ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை மறுபடியும் உலக அரங்கில் மேல் நிலை வல்லாதிக்க அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையாக வெடித்திருக்கின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை பல தசாப்தங்களாக இருந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் தன்னுடைய எல்லைகளை ஐரோப்பிய ஒன்றியத்துடனும் ரஷ்யாவுடனும் பகிர்ந்து கொள்வதுதான்.

russia ukraine war1990கள் வரை சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் உக்ரைன் இருந்தது. அதற்குப் பின் சோவியத் உடைந்தபோது சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகின்றது.

உக்ரைன் தனிநாடான பிறகு அடுத்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உக்ரைன் சோசலிச குடியரசாக உருவாகி 1920-களில் உக்ரைனில் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அனைவருக்கும் அடிப்படை சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் வேலை செய்யும் உரிமை, குடியிருக்கும் வீடு பெறுவதற்கான உரிமைகள் போன்றவை வழங்கப்பட்டன. நூற்றாண்டுகள் பழமையான ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக் கட்டப்பட்டு பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது.

1930-களில் தொழில்துறை உற்பத்தி 4 மடங்காக அதிகரித்தது. விவசாய கூட்டுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது போலந்துடன் இருந்த உக்ரைனிய பகுதிகள் இணைக்கப்பட்டு வரலாற்றில் முதன்முறையாக உக்ரைன் தேசிய குடியரசு சோசலிச முறையில் உழைக்கும் மக்களுடையதாக உருவானது. பிற்போக்கு கலாச்சாரங்களை தூக்கிப் பிடிக்கும், மக்களை சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் பெருமளவில் வளர்ந்திருந்தன.

ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபின்னால் உக்ரைனின் ஆட்சி என்பது ஐரோப்பா, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் சதியால் உருக்குலைக்கப்பட்டு இன்று யாரின் மேலாதிக்கத்திற்கு அடங்கி நடப்பது என்ற நிலையை அடைந்திருக்கின்றது.

உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் ரஷ்யா சுமார் 1,00,000 படையினரை நிறுத்தியுள்ளது என்று அமெரிக்காவும், பெருமளவு ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து உதவுவதாக ரஷ்யாவும் குற்றம் சாட்டிக்கொள்கின்றன.

அமெரிக்கா பல ஆண்டுகளாகவே உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் ஆயுதங்களையும் பயிற்சியாளர்களையும் வழங்கி வருகிறது.

மேலும் 2015 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் துருப்புக்கள் உக்ரைனில் பயிற்சிக்காக தங்கியுள்ளன. இந்த வார தொடக்கத்தில், ஆயுதங்கள் மற்றும் கூடுதல் துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்புவதாகவும் பிரிட்டிஷ் அரசு அறிவித்திருக்கின்றது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுத்துக் கொள்வதை ஒரு நடைமுறையாகவே கொண்டிருக்கின்றன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை மேற்கத்திய பொருளாதார, ராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்தன.

இதன் மூலம் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல நேட்டோவில் இணைந்துள்ளன. அவற்றில் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா போன்றவை முக்கியமானவை. இந்த நாடுகள் ரஷ்யாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன.

இந்த விரிவாக்கம் மற்றும் அதன் எல்லைகளுக்கு அருகே நேட்டோ துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருப்பது தன்னுடைய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக ரஷ்யா பார்க்கின்றது.

ராணுவ ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேரடி ஆக்கிரமிப்புகளையும் எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்களையும் நடத்தி வரும் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதன் பின் உள்ள அரசியல் காரணங்கள் அறிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல.

இப்போதும் கூட கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் உக்ரைன் கொண்டுள்ளது. மேலும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.

உக்ரைனை ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துடன் சேர்க்கும் முயற்சியிலும் அதை நேட்டோவுடன் இணைக்கும் முயற்சியிலும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றொரு பக்கம் அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவளித்தது.

அதற்கு பதிலடியாக அரசியல் சதியின் மூலம் அமெரிக்க அடிமையான ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்றது முதலே அமெரிக்க ஆதரவுப் போக்கை கடைபிடித்து வருகின்றார்.

இவரை பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராக உக்ரைனை நேட்டோவுடன் இணைக்கும் முயற்சிகள் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்க மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காகவே படைகளையும், ராணுவத் தளவாடங்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்து வருகின்றது.

ரஷ்யா உக்ரைன் மீது ஆதிக்கம் செய்ய நினைப்பதற்கும் அதை கைப்பற்ற நினைப்பதற்கும் முக்கிய காரணம் நேட்டோ மற்றும் அமெரிக்காவின் செயல்பாடுகள் மட்டுமேயாகும். நேட்டோ 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து இதுவரை கிழக்கில் 800 மைல்களுக்கு அதன் எல்லைகளை விரிவாக்கி உள்ளது. எனவே உக்ரைனை அதன் இராணுவக் கூட்டணிக்குக் கொண்டு வருவதற்காக நேட்டோ வெளிப்படையாக செயல்படும்போது ராணுவரீதியாக அதை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) என்பது ஏப்ரல் 1949 இல் சோவியத் யூனியனையும் சோசலிச முகாமின் நாடுகளையும் எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதாகும். தற்போது இந்த அமைப்பில் 26 நாடுகள் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக நேட்டோ பல போர்களில் முக்கிய பங்காற்றி இருக்கின்றது. இதில் 1990-91 ஈராக் படையெடுப்பு, 1992 இல் பொஸ்னியா தலையீடு, 1999 இல் சேர்பியா மீதான குண்டுவீச்சு, 2001 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர், 2009 இல் சோமாலியாவில் ஆபரேஷன் ஓஷியன் 2011 இல் லிபிய அரசாங்கத்தைத் கவிழ்த்தது போன்றவையும் உள்ளடங்கும்.

பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் ஒரே நோக்கமே உலக நாடுகளின் வளத்தை கொள்ளையடிப்பதும், வளமான நாடுகளை தனது அடிமைகளாக மாற்றுவதும்தான். அப்படியான ஒரு நல்ல அடிமை நாடாக உக்ரைனை மாற்றி அந்த நாட்டின் வளத்தை கொள்ளையடிப்பதுதான் தற்போது அவர்களின் திட்டமும்.

இதில் ரஷ்யாவின் பங்கு என்பது தனது அருகிலேயே தனக்கு குழிவெட்டப்படுவதை தடுப்பதுதான். அமெரிக்காவை விட எந்த வகையிலும் ராணுவ ரீதியிலோ அல்லது பொருளாதார ரீதியிலோ ரஷ்யா குறைந்த பலம் கொண்ட நாடு அல்ல என்பது நேட்டோ நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றாகவே தெரியும்.

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவல் செய்தால் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது. மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஐரோப்பா கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று ஜெர்மனி எச்சரித்துள்ளது.

ஒரு கூட்டு ரவுடித்தனத்தை ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு உக்ரைனின் தற்போதைய அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி உடந்தையாக இருக்கின்றார்.

ரஷ்யாவுக்கு வேறு எந்த மாற்றுமே இல்லை. அமைதியாக செல்வது இன்னும் காலகாலத்திற்கு பிரச்சினை நீடிக்கவே உதவும். ஒரு பெரும் போரை நடத்த வேண்டிய நிலைக்கு ரஷ்யாவை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சேர்ந்து தள்ளிவுள்ளன.

ஆனால் இதில் யார் வெற்றி பெற்றாலும் பெரும் பாதிப்பை சந்திக்கப்போவது உக்ரைன் மக்கள் மட்டுமே. உக்ரைனை ஆளும் அமெரிக்க அடிமை தன்னாட்டு மக்களை பெரும் போரில் தள்ளியாவது தனது எஜமான விசுவாசத்தை நிரூபித்துக் கொள்ள தயாராக உள்ள போது போர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றது.

ஒருவேளை போர் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் உக்ரைன் மக்கள் ஒன்றிணைந்து தாங்கள் எந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஆளுகைக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை, தாங்கள் சுதந்திர தனி நாடாக இருக்கவே விரும்புகின்றோம் என்று போராடுவது ஒன்றுதான் வழி. ஆனால் அப்படியான வாய்ப்புகள் அங்கு இருப்பது போல தெரியவில்லை என்பதுதான் துயரமானது.

- செ.கார்கி

Pin It