பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

பகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்

பகுதி 4: ஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)

பகுதி 5: கடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு

பகுதி 6: பூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்!

பகுதி 7: இந்திய - சீன சந்தை: ஓர் ஒப்பீடு!

பகுதி 8

இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பின்னான அமெரிக்காவின் ஆப்கன் போர், சாதாரணர்கள் மத்தியில் தீவிரவாத எதிர்ப்புப் போர் எனப் பதிய வைக்கப்பட்டாலும், அரசியல் வட்டத்திலும், பனிப் போர் பற்றி தெரிந்தவர்கள் மத்தியிலும் 'மறுபடியும் ஆப்கானிஸ்தானா?' என்று சற்று ஒரு முறை அவர்களின் எண்ணத்தை நிலை நிறுத்தி சிந்திக்க வைத்தது. ஏனெனில் தற்போது நடக்கும் ஆப்கன் போருக்கு முன் 1980-1989 வரையிலான ஆப்கன் போர் உலகப் போர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாளித்துவ நாடுகளின் தலைமையான அமெரிக்காவும், கம்யூனிச நாடுகளின் முகமாக அறியப்பட்ட சோவியத்தும் இங்கே நேருக்கு நேர் மோதாமல் மறைமுகமாக பதிலிக் குழுக்கள் மூலம் மோதிக் கொண்டன. ஏற்கெனவே, இந்த இருநாடுகளும் இப்படி வியட்நாமில் மோதிக் கொண்டபோது, அமெரிக்கா நேரடி பங்கேற்பாளராகவும், சோவியத் ரசியா வியட்நாமியப் புரட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் நின்று கொண்டு மோதிக் கொண்டன. அதில் அமெரிக்கா அவமானகரமான தோல்வியை சந்தித்ததோடு அல்லாமல், பெருத்த உயிர்ச் சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் சந்தித்து, இறுதியில் தங்கத்தின் அடிப்படையிலான பணமுறையை (gold backed currency) கைவிட்டு, சந்தை அடிப்படையிலான காகித பணமுறைக்குச் (fiat currency) செல்ல வேண்டிய அளவுக்கு வந்தது. அந்த அளவு அடிபட்ட அமெரிக்கா, ரசியாவை பழி தீர்க்க காத்திருந்தது.

talibansஅதற்கான சரியான வாய்ப்பாக, எண்பதுகளில் நடந்த ஆப்கன் போரில் சோவியத் ரசியா நேரடி பங்கேற்பாளராக களத்தில் இறங்கி இருந்தது. அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகராகவும், பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தின் தலைசிறந்த வல்லுநராகவும் அறியப்பட்ட ஹென்றி கிஸ்சிங்கர், வியட்நாமில் வாங்கிய அடிக்கு “திருப்பிக் கொடுக்கும் நேரம் இது” என்று (time to pay back) கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. இம்முறை அமெரிக்கா சோவியத் ரசியாவைப் போன்று, உள்ளூர் ஆப்கன் ஜிகாதிகளை மறைமுகமாக ஆதரித்தது. ஒன்பது வருடம் நீடித்த இந்தப் போரில், சோவியத் ரசியா பெருத்த உயிர்ச் சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் சந்தித்து, தோல்வியைத் தழுவி, பலவீனமானது. இந்தப் போரின் இறுதியில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக சிதறியது. அமெரிக்கா பட்ட அடிக்கு பழி தீர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், எதிரியைச் சிதறடித்து அதை இல்லாமல் ஆக்கியது.

எந்த ஜிகாதிகளை பணம், ஆயுதங்கள் கொடுத்து சோவியத்தை, அமெரிக்கா வீழ்த்தியதோ, எந்த ஜிகாதிகளோடு தோளோடு தோள் நின்று நீண்ட யுத்தத்தை நடத்தியதோ, அதே ஜிகாதிகளுக்கு எதிராக ஒரு தசாப்தம் கழித்து, இரட்டை கோபுரத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் பத்து வருட காலத்திற்குள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது? நண்பர்கள் இருவரும் ஏன் பரம எதிரிகளாகிப் போனார்கள்? என்ற கேள்வி இங்கே இயல்பாக எழுகிறது. ஏனெனில், இதன் பிறகே நம் அனைவருக்கும் அல்கொய்தா என்ற ஜிகாதி அமைப்பு இருப்பதும், அதற்கு அத்தனை வலிமை இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், இப்போது இந்தப் பெயர் மிக சமீப காலம் வரை பல தீவிரவாதத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், படுகொலைகள் எனத் தொடர்ந்து செய்திகளில் இருந்து மெல்ல,மெல்ல மறைந்து போய் இருக்கிறது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பைப் பற்றி கேள்வி எழுப்பாமல் எப்படி சாதாரணமாக நாம் கடந்து செல்வது? அதோடு, அந்த அமைப்பின் நதிமூலத்தையும் - உருவாக்கியவர்களையும் - தெரிந்து கொள்வதன் மூலம், இந்த நிகழ்வுகளை செய்திகளில் பார்த்து உச்சு கொட்டி நகர்வதைத் தவிர்த்து, அதன் பின்னுள்ள காரணங்களை, அரசியலை, ஆதாயம் அடைந்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சோவியத் ரசியாவுக்கு எதிரான போரில், அமெரிக்கா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான், சீனா ஆகிய நாடுகள் இணைந்தோ, தனித்தனியாகவோ பணம் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து தங்களுக்கு ஆதரவான ஜிகாதி குழுக்களை உருவாக்கி, சோவியத் ரசியாவுக்கு எதிராகப் போரிட வைத்தன. நமக்குத் தெரிந்தது இவர்கள் எல்லாம் முஜாகிதீன்கள். ஆனால் உண்மையில் அவர்கள் எல்லாம் இந்த நாடுகளின் ஆதரவு பெற்ற பல குழுக்கள். இவர்கள் இப்படி உருவாக்கிப் போரிட வைக்க வேண்டிய அவசியம் என்ன? ஆப்கானிஸ்தானை சோவியத் ரசிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கவா? இவர்கள் அவ்வளவு நல்லவர்கள் எல்லாம் இல்லை. இதற்கு பல பொருளாதார, அரசியல், எண்ணெய் வர்த்தகம் சார்ந்த காரணங்கள் இருந்திருக்கலாம். இங்கு எண்ணெய் வர்த்தகம் சார்ந்த காரணத்தை முக்கியமாகக் கொண்டு பார்ப்போம்.

சீனாவிற்கு, மத்திய கிழக்கு எரிபொருளைக் கொண்டு வரவும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய வர்த்தகத்துக்கும் ஆப்கானிஸ்தானே இணைப்புப் பாலம். ஈரானுக்கு நிலவழிக் குழாய்கள் பதித்து ஆசிய எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற வேண்டுமெனில், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் வழியாகவே அந்தக் குழாய்களை அமைத்து எரிபொருளைக் கொண்டு செல்ல முடியும். அதோடு ஈரான் மற்றும் சீன நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் வழியாக மற்ற நாடுகள் (அமெரிக்கா) சீர்குலைவு வேலைகளில் ஈடுபட அனுமதிக்காத வகையில் அங்கே தனக்கு சாதகமான அரசு அமைய வேண்டும். ஈரான் குழாய் அமைத்து ஆசியாவுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்தால், கப்பல் போக்குவரத்து செலவு குறைந்து மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு எரிபொருளைக் கொடுத்து சந்தையைப் பிடித்து விடும். சவுதிக்கு இது போன்ற இருப்பிடம் சார்ந்த சாதகமான அம்சம் இல்லை. அது கப்பல் வழியாக மட்டுமே எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே மலிவான விலையில் எண்ணெய் விற்க இருக்கும் ஈரானுடன், சவுதி போட்டியிட்டு ஆசிய சந்தையை வெல்ல முடியாது. அதனால் சவுதி ஆசிய சந்தையை இழக்க நேரிடும். அதற்கு ஒரே வழி, இந்தக் குழாய் திட்டம் வெற்றி அடையாமல் செய்வதுதான்.

ஆப்கானிஸ்தான் வழியாக குழாய் அமையா விட்டால், ஈரானின் எல்லைக்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான், தனது இருப்பிடம் சார்ந்த முக்கியத்துவத்தை இழக்கும். அதனால் ஈரானின் எண்ணெய்க் குழாய்கள் ஒன்று பாகிஸ்தான் வழியாக செல்ல வேண்டும், இல்லையேல் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ஆதரவு (அல்லது சார்பு) பெற்ற அரசு அமைய வேண்டும். அதன் மூலம் ஈரான் அல்லது மற்ற மத்திய ஆசிய நாடுகளின் எரிபொருள் (உதா., துர்க்மெனிஸ்தான்) ஆப்கானிஸ்தான் வழியாகச் சென்றாலும், பாகிஸ்தானின் இசைவின்றி செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துவதன் மூலம் தனது முக்கியத்துவத்தை நிலை நாட்ட முடியும்.

நேரடியாக களத்தில் இறங்கி குழாய் அமைவதைத் தடுக்க வாய்ப்பில்லாத சவுதி, பாகிஸ்தானுடன் கைகோர்த்தது. எல்லா எரிபொருள் சார்ந்த வணிகத்தையும், தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் டாலரையும் தனது பொருளாதாரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு, யார் எரிபொருள் ஏற்றுமதி செய்தாலும் தனது டாலரில், தனது அனுமதியுடன், அந்நாட்டின் நிறுவனங்களையும் கூட்டணி சேர்த்துக் கொண்டே செய்ய வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் இல்லாத ஈரான் எரிபொருள் ஏற்றுமதி செய்வதை அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, தனது சகாவான சவுதியுடனும், அதன் சகாவான பாகிஸ்தானுடனும் கூட்டு சேர்ந்தது. இப்படி அவரவர் சொந்த நலன் கருதி ஆளுக்கொரு ஜிகாதிக் குழுவை உருவாக்கி, போரிட விட்டிருந்தன.

சரி! இப்படி ஆளாளுக்கு வந்து ஆயுதமும், பணமும் கொடுத்தால் நாம் துப்பாக்கி தூக்கிப் போரிடுவோமா? அதை நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டோம். ஆனால், ஆப்கன் மக்கள் மட்டும் இதனை பயன்படுத்திக் கொண்டு போரிடக் காரணம் என்ன? இதற்கான விடை அந்த சமூக அமைப்பில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் பல்வேறு பழங்குடி இனங்களைக் கொண்டது. அதில் பெரும்பான்மை பஷ்டூன்கள் (Pashtuns - 42%) மற்றும் தஜிக்கள் (Tajiks - 27%). மற்ற ஹசார்கள் (Hazaras - 9%), உஸ்பெக்குகள் (Uzbeks - 9%), அய்மாக்கள் (Aimaq - 4%), துர்க்மேன்கள் (Turkmen - 3%) பலூச்சுகள் (Paluch - 2%) குழுக்கள் சிறுபான்மையினர். இதுவல்லாத மற்ற சிறுபான்மை இனத்தவர்கள் (4%). நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விரவி வாழும் இந்தக் குழுக்கள் எப்போதும் ஒன்றுடோன்று மோதிக் கொண்டே இருந்திருக்கின்றன. அதனால் அங்கே வரலாற்றில் எப்போதும் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சி இருந்ததே இல்லை. பஷ்டூன்கள் மற்றும் தஜிக்கள் தான் பெரும்பான்மை ஆயிற்றே, இந்த இரு இனக்குழுக்களும் இணக்கம் கண்டால் நிலையான ஆட்சி அமைக்கலாமே என்று நமக்குத் தோன்றலாம். இந்த பஷ்டூன்கள் என்பவர்கள் ஒரு பொதுவான இனமாக அறியப்பட்டாலும், அதில் இருக்கும் கிளைப் பிரிவுகளையும், உட் பிரிவுகளையும் (படம் காண்க) உற்று நோக்கினால் தலை சுற்றிவிடும்.

pashtun groups and subgroupsதமிழர்கள் என்று நாம் பொதுவாக அறியப்பட்டாலும், நமக்குள் பல்வேறு சாதிகள், அதற்குள் பல உட்சாதிப் பிரிவுகள் இருப்பதைப் போல, அவர்களுக்குள்ளும் பல்வேறு உட்பிரிவுகள். அதோடு மற்ற சிறுபான்மை இனக்குழுக்களின் பெயர்களை உற்று நோக்கினால், அவர்களின் பூர்வீகம் அண்டை நாடுகளில் இருப்பது தெரிய வரும். உதாரணமாக பலோச் இன மக்கள் பாகிஸ்தானை ஒட்டிய மலைப்பகுதிகளில் வாழ்பவர்கள். இதே இனத்தைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானிலும் வசிக்கிறார்கள். பெரும்பான்மைக் குழுக்களில் உள்ள அதிகாரப் போட்டி, சிறுபான்மையினர் சமமாக, சரியாக நடத்தப் படாததால் உள்ள இனக்குழுப் பகை ஆகியவற்றை மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

சரி, இத்தனை குழுக்களைக் கொண்ட, தங்களுக்குள் சண்டையிடும் சமூகம் எப்படி சோவியத் ரசியாவுக்கு எதிராக ஒற்றுமையாக சண்டையிட்டன? இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னும் 1919-21ல் இங்கிலாந்து பேரரசு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முனைந்த போது, இதேபோல இந்த இனக்குழுக்கள் ஒன்றிணைந்து இங்கிலாந்து பேரரசை வீழ்த்தி, பெரும்பாலும் இந்தியர்களால் ஆன பிரிட்டிஷ் படையை ஓட, ஓட விரட்டினார்கள். அதே போல தற்போது இவர்களுக்கான பொதுவான ஆக்கிரமிப்பாளன் சோவியத் ரசியா. தங்கள் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் ஒற்றுமையாக உயிரைக் கொடுத்தேனும் போராடிக் காப்பது பழங்குடி சமூகத்தின் பண்பு. அப்படி ஓர் இனக்குழு மற்ற குழுக்களை, வாழ்வாதாரங்களைக் கைப்பற்ற தாக்கும் போது, தங்களது சொந்த இனக்குழுவை போராடிக் காப்பார்கள். ஆனால் மொத்த இனக்குழுக்களுக்கும் பொதுவான ஓர் ஆக்கிரமிப்பாளன் - எதிரி வரும்போது அப்போதைக்கு உட்பகையைத் தள்ளி வைத்து விட்டு பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றாகப் போராடுவார்கள்.

சாதியால் பிரிந்து கிடந்தாலும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க பெரியார் அழைப்பு விடுத்தபோது, தமிழக இடைநிலைச் சாதிகள் ஒற்றுமையாகப் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதைப் போல, ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது வடக்கத்தியான், நமது பண்பாட்டு நடவடிக்கையைத் தடுப்பதா.. என மொத்த தமிழர்களும் ஒற்றுமையாகக் கிளர்ந்து எழுந்ததைப்போல. இந்த ஒன்றிணைந்த உணர்வுப் பூர்வமான போராட்டத்தினால் சோவியத் ரசியா வெளியேற்றப்பட்டது. அவர்கள் வெளியேறியவுடன் மீண்டும் ஆப்கன் இனக்குழுக்கள் தத்தமது அதிகாரப் போட்டிக்கு மீண்டும் அடித்துக் கொண்டார்கள்.

அந்நிய ஆக்கிரமிப்பு என வரும்போது ஆப்கானியருக்குள் இருக்கும் பழங்குடி உணர்வு மேலோங்கி உக்கிரமாக சண்டையிட்டார்கள். அதன் தேவை முடிந்தவுடன், அவர்களுக்குள் இருக்கும், தனது இனக்குழு உறுப்பினர்களை விட மேலான வாழக்கையைத் தரும், சொத்து சேர்க்கும் நிலப்பிரபுத்துவ குணம் மேலோங்கி, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க அவர்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தியபின், இடைநிலை சாதிகள் அதிகாரத்தைப் பிடிக்க தமிழகத்தில் அடித்துக் கொள்வதைப்போல, சாதிக் கட்சித் தலைவர்கள் தமது சாதிச் செல்வாக்கைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி, பொறுக்கித் தின்ன இங்கே அலைவதைப் போலத்தான்!

பக்க இணைப்பு: என்ன போகிற போக்கில் தமிழர்களை பழங்குடி ஆப்கானியர்களுடன் ஒப்பிடுகிறீர்களே! என்று இதைப் படிப்பவர்கள் கோபம் கொள்ளக் கூடும். அப்படி என்றால் நம்மிடம் ஒரு பழங்குடி சமூகத்தின் இயல்புகள் இல்லவே இல்லையா? மிக சமீபமாக தொன்னூறுகள் வரை மத்திய தமிழகத்தின் இடைநிலைச் சாதிகள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் போது, கூட்டமாகச் சென்று தாக்கினார்களே... அதனை எப்படி அழைப்பது? இப்போது கூட தமிழகத்தில் உள்ள இடைநிலைச் சாதிகள், தலித் சமூக மக்களை தாக்கிக் கொண்டு இருக்கிறார்களே... அது இனக்குழு சண்டை இல்லையா.... ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகார, பணத்தாசைக்கு தனது சாதி மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், ஆப்கானிய இனக்குழு தலைவர்கள் அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளது..? சரி இரண்டும் ஒன்று என்றால் சாதியும் இனக்குழுவும் ஒன்றா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு என்ன வரையறை.. ஒரு இனக்குழு (tribe) என்பது தங்கள் குழுவுக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். குலக்குழு (gen) என்பது அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், ஆகவே அவர்களுக்குள் மணம் தடை செய்யப்பட்டது. பெரும்பாலான சாதிகளில் இந்த குலக்குழு, இப்போது முன்பைப் போன்று அந்த அளவிற்கு உயிர்ப்புடன் இல்லை என்றாலும், பார்ப்பனர்களிடமும், வடக்கே ஜாட் சாதியிலும் இன்றும் குலம் பார்த்தே மணம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு சமூகம் வளர, வளர குலங்கள் மறைந்து, இனக்குழுக்கள் ஒன்றாகி ஒரே தேசிய இனமாக வளர்ச்சி அடைகிறது - ஜெர்மானியர்களைப் போல, இங்கிலாந்துக்காரர்களைப் போல. இதன் அடிப்படையில் பார்த்தால் நாமும் ஆப்கானியர்களும் இன்னும் இனக்குழு சமூகம் தான். அவர்களுடன் நம்மை ஒப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களிடம் இருக்கும் பழங்குடி, நிலப்பிரபுத்துவ, ஜனநாயகப் பண்புகளின் விகிதம் ஏற்ற, இறக்கத்துடன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நம்மிடையே இருக்கலாம். ஆனால் இந்தப் பண்புகள் எல்லாம் நம்மிடம் இல்லை என்றோ, மேற்கத்திய சமூகங்களைப் போல நாம் பெருமளவு நாகரீக மனிதர்களாகி விட்டோம் என்றோ நம்மால் கூறிக் கொள்ள முடியுமா?

தொன்னூறுகளில் சோவியத் ரசியா வெளியேறியவுடன் ஆப்கானிய இனக்குழு தலைவர்கள் மட்டும் அதிகாரத்துக்கு அடித்துக் கொள்ளவில்லை. இதுவரை அவர்களுக்கு பணம், ஆயுதங்கள் கொடுத்த நாடுகளும் தங்களின் நலனுக்கேற்ற அரசு அமைய வேண்டுமென, அவர்களைப் பின்னாலிருந்து இயக்கி அடித்துக் கொண்டார்கள். இதனால் பல்வேறு குழுக்கள் பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்த அரசு அமையாமல் இழுத்துக் கொண்டு இருந்தது. ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடத்தி 1992ல் எல்லாக் குழுக்களையும் உள்ளடக்கிய ஓர் இடைக்கால அரசை ரப்பானி தலைமையில் உருவாக்கினார்கள். இருந்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இனக்குழுக்கள் ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்த நினைக்கும் போது, நாடுகளின் நலன்கள் ஒன்றுகொன்று எதிராக இருக்கும் போது எப்படி இணக்கம் ஏற்படும்?

இதற்குள்ளாக ஈரான், பாகிஸ்தானுக்கு எரிவாயுக் குழாய் அமைக்க ரசியப் படைகள் வெளியேறிய 1990-களிலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருந்தது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹெக்மட்யார் (Hekmatyar) அங்கே அரசில் இணையாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்ததையும், இந்த எண்ணெய்க் குழாய் பேச்சு வார்த்தையையும் இணைத்துப் பார்க்கும் போது, இடைக்கால அரசு பாகிஸ்தானுக்கு இசைவானதாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

1994- ல் மதரசா பள்ளியைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய 50 மாணவர்களைக் கொண்டு முல்லா ஓமர் தனது சொந்த நகரான கந்தகாரைக் கைப்பற்றினார். இந்த மதரசாக்கள் சவுதி ஆதரவுடன் பாகிஸ்தானில் இயங்கியவை என்பதைக் கொண்டு பார்க்கும்போது, இவர்களின் உருவாக்கம் இந்த இருநாடுகளின் வேலை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதன் மூலம் இடைக்கால அரசு சவுதியின் நோக்கத்திற்கும் இசைவானதாக இல்லை என்பது தெரிய வருகிறது. தொடங்கிய குறுகிய காலத்தில் இந்த தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஒத்துழைப்பு, சவுதி மற்றும் அராபிய நாடுகளைச் சேர்ந்த அல்கொய்தா அமைப்பினரின் பங்களிப்பின் காரணமாகவே இது சாத்தியமானது எனக் கூறப்படுகிறது. 1995-ல் காபூலைக் கைப்பற்ற நடந்த தாக்குதலை இடைக்கால அரசின் செயலர் மசூத் தலைமையிலான பிரிவு முறியடித்தது.          

இதற்குள் இந்தியாவுடன் பேசி, ஏற்கனவே பேச்சுவார்த்தையில் இருந்த ஈரான் - பாகிஸ்தான் எரிவாயுக் குழாய் திட்டத்தை விரிவுபடுத்தி ஈரான் – பாகிஸ்தான் - இந்தியா (IPI) எண்ணெய்க் குழாய் திட்டத்திற்கு, இதே 1995ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்கு மாற்றாக இதே ஆண்டு துர்க்மெனிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் - இந்தியா (TAPI) எரிவாயுக் குழாய் திட்டம் உருவாக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரிடாஸ் என்ற நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த சவுதி நிறுவனத்துடன் தொடர்புடைய யுநோகால் (unocal) என்ற நிறுவனமும் தனித்தனியே துர்க்மெனிஸ்தான் நாட்டுடன் குழாய் பதிக்க ஒப்பந்தம் போடுகின்றன. இவை எல்லாம் இந்தக் குழாய் திட்டத்திற்கு எவ்வளவு தூரம் போட்டிப் போடுகின்றன, அதில் எத்தனை அணிகள் இருக்கின்றன, ஆப்கானிஸ்தானின் ஜிகாதி குழுக்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு இடையிலான மோதல் ஆகியவற்றை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த இரு திட்டங்களிலும் பங்கெடுத்ததன் மூலம் இந்திய - பாகிஸ்தான் நாடுகள் ஆப்கானிஸ்தானின் அரசியல் நிச்சயமற்ற சூழலைக் கணக்கில் கொண்டு எல்லா பக்கத்திலும் துண்டு போட்டு வைத்திருந்தது தெளிவாகிறது.

1996-ல் தாலிபான்கள் தலைநகரான காபூலைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறார்கள். பாகிஸ்தானும், சவுதியும் முதலில் இந்த தாலிபான்களின் அரசை அங்கீகரிக்கிறார்கள். அதோடு சோவியத் வெளியேற்றத்திற்குப் பிறகு சவுதிக்குத் திரும்பிய ஒசாமா பின் லேடன் பின்னர் சூடானுக்குச் சென்று (எதற்கு சென்றிருப்பார் என ஊகித்துக் கொள்ளுங்கள்) ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி ஏற்பட்டவுடன் இங்கே மீண்டும் திரும்புகிறார். அவர் திரும்பினார் என்று சொல்வதைவிட, தாலிபான்களின் வெற்றியில் அல்கொய்தா அமைப்பினரின் பங்களிப்பு, சவுதி அரசின் அங்கீகாரம், பின் லேடனின் வருகை ஆகியவற்றைப் பார்க்கும் போது, சவுதியால் அனுப்பி வைக்கப்பட்டார் என்று தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தோற்கடிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு பின்வாங்கிய மற்ற குழுக்களை தாலிபான்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள். இவர்களை எதிர் கொள்ள வலிமையான தஜிக் இனக்குழுவைச் சேர்ந்த மசூத், உஸ்பெக் இனக்குழுவைச் சேர்ந்த டோஸ்டம், மற்ற சியா பிரிவைச் சேர்ந்த ஹசாராஸ் இனக்குழு பிரிவான ஹிஸாப்-இ-வாடட் (ஈரான் ஆதரவு குழு), தாலிபான் தவிர்த்த பிற பஷ்டூன்கள் ஆகியோர் இணைந்து வடக்கு கூட்டணியைக் (north alliance) கட்டுகிறார்கள். தாலிபான்களுக்கும் வடக்கு கூட்டணிக்கும் தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது.

ஈரான் எரிவாயுவைக் கொண்டு வரும் IPI எரிவாயுக் குழாய் திட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்க நிறுவனத்தின் தலைமையிலான TAPI எரிவாயுக் குழாய் திட்டம் முன்னோக்கி நகர்கிறது. 1997ல் யுநோகால் நிறுவனத்தின் தலைமையில் சவுதி, ரசியா, ஜப்பான், தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து மத்திய ஆசிய எரிவாயுக் குழாய் குழுமம் (CENTGAS) உருவாக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர், இந்தக் குழுமத்தில் இணைகிறார். 1998-ல் தாலிபான்கள் அர்ஜென்டினா நிறுவனத்தை நிராகரித்து விட்டு CENTGAS நிறுவனத்தை குழாய் பதிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவரையிலும் தாலிபான்களும் சரி, பின் லேடனின் அல்கொய்தாவும் சரி அமெரிக்க - சவுதி அரசுகளின், நிறுவனங்களின் நலனுக்கு உகந்த வகையில் ஆட்சி செய்கிறார்கள். பின் லேடன் சோவியத்தை வெற்றி கொண்ட நாயகனாகவே வலம் வருகிறார். இவை எல்லாம் ஆப்பிரிக்க நாடுகளான கென்யாவின் தலைநகரிலும், தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீதான கார் குண்டு தாக்குதலுக்குப் பின் தலைகீழ் மாற்றத்தைக் காண்கின்றன.

(தொடரும்)

- சூறாவளி