கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி(23) என்பவரும், கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் இளமதி வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர், செல்வன் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். இதில் இளமதியின் தந்தை பாமகவில் இருப்பதாகத் தெரிகின்றது. இதனால் எப்படியும் சாதிவெறியர்களோடு சேர்ந்து தங்களைப் பிரித்து விடுவார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில், காவலாண்டியூரில் 09.03.2020 அன்று சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். செல்வனும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilamathi and selvanதமிழ்நாட்டின் எந்த வாழ்வாதாரப் பிரச்சினைக்கும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கிப் போராட துப்பற்ற சாதிவெறியர்கள் அனைவரும், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்கள் தலித் இளைஞர்களை காதலித்தாலோ, இல்லை திருமணம் செய்து கொண்டாலோ அவர்களைப் பிரிப்பதற்கும், அவர்களின் மீது வன்முறையை ஏவி விடுவதற்கு மட்டும் ஒன்று சேர்ந்து கொள்கின்றார்கள். அதன்படி சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட இளமதி மற்றும் செல்வன் இணையைப் பிரிப்பதற்காக வன்னிய சாதி வெறியர்களுடன் கவுண்டர் சாதி வெறியர்களும் சேர்ந்து சென்று வன்முறையை நிகழ்த்தி இருக்கின்றார்கள். கொங்குநாடு மக்கள் கட்சி, பா.ம.க, அ.தி.மு.க போன்றவற்றைச் சேர்ந்த, ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட சாதிவெறி தலைக்கேறியவர்கள் சாதிமறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்த தோழர் காவை ஈசுவரன் வீட்டிற்குள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து அவரை கடுமையாகத் தாக்கி கத்தி முனையில் கடத்திச் சென்று இருக்கின்றார்கள். அதே போல காதல் இணையர்களையும் கடத்திச் சென்றிருக்கின்றார்கள்.

தகவல் அறிந்து கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்த திவிக தொண்டர்கள் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் காவல் நிலையத்தை விடிய விடிய முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். இதனால் காவை ஈசுவரன் மற்றும் மணமகன் செல்வன் ஆகிய இருவரை மட்டுமே காவல்துறை முதலில் மீட்டது. இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் அவர்களால் எழுப்பப்பட்டதும், 'இளமதி எங்கே' என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியதாலும் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் என்ற போர்வையில் இருக்கும் சாதிவெறியர்களின் துணையுடன் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஆஜர்படுத்தப்பட்டதைப் பார்க்கும் போது இளவரசனையும் திவ்யாவையும் பிரிக்க அன்று சில வன்னிய சாதி வெறியர்களால் அரங்கேற்றப்பட்ட அயோக்கியத்தனங்கள் எல்லாம் கண்முன்னால் வந்து போயின.

இளமதி கடத்தப்பட்டு ஏறக்குறைய ஐந்துநாட்கள் கழித்தே அவர் ஆஜார்படுத்தப்பட்டதானது அவரை மிரட்டிப் பணிய வைக்க இந்த சாதிவெறியர்களுக்கு இந்த அரசு திட்டமிட்டே கொடுத்த கால அவகாசம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தமிழ்நாட்டு ‘ஸ்காட்லாந்து யார்டு’ போலீசாரால் எப்போதுமே சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் மட்டும் கண்டுபிடிக்கவே முடிவதில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. கோகுல்ராஜை கழுத்தறுத்து கொன்றுவிட்டு எப்படி 100 நாட்களுக்கும் மேலாக யுவராஜ் ஜாலியாக வீடியோ வெளியிட்டுக் கொண்டு இருந்தானோ, அதேபோல இளமதியைக் கடத்தியவர்கள் சுதந்திரமாக அவரை அடைத்து வைத்து மிரட்டிப் பணிய வைத்துள்ளனர்.

தமிழக காவல்துறை எப்போதுமே சாதிவெறியர்களின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது ஒன்றும் யாரும் அறியாத ரகசியம் அல்ல. காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்தால் பாதுகாப்பு தராமல் இரு வீட்டில் உள்ளவர்களையும் அழைத்து கட்டப்பஞ்சயாத்து செய்வதும், காதலித்த பெண் பிற்படுத்தப்பட்ட சாதியாகவும், ஆண் தலித்தாகவும் இருந்தால் பெண் வீட்டாரிடம் கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு வம்படியாக காதலர்களைப் பிரித்து வைப்பதும் கேள்விக்கு இடமற்ற முறையில் அனைத்துக் காவல் நிலையங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளமதியுடன் அவரது கணவர் செல்வன் பேசக் கூட அனுமதிக்கப் படவில்லை என்பதில் இருந்தே காவல் துறையின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இளமதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தன் விருப்பத்துடனே திருமணம் நடந்ததாகவும்’ தான் கூறியிருக்கின்றார். ஆனால் சாதிவெறியர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து, யாருடனும் பேச விருப்பமில்லை என்றும், தன்னுடடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருகின்றார். இதனால் அவரைக் கடத்தி கொடுமை செய்த சாதிவெறியர்களுடனே காவல் துறையினர் அவரை அனுப்பி, தங்களது நீதி சார்ந்த ஜனநாயகக் கடமையை ஆற்றி இருக்கின்றார்கள். 

அத்தோடு நிற்காமல் தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டுதான் திருமணம் செய்தேன் என்று இளமதி சொல்லியும் ஆளுங்கட்சிக்கு அடிபணிந்து சாதி வெறியர்களுக்கு எதிராக தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் தோழர் கொளத்தூர் மணி, செல்வன், ஈஸ்வரன் உட்பட நான்கு பேர் மீதும் கடத்தல் வழக்கை பவானி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமையன்று வருகிறது. ஆனால் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று ஏற்கெனவே நம்மால் ஊகிக்க முடிவதால் அதைப் பற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம்.

இன்று நேரடியாகவே சாதிவெறியர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக பொறுக்கித்தனமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் இந்த அரசும் அதன் உறுப்புகளும் சாதிவெறியர்களுக்கு அப்பட்டமாகவே ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன என்பதால்தான். இளமதி கடத்தப்பட்டதற்கும், திவிகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கூட ஆளுங்கட்சியின் அமைச்சர் கருப்பணன் ஆதரவு இருப்பதாக ஆனந்த விகடன் உட்பட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் சேர்ந்து இந்தக் கொலைவெறி தாக்குதலை நடத்தி இருக்கின்றார்கள் என்பதுதான். ஓட்டுக்காக சாதி வெறியர்களை அரவணைத்துச் செல்லும் இவர்களும்தான் முதன்மைக் குற்றவாளிகள். இப்படி வெளிப்படையாக சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய பாமகவை அதிமுகவோ, இல்லை கொங்குநாடு மக்கள் கட்சியை திமுகவோ தங்கள் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேற்றப் போவதில்லை என்பதுதான் உண்மை. ஓட்டுப் பொறுக்கிகளுக்கு சாதி வெறியர்களை நக்கித்தான் பிழைப்பை ஒட்ட வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் நிச்சயமாக அவர்கள் இளமதி மற்றும் செல்வன் இணையை மீண்டும் சேர்த்து வைக்க குரல் கொடுப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் மட்டுமல்ல, இன்று தமிழர்களின் ஓர்மை பற்றி பேசும் எவனும் இளமதி - செல்வனைப் பிரித்த அயோக்கியர்களுக்கு எதிராக நிச்சயம் களமாடப் போவதில்லை. காரணம் தமிழ் பேசும் சாதி வெறியர்கள் எல்லாம் அரசியலுக்காக மட்டுமே தமிழினம் என்ற ஒன்றை கட்டமைக்க முயல்கின்றார்களே ஒழிய, உண்மையில் அவர்களின் நாடி நரம்புகளில் சாதி வெறி மட்டுமே உள்ளது.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அற்ற சூழ்நிலை தொடர்ச்சியாக தமிழகத்தில் நிலவி வருகின்றது. சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் வெளிப்படையாக வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு இந்த ஆட்சியில் சுதந்திரம் பெற்றிருக்கின்றார்கள். அரசு உறுப்புகளும் அதற்கு ஒத்திசைந்தே தங்களின் பணிகளை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் முழு பொறுப்பும் முற்போக்கு இயக்கங்களையே சார்ந்துள்ளது. சாதிவெறியர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து அதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும். கருப்புச்சட்டை பேரணி, நீலச்சட்டை பேரணி போன்றவற்றில் உணர்வுப் பூர்வமாக பங்கேற்ற தோழர்களை இணைத்து ஒரு படையை கட்டியமைக்க வேண்டும். சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளால் ஒருபோதும் சாதிவெறியர்களை அடக்க முடியாது என்பதால் அந்தப் பணியை நாம்தான் செய்தாக வேண்டும்.

- செ.கார்கி