எத்தனையோ பேர் மரணித்தாலும் சிலரின் மரணம் நமக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தரும். அப்படி ஒரு வருத்தத்தை தோழர் விளவை ராமசாமியின் மரணம் (11-06-2019) எனக்குத் தந்தது.
தோழரே...என்று அவர் அழைக்கும் பேச்சு ஒவ்வொரு முறையும் தாய் தன் குழந்தைக்குத் தரும் முத்தத்திற்கு ஒப்பானது...
அவரை கீற்று இணையதளம் மூலம் அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்..
கோவையின் லட்சக்கணக்கான தொழிலாளிகளில் தானும் ஒருவனாக பஞ்சு மில்லில் தனது வாழ்க்கையைத் துவக்கிய தோழர் விளவை ராமசாமிக்கு கம்யூனிசத்தின் மேல் ஏற்பட்ட காதலால் நக்சல்பாரிப் போராட்டத்தின் மேலுள்ள ஈர்ப்பால் ஒரு கம்யூனிஸ்டாக, தொழிற்சங்கவாதியாக வளர்ந்து பின்பு மா-லெ அரசியல் வழியில் பாட்டாளிவர்க்க ஆட்சியால் மட்டுமே இந்த சமூகம் விடுதலை பெறமுடியும் என்ற நம்பிக்கையில் புரட்சிகர அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தார்.
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தை அமைத்து தொழிலாளிகளை அரசியல்படுத்தி புஜதொமு என்ற புரட்சிகர தொழிற்சங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
கோவையிலுள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்தில்( NATIONAL TEXTILE CORPORATION) தொழிற்சங்கத் தேர்தலே நடத்தாமல் நிர்வாகத்திற்கு ஒத்துப்போகிறவர்களை மட்டும் தேர்ந்தெடுத்த அடிமைத்தனத்தை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் மூலம் நடந்த தேர்தலில் புஜதொமு வெற்றியும் தொழிற்சங்க அங்கீகாரமும் பெற்றது.
நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொழிலாளிகளின் உரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்பும் தனது போர்க்குணத்தால் தொழிலாளிகளுக்காக தினமும் ஆலைகளின் முன்பு கூட்டங்களை நடத்தி தொழிற்சங்கத்தை திறம்பட நடத்தினார்.
தான் சார்ந்த பஞ்சாலைத் தொழிலாளிகளுக்காக மட்டும் போராடாமல் தமிழகத்தை சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளையும், தேசிய முதலாளிகளையும் எதிர்த்து தொழிலாளிகளை திரட்டிப் போராடினார்.
மதவெறிக்குப் பலியான முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக தொழிலாளிகளைத் திரட்டுவதிலும், மதவெறியர்களை எதிர்கொள்ள அந்த மக்களுக்கு தைரியமூட்டுவதிலும் முன்னணியாக செயல்பட்டார்.
மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் கோவைப் பகுதியில் நிலைத்து நிற்க மறைந்த தோழர் மணிவண்ணன் மற்றும் தோழர் விளவை ராமசாமியே காரணம்.
பல போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை போலீஸ் அனுமதி கொடுக்காவிட்டாலும் நடத்திக் காட்டியவர்.
அமைதியாகப் போராடுங்கள் என்ற அதிகார வர்க்கக் குரலுக்கு எதிராக,
"அமைதியாக இருக்க வேண்டிய இடம் சுடுகாடு தான்- மக்கள் சமூகமல்ல" என்று முழங்கியவர்.
தன் உடலைக் கவனிக்காமல் 60 வயதிலேயே முடங்கிப் போனார்...
ராணித் தேனீ தெருத்தெருவாக அலைந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போல தோழர்களின் உரிமைக்காகப் போராடிய தோழர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தேவைப்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யாமல் தன்னை இந்த சமூகத்திற்குக் கொடுத்துவிட்டார்.
இனி நாம் தான் அவரின் பணியைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
அதற்காக கோவையில் 2016 ஆம் ஆண்டு மே தினப் பேரணி முடிந்த பின்பு நடந்த தெருமுனைக் கூட்டத்தில் தோழர் விளவை இராமசாமி பேசிய உரையை ஆழ்ந்து படித்தால் நமக்கான போராட்டப் பாதை எது எனத் தெரியும்...
இதோ அந்த உரை:
“எட்டு மணி நேர வேலையை தங்கள் போராட்டத்தின் தங்கள் தியாகத்தின் மூலம் உலகுக்கு வென்று கொடுத்தவர்கள் மே தினத் தியாகிகள்.
எட்டு மணி நேர வேலை மட்டுமல்ல இந்த முழு உலகமும் உழைக்கும் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என முதலாவது அகிலம் முடிவெடுத்து மே நாளை உலகத் தொழிலாளர் தினமாக எங்கெல்ஸ் அறிவித்தார்.
இதன்படி எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரத் தூக்கம், எட்டு மணி நேர ஓய்வு என இருந்ததை சர்வதேச அகிலம் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேரத் தூக்கம், எட்டு மணி நேர அரசியல் என மாற்றி அமைத்தது.
மே நாள் என்பது கொண்டாட்ட நாள் அல்ல, மே தின சபதம் எடுக்க வேண்டும். மே தினச் சூளுரை எடுக்க வேண்டும். இது வரை முதலாளித்துவத்தை முறியடிக்க என்ன செய்தோம்; இனிமேல் என்ன செய்ய வேண்டும் என கணக்குப் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள் மே நாள்.
மே நாளுக்கு ஜெயா, கருணாநிதி, ரோசையா, விஜயகாந்த், வாசன் என எல்லோரும் வாழ்த்து சொல்கிறார்கள். இது போலி கம்யூனிஸ்டுகள் ஓட்டுப் பொறுக்கப் போனதால் வந்த ஒழுக்கக் கேடு. நம்முடைய முதல் மே தின சூளுரை ஜெயாவை மே தின வாழ்த்து சொல்ல அனுமதிக்கக் கூடாது என்பதாக இருக்க வேண்டும்.
குற்றவாளி ஜெயா இப்போது கொடிசியாவில் காசு கொடுத்து கூட்டம் சேர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளுக்கு வரலாறு கொடுத்த தண்டனை என்ன? இத்தாலி பாசிஸ்டு முசோலினியை செம்படை தூக்கில் ஏற்றியது, செத்த பிறகு அவன் பிணத்தை எல்லோரும் காறித் துப்ப வேண்டும் என நாலைந்து நாள் தொங்க விட்டார்கள். வெயிலிலும் மழையிலும் இரவிலும் பகலிலும் தூக்கில் உயிர் போன பிறகும் தொங்கினான். இதனைக் கேள்விப்பட்ட ஹிட்லரும் நம்மையும் இதே போல்தான் தொங்க விடுவார்கள் என்று பயந்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் இதே முடிவு தான் நேரிடும். ஜெ.வுக்கு இதைத்தான் வரலாறு பரிந்துரைக்கும். இதனை உருவாக்க நாம் மே தினச் சூளுரை எடுக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்றுக் கொள்பவர் மே தின சபதம் எடுக்கும் தகுதியைப் பெற முடியாது. சம்பளம் போனஸ் வேண்டும் என்பவர் மே தின சூளுரை எடுக்கும் தகுதியைப் பெற முடியாது. வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் அளவுக்கு வளர்த்துச் செல்பவர் எவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்டு. கம்யூனிஸ்டுகளுக்குத் தான் மே தின சூளுரை எடுக்கும் அருகதை உண்டு. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்த வேண்டும். இதுவே நமது மே தினச் சூளுரை.
இந்த மே தினச் சூளுரையே விவசாயம்-நெசவு-சிறுவணிகம் சிறு தொழில்களை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதுதான்.
இப்போது கோவை நகரில் வெயில் கொளுத்துகிறது. கோவை நகரம் மட்டுமல்ல தமிழ்நாடே வெயிலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துவிட்டது. இதற்கு என்ன காரணம்? தானாகவே நடந்து விட்டதா? இல்லை. இதற்கு கார்பரேட் முதலாளிகளே காரணம். ஆந்திராவில் 2015ஆம் ஆண்டு வெயில் கொடுமையால் ஆயிரம் பேருக்கு மேல் மாண்டார்கள். இந்த ஆண்டும் இதுவரை 140 பேர் மாண்டு போனார்கள். கரீம் நகரில் அடுப்பில்லாமல் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் வெப்பத்தில் ஆம்லெட் ஆக மாறுகிறது. அதைப் போல கோவையையும் நாம் போராட விட்டால் மாற்றி விடுவார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் குழந்தைகள் நாம். மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஈரமான காற்றை அனுப்பி கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக்கியது. மேற்கு தொடர்ச்சி மலைகள் சிறுவாணியை நமக்கு அனுப்பி நமது மாநகரத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அது நொய்யலை அனுப்பி நமது புறநகர்ப் பகுதியை தென்னை, வாழைத் தோப்புகளாக்கியது. பவானி நதியை அனுப்பி நம்மை பரவசப்படுத்தியது. குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது.
நொய்யல் நதியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றவாளிகள் யார்? உள்ளூர் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் தான். நொய்யல் என்பது கோவையின் பெருமை. நொய்யல் காவிரித் தாயின் பெரிய மகள். நல்லது கெட்டதுக்கு பேரூர் போனால் 20 வருடங்களுக்கு முன்னால் நொய்யல் நாணல் புதர்களினூடாக நாணி நடந்து வருவாள். ஒரு சொம்பில் துணியால் தலைப்பாகை கட்டி மொண்டு குடித்தால் தொண்டைக் குழியில் தேனாக இறங்குவாள். இன்று, நொய்யல் நதியைப் பேரூரில் காண முடியவில்லை. நொய்யல் ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு பார்ப்பனர்கள் காசு வாங்கி திதி கொடுப்பார்கள். பார்ப்பனர்கள் பேரூரில் சங்கமே அமைத்திருந்தார்கள். ஆக கடைசியில் நொய்யலுக்கும் திதி கொடுத்துவிட்டு வேறுபக்கம் போய் விட்டார்கள். நதியைக் கொன்றவனை நாம் நாசம் செய்ய வேண்டும். இதுவே மே தினச் சூளுரை.
பவானி நதியில் சாயக்கழிவு நீரை கலந்தவன், விஸ்கோஸ் கழிவு நீரைக் கலந்தவன், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாங்கி தியானலிங்கம் அமைத்து காட்டை அழிப்பவன் யார்? ஜக்கி வாசுதேவ். ஜக்கி வாசுதேவுக்கு சொம்பு தூக்குவது யார் ? கோவையின் எழுத்தாளர்கள், முதலாளிகள், தாமிரா ரிசார்ட் உரிமையாளர் சிறுதுளி வனிதா மோகன், சின்மயானந்தா மிஷன், காருண்யா தினகரன் இந்தக் கூட்டம் தான் மேற்குத் தொடர்ச்சி மலையை அழித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களை விரட்டி அடிக்க வேண்டும். இன்றே இப்போதே செய்ய வேண்டும். இல்லையென்றால் நொய்யலை அழித்ததைப் போல பவானியையும் அழித்து விடுவார்கள் சிறுவாணியையும் இல்லாமல் செய்து விடுவார்கள். சிறுவாணி இல்லாத கோவையைக் கற்பனை செய்து பாருங்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு இல்லாத, ஈரக்காற்று இல்லாத கோவையைக் கற்பனை செய்து பாருங்கள். இவை எல்லாம் அழிந்து விட்டால் கரீம் நகரில் நடப்பது போல் கோவை வீதிகளிலும் ஆம்லெட்தான் போட வேண்டும்.
இவையெல்லாம் நடக்காது. கூடுதலாகப் பயமுறுத்துகிறார் என சிலர் நினைக்கலாம். அவர்களைப் பார்த்து நாம் கேட்கிறோம் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் நூற்றுக்கணக்கான மில்கள் மூடப்படும் என்று யாராவது நினைத்தீர்களா? ஆனால் மூடப்பட்டு விட்டதே! தலையில் பஞ்சோடும், கையில் வெற்றிலைச் செல்லத்தொடும் பஞ்சாலைகளில் வேலை முடித்து கோவை நகர வீதிகளை அலங்கரித்த நம் தாய்மார்கள் எங்கே? ஆஃப் நைட், ஃபுல் நைட் பகல் என பஞ்சாலைகளில் வேலை முடித்து அல்லும் பகலும் நடமாடி, டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசி கோவை நகரத்தை தூங்கா நகரமாக்கிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் எங்கே? இதுவெல்லாம் நடக்கும் என நினைத்தோமா? ஆனால் நடந்து விட்டதே! அது போலத்தான் இனியும் அமைதியாக இருந்தால் போராடாமல் இருந்தால் நகரை நாசமாக்கி விடுவார்கள்.
நமது முன்னோர்கள், நமது பெற்றோர் நமக்கு மலையையும் நதியையும் காப்பாற்றி நமக்குக் கொடுத்து விட்டு போனார்கள். நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கப் போகிறோம். சிறுவாணி இல்லாத கோவையா தரப்போகிறோம்? எனவே இன்றே இப்போதே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளையும் கார்ப்பரேட் சாமியார்களையும் அடித்து விரட்ட வேண்டும் இதுவே நமது மே தினச் சூளுரை.
இந்திய வனச் சட்டத்தைத் திருத்தி 10 கோடி ஹெக்டேர் நிலத்தை ரிசர்வ் பாரஸ்டை பராமரிப்புக்கு தனியாருக்கு கொடுக்கப் போகிறான். இயற்கையையும் மனித குலத்தையும் ஒரு சேர அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தை இந்த மண்ணிலிருந்தே காலி செய்ய வேண்டும். பேஸ்புக், டிவிட்டர் பின்னூட்டம் நிலைத் தகவல் மூலம் அல்ல. களமாடி சிறை சென்று போராட வேண்டும்.
மத்திய அரசின் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டமிடுகிறது. தமிழ் இந்து ஏப்.25 இல் செய்தி வந்துள்ளது. 77 பொதுத் துறை நிறுவனங்கள் 27,360 கோடி நட்டத்தில் இயங்குகிறது இதில் கோவையில் இயங்கும் 5 என்.டி.சி மில்களும் அடக்கம்.
விஜய் மல்லையா என்ற ஒருவனின் வாராக்கடன் சுமார் 9,000 கோடி ரூபாய் அம்பானி வைத்திருப்பதோ 40,000 கோடி ரூபாயை நெருங்குகிறது. 2015 மார்ச் வரை 2.67 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் மத்திய அரசுக்கு உள்ளது. (தமிழ் இந்து – செப்.28-15) இதை வசூல் பண்ணத் துப்பில்லை 27,300 கோடி ரூபாய் நட்டத்துக்காக பொதுத் துறையை விற்பது என்.டி.சி.யை மூடுவது பச்சை அயோக்கியத்தனம்.
ஆக மக்களுடைய, தொழிலாளர்களுடைய பணத்தை வரியாகப் பெற்று முதலாளிகளுக்கு கடனாகக் கொடுத்து விட்டு அதனை வசூலிக்க துப்புக் கெட்ட மோடி கும்பல் பொதுத் துறையை விற்கிறான். இதில் யார் தேசத் துரோகி ? பொதுத் துறையை விற்கிற புரோக்கர் வேலைக்கு உன்னை எதற்கு நாங்கள் ஓட்டு போட்டு பிரதமர், முதலமைச்சர் என்று ஆக்கணும்?
நட்டம் என்று சொல்லி இவர்கள் இதுவரை விற்ற, விற்கப்போற பொதுத் துறை நிறுவனங்களை இவ்வளவு பெரிய இந்திய அரசை விட திறம்பட நிர்வாகம் பண்ணி ஒரு தனியார் முதலாளி லாபம் கொண்டு வர முடியும் என்றால் என்ன அர்த்தம் ?
இத்தனை அறிவாளிகள், அருண் ஜெட்லி, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து அரசாளுகிற உன்னை விட ஒரு தனியார் சிறப்பாக செயல்பட முடியும் என்றால் என்ன பொருள்?
அரசு மருத்துவமனையை தனியாருக்குக் கொடுக்கிறாய்; அரசுக் கல்லூரியை தனியாருக்குக் கொடுக்கிறாய்; உன்னோட அரசை விட ஒரு தனியார் லாபகரமாக செயல்படுத்த முடியுது என்றால் என்ன பொருள் ?
ஆக, எந்த ஒரு நிர்வாகத்தையும் உன்னை விட உன் அரசை விட தனியார் சிறப்பாக செய்ய முடியுமென்றால் உன்னை எதுக்கு நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்? அம்பானிக்கும் அதானிக்கும் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி விட வேண்டியது தானே?
உன்னாலே முடியலை என்று நீயே சொல்லிவிட்ட பின்பு ஒதுங்கிக் கொள்வதுதான் உனக்கு மரியாதை, இல்லையென்றால் ஒதுங்க வைக்கும் தொழிலாளி வர்க்கம். அதற்கு ஒரு சின்ன டீஸர் தான் பெங்களூரு தொழிலாளர் போராட்டம். தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று எவனாவது சொன்னால் பளார் என்று அவன் முகத்தில் அடிக்க வேண்டும். பெங்களூர் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் எப்படி போராட வந்தார்கள்; போராடி வெற்றி கண்டார்கள். உனக்கும் எனக்குமான வருங்கால வைப்பு நிதியை களவாட சட்டம் போட்ட மோடி கூட்டத்தை சட்டையை பிடித்து உலுக்கினார்கள். இதற்குப் பதில் சொல் என்று அவநம்பிக்கைவாதிகளைத் திருப்பிக் கேட்க வேண்டும்.
பெங்களூர் தொழிலாளர் போராட்டம், அதுவும் பெண்கள் நடத்திய போராட்டம். இந்திய தொழிற்சங்க வரலாறு இருண்டு கிடந்தது. அதில் ஒளிக்கீற்றாக உதயமாகி உள்ளது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மூணார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனைகட்டி போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அது போல நாமும் திரண்டு போராடினால் நம் உரிமைகளைப் பெற முடியும். கார்ப்பரேட் முதலாளிகளை வீழ்த்த முடியும்.
1887-ல் தூக்கில் ஏற்றப்பட்ட மே தினத் தியாகிகளில் ஒருவரான தோழர் அகஸ்டஸ் ஸ்பைஸ் தூக்கு மேடையில் நின்று முழங்கினார்.,
“இன்று நீங்கள் எங்கள் கழுத்தை நெரிக்கலாம், குரலை முடக்கலாம்; ஆனால் எங்கள் மவுனம் ஆற்றல் மிகுந்த சக்தியாக வெளிப்படும் காலம் வரும்”
தோழர் அகஸ்டஸ், உங்கள் மவுனத்தை இங்கே சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் மூலம் மொழிபெயர்க்கிறோம். ஆற்றல் மிக்க சக்தியாக உருமாறி இயற்கையையும், மனித குலத்தையும் நாசம் செய்கிற முதலாளித்துவத்தை அழிப்போம் என்று சூளுரைக்கிறோம்.” என்று முடித்தார்.
இப்போதும் தோழர் விளவை ராமசாமியின் மரணமும் மவுனத்துடனே நிகழ்ந்தது..
நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசிய தோழரின் அண்ணன் நடராஜன், "நான் எனது சகோதரனை இழந்ததாக வருத்தப்பட்டேன் ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான தோழர்களின் தலைவனை இழந்துவிட்ட வருத்தம் எனக்குண்டு" என்றார். அத்துடன் எனது சகோதரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் அனைவரும் அவரின் கொள்கைகளை நிறைவேற்றப் பாடுபடவேண்டும் என்று முடித்தார்.
பாடகர் கோவன் பேசும் போது, "எங்களுக்கு துணிவைக் கொடுத்தவர், நல்ல சொற்களைக் கொடுத்தவர், NTC மில் தேர்தலின் போது பாடிய பாடல் வரிகள் தோழர் விளவை ராமசாமி போட்ட பிச்சை" என்றார்.
.கோவையில் காவி தோற்பதற்கு சிவப்பு தேவைப்பட்டது. அதற்காகப் போராடியவர் விளவை ராமசாமி. நாமும் போராடுவோம் காவி இருளை, கார்ப்பரேட் பாசிசத்தை துரத்தியடிக்க ....
- தருமர்