கீற்றில் தேட...

 

ஆப்கானிஸ்தானத்திலிருந்து படைகளை வாபஸ் பெறப் போவதாக ஜூன் 22ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்தார். தமிழ்நாட்டின் செய்திச் சேனல்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் ஒபாமாவின் அறிவிப்பை புளகாங்கிதத்துடன் வெளியிட்டன. அமைதியின் தூதராக அவரை வர்ணித்தன. ஆனால், இந்த அமைதித் தூதர் தான், இரண்டாண்டுகளுக்கு முன்பு 2009 டிசம்பரில் ஆப்கானிஸ்தானத்திற்கு மேலும் கூடுதலாக 33 ஆயிரம் படையினரை அனுப்பி வைத்தவர் என்ற உண்மையை உலக ஊடகங்கள் வசதியாக மறைத்துவிட்டன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தையும், தலிபான் பயங்கரவாதிகளையும் ஒழித்துக்கட்டப் போவதாகக் கூறி ஜார்ஜ்புஷ் காலத்தில் ஆப்கானிஸ்தான் மீது 2001ம் ஆண்டில் கொடிய போர் துவக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை அமெரிக்க படைகள் கொன்று குவித்தன. கடந்த 10 ஆண்டுகளாக அந்நாட்டை சல்லடையாக துளைத்தெடுத்தன.

ஜார்ஜ் புஷ் பதவி முடிந்து ஒபாமா வந்தபோது, அவர் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போரை முடிவுக்கு கொண்டுவருவார் என்று உலகம் நம்பியது. ஆனால், ஆப்கன் பிரதேசத்தில் அமெரிக்காவின் பிடி லேசாகக்கூட தளர்வதை அமெரிக்க ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. ஏனென்றால் ஆசியாவில் சீனாவையும், ரஷ்யாவையும், இந்தியாவையும், பாகிஸ்தானையும், இதர பல நாடுகளையும் கண்காணிப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் ஏற்ற புவியியல் அமைப்பில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது என்பதே அமெரிக்காவின் எண்ணம். எனவே ஆப்கானிஸ்தானை தனது முழுமையான ராணுவத் தளமாக்கிக் கொள்வதே அதன் இலக்கு. இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கினார் ஒபாமா. 2009 டிசம்பரில் ஏற்கனவே ஆப்கனில் இருக்கும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினரோடு மேலும் 33 ஆயிரம் படையினரை குவித்தார் ஒபாமா. ஆப்கானிஸ்தானில் முழு அமைதி திரும்பும் வரை அங்கு அமெரிக்கப் படையினருக்கு வேலை இருக்கிறது என்று கூறினார்.

தற்போது ஒபாமா கொல்லப்பட்டுவிட்டார். என்றாலும் கூட, அவரது அல்கொய்தா இயக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்று கூறி இன்று வரையிலும் அமெரிக்க படைகள் ஆப்கனின் எல்லையோர மலைக்கிராமப்பகுதிகளில் கொத்துக் கொத்தாக உயிர் பறிக்கும் குண்டுகளை வீசி வருகின்றன. அதை எதிர்க்கிறோம் என்ற பேரில் தலிபான்களும், அல்கொய்தா இயக்கத்தினரும் கிட்டத்தட்ட தினசரி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் மேலும் ஆப்கனின் அப்பாவி உயிர்கள் ரத்த வெள்ளத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியில், திடீரென படைகளை வாபஸ் பெற திட்டமிட்டிருப்பதாக ஒபாமா அறிவித்தார். உண்மையில் அந்த அறிவிப்பின் நோக்கம் என்ன? இன்றைய நிலையில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரத்து 700 அமெரிக்கப் படையினர் குவிந்திருக்கிறார்கள். மிக நவீன ஆயுதங்களோடு அவர்கள் ஆப்கன் முழுவதும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் அடுத்தாண்டு செப்டம்பர் வாக்கில் சுமார் 33 ஆயிரம் படையினரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஒபாமா கூறியிருக்கிறார். இந்த 33 ஆயிரம் பேர் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமாவால் புதிதாக அனுப்பப்பட்டவர்களே. ஏற்கனவே அங்கு போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதர 80 ஆயிரம் பேரில் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து சில ஆயிரம் பேரை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

ஒபாமாவின் திட்டப்படி ‘படைகள் வாபஸ்’ முடிந்தபின்னரும், 2013ம் ஆண்டிலிருந்து சுமார் 68 ஆயிரம் அமெரிக்கப் படையினர் ஆப்கனில் நிரந்தரமாக தங்குவார்கள். அவர்களை கொண்டு அந்நாட்டில் மிக நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்கும் விதத்தில் ஒரு நிலையான- நிரந்தரமான ராணுவத் தளம் நிறுவப்படும். ஒபாமாவின் இந்த ‘மகத்தான’ திட்டத்திற்கு, வேறு வழியின்றி அமெரிக்காவின் கைப்பாவை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது கர்சாயும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். உண்மையில், ஏற்கனவே அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களைப் போல பல மடங்கு கூடுதலான குண்டுவீச்சுகளும், ஏவுகணைத் தாக்குதல்களும் ஆப்கனின் அப்பாவி மக்கள் மீது நடக்கப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பே இது. அதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்கா நடத்திய மிகக் கொடிய போர்களுக்காக அந்நாடு இதுவரை 1. 3 டிரில்லியன் டாலர் (1டிரில்லியன் = 100 ஆயிரம் கோடி) அளவிற்கு செலவிட்டுள்ளது. தனது நாட்டில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், இந்தச் செலவில் சற்று குறைக்கலாம் என்ற அடிப்படையிலேயே, தன்னால் கூடுதலாக அனுப்பப்பட்ட படைகளை திரும்பப் பெறுகிறார் ஒபாமா.

ஆப்கனில் படைகளை வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்ததும் இவரைப் போல உண்டா? என துள்ளிக் குதிக்கும் ஊடகங்கள், உலகின் 150 நாடுகளில் அமெரிக்கா குவித்து வைத்துள்ள படைகளை அவர் வாபஸ் பெறுவாரா? என்ற கேள்வியை எழுப்பாதது ஆச்சரியமில்லை. இராக்கில் 45 ஆயிரத்து 600 பேர், லிபியாவில் சுமார் 10 ஆயிரம் பேர் என இன்றைக்கும் அமெரிக்கப் படையினர் அநியாயமான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் டிஜிபவுட்டி, கென்யா, எகிப்து, சினய் பாலைவனம்; ஆசியக் கண்டத்தில் தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், டிகோ கார்சியா தீவு, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா; ஆஸ்திரேலிய கண்டத்தில் ஆஸ்திரேலியா, மார்ஷல் தீவுகள், நியூசிலாந்து; ஐரோப்பாவில் ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சவுதாவிரிகுடா, கிரீன்லாந்து, பிரான்ஸ், போலந்து, துருக்கி, கொசோவா; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்; மேற்கத்திய பிரதேசத்தில் ஆண்டிக்குவா, கொலம்பியா, செயின்ட் ஹெலனா, கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடா; ஹவாய் தீவுகள், போர்டோரிகா; மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள். . . என அமெரிக்காவின் படைகள் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் அனைத்து பகுதிகளிலும் பதட்டத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருப்பதுதான் அமெரிக்க ராணுவத்தளங்களின் முக்கிய பணி. அமைதித் தூதர் ஒபாமாவுக்கு, இந்த நாடுகளில் இருந்து ஒரே ஒரு அமெரிக்க வீரரையேனும் திரும்பப் பெறும் துணிச்சல் இருக்கிறதா?