பகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

பகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்!

பகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்

பகுதி 4: ஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)

பகுதி 5

இந்தத் தொழில்நுட்பம் நேரத்தை, தொழிலாளர்களைக் குறைத்து மிக அதிக பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வைத்தது. அது தொழிலாளர்களை விலக்கியது அல்லது அவர்களின் சம்பளத்தைக் குறைத்து, வாங்கும் சக்தியை இல்லாமல் ஆக்கியது. இந்தப் பிரச்சனைக்கு அமெரிக்கர்கள் கண்டறிந்த புதிய நுட்பம், கடன் பொருளாதாரம் (லோன்). மக்களை தங்களின் சக்திக்கு மீறி வாங்க வைப்பது. ஈடாக வைத்து கடன் பெற எதுவும் இல்லாதவர்களை அவர்களின் எதிர்காலத்தை ஈடாக, அதாவது எதிர்கால உழைப்பை ஈடாக வைத்து கடன் தர ஆரம்பித்தார்கள். இந்த “மாபெரும் புதிய கண்டுபிடிப்பு” 2000க்குப் பிறகு வங்கித் துறையில் மிகப் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது.

loan economyவங்கி மற்றும் காப்பீட்டு சேவைத் துறையில் கோலோச்சும் அமெரிக்க - இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி இந்த காலகட்டத்தில் விண்ணை முட்டின. இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நாடுகளான ஜெர்மனி போன்ற நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டன. இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கும், இணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் மென்பொருட்களை உற்பத்தி செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சி கண்டன.

1990-97 ஆண்டுகளில் மொத்த இந்திய ஜிடிபியில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு 0.4% இருந்து 0.9% ஆக மட்டுமே இருந்தது. அதுவே 2010 ஆம் ஆண்டுக்குள் 6.1% ஆக வளர்ச்சி கண்டது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அளவோ மிகக் குறைவு. அதேபோல உற்பத்தித் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அளவு 10% அல்லது அதை விடக் குறைவு. ஆனால் கடைகளில் நவீன பொருட்கள் கொட்டிக் கிடக்கிறதே... அவை எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றால் இறக்குமதிதான் அல்லது இருக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்ததுதான்.

நாமும் கையில் இருக்கும் காசை போட்டோ அல்லது கடன் (லோன்) வாங்கியோ கார், பைக் என வாங்கித் தள்ளினோம். இந்தியாவின் ஜிடிபி 468 பில்லியனில் இருந்து 2007க்குள் 1.2 ட்ரில்லியன் ஆக வளர்ச்சி அடைந்தது. அட இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வளர்ந்திருக்கிறதே, வேலைவாய்ப்பும் இதே அளவு வளர்ந்திருக்குமே என்று பார்த்தால் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு அதே 50 சதவீதத்திலேயே நின்று விட்டது. ஆனால் சீனாவிலோ அது 39% ஆகக் குறைந்து தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. அதன் பொருளாதாரம் இதே 2007க்குள் 1.2 ட்ரில்லியனில் இருந்து 3.6 ட்ரில்லியனாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

நாடுகள் மற்றும் அமெரிக்க மக்களின் வாழ்வை மாற்றிய கடன் பொருளாதாரம்

இப்படி பணக்கார நாடுகளின் செல்வம் எல்லாம் ராக்கெட் வேகத்தில் உயர்கிறதே, குறிப்பாக 90களுக்குப் பிறகு, அவை எல்லாம் இதற்குமுன் ஏன் அப்படி வளரவில்லை? அதற்குக் காரணம் வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும்தானா? சரி, தொழில்நுட்பம் உற்பத்தியைப் பெருக்குகிறது என்று கொண்டால் அதனை விற்க இடம் வேண்டும். அந்த விலையைக் கொடுத்து வாங்க மக்களிடம் செல்வம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வேண்டும். இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் வேலையைக் குறைத்து பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தியது, தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தது அல்லது அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. அது பெரும்பாலானவர்களின் சம்பளத்தைக் குறைத்தது.

சம்பளத்தைக் குறைத்தால் அல்லது வேலை ஆட்களைக் குறைத்தால் யார் இப்படி உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவார்கள்? அதற்கு அவர்கள் கண்டறிந்ததுதான் உலகமயமாக்கம் மற்றும் கடன் பொருளாதாரம். உலகமயமாக்கம் என்பது உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, எந்த தொழிலாளரையும் பயன்படுத்தி, யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்பதே.

ஒரு டாலருக்கும் குறைவான சம்பளமும், மிகக் குறைந்த விலையில் மூலப்பொருட்கள் கிடைக்கும் ஊரில் பொருளை உற்பத்தி செய்து, அதிக சம்பளம் பெறும் தன் நாட்டு மக்களுக்கும், குறைந்த சம்பளம் பெறும் அதே நாட்டு மக்களுக்கும் ஒரே விலையில் பொருளை விற்பது. இப்போது நமக்குப் புரிந்திருக்கும் பணக்கார நாடுகளின் செல்வம் எப்படி உயர்ந்தது என்று!

செல்வம் என்பது ஏதோ வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை. இங்கேயே அது உருவாக்கப்படுகிறது. அதன் பலன்கள் யாரை அதிகம் சென்றடைகிறதோ, அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள் எனக் கொண்டால், இந்த செல்வம் அள்ள, அள்ளக் குறையாததா என்ன? இல்லையே. அப்படி என்றால் ஓரிடத்தில் செல்வம் இருக்கிறது என்றால் இன்னொரு இடத்தில் ஒன்று உருவாக்கப்படவில்லை அல்லது உருவாக்கப்பட்ட செல்வம் ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு குறைந்த விலையில் சீனாவில் ஒரு ஐபோனை உற்பத்தி செய்து, எடுத்துச் சென்று, விளம்பரப்படுத்தி, விற்க 500 டாலர் ஆகிறது. அது சந்தையில் 1000 டாலருக்கு விற்கப்படுகிறது. இங்கே 500 டாலர் செல்வம் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டது. இப்படி ஒவ்வொரு பொருளையும் விற்று மனிதனிடம் இருந்து எடுத்துக் கொண்டே சென்றால் அவனிடம் என்ன விஞ்சி நிற்கும்? அவன் எப்படி பொருளை மேலும் வாங்குவான்? அந்த நாடும், வீடும் இப்படி செல்வத்தை ஒருவரிடம் இழந்தால், தனது வரவை இழந்தால், தன் வரவுக்கும் மீறி செலவு செய்தால், கடன் வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கும்? இந்த நிலையை உருவாக்கியவர்களே அதிக செல்வம் வைத்திருப்பார்கள். அவர்களிடமே கடன் வாங்க வேண்டி வரும். அப்படித்தான் உலகமயமாக்கத்திற்குப் பிறகு தென் அமெரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளும் அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கின. இந்தக் கடன்கள் அந்த நாடுகளில் வெள்ளமெனப் பாய்ந்து பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டன. அது தொன்னூறுகளுக்குப் பின்பு மலிவான பொருட்களை உற்பத்தி செய்யவும், அதை மிக அதிக விலை கொடுத்து வாங்கவும் பயன்பட்டன. சரி இப்படி சம்பாதித்த பணத்தைத்தான் அவர்கள் கடனாகக் கொடுத்தார்காளா என்றால் அப்படி சொல்லிவிட முடியாது.

வர்த்தகம் டாலரில்தான் நடக்க வேண்டும் என்பதாலும், எண்ணெய் வாங்க எப்போதும் டாலரை நாடுகள் வைத்திருக்க வேண்டும். சந்தையில் அதன் விலை திடீரென ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, அந்த செலவை சமாளிக்கவும் டாலரை நாடுகள் தேவைக்கு அதிகமாக எப்போதும் இருப்பாக (reserve currency) வேறு வைத்திருக்க வேண்டும். இதுவரை நாடுகளின் இருப்புப் பணமாக (reserve currency) டாலரே ஆதிக்கம் (70%) செலுத்தி வந்தது, இப்போதும் செலுத்தி வருகிறது (60%). (இப்போது மத்திய கிழக்கில் இந்தக் குழப்பத்தை உருவாக்குவதே அமெரிக்காதான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வரும் எனில் இந்த இரண்டுக்குமான தொடர்பை யூகித்துக் கொள்ளுங்கள்).

இப்படி டாலரின் தேவை அதிகரிக்க, அதிகரிக்க டாலர் உற்பத்தி நிலையமான அமெரிக்கா தனது பொருட்களை அதிக விலைக்கு விற்று மட்டும் பணம் சேர்க்கவில்லை! வெறும் பணத்தை அச்சடித்தும், அதனைத் திறம்பட நிர்வகித்தும், அதன் பரிமாற்றங்களை தன் வழியாக நடைபெறுமாறு பார்த்துக் கொண்டும் பெரும் செல்வம் ஈட்டியது. பெரும் பணக்காரனாக வாழ்ந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சிக்கலான காலங்களிலும், தேவைக்கு ஏற்பவும், பணத்தை தன் விருப்பத்திற்கு அச்சடித்து, அதனை அமெரிக்கா செலவிட்டு தனது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், கடன் கொடுக்கவும் செய்தது.

சரி அப்படி நம் ஊரில் அச்சடித்தால், பணவீக்கம் அதிகமாகி வெற்றுக் காகிதமாகும் என்று முன்பே பார்த்தோம். ஆனால் அமெரிக்கா மட்டும் அச்சடித்தால் ஏன் அப்படி ஆவதில்லை என்று கேட்டால், அதன் உலகளாவிய பயன்பாடுதான். இப்படி அச்சடிப்பதால் ஏற்படும் பணவீக்கம், உடல் இயங்க ஓய்வின்றி ஓடும் ரத்தம்போல, உலகமெங்கும் வர்த்தகம் நிகழ டாலர் சுற்றிச் சுழலுவதால், பெருமளவு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவிடும். அதனை அளவோடும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் செய்யும்போது, பாதிப்பு சொற்பமாகி விடும். லாபம் வந்தால் அமெரிக்க வங்கிகள், நிறுவனங்கள் பகிர்ந்து கொள்வார்கள். நட்டமும், இழப்பும் வந்தால் உலக நாடுகளுக்கு இப்படி வலி தெரியாமல் சிறிது, சிறிதாக பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.

சரி அமெரிக்க மக்களை தனது நாட்டு மக்கள் என்ற முறையில், இப்படி உலகம் முழுதும் சென்று சேர்த்த செல்வத்தை பிரித்துக் கொடுத்து நல்ல முறையில் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால், நம்முடன் ஒப்பிடும்போது எல்லாப் பொருட்களையும் கையில் கொடுத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்ன... நாடுகளை கடனாளி ஆக்கியதைப் போலவே அவர்களையும் சாகும் வரை மீள முடியாத கடனாளிகளாக ஆக்கி இருக்கிறார்கள். அதோடு இந்த பணவீக்கத்தை அவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவே செய்தார்கள். அவர்களும் டாலரில் தானே சம்பாதிக்கிறார்கள்.

முன்பு ஒரு டாலருக்கு வயிறு நிறைய சாப்பிட முடியும் என்றால் இப்போது ஒரு பெப்சி கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு டாலர் மதிப்பு குறைந்து கொண்டே வந்திருக்கிறது. சரி முன்னைவிடவும் இப்போதுதான் சம்பளம் உயர்ந்து இருக்கிறதே என்று இதற்குப் பதில் கூறலாம். அப்படி உயர்ந்திருந்தால் 1950ல் பூஜ்ஜியமாக இருந்த அமெரிக்கக் குடும்பங்களின் கடன் ஏன் தற்போது 14 ட்ரில்லியன்களாக உயர்ந்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். இது ஏன் ஏற்பட்டது என்று கேட்டால் அதற்குக் காரணமும் இந்த உலகப் பண தகுதியும், உலக மேலாதிக்கமும் தான்.

இந்தப் புதிய பொன் முட்டையிடும் டாலர் வாத்து, வங்கி முறையின் அடிப்படையான, வங்கியில் மக்கள் பணம் சேமிப்பது, அந்தப் பணத்தை வங்கிகள் கடன் வேண்டுவோருக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுத்து சம்பாதிப்பது, பின் வங்கியில் பணம் இட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அந்த லாபத்தில் வட்டியாகக் கொடுப்பது என்ற முறையை கேள்விக்கு உள்ளாக்கியது. இப்போது அரசோ அல்லது மத்திய வங்கியோ பணத்தை, அதாவது செல்வத்தை எந்த உழைப்போ, உற்பத்தியோ இன்றி உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு உழைப்பு, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கத்தை உருவாக்க வேண்டும். அந்தத் தங்கத்திற்கு இணையாக பணத்தை உருவாக்க வேண்டும். இப்போது வெறும் பணத்தை உருவாக்க வேண்டும். பின்பு அது எப்போதும் வர்த்தகம் செய்யத் தேவையாக இருப்பதற்கு பார்த்துக் கொள்ளவேண்டும் அல்லது அதற்கான தேவையை இன்னும் அதிரிக்க வேண்டும் அல்லது தேவையை உருவாக்க வேண்டும், அவ்வளவே! எனில் மக்கள் வங்கியில் பணம் சேர்த்தால்தான் வங்கி இயங்க முடியும் என்ற நிலை இப்போது இல்லை. (இது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அது உலகப் பணம்).

மக்களை அதிக வட்டி கொடுத்து சேமிக்கத் தூண்டாமல், வட்டியைக் குறைத்தோ அல்லது இல்லாமல் ஆக்கியோ இங்கு வைத்தால் எந்தப் பலனும் இல்லை. ஆகவே செலவு செய், சேமிக்காதே எனத் தூண்டுவது, உற்பத்தி செய்த பொருளை வாங்க வைப்பது. அப்படியானால் அவர்கள் வேலை செய்து ஓய்வு பெறும் வயதில் வெறும் ஆளாக நிற்பார்களே? என்று கேட்டால் அதில் அவர்களுக்கு என்ன அக்கறை? பின் பணம் இல்லையென்றால் ஓய்வு எப்படி பெறுவது? வேறு என்ன “என் கடன் வேலை செய்து கிடப்பதே” என்று சாகும் வரை வேலை செய்ய வேண்டியதுதான். இது போதுமானதாக இருந்ததா என்றால், யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொரிதான்.

சம்பளத்தை உயர்த்தாமல் வெறும் பொருட்களின் விலையை மட்டும் உயர்த்தினால் எங்கே சேமிப்பது? போதாக் குறைக்கு உற்பத்தி செலவைக் குறைக்க, முதலில் இடுபொருட்களின் செலவைக் குறைக்க, எல்லோருக்கும் பொதுவான கனிம வளங்களை எங்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாகத் தர வேண்டும் என்றார்கள். பின்பு தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு அதிகம் ஆகிறது, ஆதலால் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் ஆசிய நாடுகளுக்குச் செல்கிறோம் என்றார்கள். அதுவும் செலவை அதிகமாக்குகிறது, நாங்கள் உற்பத்தியை இயந்திர மயமக்குகிறோம் என்றார்கள். பின்பு அப்போதும் தொழிற் போட்டியில் நிற்க முடியவில்லை. ஆதலால் அரசு எங்களிடம் வாங்கும் வரியைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இது எல்லாம் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு பொருளாதாரம் உயரும் என்றார்கள். சரி வரியைக் குறைத்து விட்டால் அரசின் வருவாய் குறைகிறது, என்ன செய்வது என்று கேட்டால், அரசைக் கடன் வாங்கு என்றார்கள்.

அரசுக்கு வருவாய் என்பது ஒன்று மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் வாங்கும் வரியின் மூலமாக வர வேண்டும். இல்லை அது ஏதேனும் தொழிலோ அல்லது மக்களுக்கு சேவையோ செய்து, அதற்கு மக்களிடம் கட்டணம் கட்டச் சொல்லி சம்பாதிக்க வேண்டும், பேருந்து, ரயிலை இயக்கி சம்பாதிப்பதைப் போல! இல்லை, இல்லை அரசு தொழில் எல்லாம் செய்யக் கூடாது. அதனை எங்களைப் போன்ற நிறுவனங்கள் தான் செய்ய வேண்டும். அரசின் வேலை நாங்கள் இதனை செய்யத் தகுந்த சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டும்தான், ஆதலால் எல்லாவற்றையும் விட்டு, விட்டு வெளியேறுங்கள் என்றார்கள்.

வரியும் வரவில்லை, தொழிலும் செய்யவில்லை, அரசு தான் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று கேட்டால், மக்களின் மீது வாங்கும் வரியை அதிகப்படுத்துங்கள் என்றார்கள். அதுவும் போதவில்லை என்றபோது, அவர்களுக்குத் தரும் கல்வி, மருத்துவம் போன்ற சலுகைகளை (உரிமைகளை) குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்டி விடுங்கள் என்றார்கள். அதுவும் போதவில்லையே என்றபோது அரசின் (மக்களின்) சொத்துக்களை எங்களிடம் விற்று கடனை அடையுங்கள் என்றார்கள். இப்படி வரிக்கு மேல் வரி, எல்லா சலுகைகளையும் வெட்டி மக்கள் இடுப்பில் துணிகூட விஞ்சாத நிலை ஏற்பட்டபோது, அவர்களுக்கும் கடன் கொடுத்து பொருளை வாங்கச் சொன்னார்கள்.

சரி அவர்கள் எதிர்காலத்தைக் கூட ஏற்கனவே உங்களிடம் கொடுத்து பொருளை வாங்கி விட்டார்களே, பின்பு எப்படி அந்தக் கடனை அடைப்பார்கள் என்று கேட்டபோது, எதிர்காலத்தில் எல்லாம் சரியாகும்; அப்போது அவர்கள் நிறைய சம்பாதிப்பார்கள், அதை வைத்து அவர்கள் அடைப்பார்கள் என்று அவர்களின் தன்னம்பிக்கையையும் தங்களிடம் அடகு வைக்கச் சொல்லி விட்டார்கள்.

இது என்னங்க புதுசா இருக்கு... கோவணத்தை உருவுறதுன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் தன்னம்பிக்கை வரைக்கும் கூடவா உருவ முடியும் என்று அப்பாவியாக நாம் கேட்டு விட்டு நகரலாம். ஆனால் மற்ற நாடுகளும், நிறுவனங்களும், செல்வந்தர்களும் இந்தக் கதையை கேட்டு விட்டு பேசாமல் போவார்களா என்ன? முன்பு போலவே பொருளை உற்பத்தி செய்து, டாலரில் வர்த்தகம் செய்து, இவர்கள் விருப்பத்திற்கு ஆட விடுவார்களா என்ன?

அமெரிக்க மக்கள் வாங்கும் திறனை இழந்து விட்டார்கள். புதிய தொழில் நுட்பமும், பொருட்களும் அவர்களிடம் இருந்தாலும், அதனை விற்க மற்ற நாடுகளையே நம்பி இருக்க வேண்டும். அதனால், அதன் பொருளாதாரம் இனி உலக நாடுகளின் வளர்ச்சியில் மட்டுமே வளரும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கணித்தார்கள். அதாவது மற்ற நாடுகளின் சந்தை முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தார்கள். பின்பு என்ன ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மெல்ல தாதாவிற்கு எதிராக (டாலருக்கு) காய்களை நகர்த்த ஆரம்பித்தார்கள்.

ஒற்றைத் துருவ அமெரிக்க மேலாதிக்கத்திற்கு (டாலருக்கு) எதிரான நகர்வுகள்!

சோவியத் ஒன்றியம் வீழ்ந்த தொண்ணூறுகளுக்குப் பிறகு, என்னை எதிர்க்க எவருமில்லை என்ற மமதையில் உலகமயத்தை அறிமுகம் செய்து, உலகம் முழுவதும் தனது கொடியை நாட்டி அமெரிக்கா பீடுநடை போட ஆரம்பித்தது. எண்ணெய் வளமிக்க ரசியா எதிர் நிலையில் இருந்து ஆதரவு நிலைக்கு வந்து விட்டது. கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்ற எண்ணெய் வளமிக்க மற்றுமொரு நாடான ஈரானை, ஈராக்கை ஏவி விட்டு போர்த் தொடுக்கச் சொல்லி பலவீனப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி ஏவப்பட்ட அம்பு (சதாம்) எண்ணெய் ஏகபோகத்திற்குத் தடையாக நின்ற போது, அந்த அம்புக்கே குறி வைக்கப்பட்டது.

எண்ணெய் கூட்டமைப்பில் உள்ள குவைத்தும், சவுதியும் ஒப்புக் கொண்ட அளவை விட அதிக எண்ணெயை உற்பத்தி செய்து எண்ணெய் விலையை விழச் செய்தார்கள். அதோடு குவைத் கிடைமட்டமாக குழாய் விட்டு இராக்கின் எண்ணெய் வயலில் இருந்து எண்ணெயைத் திருடியது. குவைத் திருடியது என்று சொல்வதை விட அவர்களைக் கட்டுப்படுத்துபவர்கள் செய்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது எண்ணெய் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஈராக்கை பொருளாதார ரீதியாக பெருமளவு பாதித்தது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தூண்டப்பட்ட சதாம் போரில் இறங்கினார். திட்டமிட்டபடி அமெரிக்க கூட்டணி போரில் அவரை அடித்து ஒடுக்கி, ஈராக்கை எண்ணெய் சந்தையில் இருந்தே விலக்கினார்கள்.

அந்தப் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவை யாரும் எதிர்த்து நிற்க முன்வரத் துணியாத சூழல் உருவாக்கப்பட்டது. உலகை ஆள வெறும் ஆயுதம் மட்டும் போதாது. பயமும், ஆள்பவரின் மீதான மிரட்சியும் முக்கியம். அது உருவாக்கப்பட்டு விட்டது. இனி என்ன ஏகபோகம்தான். ஏகபோகத்திற்கு எல்லோரின் மீதும் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்ப்பு உருவாகாமல் போகுமா என்ன? இரண்டாம் உலக போருக்குப் பின் அதன் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்த ஜெர்மனி தனது நீண்ட நாள் கனவான ஐரோப்பாவை தன் கட்டுக்குள் கொண்டுவரும் கனவை தூசு தட்டி கையில் எடுத்தது. இம்முறை தனது முன்னாள் போட்டியாளர்களான இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி ஆகியோரையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, 1993 முதல் தீவிரமாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் ஒரு பொருளாதாரக் கூட்டணியை கட்டியது.

கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட ஈரான், 1995ல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் பேசி, ரசியா, ஐரோப்பாவிற்கு எரிவாயுவை குழாய் வழியாக ஏற்றுமதி செய்வது போல, இந்நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எண்ணெய்க் குழாய் (IPI pipeline) அமைக்கும் முயற்சியில் இறங்கியது. அது எப்படி? அப்படி எல்லாம் அவர்களின் விருப்பத்திற்கு செய்ய அமெரிக்கா விடுமா என்ன? அது அவர்களின் சொத்து மட்டுமல்ல, உயிரும் ஆயிற்றே! உடனே அதைத் தடுத்து நிறுத்தும் விதமாக, ரசியாவின் பிடியில் இருக்கும் துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு எண்ணெய் அமைக்கும் திட்டத்தை (TAPI) அறிவித்தார்கள். இதற்கு அமெரிக்காவின் ஆசிய வாலாக செயல்படும் ஜப்பானின் ஆசிய முன்னேற்ற வங்கி (Asian Development bank) நிதி உதவி அளிக்க முன்வந்தது. கடன் கொடுத்து, அதாவது அந்நிய முதலீட்டில் செழித்து வளர்ந்து கொண்டிருந்த ஆசியப் பொருளாதாரம் 1997ல் பொருளாதார அதிர்ச்சியை சந்தித்தது. முதலீட்டாளர்கள் ஆசிய நாடுகளின் மீது நம்பிக்கை இழந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றார்கள்.

கடன் வெள்ளமென பாய்ந்து பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி, திடீரென உள்வாங்கிக் கொண்டது. கிழக்காசிய நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டைனா போன்ற நாடுகளுக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடி பரவியது. இந்த எல்லா நாடுகளின் பணமதிப்பும் மடமடவென சரிந்தன. இந்நாடுகளின் கடன் அதன் உற்பத்தி மதிப்பை விட மிக அதிகமானது. பின்பு என்ன... கடனை அடைக்க மீண்டும் கடன், அரசு சொத்துக்களை விற்பது, வரியை அதிகப்படுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை வெட்டுவது என பிரச்சனைக்குத் தீர்வு சொல்லப்பட்டது.

கடன் பொருளாதாரத்தின் விளைவை மக்கள் முதல்முறையாக அனுபவித்தார்கள். டாலர் ஆதிக்கத்தையும், அது சார்ந்த முதலீட்டாளர்களின் தாக்குதலை சமாளிக்கவும் ரசியாவும், சீனாவும் இணைந்து “பல்துருவ உலகை (multipolar world)” உருவாக்குவது எனப் பிரகடனம் செய்து ஒற்றைத் துருவத்திற்கு எதிரான விதையைத் தூவினார்கள். இதனைத் தொடர்ந்து பல்துருவ உலகத்தை ஏற்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக, 2001ல் சீனா, ரசியா மற்றும் முன்னாள் சோவித் நாடுகளான கிர்கிஸ்தான், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைந்து ஐரோப்பிய கூட்டணியைப் போன்று பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (shanghai cooperation organization) ஏற்படுத்தினார்கள்.

1972ல் டாலரை உலகப் பணமாக ஏற்கச் செய்து, ஒரு நாட்டுடன் போரிட்டு அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதற்குப் பதிலாக, மறைமுகமாக பணத்தின் மூலம் கட்டுப்படுத்தும் புதிய அதி நவீன முறையை அமெரிக்கா அறிமுகப்படுத்தி இருந்தது அல்லவா! அதையே பின்பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எல்லாம் பொதுவான ஈரோ (Euro) எனும் நாணயத்தை 1999ல் ஏற்படுத்தி பொருளாதாரக் கூட்டணியை, பணக் கூட்டணியாக (Monetary Union) ஐரோப்பிய ஒன்றியம் மாற்றி அமைத்தது. இதுவரை எல்லா நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பங்கு பெற்று வரும் டாலருக்கு மாற்றாகவே இந்த உருவாக்கம் என கருதப்பட்டது. இந்த நாணயம் 2002 முதல் முழு பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது.

1999 ஆம் ஆண்டு இறுதியில் ரஷ்யாவின் எல்ட்ஸின் அதிபர் பதவியில் இருந்து விலகி, புதின் அப்பதவிக்கு வந்தார். அது முதல் அவர் ரசியா இழந்த இறையாண்மையை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அதன் முதல்படியாக அவர் மேற்கத்திய ஆதரவு பெரும் செல்வந்தர்களான கொடோர்க் கொவ்ஸ்கி போன்றோரை ஒடுக்கி நாட்டின் எண்ணெய் வளங்களை தேசிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வந்தார். அமெரிக்காவின் கெட்ட நேரம் அதன் பக்கத்து தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவில் சாவேஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அவர் முதல் வேலையாக அந்த நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் தேசிய மயமாக்கினார். இந்த நாட்டின் எண்ணெய் வயல், அமெரிக்காவின் டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. இது பூகோள ரீதியாக குறைந்த செலவில் எண்ணெய் பெற வசதியாக இருந்து வந்தது. அமெரிக்க நிறுவனங்களே அங்கு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் அடைந்து வந்தன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவரை அந்நிறுவனங்கள் அடைந்து வந்த கொள்ளை லாபத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

இப்படி ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், அமெரிக்காவின் கேள்விக்கிடமற்ற ஒரு துருவ மேலாதிக்கத்துக்கு எதிரான நகர்வுகள் ஆரம்பித்தன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் டாலருக்கு எதிரான நகர்வுகள் ஆரம்பித்தன. இதுவரை நாடுகளின் இருப்பில் டாலரே முக்கிய இடத்தில் இருந்தது. புதிதாக சந்தைக்கு வந்த ஈரோ, அதில் குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டது. போதாக் குறைக்கு, முதன்முறையாக சதாம் இனி எதிரியின் பணத்தில் நாங்கள் எண்ணெய் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறி, டாலருக்குப் பதிலாக ஈரோவில்தான் வர்த்தகம் செய்வோம் என அறிவித்தார். அமெரிக்கா எதிர் வினையாற்ற வேண்டிய நிலையை எட்டியது.

ஆசிய-தென்அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளின் நிதிநிலை, அதன் நம்பகத் தன்மை குறித்தான நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், எண்ணெய் இறக்குமதியை நம்பி இருக்கும் அமெரிக்காவின் நலனில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அதனை சரி செய்ய வேண்டும். அதோடு பெருமளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய சந்தையைக் கட்டுபடுத்த வேண்டும். அதன் மூலம் அவற்றின் உற்பத்தியையும், சந்தையையும் கட்டுப்படுத்தலாம். தவறினால் இவை டாலரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். அதோடு டாலருக்கு எதிரான நகர்வுகளை முறியடித்து, அப்படி நகரும் நாடுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படி பல்முனை எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது.

அதோடு எல்லோருக்கும் அமெரிக்காவின் மீதான பயம் நீங்கிப் போய் இருக்கிறது. ஆயதங்கள் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு போர் இல்லையெனில் வேலை இல்லை. அதற்கும் தீனி போட்டாக வேண்டும். இந்நிலையிலேயே 2001 இரட்டை கோபுர நிகழ்வு நடைபெற்று உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. இதற்கு அல்கொய்தா அமைப்பே காரணமென்று, அதற்கு அடைக்கலம் அளிக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இந்தத் தாக்குதலை செய்தது அரசா? அல்கொய்தாவா? என்று யாரும் இன்று மயிர் பிளக்கும் விவாதம் எதையும் செய்வதில்லை. அன்று அரசு கூறிய காரணத்தையும் இன்று யாரும் நம்புவதுமில்லை. ஆனால் இதற்குக் காரணம் ஆப்கனிஸ்தான் தான் என்று கூறி உடனடியாக அந்நாட்டின் மீது போர் தொடுத்ததேன்?

- சூறாவளி

Pin It