மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம், (விவசாயிகள் விடுதலை முன்னணி) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகியவற்றில் தற்போது அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும், இதற்கு முன்னர் செயல்பட்டு விலகி விட்ட தோழர்களுக்கு

ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு எழுதும் அறைகூவல் அறிக்கை!

தோழர்களே!

இன்று நம் நாடும் நாட்டு மக்களும் கடந்த 100 ஆண்டு கால கம்யூனிச இயக்க வரலாற்றில் இதுவரையில் காணாத அளவுக்கு கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறோம். நாட்டின் உழைக்கும் சாதியினரும், உழைக்கும் வர்க்கத்தினரும் பார்ப்பன இந்துத்துவ தாக்குதலுக்கும், அதனுடன் இணைந்த உலகளாவிய முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

நாடெங்கிலும் உழைக்கும் மக்கள் மீதும், ஒடுக்கப்படும் பிரிவுகள் மீதும் கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

உதாரணமாக, காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் 6 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர்; இணையம் தடை செய்யப்பட்டுள்ளது; பத்திரிகைகள் முடக்கப்பட்டுள்ளன; இந்திய அரசுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் கூட சிறை வைக்கப்பட்டுள்ளனர்; அங்கு என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரியாதபடிக்கு உள்நாட்டு, சர்வதேச ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் போதுமான ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்று முத்திரை குத்தப்பட்டு 19 லட்சம் மக்கள் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டுள்ளார்கள். அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் இந்துக்களை விடுவிப்பதற்காக பா.ஜ.கவின் மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட இசுலாமியர்கள் அல்லாதவர்களை விடுவிக்கும்படி உத்தரவிட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறது.

இதைப் போல நூற்றுக்கணக்கான வழிகளில் நமது நாட்டின் ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக சிறுபான்மை இசுலாமியர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், பகுத்தறிவுவாதிகள் மீதும், அறிவியல் மீதும், பேச்சு சுதந்திரத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கடுமையான அடக்குமுறையின் உச்சகட்ட வெளிப்பாடுகள் இவை. ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி ஆட்சியில் யூதர்களைப் போல இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி வதை முகாம்களில் அடைப்பதற்கான தயாரிப்புகளை மோடி தலைமையிலான இந்துத்துவ பயங்கரவாத அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் புரட்சிகர சக்திகளான நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? மாநாடு போடுகிறோம், பேஸ்புக்கிலும், இணையத்திலும் கண்டனம் வெளியிடுகிறோம். ஒரு அரசியல் கட்சி என்ற பெயரில் கண்டன அறிக்கை கூட வெளியிட முடியாத அவல நிலையில் இருக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பு கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை எதிர்த்து பிப்ரவரி 23-ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தவிருக்கிறது. இதில் இந்துத்துவ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முன்னணி ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அமைப்புத் தோழர்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆண்டுகால அரசியல் செயல்பாட்டுக்குப் பிறகு இன்று நம் நாட்டு மக்களை கடுமையாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் எதிராக மாநாடுகள் போடுவதோடு நின்று விடும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை. இதே போன்ற ஒரு மாநாட்டை சென்ற 2019-ம் ஆண்டும் பிப்ரவரி 23 அன்று மக்கள் அதிகாரம் நடத்தியது என்பது நினைவிருக்கும்.

இதற்கிடையில் இந்துத்துவ கார்ப்பரேட் சக்திகள் தமது நிகழ்ச்சி நிரலை அடுத்தடுத்து அமல்படுத்திக் கொண்டு வருகின்றன. அதை எதிர்த்துப் போராடும் மாணவர்களும், இசுலாமியப் பெண்களும், ஜனநாயக சக்திகளும் புரட்சிகரத் தலைமை இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளனர்.

இது ஏன் என்று சிந்தித்துப் பார்ப்போமா?

"இந்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்த ஒரே அமைப்பு", “இந்தியாவிலேயே இந்திய சமூகத்தைப் பற்றியும், புரட்சி பற்றியும், போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றியும் ஆவணங்களை உருவாக்கிய ஒரே அமைப்பு" என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயல்பட்ட தோழர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும், தியாகங்களும் என்னவாயின? இன்றைக்கு ஏன் இப்படிப்பட்ட கையறு நிலையில் இருக்கிறோம்?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண தைரியம் இல்லாமல், சென்ற ஆண்டு நடத்தப்பட்ட அமைப்பு மாநாடு இந்திய சமூகம் பற்றிய ஆய்வு பற்றியோ, போர்த் தந்திரம் பற்றிய கேள்வி மீதோ, முந்தைய 8 ஆண்டு காலச் செயல்பாடுகள் மீதோ பரிசீலனை இல்லாமல் நடந்து முடிந்தது.

1980-களில் தோழர்களின் உழைப்பால் உருவான ஆவணங்கள் நடைமுறைப் படுத்தப்படவே இல்லை என்பதுதான் இந்த அவல நிலைக்கான அடிப்படையான காரணம். புதிய ஜனநாயகப் புரட்சி, நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை, கிராமப் புறங்களில் செந்தளப் பிரதேசங்கள் அமைத்து படிப்படியாக நகர்ப்புறங்களை சூழ்ந்து கைப்பற்றுவது முதலான கோட்பாட்டு முடிவுகளை அமைப்புத் தலைமை 40 ஆண்டுகளாக நடைமுறையில் கடைப்பிடிக்கவே இல்லை என்பது ஊரறிந்த உண்மை.

வேறு என்னதான் செய்தோம்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே பிரபலமாக இருந்த திராவிட இயக்கத்தின் பார்ப்பனீய எதிர்ப்பையும், 1990-க்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதையும் நமது செயல்பாட்டிற்கான அடிப்படையாகக் கொண்டோம். முன்னணி திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் பிழைப்புவாத அரசியலிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சீரழிவு அரசியலிலும் மூழ்கியிருந்த நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை போர்க்குணத்துடன் முன்னெடுத்துச் செல்வதில் குறிப்பிடத்தக்க பெயரை ஈட்டினோம். குறிப்பாக, சமீப காலம் வரை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகள், கீழைக்காற்று வெளியீட்டகம் போன்றவை நமது அமைப்பின் மேற்சொன்ன அரசியல் கருத்துக்களை நிலைநாட்டும் வலுவான ஆயுதங்களாக இருந்தன. (இப்போது புதிய செயல்தந்திரத்தின் கீழ் இந்தப் பத்திரிகைகளும் கலைக் குழுவும் தனது வழக்கமான துடிப்பான செயல்பாட்டை இழந்து முடங்கிப் போயுள்ளன). 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வினவு இணையதளமும் ஒரு இணைய செய்தித் தளமாக சுருங்கி இன்று செயல்பட்டு வருகிறது.

இத்தோடு மாணவர் அணி, வழக்கறிஞர் அணி ஆகியவற்றின் மூலமாக ஈழப் பிரச்சனை, கூடங்குளம் அணுஉலைப் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை போன்றவற்றில் தலையீடு செய்தோம். 2015-க்குப் பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலமாக விவசாயிகள் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, தமிழக உரிமைகள் ஆகியவற்றை முன் வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

இவ்வாறு, பார்ப்பன பாசிச எதிர்ப்பு மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற நமது முந்தைய செயல்தந்திரமும், 2015-ல் நிறைவேற்றப்பட்டட "கட்டமைப்பு நெருக்கடி" என்ற இப்போதைய செயல்தந்திரமும் நமது அரசியல் கோட்பாட்டு ஆவணங்கள் வகுத்து வைத்த புதிய ஜனநாயகப் புரட்சியின் வர்க்க அரசியலையோ, போர்த் தந்திரத்தின் பாதையிலோ செயல்படவில்லை. எனவே, இதன் விளைவாக நமது அமைப்பு செயல்பாடுகள் புரட்சிகர இலக்கில்லாமல், அவ்வப்போது ஆளும் வர்க்கங்கள் உருவாக்கும் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுடன் நாமும் இணைவது என்ற வால் பிடித்துச் செல்லும் போக்காகவே முடிந்து விட்டன.

இத்தகைய போராட்டங்களில் போர்த் தந்திர ரீதியில் பங்களிப்பு செய்ய வேண்டிய வர்க்க அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணியும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இவற்றிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் விடுதலை முன்னணி 2015-க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்பட்டு கலைக்கப்பட்டு விட்டது. தொழிற்சங்கத்தில் அணி திரட்டப்பட்டுள்ள தொழிலாளர்களை பொருளாதாரப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தாண்டி அரசியல் ரீதியில் பயிற்றுவிப்பதற்கான அடிப்படை இல்லாமல் போயிருக்கிறது. அத்தகைய அடிப்படை நமது அரசியல் கோட்பாட்டு தலைமைக்கே இல்லை என்பதுதான் இதற்கான காரணம்.

இந்நிலையில் செயல்படும் தோழர்களின் கவனம் எல்லாம் பத்திரிகை விற்பனை, புதிய தொடர்புகளை வென்றெடுப்பது, அமைப்பின் செல்வாக்கை உயர்த்துவது என்ற திசையில் மட்டுமே திருப்பி விடப்படுகின்றன. எந்த ஒரு மக்கள் திரள் போராட்டத்திலும் எத்தனை பேரை அமைப்புக்கு வென்றெடுப்பது என்ற வகையிலேயே கவனம் செலுத்தும்படி தலைமை வழிகாட்டி வருகிறது.

புதியவர்களை அமைப்புக்குள் இணைக்கவும், அமைப்பில் சேர்ந்தவர்கள் பிற அமைப்புகளை நாடிப் போய் விடாமல் தடுக்கவும் ஒரு இழிவான, கேவலமான குறுங்குழுவாதப் போக்கு ஊக்குவிக்கப்படுகிறது. நம்மிடம் இந்தியாவின் பருண்மையான நிலைமைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வலுவான மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியல் கோட்பாட்டு அடிப்படை இல்லாத நிலையில், பிற அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் 'திரிபுவாதி', ‘ஓடுகாலி', ‘இடது சாகசவாதி', ‘பின்நவீனத்துவவாதி', ‘பிழைப்புவாதி' என்று முத்திரை குத்தப்படுகிறது. இது பிற அமைப்புகளை பகைவர்களாகப் பார்ப்பதாகவும், அறிவு ரீதியான உரையாடலுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் முடிந்து, நம்மை முடக்கி, குறுக்கிப் போட்டது.

புரட்சியை நோக்கிய பயணம் எதிர்பார்த்தபடி இல்லை என்பதை உணர்ந்தும், அமைப்புக்கு வெளியில் முன் வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கிப் பரிசீலித்தும், அமைப்புக்குள் அரசியல், சித்தாந்தம் மற்றும் அமைப்புரீதியான உட்கட்சிப் போராட்டம் நடத்த முற்படும் தோழர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு முடக்கப்படுகிறார்கள். இதற்காக அமைப்பின் ரகசிய முறை கேடாக பயன்படுத்தப்படுகிறது. தலைமையின் தவறுகளையும், பகுதிப் பொறுப்பாளர்கள், குழு பொறுப்பாளர்களின் தவறுகளையும் எதிர்த்த உட்கட்சிப் போராட்டங்களை முடக்கிப் போடுவதற்கு ரகசிய முறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

வேலைத் திட்டம் போடுவதிலும், அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்வதிலும் அணிகளின் முன்முயற்சியை முடக்கிப் போடும் விதமாக அதிகாரத்துவப் போக்கில் உத்தரவிட்டு வேலை வாங்கும் அணுகுமுறை ஜனநாயக மத்தியத்துவ செயல்பாட்டை பலிவாங்குகிறது. அணிகளை சிந்திக்காமல் ’சொன்னதைச் செய்’, என தலைமையின் முடிவுகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கலாச்சாரம் வளர்க்கப்பட்டு வருகிறது.

இவற்றின் உச்சகட்டமாக 8 ஆண்டுகள் அமைப்பு செயல்பாடுகளையும், தலைமையின் முடிவுகளையும் பரிசீலிக்கும் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுத்து கட்சியின் பிளீனம் நடந்து முடிந்திருக்கிறது.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் அமைப்பாக செயல்படுவதுதான் சரியானது என்றும், உள்ளே இருந்தே போராடி சரி செய்வோம் என்றும் அமைப்புக்குள் இருக்கும் தோழர்கள், தமது போராட்டத்தை நடத்துவதற்கு தேவையான வாய்ப்புகள் மறுக்கப்படுவதை மேலும், மேலும் எதிர்கொள்கிறார்கள். மேலும், காதல், திருமணம், பாலியல் போன்ற விவகாரங்களில் பழைய சாதிய, நிலவுடைமை கண்ணோட்டத்திலான அமைப்பு வழிகாட்டல் காரணமாக பல தோழர்கள் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை எதிர் கொள்வதோடு, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அமைப்புக்குள் தொடர்ந்து போராடும் வாய்ப்பு மறுக்கப்பட்டோ, வேறு வகையிலோ வெளியேறிய தோழர்களில் பலர் கடுமையான பொருளாதார சிக்கல்களிலும், உளவியல் பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக, முழுநேரமாக அமைப்பு வேலைகளில் ஈடுபட்டு அமைப்பின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த தோழர்களை திடீரென்று எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கைவிடுவது கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்தப் பிரச்சனைகளை சமாளித்து தோழர்கள் போராடி மீள்கின்றனர். ஒரு சிலர், அந்தப் போராட்டத்திற்கு மத்தியில் புரட்சிகர அரசியலில் ஈடுபட முடியாமல் போகின்றனர். பல தோழர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ இணைந்து அந்த வரம்புக்குள் தொடர்ந்து அரசியல் பணி செய்து வருகின்றனர்.

இவ்வாறு வெளியேறிய சக தோழர்கள் முன் வைத்த அரசியல் / கோட்பாட்டு விமர்சனங்களை இருட்டடிப்பு செய்து அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பல வகையான அவதூறுகளை செய்வதும் அமைப்பின் குறுங்குழுவாதப் போக்கின் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது.

இந்நிலையில், அமைப்புக்குள் செயல்படுபவர்களில் ஒரு சிலர் புரட்சிகர அரசியலில் நம்பிக்கை இழந்து, தமது சொந்த வாழ்க்கை நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே, அமைப்பிலும் செயல்படுவது என்ற சமரச நிலைக்கு வந்து விடுகிறார்கள். இது பொறுப்பாளர்கள், பகுதிப் பொறுப்பாளர்கள் மட்டத்தில் மிக மோசமான விளைவுகளை தோற்றுவித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள பல வெளியேறிய, இன்னும் உள்ளே இருக்கிற தோழர்களுடன் உரையாடியதில் பொறுப்பாளர்கள் தமது பொறுப்பில் உள்ள தோழர்களை உத்தரவிட்டு வேலை வாங்கும் அதிகாரத்துவ போக்கே புரையோடி போகச் செய்துள்ளது என்று தெரிய வருகிறது.

மேலும் சாதிய மனநிலையுடன் தோழர்களை நடத்துவது, சொத்து சேர்ப்பது, கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது என்ற கலாச்சார சீரழிவுகள் சில பொறுப்பாளர்கள் மத்தியில் ஊடுருவியிருக்கிறது என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலும் கிடைத்திருக்கிறது. இத்தகைய ஒரு சில பொறுப்பாளர்களின் செயல்கள் ஒட்டு மொத்த அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும் இத்தகைய நபர்களின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அமைப்பின் அரசியல், அமைப்புத் தலைமை துணையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. இது மேலே சொன்ன புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் வால் பிடித்துப் போகும் போக்கின் இயல்பான விளைவாக உள்ளது.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

மேற்கண்ட அமைப்புகளில் செயல்படும் தோழர்களின் பரிசீலணைக்கு ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு தோழர்கள் கீழ்கண்ட அடிப்படையான ஆலோசனைகளை முன்வைக்கிறோம்.

1. புரட்சிகரமான ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில் முடிவுகள் எடுத்து செயல்படுவதற்கான அமைப்பு முறையை உருவாக்கி செயல்படுவது.

2. ஏடறிந்த காலந்தொட்டு, இன்று வரையிலான இந்திய வரலாற்றை, வரலாற்றியல் பொருள்முதல்வாத விஞ்ஞான ஒளியில் ஆய்வு செய்து, இந்தியாவின் தனித்துவமான சமூக, பொருளாதாரம் – சாதி, மதம், தேசிய இனப் பிரச்சனை - ஆகியவற்றை உள்ளடக்கி இந்திய சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த புரட்சிகர மார்க்சிய லெனினிய கோட்பாட்டுப் புரிதலை வந்தடைவது. இதன் அடிப்படையில் இவற்றின் ஆளும் வர்க்க பார்ப்பனப் பயங்கரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க பரிவாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புரட்சிகர செயல்தந்திரத்தை வகுப்பது.

3. மேலே சொன்ன கோட்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக நமது அமைப்பு உட்பட 100 ஆண்டுகால இந்திய கம்யூனிச இயக்கத்தின் அனுபவங்களையும், தவறுகளையும் தொகுத்து புரட்சியை நோக்கிய சரியான பாதையை ஏற்படுத்திக் கொள்வது.

4. 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டின் தொடக்கத்தில் உலக முதலாளித்துவத்தின் தன்மை பற்றிய புரட்சிகர மார்க்சிய லெனினியக் கோட்பாட்டை வந்தடைவது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும், அதன் பின்னர் சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள சர்வதேச வர்க்க அணிசேர்க்கை பற்றிய புரிதலின் அடிப்படையில் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடவும், உலகலாவிய சோசலிசப் புரட்சியின் ஓர் அங்கமாக செயல்படவும் புரட்சிகர செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்வது.

5. இத்தகைய செயல்பாடுகளின் ஊடாக நூற்றுக்கணக்கான கட்சிகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து செயல்படும் இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்களுடன் உரையாடலையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இயக்கத்தை நடத்துவது.

6. செயல்பாட்டுப் பகுதிகளிலும், செயல்படும் குழு / கட்சி மூலமாகவும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவுடைமையாளர்கள் மத்தியில் பிரச்சாரம், அமைப்பு உருவாக்கப் பணிகளைச் செய்வது.

புரட்சிக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சேர்ந்து பணியாற்ற முன்வருகிறோம். சில ஆண்டுகளில் அந்தப் புரட்சிகர உணர்வை மழுங்கடித்து முடக்கிப் போடும் விதமான இந்த அமைப்பு, அரசியல் நடைமுறை ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு போல நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது என்பது கசப்பான உண்மை.

இந்த நிலையில் அமைப்புத் தலைமையோ, புரட்சிகர இயக்கத்துக்கு கோட்பாட்டுத் தலைமையோ, அரசியல் தலைமையோ அளிக்கத் திராணியின்றி, வலுவான அமைப்பை உருவாக்கும் பணியில் இறங்க வழியின்றி, புரட்சிகர தலைமைப் பொறுப்பை கைவிட்டு அமைப்பை திக்கற்ற வழியில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பையும் அதன் 40 ஆண்டுகால பணிகளையும் சரியான பாதையில் செலுத்துவதற்கான போராட்டத்தில் இணையும்படியும், அதன் ஊடாக இந்தியப் புரட்சிக்கான பாதையை உருவாக்கும்படியும், சர்வதேச புரட்சிகர இயக்கத்திற்கு பங்களிப்பு செய்யும்படியும் தோழர்களை அறைகூவி அழைக்கிறோம்.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி : 77083 02843
இணையம் : http://amballi.music.blog/

Pin It