தோழர் மருதையனது கடிதம் கடந்த பிப் 24 அன்று ம.க.இ.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளமான வினவிலேயே வெளியானது. கருணாநிதி தன்னுடைய அரசியல் துறவினை முரசொலியில் தெரிவிப்பது போன்ற கேலிக்கூத்து இது. உலகில் எங்குமே நடந்திருக்க முடியாத நகைச்சுவையும் கூட! இதை சுட்டிக் காட்டி கீற்றில் கட்டுரை வந்தவுடன் மறுநாள் பொறுப்பேற்று பதவி விலகுகிறது வினவு ஆசிரியர் குழு (தோழர் மருதையனையும் உள்ளடக்கியது). பிறகு சில நாள் இடைவெளியில் உரிமையாளர் தோழர் காளியப்பனிடம் ஒப்படைக்கவும் படுகிறது.

maruthaiyanகடிதம் தோற்றுவிக்கும் விசமம்தான் முக்கியமானது. தான் அம்பேத்கர், பெரியார் கருத்துக்களுக்காகப் போராடியதாகவும், பார்ப்பன பாசிசம், கார்ப்பரேட் பாசிசம் என்பதெல்லாம் தான் முன்மொழிந்தவை என்ற ‘ரகசிய’ உண்மையையும் பொதுவில் போட்டு உடைக்கிறார். புதிய ஜனநாயகம் இதழில் அம்பேத்கர், பெரியார் பற்றி மா-லெ கண்ணோட்டத்தில் ஏற்கனவே பல விமர்சனக் கட்டுரைகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஏதோ தோழர் மருதையன் மட்டுமே அம்பேத்கர், பெரியார் கருத்துக்களுக்காக அமைப்பிற்குள் போராடி வந்தது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த முயல்கிறது அக்கடிதம்..

“அமைப்பில் எல்லோரும் சமமென்றாலும் சிலர் மட்டும் கூடுதலாக சமமென்ற கருத்து தலைமைத் தோழர்களிடம் இருப்பதாக” சொல்கிறார். 40 ஆண்டுகள் கழித்து போதி மரத்தடியில் படுத்தெழுந்த போது ‘பட்டுத் தெரிந்த’ உண்மை போலத் தெரிகிறது. தலைமை அப்படி கருதுவது இருக்கட்டும். தலைமையோடு சித்தாந்த ரீதியில் முரண்பட்டு வெளியேறியவர்களுக்கும் உங்களைப் போல வினவில் ராஜினாமா கடிதத்தை வெளியிட வாய்ப்பளிக்காமல், அந்த வாய்ப்பை இப்போது நீங்களே எடுத்துக் கொண்டபோது உங்களை ‘கூடுதல் சமமாக’ நீங்கள் கருதிக் கொள்ளவில்லையா தோழரே?

இதுவெல்லாம் கூட பிரச்சினை இல்லை. “ஒரு கசப்பான போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்" என்கிறீர்கள். நான்கரை மாதம் போராடியதாக சொல்கிறீர்கள். “சீர்குலைவு சக்திக்கு உள்ளிருந்து ஆதரவு அளித்தவர்கள் குறித்த ஆதாரம் தலைமைக்கே தெரியும்” என்கிறீர்கள். "என்னைப் பற்றி எனக்கே தெரியாமல் 20 பக்க ரகசிய சுற்றறிக்கை தயாரித்து சுற்றுக்கு விட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். “ஊன்றி நின்று போராடிப் பாருங்கள். இந்த அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்” என்று கூறுகிறீர்கள். எல்லாம் சரிதான். நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக நீங்கள் கூறுவது என்ன? அமைப்புத் தலைமையின் அராஜகம், அதிகார வர்க்கப் போக்கு, ஜனநாயக மறுப்பு ஆகியவைதானே. இதையே தான் உங்களுக்கு முன்பு வெளியேறியவர்களும் (உங்கள் மொழியில் சொன்னால் ‘சீர்குலைவுவாதிகள்’) கீற்று கட்டுரையில் கூறினார்கள். அவர்கள் கூறியதற்கு அப்பால் புதிதாக ஒரு காரணத்தையும் உங்கள் விலகல் கடிதத்தில் கூற முடியவில்லை என்பது உண்மைதானே!

அவ்வாறு வெளியேறியவர்களை போலீசு உளவாளிகள், சொந்த வாழ்க்கைகுப் போனவர்கள், பாலியல் குற்றச்சாட்டுகள், நிதி கையாடல் செய்தவர்கள், பைத்தியம் என பிற அமைப்புத் தோழர்களிடம் ஆதாரமே இல்லாமல் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்க வைத்தபோது உங்களது அறவுணர்ச்சி எங்கே போனது தோழர்.மருதையன்? அப்போது நீங்களும் தலைமையில் தானே இருந்தீர்கள்! உங்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறதல்லவா? அது குறித்து நான்கு வரி சுயவிமர்சனமாக எழுத ஏன் தோன்றவில்லை உங்களுக்கு?

உங்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு அமைப்புக்குள்ளிருந்தே உதவி செய்து வரும், அந்த ‘கூடுதல் சமமான நபர்’ உங்கள் மீது அவதூறு பரப்புவதன் நோக்கம் என்ன? அரசியல் ரீதியானதா? தனிப்பட்ட விரோதமா? எது அடிப்படைக் காரணம்? விவாதித்து தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனை எதுவும் இருக்கிறதா என்ன?! தலைமைக் குழுவுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனையை காரணமாக முன்வைத்து விலகலை அறிவிப்பது பள்ளி சிறுவனின் செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா தோழர் மருதையன்? இதைவிட கடுமையான குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் எதிர்கொண்டு போராடி வருவதுதானே இந்த அமைப்பு! தலைமைக் குழுவில் இருக்கும் உங்களுக்கு இது தெரியாத ரகசியமல்ல... நீங்கள் வெளிப்படுத்தும் காரணங்கள் மிகவும் அற்பமானவை. அமைப்பு அரசியல் நலனை விட ‘நான் சொல்வதைக் கேட்கவில்லையே’ என்ற உங்களின் தனிப்பட்ட கவுரவமும், அகங்காரமும் தானே இங்கு முன்னிற்கிறது! நிரூபிக்கப்படாத வரையில் குற்றச்சாட்டுக்கு என்ன பெறுமதி உண்டு தோழரே?

நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது. பாஜகவின் இந்துத்துவா வெறியாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அரசின் அனைத்து உறுப்புகளும் இந்துத்துவமயமாகி வருகிறது. போராடும் மக்களும், இயக்கங்களும் ‘தீவிரவாதிகள்’, ‘அந்நிய சக்திகள்’ என்று பகிரங்கமாக அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இச்சூழலில் போராடும் மக்களுக்கு உண்மையான விடுதலை பெற்றுத் தரும், நம்பிக்கை அளிக்கும் ஓர் அமைப்போ, கட்சியோ இங்கு இல்லை. மிருக பலம் பொருந்திய எதிரிக்கு முன்னால் உழைக்கும் மக்கள் நிராயுதபாணியாக நிற்கின்றனர். இந்நிலையில் ஒரு புரட்சிகரக் கட்சி என்ன செய்ய வேண்டும்?

போராடும் மக்களை எதிரிக்கு எதிராக ஒன்று திரட்டுவது, புதிய போராட்ட வியூகங்களை வகுத்து, செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெறுவது, அதற்கு அறிவுப்பூர்வமான தலைமை அளிப்பது, புரட்சி என்ற தனது இலக்கை நோக்கி முன்னேறுவது ஆகியவை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்திய சமூகம், அரசியல், பொருளாதாரம் பற்றிய ஆய்வினை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வளவு கடினமான, அவசியமான பிரச்சனைகளில் கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளும் வெளியிலும் சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டும். இவைதான் புரட்சிகரக் கட்சியின் மையமான வேலையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?

மேற்கண்ட அடிப்படைப் பிரச்சனைகளை எல்லாம் தூக்கி மூலையில் போட்டு விட்டு, 1, 2, 3 என்ற நம்பர் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. தலைமைக் குழுவில் உள்ள ஒருவர் “அரசியல் தலைமையின் மீது நம்பிக்கை இல்லை" என்று கூறி விட்டாராம். அதற்காக மாநாட்டில் பிரதிநிதிகளால் கீழிருந்து ‘ஜனநாயகப் பூர்வமாகத்’ தேர்வு செய்யப்பட்ட தலைமைக் குழுவை கலைத்து விடுவார்களாம்! ஏன் என்று கேட்டால் “தவறுதான். புதிய மாநாடு நடத்தி புதிய தலைமைக் குழுவை தேர்வு செய்வோம்” என்று வியாக்கியானம் பேசுவார்களாம்! ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒவ்வொன்றுக்கும் மாநாடு நடத்தி புதிய தலைமையை தேர்வு செய்து கொண்டே போனால் கட்சிக்கு வேறு வேலையே இல்லையா? அல்லது இதுதான் நீங்கள் செய்யும் நீண்ட கால மக்கள் திரள் வழியா?

குடும்பம், சொந்த பந்தம், வேலை, வருமானம் எல்லாவற்றையும் உதறி விட்டு கட்சியின் மீது அதீத நம்பிக்கையுடன் புரட்சிப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தோழர்களை நீங்கள் மதிக்கும் இலட்சணம் இதுதானா? உங்கள் குட்டி முதலாளித்துவ ஈகோ பிரச்சனையைத் தீர்க்க வந்திருக்கும் பஞ்சாயத்துக்காரர்களா அவர்கள்? ஆயிரக்கணக்கான தோழர்களின் அளப்பரிய உழைப்பு, தியாகத்தால் உருவானதுதான் இந்த அமைப்பு. இதற்குத் தலைமை தாங்கி வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்களைத் தலைவர்களாக தேர்வு செய்தார்கள். ஆனால் நீங்களோ அவர்களை திக்கற்ற நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்! இது உங்களை நம்பிய தோழர்களுக்கும், மக்களுக்கும், புரட்சிக்கும் நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?

அராஜகவாதம், சந்தர்ப்பவாதம், அதிகார வர்க்க சிந்தனை, குறுங்குழுவாதம், தனிநபரை முன்னிறுத்துதல் ஆகியவை தலைமைக்குள் புரையோடிப் போயிருப்பதுதான் நடந்து கொண்டிருக்கும் குழாயடிச் சண்டைகளுக்கு அடிப்படை. அமைப்பின் அனைத்து மட்டத்திலும் இது நீக்கமற நிறைந்திருக்கிறது.

"அராஜகவாதம் என்பது முதலாளிய தனிமனிதக் கொள்கையின் மறுபக்கம். தனிமனிதக் கொள்கை அராஜக உலகக் கண்ணோட்டம் முழுமைக்கும் அடிப்படையாக உள்ளது… அராஜகவாதம் அவநம்பிக்கையின் விளைபொருள். அது ஓரிடத்திலும் நிலைகொள்ளாத அறிவாளியின் அல்லது நாடோடியின் உளப்பாங்கே அன்றி, பாட்டாளியின் உளப்பாங்கு அல்ல." என்கிறார் தோழர் லெனின் (லெனின் தொகுப்பு நூல் 5, பக்க 327).

தலைமைக் குழுவினை கலைத்த தலைமையிடம் வெளிப்படுவதும், தோழர் மருதையனின் கடிதம் ‘தன் மீதான தனிநபர் தாக்குதல்... அவதூறு...’ என்று கூறுவதும், லெனின் கூறும் மேற்கண்ட அராஜகவாதம்தான். நக்சல்பாரி என்ற கோட்பாட்டில் இருந்த அராஜகவாதம் இப்போது அமைப்புத் துறையில் வெளிப்படுகிறது. அவநம்பிக்கையை தோழர்கள் மத்தியிலும், பொதுவிலும் ஏற்படுத்துகிறது, அந்த ஓரிடத்திலும் நிலைகொள்ளாத அறிவாளியின் உளப்பாங்கு. தோழர் மருதையன் விலகலை வால் பிடித்து வினவு குழுவும் சேர்ந்து விலகியதில் குறுங்குழுவாதம் மேலோங்கியுள்ளது. அனைத்தையும் தீர்மானித்தது இருதரப்பின் குட்டி முதலாளித்துவப் பண்புதான்.

மறுபுறம் அவரது கடித உள்ளடக்கம் உண்மையில் வலது சந்தர்ப்பவாத அரசியலைத் தூக்கியும் பிடிக்கிறது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியில் திருத்தல்வாதமாக அது பெர்ன்ஷ்டைன் என்பவர் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியது. பெர்ன்ஷ்டைன் வாதம் என்பது புரட்சிகர உள்ளடக்கத்தை நீக்கிய மார்க்சியமே தவிர வேறொன்றுமில்லை. "தனது நடைமுறையை விசயத்துக்கு விசயம் தீர்மானித்துக் கொள்வது; அன்றாட நிகழ்ச்சிக்கு ஏற்பவும் அற்ப அரசியலின் ஊசலாட்டத்துக்கு ஏற்பவும் தன்னை மாற்றிக் கொள்வது; பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களையும் முதலாளிய அமைப்பு முழுவதன் அடிப்படை அம்சங்களையும் மறப்பது, பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களை அந்தந்த நேரத்தின் அனுகூலங்கள் அல்லது கற்பனையான அனுகூலங்களுக்குப் பலியிடுவது – இதுதான் திருத்தல்வாதத்தின் கொள்கையாகும்” (லெனின் தொகுப்பு நூல் 15, பக் 37).

’இயக்கம் தான் எல்லாம், இறுதி இலக்கு என்று ஏதுமில்லை’ என்பது பெர்ன்ஷ்டைனின் புகழ் பெற்ற முழக்கம். அதுதான் அவரது சாரமும் கூட. பெர்ன்ஷ்டைன் கார்ல் மார்க்சை அதிதீவிரவாதி என்றும், பிளாங்கியவாதி என்றும் கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். தோழர் மருதையனும் அதைத் தான் புறவாசல் வழியாக செய்ய முயல்கிறார்.

”சந்தர்ப்பவாதத்தை உட்கட்சி விவகாரம் என்று கருதிக் கொண்டே இருப்பது முட்டாள்தனமானது” என இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி பற்றி எழுதுகையில் குறிப்பிடுவார் தோழர் லெனின். பாஸெல் காங்கிரசுக்கு எதிராக சொந்த நாடுகளின் நாடு பிடிக்கும் ஆசைக்கு வால் பிடித்துச் சென்ற கம்யூனிஸ்டு கட்சிகள் முதல் உலகப் போரில் தமது சொந்த நாட்டின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஆதரவு தெரிவித்தன. சகோதர கம்யூனிஸ்டு கட்சிகளின் இந்த சமூக - தேசிய வெறியைக் கண்டு கொதித்து எழுதிய வார்த்தைகள் அவை.

சந்தர்ப்பவாதமும் அராஜகவாதமும் கட்சிக்கு வெளியிலும் இருப்பதாலும், முதலாளித்துவத்திற்கு எதிராக பின்னோக்கிப் போகிறவர்களே புரட்சிகர சக்திகள் என்ற கண்ணோட்டம் எல்லா இடதுசாரிகளிடமும் நீக்கமற நிரவி இருப்பதாலும் உட்கட்சிப் போராட்டம் மட்டுமின்றி, வெளியிலும் அதற்கெதிரான போராட்டத்தை நடத்தியாக வேண்டி இருக்கிறது.

அராஜகவாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் தனிமனித கொள்கையைத்தான் முன்னிறுத்தும். அது தோழர் மருதையனது கடிதமாக இருந்தாலும் சரி, தன்னிச்சையாக மையக் குழுவைக் கலைத்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி. இதற்கும் கம்யூனிசத்திற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனச் சொல்ல முடியாது. இயக்கத்திற்குள் எழும் குட்டி முதலாளித்துவப் போக்குகள் இவை. எதிரெதிரானது போலத் தோன்றினாலும் சாரத்தில் ஒன்று மற்றொன்றின் கண்ணாடி பிரதிபலிப்புதான்.

கீழிருக்கும் தோழர்கள் தலைமைப் பிரச்சனைகளுக்கு காரணமான சித்தாந்த அடிப்படைகளைக் கண்டறிந்து அதற்கு எதிராகப் போராடுவதில்லை. பலரும் தோழர் மருதையன் போன்ற தனிநபர்கள் மீதுள்ள பாசப் பிணைப்பில் கட்டுண்டு கிடக்கிறார்கள். “ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது” என்ற உண்மையில் உங்களுக்கு சிறிதேனும் நம்பிக்கை இருந்தால், இந்தத் தலைமைக்குள் நடக்கும் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் உள்ள வர்க்கத் தன்மையை கண்டறிய முயற்சியுங்கள்! அதற்கு அடிப்படை என்ன என்ற கேள்விக்கு விடை காணுங்கள்! தவறுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். அதுதான் கட்சியையும், உறுப்பினர்களையும் காப்பாற்றும் வழிமுறையாக இருக்கும்.

முரண்பாடுகளை மோதல் இல்லாமல், இழப்பில்லாமல் சுமூகமாகத் தீர்க்க முடியாது. கடினம்தான். என்ன செய்வது... பத்து மாதத்திற்கு முன்பே ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இன்னும் அறிவியல் வளரவில்லையே!

பி.கு - "..கறாராகச் சொன்னால் மாமனிதன் எனப்படுபவன் துவங்கி வைப்பவன்தான். ஏனெனில் மற்றவர்களை விட அவன் அதிக தூரம் பார்க்கிறான். மற்றவர்களை விட அவன் விசயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்தைய போக்கினால் முன்வைக்கப்படுகிற விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு விடை அளிக்கிறான். சமுதாய உறவுகளின் முந்தைய வளர்ச்சியால் படைக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவன்தான் முன்முயற்சி செய்கிறான்." (பிளெகானவ், வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பாத்திரம்). இது போராடும் கம்யூனிஸ்டுகளுக்குத்தான் பொருந்தும்; கல் தலையில் விழுந்து விடுமே எனப் பயந்து ஒதுங்கிப் போகிறவர்களுக்கல்ல...

- தளபதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It