூனிஸ்டு கட்சியாக” செயல்பட்ட பெரும் குற்றத்தை செய்தது.

பின்னர், என்பதுகளில் “எமர்ஜென்சியை” ஆதரித்தது தவறு என்று சி.பி.அய். கட்சி தலைமையினர் சுயவிமர்சனம் செய்துக் கொண்டனர். அடிப்படை ஆவணங்களை பரிசீலிக்க தீர்மானித்தனர். இன்றுவரை இவர்களால் முடிவுக்கு வரமுடியவில்லை. சிவப்பு நிறக் கொடி, சுத்தி அரிவாள் என்பதைத் தவிர இவர்களிடம் மார்க்சிய அடிப்படைகள் எதுவும் இல்லை. முழுவதுமாக திரிபுவாதிகளாக சீரழிந்துள்ளனர்.

அடுத்து, 60 களில் சி.பி.எம் - மை பொருத்தவரை, மாவோவையே ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதுதான் “மாஸ்லைன்” “மக்களிடமிருந்து மக்களுக்கு” என்றெல்லாம் பாலபாடம் கற்க தொடங்கி உள்ளனர். குறிப்பான திட்டம், இடைக்கட்டம் என்பதெல்லாம் எப்பொழுது கற்பார்கள் என்று தெரியவில்லை.

செயலுத்திகளை இவர்கள் சரியாக வகுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆளும்வர்க்க கட்சிகளுக்கெதிராகத்தான் வகுக்கிறார்கள். அதுவும் தேர்தலை ஒட்டித்தான், தேர்தலை பிரதானப்படுத்தியே வகுக்கப்படுகிறது. முதலில், காங்கிரஸ் எதிர்ப்பு என்றிருந்தது.

பிறகு பா.ஜ.க எதிர்ப்பு என்று காங்கிரசை ஆதரித்தது. இப்பொழுது, திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து மே.வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று சீரழிந்து உள்ளது. இவர்களின் செயலுத்திகள் இவர்களின் நாடாளுமன்ற வாதத்துடன் தொடர்பு உள்ளதே தவிர மூலஉத்தியுடன் அல்ல. அதனால், மூலஉத்தியுடன் உறவில்லாத செயலுத்திகள் இயல்பாகவே திரிபுவாதத்தில் மூழ்குகின்றன.

இவர்களின் திட்டத்தின்படி பார்த்தாலும் கூட, இன்றைய கட்டத்தில் இந்துத்துவ பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணியை சி.பி.எம் கட்சி ஒருங்கிணைக்க வேண்டும். அதற்க்கான வாய்ப்பும், ஒப்பீட்டு அளவில் அணிகளின் பலமும் உடையதான இக்கட்சியே இருக்கின்றது. ஆனால் அந்த முயற்சிகள் குறைவாக உள்ளன. தேர்தல் கூட்டணிகளாகவே அந்த முன்னணிகள் உள்ளன. மக்கள்திரள் போராட்டங்களின் ஒர்மையை, இடதுசாரிகள் ஒர்மையை முன்னிறுத்துவதற்கு போதுமான முக்கியத்துவம் சிபிஎம் தலைமை அளிக்கவில்லை என்பதாக நடைமுறை உள்ளது.

இ.க.க (மா-லெ) கட்சி நக்சல்பாரியில் உழவர்கள் எழுச்சி உருக்கொண்டு, பீர்பூம், தைராய், சிரிகாகுளம், தர்மபுரி, தென்ஆற்காடு, சென்னை, கோவை, மதுரை, நெல்லை என்று பற்றி படர்ந்தது. இதுவரையிலான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இயக்கத்தின் வலது, இடது திசை விலகல்களை விவாதித்து விடைகாண முயன்றது.

இந்தியா பல்தேசிய இனங்களின் கூட்டமைப்பு, இந்தி மொழி மட்டுமல்ல அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும், உழவர்கள் புரட்சியின் மைய அச்சு, பாராளுமன்ற பாதை மாயை என்பனவற்றில் சரியான நிலைபாடு எடுத்தது.

ஆனால் விரைவில் இடது திசைவிலகலுக்குள் சருக்கி விழுந்தது. வழக்கம் போல் சீன புரட்சியை நகல் எடுத்து அதையே பிசகாமல் நடைமுறை படுத்த முயன்றது. சீனாவின் தலைவர் (மாவோ) எங்கள் (எங்கள் நாட்டின்) தலைவர், தனிநபர் அழித்து ஒழித்தல், 10 ஆண்டுகளுக்குள் புரட்சி என்று இடது திசைவிலகல், சாகசவாதத்திற்கு பலியானது. இதற்கு இ.க.க (மா-லெ) கட்சி பொது செயலாளராக இருந்த தோழர் சாருமஜீம்தார் முதன்மை காரணமாக ஆவணங்களை, வரலாற்றை திரும்பி பார்க்கையில் இன்று தெரிகிறது. கோட்பாட்டு பிரச்சனைகளில் விரிவான ஆய்வுகளை முன் எடுக்க தவறியது.

நக்சல்பாரி எழுச்சியில் எழுத்த பல நீரோட்டங்களை இணைக்க போதுமான முக்கியத்தும் அளிக்க இ.க.க(மாலெ) கட்சி தலைமை தவறியது. நடைமுறைக்கு அதிகம் அழுத்தம் கொடுத்து கொள்கை, அமைப்பு கட்டுதல் போன்றவற்றில் தவற்றை இழைத்தது. மக்கள்திரள் பாதையை, மக்கள்திரள் அமைப்புகளை, மக்கள்திரள் போராட்டங்களை முழுமையாக கைவிட்டது.

ஆட்சியாளர்களின் கொடூர அடக்குமுறைக்களுக்கு உள்ளாகியது. காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல, சிபிஎம் தலைமையிலான மே,வங்க இடது முன்னணி ஆட்சியும், பிற மாநில கட்சிகளின் ஆட்சியாளர்களும் பல தோழர்களை, தலைமையில் இருந்த தோழர்களை கொன்று குவித்தது. தலைமை இல்லாமல் செய்து கட்சி ஒருங்கிணைப்பை சிதறடித்தது

சீன கம்யுனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று நக்சல்பாரி எழுச்சியை புகழ்ந்தது. ஆனால் விரைவில் அது இ.க.க (மா-லெ) கட்சியின் கொள்கைகளை கடும் விமர்சனம் செய்தது. ஆனால் அன்று சாரு மஜீம்தார் தலைமையிலான இ.க.க (மா-லெ) கட்சி போகிற போக்கில் அதை புறக்கணித்ததாக வரலாறு நிகழ்வுகள் காட்டுகிறது.

ரசிய பாதையா - சீன பதையா அதாவது எழுச்சிவகை புரட்சியா - நீண்டகால மக்கள் யுத்தமா என்ற விவாதங்கள் நக்சல்பாரி எழுச்சியின் பொழுதுமட்டும் அல்ல, இந்த ஒரு நூறு ஆண்டு காலமும் கம்யுனிச இயக்கத்தில் நடைபெறுகிறது இன்றும் தொடர்கிறது.

இன்று 100க்கும் மேலாக மா-லெ குழுக்கள் உள்ளன, இதில் 30 குழுக்கள் மேல் செயல்தீரத்துடன் நடைமுறையில் இயங்கி கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் பத்திற்கும் மேலாக மா-லெ குழுக்கள் உள்ளன. இவைகளும் தங்களுக்கு இடையிலான கொள்கை முரண்களை ஆய்வுகள் - நடைமுறை - மீளாய்வு - நடைமுறை - மீளாய்வு என்ற இயக்கவியல் அடிப்படையில் தீர்க்க முடியவில்லை.

இடதுசாரி தமிழ் தேசிய குழுக்கள், இடதுசாரி பெரியாரிய அமைப்புகள், இடதுசாரி தலித் அமைப்புகளும் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. இவைகளும் தங்களுக்கு இடையிலான கொள்கை முரண்களை ஆய்வுகள் - நடைமுறை - மீளாய்வு செய்து இணைய முடியவில்லை

1920யில் மூன்றாம் அகிலத்தின் முன் நிறைவேற்றப்பட்ட கட்சித் திட்டத்தை இந்திய நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் இந்திய சமூக நிலைமைகளுக்கு ஏற்ப தொகுத்து எழுதுவது என்ற இரு தீர்மானங்கள் முழுமையாக இந்திய கம்யுனிஸ்ட் இயக்கம், அதன் கட்சிகள் நிறைவேற்றி உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஒரு நூற்றாண்டிற்கு பின்பும் விடை கூற முடியவில்லை.

ஆனால் இணைப்பிற்கான முயற்சிகள், கொள்கை ஆய்வுகள், விவாதங்கள், நடைமுறைக்கான கூட்டணிகள் தமிழ்நாட்டில் நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றன. அவற்றை இன்னும் ஆழமாக, விரிவாக ஒவ்வொரு அமைப்பும், இடதுசாரி அறிவுதுறையினரும் செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாக இருக்கின்றது

இந்து-இந்தி-இந்தியா, பார்ப்பனிய பாசிச பயங்கரவாதம், பார்ப்பனீய - ஏகாதிபத்திய கள்ள கூட்டு, பாராளுமன்ற பாதை போர் தந்திரமா - செயல் தந்திரமா, எழுச்சிவகை புரட்சியா - நீண்டகால மக்கள் யுத்தமா, சமுக நீதி - சனநாயகம் - அரசியல் சுதந்திரம் - செல்வத்தை அனைவருக்கும் சமமாக பங்கீடுவது என்பதில் கொள்கை முடிவுகள், பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணி, சாதி ஒழிப்பு, தேசியங்களின் தன்னாட்சி, மொழி கொள்கை, பெண்கள் விடுதலை, 10 கோடிக்கு மேல் உள்ள பழங்குடி சமூகங்களாக்கான திட்டம் இப்படி பல பல சிக்கல்களில் தீர்வுகள் பாதி கிணறுதான் கம்யுனிச இயக்கமும் அதன் பல்வேறு கட்சிகள்-குழுக்கள் தாண்டி இருக்கின்றன. பாதிக் கிணற்றை தாண்டுவது என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது புரியும்தானே?

பார்ப்பனீய-கார்ப்பரேட் பாசிச சக்திகள் பல்வேறுபாடுகளுக்கு இடையே ஒர் அணியாக கொள்கைரீதியாக அணிதிரண்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். கம்யுனிச புரட்சிகர அமைப்புகள், புரட்சியாளர்கள் ஒர் அணியாக திரண்டு சமூக மாற்றத்திற்க்கான இயக்கங்களை, அமைப்புகளை இணைத்து முன்கொண்டு செல்லமுடியாதா என்ன?

நிச்சயம் முடியும். மக்கள்திரள்களும், காலமும், பெரும் போராட்டங்களும் அதை சாதிக்க உந்துசக்திகளாக இருக்கும் என்பதுதான் நம் கண்முன்பு ஓளிரும் ஒரே ஓளிக்கீற்று! அதுதான் நூற்றாண்டு கால கம்யுனிச இயக்கத்தின் நம்பிக்கை!!

- கி.நடராசன்