அன்பிற்குரிய தோழர்களே!!

இந்தக் கடிதத்தை முழுவதும் படித்துவிட்டு அதன் பின் ஒரு முடிவுக்கு வாருங்கள் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ”என்னடா இப்படி அமைப்பு பிரச்சனைய பொதுவெளில வச்சு எழுதுறாங்களே!! துரோகிகள்! கலைப்புவாதிகள்!! சீர்குலைவு சக்திகள்!!! சதிகாரன்கள்!!!!” என்றும், “அமைப்பு இரகசியத்தை மீறி அதை உடைத்து கட்சியைக் காட்டிக் கொடுப்பவர்கள், போலீஸ் ஏஜெண்ட்” என்றும் எங்களை நீங்கள் விமர்சிப்பதற்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அதை செய்யும் முன் இந்த கடிதத்தை முழுமையாக படித்துவிட்டு முத்திரை குத்துங்கள் என்று மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கடிதத்தின் நோக்கம் என்ன என்பதை இறுதியில் தொகுப்பாக கூறுகிறோம்.

எதற்காக இந்த கடிதம்?

communist leadersஇந்தக் கடிதத்தை இவ்வளவு காலம் தாழ்த்தி எழுதுவதற்காக எங்களை முதலில் மன்னித்து விடுங்கள். எதற்காக இந்தக் கடிதம்? பிரச்சாரம், வேலை, வசூல், ஆர்ப்பாட்டம், கைது, சிறை, மாநாடு, பொதுக் கூட்டம் என்று மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் நாம் கொஞ்சம் நிதானித்து பிரச்சனைகளை பரிசீலிப்பதற்கான ஒரு ஸ்பீடு பிரேக்கர் தான் இந்தக் கடிதம். இதில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கி எழுத முயற்சித்துள்ளோம். இங்கு எங்கள் முடிவுகளை தீர்ப்பாக எழுத வரவில்லை. எங்களுடைய கேள்விகளை நமது தோழர்கள் முன் வைக்கிறோம். அதில் இருந்து சிந்தித்து நீங்களே ஒரு தீர்ப்பை எழுதுங்கள் தோழர்களே!

ப்ளீனத்திற்குப் பின்பான மாதங்களில் நாம் நமது மனதில் என்ன சிந்தித்து கொண்டிருப்போம்? ”நமது அமைப்பிலும் பிரச்சனை இருக்கிறது. நாம் தான் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி, பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். தற்போது தான் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறதே, அதனால் எல்லா தவறுகளையும் களைந்து கொண்டு புரட்சியை நோக்கி அமைப்பையும், மக்களையும் கொண்டு சேர்க்க வேண்டும். பாசிச அபாயம் முன்னே நிற்கிறது இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை பெரிதுபடுத்தக் கூடாது”. இப்படி எல்லாம் சிந்தித்து இருப்போம். ஆனால் நாம் இப்படி சிந்திப்பது சரியா? உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி சரிசெய்யக் கூடிய நிலைமையில் தான் பிரச்சனைகளும், தலைமையும் இருக்கிறதா? சரியாகத்தான் முடிவுகளை எடுத்திருக்கிறோமா என்பதை ஒரு முறையாவது பரிசீலித்திருப்போமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட எங்களுடைய இந்தக் கடிதம் உதவும் என்று நம்புகிறோம் தோழர்களே.

பொங்கல் ஒரு கழுத்தறுப்பு நாடகம்

முதலில் நடந்து முடிந்த ப்ளீனம் அல்லது பொங்கல் என்பதே நம்மை ஏமாற்றி கழுத்தறுப்பு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை விளக்குவதில் இருந்து தொடங்குகிறோம். ஏனென்றால் அமைப்புத் துறையிலும், அரசியல் கோட்பாட்டுத் துறையிலும் இருக்கும் பல பிரச்சனைகள் நீண்ட விரிவான விளக்கத்துடன் எழுதப்பட வேண்டியவை. எனவே அவசரம் கருதி, முதலில் இந்த ப்ளீனம் எப்படி சதித்தனமாக அரங்கேற்றப்பட்டது என்பதையும், அதைச் சுற்றியுள்ள விசயங்களை மட்டும் சுருக்கமாக எழுதி விடுகிறோம். அதிலும் எல்லோர் கண்ணுக்கும் புலப்படும் முக்கியமான விசயங்களை மட்டுமே எடுத்துக் கூற விரும்புகிறோம். மற்ற விசயங்களை நமது தோழர்கள் தங்கள் சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

ஜனநாயக மறுப்பு வேரில் இருக்கிறது

நான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அமைப்பில் இருப்பதால், பல இளம் தோழர்கள் அறியாத விசயம் ஒன்று உள்ளது. ப்ளீனத்தை நடத்தாமல் இழுத்தடித்து 8 ஆண்டுகள் அணிகளை ஏமாற்றிய நிகழ்வு என்பது நமது அமைப்பு வரலாற்றில் இது முதல் முறை அல்ல. 2010-ல் நடந்த ப்ளீனம் என்பது 1998-ல் நடந்த ப்ளீனத்திற்குப் பின்பாக சுமார் 12 ஆண்டு காலம் கழித்து நடத்தப்பட்டது தான். அதுவும் அணிகளின் ஜனநாயகத்தை மறுத்து தலைமையை தன் கையில் வைத்திருந்த இதே மூத்த தோழர்கள் தான் அப்பொழுதும் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர். அதற்கு முன்பும் ப்ளீனத்தை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்ற முறையான ஜனநாயக வழிமுறை கையாளப்படவில்லை. (ஒருவேளை இதற்குப் பதிலாக, எதாவது செண்டிமெண்டான காரணங்களை சொன்னால் அணிகளாகிய நாம் நம்பக்கூடும்). எனவே இதை வெறும் இப்பொழுது நடந்த 8 ஆண்டுகாலப் பிரச்சனையாக சுருக்கிப் பார்க்க முடியாது. ஜனநாயக மறுப்பு என்பது நமது அமைப்பின் வேரில் இருந்து இருக்கிறது. ஆனால் இதை வெறும் 8 ஆண்டுகளாக நமது அமைப்பில் நிலவும் தேக்கமாக, பிரச்சனையாக ஒவ்வொரு சுற்றறிக்கையிலும் நமக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதுவே ஒரு மோசடியான ஏமாற்று வேலை இல்லையா? இது இளம் தோழர்களுக்கு, புதிய நபர்களுக்கு அமைப்பின் வரலாற்றை மறைக்கும் செயல் இல்லையா?

மனம் திருந்திய தலைமையா? மாட்டிக் கொண்ட தலைமையா?

ப்ளீனத்தைக் கூட்டுங்கள், அதை ஆய்வு வேலையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். அது அணிகளாகிய எங்களின் பிரதானமான ஜனநாயக உரிமை. அதை மறுப்பது தவறு என ஒவ்வொரு சுற்றறிக்கையின் போதும் அணிகளாகிய நாம் நமது கருத்துக்களை எழுதி தலைமைக்கு கொடுத்துக் கொண்டு தான் இருந்தோம். ஆனால் நமக்கு அப்பொழுதெல்லாம் என்ன பதில் சொல்லப்பட்டது? ப்ளீனத்தை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று அவசியமில்லை. அதை சடங்கு போல பார்க்கக் கூடாது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்பது பொதுவான மரபு, அதை 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தியே தீர வேண்டும் என்று எந்த சட்டவிதிமுறையும், அமைப்பு துணை விதியிலும் குறிப்பிடப்படவில்லை என்று தான் நமக்கு பதில் கொடுத்திருக்கிறது தலைமை. நாமும் அதைக் கேட்டுக் கொண்டு வாய் மூடி மௌனிகளாக இருந்திருக்கிறோம். ஆனால் கடைசியாக பெரும்பான்மைத் தோழர்களின் சுயவிமர்சன அறிக்கை என்று பெயரிடப்பட்டு வந்த ஒரு அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள்? நாங்கள் அணிகளின் ஜனநாயகத்தை மறுத்து, ப்ளீனத்தை தள்ளிப் போட்டது தான் பிரச்சனைக்குக் காரணம் என்று முன்வைத்திருக்கிறார்கள். மேலும் அணிகளாகிய நாம் கடுமையாகப் போராடி, விமர்சித்ததால் தான் தலைமைக்கு சொரணை வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் இங்கு எழுப்ப விரும்பும் கேள்வி ஒன்று தான். அணிகளாகிய நாம் தொடர்ந்து போராடியதால் சொரணை வந்திருக்குமானால் ப்ளீனம் தானாக கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றறிக்கையின் இறுதியிலும் நாம் எழுதிக் கொடுத்த விமர்சனங்களை நேர்மையாகப் பரிசீலித்த தலைமையாக இருந்தால், இரண்டு மூன்று சுற்றறிக்கைகளிலேயே பதில் கிடைத்திருக்கும். தவறுகளை உணர்ந்த தலைமை என்றால் தாமாக ப்ளீனத்தைக் கூட்டி இருக்க வேண்டும். ஆனால் ப்ளீனம் ஏன், எப்படி, எதற்காக கூட்டப்பட்டது என்பதை சிந்தித்துப் பாருங்கள்?

ஆய்வுக்காக இனி கால நீட்டிப்பு கோர முடியாது, அணிகளிடம் அம்பலப்பட்டு விடுவோம் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் தான் ப்ளீனத்தைக் கூட்டுவதாக அறிவித்தார்கள். மேலும் தோழர் 2 தலைமைக் குழுவில் ஆய்வை முடித்து விட்டதாக சொல்லி பெரும்பான்மைத் தலைமையுடன் முரண்பட்டதால்தான் அமைப்பின் தவறுகள் அனைத்தும் வெளியே தெரியும் நிலைமையும் உருவானது. இதைப் புரிந்து கொள்ள இதை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம். ஒருவேளை கூடுதலாக 6 மாதம் அவகாசம் பெற்று ஆய்வு வேலை முடிக்கப்பட்டு இருந்தால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் நமது பார்வைக்கு வந்திருக்குமா? அல்லது சூடு, சொரணை வந்துவிட்டது என்று தலைமையில் உள்ளவர்கள் கூறுவது போல கூறியிருப்பார்களா?

ஒரு பிக்பாக்கெட் திருடனை ஊரே துரத்திக் கொண்டு ஓடுகிறது, அவனும் சந்து பொந்துகளில் எல்லாம் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டவுடன், இந்தாங்க சார் உங்க பணம் என்று பணத்தை இழந்தவரிடம் கொடுத்து விட்டு சொன்னானாம், “சார் நீங்க துரத்தி வந்ததால் நான் திருந்திட்டேன்” என்று. இந்த பிக்பாக்கெட் திருடன் சொல்லும் ‘100% உண்மையைப்’ போலத் தானே இருக்கிறது தலைமையில் இருந்தவர்களின் (தற்போதும் அதே தலைமை தான் நீடிக்கிறது என்பது வேறு விசயம்) விளக்கம். எனவே இது சூடு, சொரணை வந்த தலைமையா? அல்லது முட்டுச் சந்தில் மாட்டிய தலைமையா? என்பதை சக தோழர்களான நீங்கள் தான் கூற வேண்டும்.

குற்றவாளிகளே நீதிபதிகளாக

சரி எப்படியோ ப்ளீனத்தை கூட்ட வேண்டும் என்று அறிவித்து அதற்கான வேலைகளும் துவங்கப்படுகிறது. ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை போல நடந்தது தான் இதில் சோகமான செய்தி. தலைமைக்குள் கலகம் செய்த தோழர் 2-ஐ தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஒட்டு மொத்த பிரச்சனைக்கும், ஆய்வு நிறைவேறாததற்கும் அவரே பிரதான காரணம் என்று அணிகளை நம்ப வைக்க வேண்டும்; அவருக்கு எதிராக அணிகளின் கோபத்தை திசை திருப்ப வேண்டும்; தங்களது பதவிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் - இதுதான் ப்ளீனத்தின் நோக்கமாக ”பெரும்பான்மைத் தலைமைக்கு” முதலில் இருந்தது. இதற்கு ஒரு விசாரணையை நடத்தி, அதன் மூலம் தோழர் 2-ஐ தனிமைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டார்கள். இதை தாங்களே செய்தால் தவறாகி விடும் என்று சிந்தித்து அதைச் செய்ய ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்கள். இங்கு எமது கேள்வி என்பது விசாரணைக் குழுவை அமைக்கும் அதிகாரத்தை தலைமைக் குழுவுக்கு யார் கொடுத்தார்கள்?

பின்பு யார் தான் அமைக்க முடியும்? ”எல்லாத்துக்கும் குறை சொல்லனும்னு யோசிச்சா அப்படித் தான் தோன்றும்” என்று கூட சிலர் சிந்திக்கலாம். ஆனால் நாம் தரவுகளில் இருந்து உண்மையைத் தேட வேண்டும். மார்க்சியம் நமக்கு “தரவுகளில் இருந்து, விவரங்களில் இருந்து உண்மையைத் தேடு” என்று தான் போதிக்கிறது. எனவே இங்குள்ள விவரம், தரவு என்ன என்பதில் இருந்து பரிசீலிக்கலாம் வாருங்கள்.

“ப்ளீனம் நடத்துவது, ஆய்வு முடியாதது அல்லது முடிந்தது என்ற பிரச்சனையில் எங்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. மேலும் இதை நாங்களே விசாரித்து ஒரு முடிவுக்கு வருவது தார்மீகமாக தவறு” என்று தலைமை முன்வைக்கிறது. அதற்கு மாற்றாக அவர்கள் என்ன செய்தார்கள்? தாங்களே ஒரு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து அதை வைத்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒரு அறிக்கையை பெற்றுள்ளனர் (விசாரணை அறிக்கையும் எவ்வளவு நேர்மையற்றது என்பது தனியான விசயம்). இது எப்படி இருக்கிறதென்றால் “நிர்மலாதேவி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் பன்வாரி லால் தாத்தாவே ஒரு விசாரணைக் கமிட்டி அமைத்து அதன் அறிக்கையை வைத்து பிரச்சனையை ஊற்றி மூடப் பார்த்தார்” அது போலவே இருக்கிறது. இதில் முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. ஆளுநர் தன் மீதான குற்றச்சாட்டை தானே அமைத்த விசாரணைக் கமிட்டியின் மூலம் விசாரித்து தயாரித்த அறிக்கை அயோக்கியத்தனமானது என்றும், அதை வெளியிடக் கூடாது என்றும் நமது புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி நீதிமன்றத்தில் போராடி அதற்குத் தடையும் வாங்கியுள்ளது. ஆளுநர் தாத்தாக்களுக்கு பொருந்திய நியாயம் நமது மூத்த தோழர்களுக்குப் பொருந்தாதா?

”வேற யாரு தான் விசாரிக்கனும்னு சொல்றீங்க?” என்று சில சிலர் கோபம் கொள்ளக் கூடும். இங்கு பிரச்சனை என்னவென்றால் ”குற்றம் சாட்டப்பட்டவர்களே தங்களை விசாரிக்க விசாரணை ஆட்களைத் தேர்ந்தெடுத்தது சதித்தனமானதா? இல்லையா?” என்பது தான். யாரை வைத்து விசாரிக்கலாம் என்பதை அணிகளாகிய நாம் முடிவு செய்திருக்க வேண்டும்.

நேரத்தை சுருக்குதல் - கருத்தைச் சிதைத்தல்

இதில் அடுத்து உள்ள சதி என்பது, ப்ளீனத்திற்கான சிறப்புக் குழுவை அமைத்து அதை நடத்தியதில் இருக்கிறது. விசாரணைக் குழு தங்களுடைய விசாரணையை தலைமைக் குழு, ’ஆய்வுக் குழு’, தனிநபர்கள் என அனைவரிடமும் நடத்தி முடித்து ஒரு அறிக்கையைத் தொகுத்து தலைமைக்குக் கொடுக்கிறது. அந்த அறிக்கையை பெற்று கொண்ட தலைமைக் குழு, அதைப் பரிசீலித்து, பின் அந்த விசாரணை அறிக்கையை நிராகரித்து, அதன் மீது தனது கருத்துக்களை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை எனப் பிரித்து எழுதித் தர சுமார் 31 நாட்களுக்கும் அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டது. நமக்குக் கூறியுள்ளபடி தலைமைக் குழுவில் சுமார் 6 நபர்கள் இருக்கின்றனர். இவர்கள் வெறும் விசாரணைக் குழு அறிக்கையைப் படித்து அதன் மீது கருத்துக் கூறுவதற்கு மட்டும் இவ்வளவு நாட்களை எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் அணிகளாகிய நமக்கு வெறும் விசாரணைக்குழு அறிக்கையை மட்டும் அல்ல, மொத்தமாக மூன்று அறிக்கைகளையும் படிக்கவும், அதை விவாதித்து, கருத்துக்களைத் தொகுக்கவும் அளிக்கப்பட்ட கால அவகாசம் என்பது வெறும் 15 நாட்கள் தான். இதில் இன்னொரு குறிப்பான விசயம், ஒவ்வொரு சிறப்புக் குழுவிலும் சுமார் 13 நபர்கள் வரை அங்கம் வகிக்க வேண்டும் என்ற உத்தரவு வேறு. (இதற்கு முந்தைய ப்ளீனங்களில் இவ்வளவு அதிகமான ஆட்கள் கிடையாது என்பதும், இது தான் முதல் முறை என்பதும் கூடுதல் தகவல்) மிக, மிகக் குறைந்த காலத்தில், அதுவும் அதிகமான நபர்களை வைத்து குழுவைப் பெரிதாக்கி, விவாதிப்பதற்கான நாட்களைக் குறைத்து நெருக்கடி கொடுத்து, நம்மை முழுமையாக கருத்து கூற விடாமல் கழுத்தை நெறித்து பேசச் சொல்வது போலத் தான் ப்ளீனத்திற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி நாங்கள் கேள்வி எழுப்புவது தவறா தோழர்களே? இதில் எப்படி முழுமையான கருத்துக்களை அணிகள் வைத்திருக்க முடியும் என்பதைப் பரிசீலியுங்கள். தலைமையின் வார்த்தைகளில் சொல்வது என்றால், அணிகளாகிய நாமெல்லாம் அறிவிலும், ஆற்றலிலும் ஒப்பீட்டு அளவில் தலைமையை விட மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அப்படி இருக்கும் போது நமக்கு அளிக்கப்பட்ட நேரம், அமைக்கப்பட்ட குழு, நடத்தப்பட்ட விதம் அனைத்தும் முறையானதா? என சக தோழர்களே நீங்கள் தான் எங்களுக்கு இதை விளங்க வைக்க வேண்டும்.

கவனக்குறைவா? களவாணித்தனமா?

மேலும் விசாரணைக் குழு தனது அறிக்கையை முழுமையாக தலைமையிடம் தாக்கல் செய்கிறது. அப்படி கொடுக்கப்பட்ட தொகுப்பு என்பது விசாரணை அறிக்கை + இணைப்பு 1 + இணைப்பு 2 + இணைப்பு 3 என்று இருக்கிறது. இதில் இணைப்பு 1-ல் ப்ளீனம் தொடர்பாக தலைமை சார்பாக அனுப்பப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளும் உள்ளடங்கி இருக்கிறது. ஆனால் அணிகளாகிய நமக்கு விசாரணைக் குழு அறிக்கை கொடுக்கப்பட்ட பொழுது, அதில் இருந்த 3 இணைப்புகளில் முதல் இணைப்பான அனைத்து சுற்றறிக்கைகளும் எப்படி மாயமாய்ப் போனது? அந்த ஒவ்வொரு சுற்றறிக்கைகளிலும் என்ன விசயங்கள் விளக்கப்பட்டிருந்தன? குறிப்பாக, ஏன் ப்ளீனத்தை தள்ளி வைக்கிறோம், ஏன் ஆய்வை முடிக்க முடியவில்லை, ஏன் கால நீட்டிப்பு கோருகிறோம் போன்ற விசயங்கள் தானே எழுதப்பட்டிருக்கிறது. அணிகள் பிரச்சனையின் மையமான விசயங்களில் கருத்துக் கூறுவதற்கு அனைத்து சுற்றறிக்கைகளும் முக்கியமானது இல்லையா? ஆம் முக்கியமானது தான். அதற்காகத் தான் ’பெரும்பான்மை’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தலைமைத் தோழர்கள் அவற்றை திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் முன்வைத்தால் எவராலும் அதை மறுக்க முடியுமா?

குழப்பிவிட்டு அலைக்கழித்தல்

சரி நாம் அடுத்த கேள்விக்கு வருவோம். அமைப்பில் சுற்றுக்கு விடப்பட்ட மூன்று அறிக்கைகளும் பல பிரச்சனைகளைப் பேசுகிறது. வெறும் ஆய்வு நடந்து முடிந்ததா? இல்லையா? என்பதைப் பற்றி மட்டும் அல்ல, அமைப்புத் துறையில் இருக்கும் பல பிரச்சனைகள், அரசியல் கோட்பாட்டு ரீதியில் இருக்கும் தவறுகள் எனப் பல விசயங்களைப் பேசுகிறது. அணிகளாகிய நமது ஆற்றலுக்கு எட்டாத வகையில் இருக்கும் பிரச்சனைகள் பல முன்னுக்கு வருகிறது. இப்படி சிக்கலான ஒரு தொகுப்பை அணிகளின் முன் வைக்கும் தலைமை, அதில் எந்தெந்த அம்சங்களில் கருத்துக் கூற வேண்டும், எந்த வகையில் கருத்துக்களைத் தொகுக்க வேண்டும் என வழிகாட்டி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பொழுது நாம் மொத்தமாக அந்த மூன்று அறிக்கையில் எதன் மீது கருத்துக் கூறுவது என்ற குழப்பத்தை அடைவது இயல்பில்லையா? இது தலைமைக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தே அணிகளைக் குழப்பத்தில் இருத்தி வைப்பதற்கான சதியா?

“என்ன தோழர்களே இப்படி சொல்றீங்க! இதுக்கெல்லாம் தலைமையக் குறை சொல்ல முடியுமா?” என்று சில தோழர்கள் கேட்கக்கூடும். சரி நாம் விவரத்தில் இருந்து பரிசீலிப்போம். ஆய்வை முடித்து விட்டோம் என்று தோழர் 2 தலைமைக் குழுவில் முன் வைக்கிறார். ஆனால் முடிக்கவில்லை என தலைமையில் இருக்கும் பெரும்பான்மைத் தோழர்கள் முன்வைக்கிறார்கள். இது தான் பிரச்சனையின் மையம். இதற்கு தீர்வு காண முடியாமல் ஒரு விசாரணைக் குழுவையும் தாங்களே அமைத்துப் பார்க்கிறார்கள். அதிலும் தாங்கள் ’எதிர்பார்த்த’ பலன் கிடைக்கவில்லை. எனவே தாங்களே அதன் மீது இறுதித் தீர்ப்பு ஒன்றை எழுதி அணிகளுக்கு 3 அறிக்கைகளாக சுற்றுக்கு அனுப்புகிறார்கள். அதன் மீது அணிகளின் கருத்துக்களையும் முன்வைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் உண்மையிலேயே அணிகளிடம் கீழ்கண்ட கேள்விகளை மட்டும் தான் கேட்டிருக்க முடியும். அதாவது 1) “ஆய்வு வேலைகள் முடிந்ததா இல்லையா என்பதை அணிகளே பரிசீலித்து முடிவு செய்யுங்கள்” என்று கேட்டிருக்க முடியும் 2) “ஆய்வு முடியாததற்கான காரணம் யார் மொத்த தலைமைக் குழுவுமா அல்லது ஒரு சில தோழர்கள் மட்டுமா?” என்றும் அணிகளிடம் கருத்துக் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படி எந்த ஒரு குறிப்பான கேள்வியும் நம்மிடம் எழுப்பப்படவில்லை. ப்ளீனத்திற்கான சிறப்புக் குழுவின் விவாதத்தை மையமான ஒரு பொருளை நோக்கி ஒருங்கிணைக்காமல், அணிகள் கருத்து ரீதியாக அலைக்கழிந்து போக வேண்டும் என்பதற்காகவே விடப்பட்டது வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லையா? இதை ஏதோ இளம் தோழரோ அல்லது அனுபவம் குறைந்தவரோ செய்தால் கூட தெரியாமல் செய்திருக்கின்றனர் என்று நம்பலாம். ஆனால் இருப்பவர்கள் அனைவரும் பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளிகள், தெரியாமலா செய்திருப்பார்கள்?

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தலைமை ஆய்வு செய்ததாக சொல்லும் எந்தத் தரவுகளையும், அதன் ஆய்வு முறைகளையும் அணிகளாகிய நமக்கு முழுமையாக விளக்காமல் அதன் தொகுப்பில் ஒரு பகுதியைக் கூட கண்ணில் காட்டாமல் அது முடிந்து விட்டதா? இல்லையா? என்ற கேள்வியையும் நம்மிடம் எழுப்பி இருக்க முடியாது. ஒருவேளை நம்மிடம் கேட்டிருந்தாலும், நாம் எப்படி கருத்துக் கூறி இருக்க முடியும்? எனவே இந்த மூன்று அறிக்கைகளைக் கொடுத்து அதன் மீது என்ன கருத்தை அல்லது முடிவை அணிகளிடம் இருந்து பெற முயன்று இருக்கிறார்கள் என்று பார்த்தால், நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஆனால் தலைமையில் இருக்கும் ’பெரும்பான்மை’ என்று சொல்லிக் கொண்ட தோழர்களுக்கு இதில் தான் முக்கியமான ஆதாயமே இருக்கிறது. அணிகள் தெளிவான ஒரு கருதுகோளை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தோழர் 2-ன் மீது மொத்த அமைப்பின் கோபத்தையும் மடைமாற்றி விடுவதற்கு இந்த சிறப்புக் குழு விவாதத்தை பயன்படுத்த முடியும் என்று கருதித் தான் இப்படி தொகுப்பான கருத்துக்களைப் பெற திட்டமிடாமல், அணிகளை திசை இன்றி அலைய விட்டிருக்கின்றனர்.

ஒரு கல்லூரி மாணவனிடம் மூன்று புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, கடைசி வரை அவனிடம் கேள்வித்தாளைக் கொடுக்காமல் பரீட்சை எழுதச் சொல்வது போலத் தான் இதுவும். ஒருவேளை இதை எல்லாம் தாண்டி அந்த மூன்று அறிக்கைகளையும் கொடுத்தது ஒரு குறிப்பிட்ட கருத்தை அறியத்தான் என்று யாராவது நம்புகிறீர்களா? இந்த … இந்த விசயத்தில் அணிகளின் முடிவைத் தெரிந்து கொள்வதற்குத் தான் தலைமை சிந்தித்து இருக்கிறது என்று யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கு உறைக்கும்படி கூறுங்கள் தோழர்களே, தெரிந்து கொள்கிறோம்.

நெறி கெட்ட நடைமுறை – அது தான் வழிமுறை

அடுத்து சிறப்புக் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை நாம் சுயமாக தேர்ந்தெடுத்ததாக நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல குழுக்களில் தங்களுக்கு ‘சாதகமான’ நபர்களை பிரதிநிதிகளாக தேர்வு செய்து வரும்படி பல சித்து வேலைகளை தோழர் 1 மற்றும் 3 மற்றும் அவர்களின் ’விசுவாசிகளான’ பிற பதவிகளில் உள்ள தோழர்களும் செய்திருக்கிறார்கள். இந்த சதி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? உடனே இந்த ஒரு விசயத்தை மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டு, இதற்கு ஆதாரம் இருக்கா? என்று தலைமையின் சில தீவிர விசுவாசிகள் கொந்தளிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த இரகசிய அமைப்பு முறைக்குள் நின்று கொண்டு எந்த ஒரு தோழரின் மீதும், குறிப்பாக தலைமையில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் கண்டுபிடிப்பதும், தண்டிப்பதும் சாத்தியமற்றது என்பதை அரசியல் அறிவு கடுகளவு இருக்கும் தோழர்கள் நன்கு அறிவார்கள்.

மேலும் ப்ளீனத்தில் கலந்து கொள்பவர்களின் தகுதி குறித்த பிரச்சனையில் செய்த மோசடியால் தங்களுக்கு எதிரான நெருக்கடியின் அளவையும் வெகுவாக குறைத்திருக்கிறது ”பெரும்பான்மைத் தலைமை”. நமது அமைப்பில் ப்ளீனத்திற்கு நேரடியாக தகுதி பெறக் கூடியவர்கள் என்று ஒரு அம்சம் உண்டு. அதில் ”தேர்வுநிலை முழுநேரப் புரட்சியாளர் - வளர்க்க” என்ற இலக்கில் வைத்துள்ள தோழர்கள் துவங்கி ”முழுநேரப் புரட்சியாளர்” வரை அனைவரும் நேரடியாக எந்தத் தேர்வும் இல்லாமல் ப்ளீனத்திற்கு செல்வதற்குத் தகுதி உடையவர்கள் என்பது தான் 40 ஆண்டுகால நடைமுறை. ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் புது நடைமுறையாக இந்த ப்ளீனத்தில் “தேர்வுநிலை முழுநேரப் புரட்சியாளர் - வளர்க்க” இலக்கில் உள்ள தோழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் பிரிவில் நமது அமைப்பில் உள்ள கணிசமான தோழர்கள் ப்ளீனத்திற்கு நேரடியாக செல்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடைமுறை குறித்து அணிகளிடம் கேட்டு, விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது தலைமையாவது கூடிப் பேசி அணிகளிடம் இதற்கான காரணத்தை விளக்கியதா? ஒரு சுற்றறிக்கையாவது உண்டா? எதுவும் கிடையாது. மோசடி மட்டும் தான் நடைமுறையாக இருக்குமிடத்தில் நாம் இதை எதிர்பார்க்கலாமா?

அடுத்து, சிறப்புக் குழு நடக்கும் பொழுது அந்தக் குழுவிற்கான பொறுப்பாளர், சிறப்புக் குழு விவாதம் நடக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்பது பொதுவான ஜனநாயக வழிமுறை மற்றும் அமைப்பு முறையும் கூட. ஆனால் இந்தப் ப்ளீனத்தில் நடந்த சிறப்புக் குழு விவாதங்கள் அனைத்திலும் பொறுப்பாளர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். இது முறையான செயலா? அல்லது யார் “பெரும்பான்மைத் தலைமைக்கு” எதிராக கருத்துக் கூறுகிறார்கள் என்பதை உளவு பார்ப்பதற்கான சதிச் செயலா? என்பதை தரவுகளில் இருந்து கண்டுபிடிக்கலாம் வாருங்கள். சிறப்புக் குழுப் பொறுப்பாளர் எனப்படுபவர் தலைமையின் பிரதிநிதி, அதன் சார்பாகத்தான் அவர் அந்த கூட்டத்தைக் கூட்டுகிறார். அதைத் துவங்கி வைத்துவிட்டு அவர் விவாதத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும். (இது தான் அமைப்பின் பல ஆண்டுகளாக இருந்து வரும் பொதுவான நடைமுறை மற்றும் மரபு) மேலும் நடத்தப்படும் கூட்டத்தின் பொருள் என்பது தலைமையின் தவறுகளை, குற்றங்களைப் பற்றியதாகும். அப்படி இருக்கும் பொழுது தலைமைக் குழுவின் பிரதிநிதியாக வரும் பொறுப்பாளர் சிறப்புக் குழுவின் விவாதக் கூட்டத்தில் எப்படி அமர முடியும்?

இங்கு சிறப்புக் குழுவில் நடக்கும் விவாதத்தில் பொறுப்பாளர் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பதைப் பற்றி பேசவில்லை. அவர் அந்த விவாதத்தில், விவாதம் நடக்கும் இடத்தில் அமருவது ஜனநாயக உரிமையா? அல்லது சதியா? என்பது தான் கேள்வி. இதை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு. இப்பொழுது பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது அல்லவா? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விடுகிறது. ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு அரசும் புதிய கொள்கை முடிவுகளையோ, முக்கிய நடவடிக்கைகளையோ எடுக்க முடியாது. எல்லா விசயத்திலும் மூக்கை நுழைக்கவும் முடியாது. தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைக்கப்படும் வரை அதிக அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசாக மட்டுமே நீடிக்க முடியும். முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசுகளால் இந்த விதிமுறை வெறும் பெயர் அளவிற்கு தான் எதார்த்தத்தில் பின்பற்றப்படுகிறது என்றாலும், ஒரு முதலாளித்துவ தேர்தல் முறைகளில் இருக்கும் ஜனநாயக முறை கூட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்காதா? என்பதைத் தோழர்கள் பரிசீலிக்குமாறு கேட்கிறோம்.

நிகழ்ச்சி நிரல் எனும் கானல் நீர்

அடுத்து ப்ளீனம் நடத்துவதற்கான அஜெண்டா அல்லது நிகழ்ச்சி நிரல் பற்றிய விசயத்தில் செய்த மோசடி குறித்து. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நமது அமைப்பில் இருக்கும் முக்கியமான நடைமுறை என்பது நிகழ்ச்சி நிரல் போட்டு கூட்டங்களை நடத்துவதாகும். ஏனென்றால் அது தான் முறையாக கூட்டத்தை நடத்தும் வழிமுறையாகும். இங்கு விசயத்திற்குள் செல்லும் முன் ஒரு முக்கியமான ஒப்பீடு. சாதாரண முதலாளித்துவ நிறுவனத்தையோ அல்லது சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களையோ எடுத்துக் கொள்வோம். அங்கு கூட்டங்கள் நடத்தப்படும் வழிமுறை குறித்து முதலில் பார்த்து விடுவோம். முதலில் ஒரு கூட்டம் நடத்தப்படும் முன், கூட்டத்திற்கான தோராயமான நிகழ்ச்சி நிரலை தலைவரும், செயலாளரும் எழுதி, அதை அந்தக் கமிட்டி உறுப்பினர்களுக்கு சுற்றுக்கு விடுவார்கள். அதில் கூட்டம் நடத்தப்படும் தேதி மற்றும் நேரம், கால அளவு, கூட்டத்தில் விவாதிக்கப்படும் தலைப்புகள் என அனைத்தையும் குறிப்பாக எழுதி சுற்றுக்கு அனுப்புவார்கள். அதில் உறுப்பினர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அதை தலைவர், செயலாளர் ஒப்புதலுடன் மாற்றத்தை செய்யலாம் என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வழிமுறை ஏன் பின்பற்றப்படுகிறது என்றால், கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து முன்கூட்டியே சிந்தித்து வருவதற்கும், தன்னை அந்தக் கமிட்டியின் பிரதிநியாக இருப்பதற்கு தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் அந்தத் தலைப்புகள் குறித்து விவாதித்து, அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களையும் தொகுத்துக் கொண்டு செல்வதற்காகத்தான். இது ஒரு அடிப்படையான முதலாளித்துவ ஜனநாயக வழிமுறை.

ஆனால் நமது ப்ளீனம் எவ்வாறு நடத்தப்பட்டது? குறிப்பான நிகழ்ச்சி நிரல் என்று எதையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக கூட்டத்தை நடத்தியுள்ளனர். ஏன் அவ்வாறு நடத்த வேண்டும்? ஏனென்றால் அணிகள் ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது கவனம் கொடுத்து, கருத்துக்களை தொகுப்பதைத் தடுப்பதற்கும், நிகழ்ச்சி நிரலில் புதிய தலைப்புகளை அணிகள் சேர்க்கக் கோருவதைத் தடுப்பதற்காகவும் தான் இந்த வழிமுறையைக் கையாண்டிருக்கிறது பெரும்பான்மைத் தலைமை. இதில் இன்னொரு மோசமான நிகழ்வு என்னவென்றால், நிகழ்ச்சி நிரல் போடாதது குறித்து பிரதிநிதிகள் ப்ளீனக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது வாழைப்பழக் காமெடியைப் போல, சுற்றறிக்கை எண் 37-ல் கூறப்பட்டிருந்த விசயங்கள் தான் நிகழ்ச்சி நிரல் என்று கூறி வாயை அடைத்துள்ளனர்.

ப்ளீனம் துவங்குவதற்காக அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் பாசிச அபாயம் நம் முன் நிற்கிறது, மோசமான நிலைமை நீடிக்கிறது என்று அங்கலாய்த்துவிட்டு உடனடியாக ஒரு புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மட்டும் தான் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் எங்குமே இதுதான் நிகழ்ச்சி நிரல் என்று தலைப்பு போட்டோ, வரிசை எண்கள் போட்டோ குறிப்பிடவில்லை. அவ்வளவு ஏன், அந்த சுற்றறிக்கையில் நிகழ்ச்சி நிரல் என்ற வார்த்தையைக் கூட காண முடியாது. ஆனால் தாங்கள் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் போட்டு அனுப்பி விட்டதாகவும், அணிகள் முட்டாள்தனமாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தங்களின் ‘தர்மசங்கடமான’ நிலையை நினைத்து நொந்து கொண்டாராம் ஒரு தலைமைக் குழுத் தோழர். தாங்கள் திட்டமிட்டபடி அணிகளின் தொகுப்பான கவனத்தை எந்த ஒரு தலைப்பின் மீதும் குவியவிடாமல் தடுத்து, உடனடியாக விவாதித்தே ஆக வேண்டும் என்று அணிகள் நினைத்த பல கருத்துக்களையும் பேசவிடாமல் தடுத்ததன் மூலம் தங்களை நெருக்கடியான சூழலில் இருந்து தற்காத்துக் கொண்டிருக்கிறார்கள் தலைமைக் குழுத் தோழர்கள்.

இதில் கூடுதலாக ஒரு விசயம் உள்ளது. அதாவது ப்ளீனம் என்பது ஒரு கம்யூனிச நிறுவனத்தின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட ஒரு நிறுவனம். அதில் பிரதிநிதிகள் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட விசயங்களை மட்டும் இல்லாமல் அமைப்பு, அரசியல் துறை சார்ந்த எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு பொருள் சார்ந்தும் எடுத்து வைத்துப் பேச உரிமை உள்ளது என்று லெனின் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” என்ற நூலில் அவர்களுடைய ப்ளினத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதில் போல்ஷ்விக் தோழர் ஒருவர் பேச வந்த ஒரு கருத்தை நிகழ்ச்சி நிரலைக் காட்டி ஒரு மென்ஷ்விக் தோழர் தடுக்கிறார். அதைக் கூட்டத் தலைவராக இருந்த பிளகானவும் மற்ற தோழர்களும் (லெனின் உட்பட) அனைவரும் கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். அதில் மேலே சொன்ன கருத்தை முன் வைத்து அவருக்கான ஜனநாயக உரிமையை நிலைநாட்டி இருக்கின்றனர். ஆனால் நமது ப்ளீனத்தில் நடந்தது என்ன? நிகழ்ச்சி நிரல் என்று ஒன்றே போடாமல், அதைப் போட்டதாகவும் கூறி ஏமாற்றி இருக்கின்றனர். அதையும் மீறி சில தோழர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூற முயன்றபோது, அது நிகழ்ச்சி நிரலுக்குள் வராத ஒன்று என்று கூறி வாயை அடைத்து உட்கார வைத்திருக்கிறார்கள் ”பெரும்பான்மைத் தலைமைத் தோழர்கள்”.

அமைப்புத் துறை அறிக்கையோ அல்லது இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றியான ஒரு வரைவுத் திட்டமோ இல்லாமல் வெறும் தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு ப்ளீனம் நடக்கிறது, அதுவும் நிகழ்ச்சி நிரல் என்ற ஒன்றே இல்லாமல் நடக்கிறது. நாமும் அதை ஒரு கம்யூனிச அமைப்பின் ப்ளீனம் என்று நம்புவோமானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. நாம் முட்டாள்களா? இல்லை நம்மை ஏமாற்றும் அளவுக்குத் தலைமை ஆட்கள் அறிவாளிகளா?

தலைமைத் தேர்வு எனும் கொலைநாயக முறை

இங்கு முக்கியமான இன்னொரு அம்சம், கூட்டத்தை வழி நடத்தியதைப் பற்றியது. கமிட்டிக்கான ஒரு அமைப்பாளரை நாம் நமது அமைப்பில் எப்படி தேர்ந்தெடுப்போம்? கமிட்டி உறுப்பினர்களில் யாராவது முன் வருவார்களா என முதலில் கேட்கப்படும். பிறகு முன் வருபவர்களில் ஒருவரைப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரை அமைப்பாளராகத் தேர்ந்தெடுப்போம். அதே போலத்தான் கூட்டத் தலைமையும், ஜனநாயகப் பூர்வமாக ப்ளீனத்திற்கான பிரதிநிதிகளிடம் இருந்து முன்வருபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கோரிக்கை வைத்து, அதில் இருந்து பிரதிநிதிகளான அணிகளே அவர்களைத் தேர்வு செய்து தான் கூட்டத்திற்கான தலைமையை அமைக்க முடியும். ஆனால் ஊர் உலகத்தில் இல்லாத புது கொலைநாயக முறையாக கூட்டத் தலைமையை அமைப்புத் தலைவர்களே முன்கூட்டியே முடிவு செய்து தேர்ந்தெடுத்து ”சொல்ல வேண்டியவைகளை” சொல்லி அழைத்து வந்து கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

”இதில் என்ன இருக்கு தோழர்களே? எல்லாரும் நம் தோழர்கள் தானே? இதெல்லாம் ஒரு பிரச்சனைனு குறை சொல்ல முடியுமா?” என்று சிலர் சிந்திக்கலாம். இதையும் ஒரு ஒப்பீட்டின் மூலம் விவாதிக்கலாம். தேர்தல் நேரம் நெருங்குகிறது, இந்த நேரத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியை மோடி மாற்றி அமைத்தால், புரட்சிகர அமைப்புகள் எப்படி விமர்சித்துப் போராடுவோம்? களவாணித்தனம் செய்வதற்காகத் தான் மோடி இப்படி தனக்கு சாதகமான நபரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்திருக்கிறார் என்று தானே காறித் துப்புவோம். எதிரி வர்க்கத்திற்கு அளவு கோலாக இருக்கும் இந்த குறைந்தபட்ச நாணயம் கூட நமக்குப் பொருந்தாதா தோழர்களே?

ப்ளீனத் தலைமை என்பது அந்த மொத்த நிகழ்ச்சியையும் வழிநடத்தும் அதிகாரம் படைத்தது. குறிப்பாக யார் கருத்து கூறலாம், எவ்வளவு நேரம் கூறலாம், யாரைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்தலாம், கூட்டத்தை எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது உட்பட அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதனிடம் இருக்கும். இங்கு நம் கேள்வி குறிப்பிட்ட நபர்களை கூட்டத் தலைமையாக ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது பற்றி அல்ல (அந்தக் கேள்வி அடுத்து வருகிறது). மாறாக ஏன் ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிக்காமல் அதன் கழுத்தறுத்துள்ளீர்கள் என்பது தான். ஏற்கனவே தலைமையின் அயோக்கியத்தனங்கள் அம்பலப்பட்டு, அமைப்பில் பல தவறுகள் களையப்படாமல் கெட்டிதட்டி அணிகள் சோர்வுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், தலைமைக்கான தார்மீகத்தை இழந்து நிற்கும் (தலைமையே ஒப்புக் கொண்டுள்ளபடி) நேரத்தில் இந்த செயலைச் செய்துள்ளீர்கள் என்பதால், இதை வெறும் அரசியல் அறிவற்ற, ஜனநாயக வழிமுறைகள் தெரியாத ஒரு கூமுட்டையாக தலைமையைப் பார்க்க முடியாது. மாறாக திட்டமிட்டு கழுத்தை ஈரத்துணி போட்டு அறுக்கும் கொலைகாரக் கும்பல் என்றுதான் பார்க்க முடியும் என்று நாங்கள் கூறினால் தவறாகுமா தோழர்களே?

கூட்டத் தலைமையின் யோக்கியதை பற்றி ஒரு சின்ன கேள்வி உள்ளது தோழர்களே. குற்றம் செய்தவர்கள் விசாரணைக் குழு அமைத்ததே அயோக்கியத்தனம். அதிலும் அந்த விசாரணைக் குழுவின் யோக்கியதை என்ன என்பதை நாங்கள் கூற வேண்டியதில்லை. சக தோழர்களான நீங்களே அறிவீர்கள். மேலும் அந்த கேடுகெட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை தலைமையும் நிராகரித்து தானே இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கு உரிய குறைந்தபட்ச அரசியல் நேர்மை கூட இல்லமல் இரண்டு தரப்பிற்கும் சொம்படிக்கும் வேலையை சீரும், சிறப்புமாக செய்தது விசாரணைக் குழு. ஒரு அடிமட்ட கம்யூனிஸ்டு தொண்டனாக இருப்பதற்குக் கூட தகுதியற்ற, நேர்மையற்ற நபர்கள் என்பது தான் விசாரணைக் குழுவின் நிலைமை. அப்படி இருக்கும் பொழுது அதே விசாரணைக் குழு ஆட்களை அல்லது அதில் பெரும்பான்மையாக இருந்த நபர்களை எப்படி ப்ளீனக் கூட்டத்திற்கும் தலைமை ஏற்க வைத்துள்ளார்கள். அதுவும் அமைப்புத் தலைமையால் முன்கூட்டியே எப்படி தேர்ந்தெடுத்து அழைத்து வரப்பட்டார்கள்?

மேலும் அவர்களின் சில்லறைத்தனமான அணுகுமுறை என்பது பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விசயமல்ல. ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் தங்களின் யோக்கியதையை வெளிப்படுத்திக் கொண்ட நபர்கள் அவர்கள். அவர்களையே எப்படி ப்ளீனத் தலைமையாக அமர வைத்தார்கள் ”பெரும்பான்மைத் தலைமை” தோழர்கள்?. விசாரணைக் குழுவையும் தாங்களே அமைக்கிறார்கள். அந்த விசாரணைக் குழுத் தோழர்கள் கொடுத்த அறிக்கையையும் தாங்களே நிராகரித்து விமர்சிக்கிறார்கள். பின்பு மீண்டும் அந்தத் தோழர்களையே முறையற்ற வகையில் ப்ளீனத்திற்கு கூட்டத் தலைமையாகவும் நியமிக்கிறார்கள். இது சதியா? தற்செயல் நிகழ்வா? என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தோழர்களே.

இதில் இன்னொரு கிரிமினல் மதிநுட்பமும் ஒளிந்திருக்கிறது. ப்ளீனம் முடிந்ததாகச் சொல்லி நமக்கு வெறும் இரண்டே இரண்டு தாள்களில் ஒரு அறிக்கையை அனுப்பினார்கள். அதில் கூட்டத் தலைமை பற்றி குறிப்பிட்டதை தோழர்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று கோருகிறோம். அதில் முதல் இரு பத்திகளுக்குள்ளாகவே பொத்தாம் பொதுவாக கூட்டத் தலைமை தேர்வு பற்றி குறிப்பிடப்பட்டது. அதாவது “ப்ளீனத்திற்கான கூட்டத் தலைமை பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்று மட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் அந்தப் பெரும்பான்மை என்பது யார்? பிரதிநிதிகளா? அல்லது தலைமையா? என்பதைப் பற்றி குறிப்பாகச் சொல்லாமல் பொதுவாக எழுதி விட்டுச் சென்றுள்ளனர். ஏனென்றால், பின்னொரு நாளில் யாராவது சட்டையைப் பிடித்து கேட்டால் நழுவிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத் தான். இது தெரியாமல் நிகழ்ந்த ஒரு நிகழ்வா? திட்டமிட்ட அயோக்கியத்தனமா?

ஏமாற்றியது பல ஆண்டுகள் – பரிசீலிக்க சில நிமிடங்கள்

அடுத்து ப்ளீனக் கூட்டத்தை நடத்துவதற்காக செய்யப்பட்ட கால நிர்ணயத்தில் உள்ள சூட்சமத்தைப் பார்ப்போம். இதையும் ஒரு ஒப்பீடு செய்வதுடன் தொடங்குவோம். அரசும், ஆளும் வர்க்கமும், இராணுவமும், உளவுப் போலீசும் தீவிர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட சூழலிலும், நெருக்கடிக் காலங்களிலும் கூட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ப்ளீன மற்றும் காங்கிரஸ் கூட்டங்களை என்றைக்குமே வெறும் ஓரிரு நாட்களில் முடிப்பது என்று திட்டமிட்டுக் கொள்ளவில்லை. சீனத்தில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட எட்டு நாட்கள் வரை தலைமைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. ரஷ்யாவில் தோழர் லெனின் உயிருக்கு மிகத் தீவிர அச்சுறுத்தல் இருந்த காலகட்டத்தில் கூட 7 நாட்கள் வரை மையக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் நமக்கு அப்படி ஒரு மோசமான ஒடுக்குமுறை நிலைமை இருப்பதாக நாம் கற்பிதம் செய்து கொண்டால் கூட குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் ப்ளீனக் கூட்டத்தை நடத்தியிருக்க முடியும்? ஒரு 8 அல்லது 7 நாட்கள், அவ்வளவு ஏன் ஒரு 5 நாட்களாவது கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் ப்ளீனக் கூட்டம் நடத்தப்பட்ட விதத்தை கூறுகிறோம் அதன் பின்பு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இது சதியா? இல்லையா? என்பதை.

ப்ளீனத்தை வெறும் இரண்டே நாட்களில் முடித்து விடுவது என்று பெரும்பான்மை தலைமைத் தோழர்கள் முன்பே திட்டமிட்டுக் கொண்டு தான் வந்துள்ளனர். கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அது தான் உண்மை. ஆனால் “எத்தனை நாள் ஒதுக்குனா என்ன, பேச வேண்டிய விசயத்தப் பேச முடிஞ்சதான்னு தான பாக்கனும் தோழர்” என்று சிலர் மனதில் கேள்விகள் எழலாம். எங்களுடைய கேள்வி எளிமையானது. அமைப்பின் பத்தாண்டு காலத்துக்கும் அதிகமாக நீடிக்கும் பிரச்சனை விவாதத்திற்கு வந்திருக்கிறது, தலைமைக்குள்ளேயே இரு பிளவுகளாகப் பிளந்து நிற்கிறது, எந்தத் திசையில் புரட்சியை வழி நடத்திச் செல்வது என்ற மிகக் குழப்பமான நிலை நீடிக்கிறது. ஆனால் இதை வெறும் 2 நாட்களில் விவாதித்து முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிடுவது, வெறும் வேலை சார்ந்த திட்டமிடுதலில் உள்ள முட்டாள்தனமா? அல்லது யாருக்கும் அதிக நேரம் கொடுத்து சிக்கலுக்குள், நெருக்கடிக்குள் தலைமை மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நரித்தனமா? என்பதை சக தோழர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

“பாதுகாப்புக் காரணங்கள் இருக்கும், அதனால் கூட இப்படித் திட்டம் போட்டிருக்கலாம் இல்லையா?” என்று நீங்கள் சிந்திக்கலாம். நமக்கு மைய வகுப்புகளும், கூட்டங்களுமே கூட 3 அல்லது 4 நாட்கள் வரை பல முறை நடந்திருப்பதை தோழர்கள் நினைவுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை இன்னொரு கோணத்தில் கேள்வியாக எழுப்புவோம். ஒரு 2 நாட்களுக்கு மேல் இரகசியக் கூட்டம் நடத்துவதற்கு இடம் கூட தயார் செய்யத் துப்பில்லாத ஒரு தலைமை இருக்கிறது என்றால், இந்தத் தலைமையா நம்மை பாசிசம் வந்தால் பாதுகாத்து, அரவணைத்து வழி நடத்தப் போகிறது? அதன் யோக்கியதை என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். திட்டமிடுதல் தொடர்பாக இறுதியான கருத்தை தொகுத்து விடுவோம். பல நாட்கள் விவாதிக்கப்பட வேண்டிய விசயத்தை, மொத்தக் கூட்டத்தையும் சேர்த்து வெறும் 2 நாட்களில் முடித்து விடுவது என்று திட்டமிட்டிருக்கிறார்கள். இது மாற்றுக் கருத்துக்களை, விமர்சனங்களை அதன் கருவிலேயே அழித்திடத் துடிக்கும் திட்டமிட்ட சதியா? இல்லை வெறும் வேலையை திட்டமிடுதலில் இருக்கும் முட்டாள்தனமா? என்பதை தோழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தலைமை பற்றிய பரிசீலனை எனும் பரம இரகசியம்

அடுத்து வரும் பகுதிகள் தான் மிக முக்கியமானது. இரண்டு நாட்கள் நடந்த ப்ளீனத்தில் அப்படி என்ன தான் நடந்தது? நமக்கு யாருக்காவது முறைப்படி தெரிவிக்கப்பட்டதா? “ஆமாம் தோழர் ப்ளீனத்தில் என்ன நடந்தது என்பதை இரண்டு தாள்களில் சுற்றறிக்கை என்ற பெயரில் தயாரித்து நமக்கு அனுப்பியிருந்தாங்களே” என்று நினைக்கும் தோழர்கள், எங்கள் கேள்விகளை சற்று சிந்தித்துப் பார்க்கக் கோருகிறோம்.

ஒரு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய கிராமத்தின் சார்பாக புகாரையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதிக் கொடுக்கிறீர்கள். அதைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், சில நாட்களுக்குப் பின்பு உங்களை அழைத்து, நீங்கள் கொடுத்த மனு மீது எல்லா நடவடிக்கையும் எடுத்துட்டோம் என்று வாய் மொழியாக பதில் கூறினால் என்ன செய்வோம்? ஏற்றுக் கொண்டு வாய் மூடி வந்துவிடுவோமா? அல்லது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எழுதிக் கொடுக்கச் சொல்லுவோமா? அவ்வளவு ஏன் நாம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீஸ் ஸ்டேசனில் கடிதம் கொடுக்கிறோம். ஆனால் அனுமதி தர முடியாது என்று காவல்துறை உயர் அதிகாரி மறுக்கிறார். அப்பொழுது அவரிடம் எழுதிக் கொடுத்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று நாம் எத்தனை முறை சண்டையிட்டிருப்போம்.

ஆனால் பல ஆண்டுகளாக ஆய்வு செய்வதாக சொல்லி அமைப்பையும், அணிகளையும் பொய் கூறி ஏமாற்றி, தொடர்ச்சியாக கழுத்தறுத்து, அதையும் தாங்களே ஒப்புக் கொண்டு சுற்றறிக்கையும் அனுப்பி (பெயர் அளவிற்கு மட்டும் சுயவிமர்சனம் செய்து), அதைப் பரிசீலிக்க ப்ளீனக் கூட்டம் போட்டு, பரிசீலித்ததாகவும் கூறிவிட்டு, கடைசியில் என்ன தான் பரிசீலனை என்று கேட்டால் அதை எழுதித் தரமாட்டார்கள் என்றால் இது நேர்மையான தலைமையா? ப்ளீனக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்து வடிவில் விரிவாகக் கொடுப்பது என்ற நேர்மையான, ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறையைக் கையாளாமல், நம் சார்பாக ப்ளீனத்திற்குப் போன பிரதிநிதிகள் மூலமாக வாய்மொழியாக மட்டுமே நமக்கு ப்ளீனத்தில் என்ன நடந்தது என்பது தெரியப்படுத்தப் படுகிறது. இது எந்த வகை நியாயம் என்பதைத் தோழர்கள் தான் விளக்க வேண்டும். ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத பாமரன் கூட எந்த ஒரு விவகாரத்திலும் எழுத்துப் பூர்வமான பதிலைக் கேட்டுப் பெறும் காலத்தில், மக்களை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்களாக நம்மை கருதிக் கொள்ளும் புரட்சியாளர்கள் அதை இன்னும் கேட்காமல் இருக்கிறோம் என்றால் நமக்கு குறைந்தபட்ச அறிவாவது இருக்கிறதா? இல்லை மந்தைகளாக இருக்கிறோமா?

சரி வாய்மொழியாக சொன்ன பிரதிநிதியாவது குறைந்தபட்சம் முக்கியமான விசயங்களை விளக்கிச் சொன்னாரா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ப்ளீனம் எப்படி நடந்தது என்பதை வெளியில் சொல்லக் கூடாது என்று உத்தரவு போட்டுத் தான் பிரதிநிதிகளை அனுப்பி இருக்கின்றது தலைமை. இந்தத் தலைமையை நீங்கள் என்ன என்று வரையறுப்பீர்கள் தோழர்களே?. “என்ன தோழர்களே, அதான் ப்ளீனம் நடந்த பின்னாடி ஒரு சுற்றறிக்கை அனுப்பினாங்களே, அது போதாதா?” என்று சிலர் கேட்கலாம்.

தோழர்களே, ஒரு சாதாரண நடிகர் சங்கக் கூட்டம் நடத்தினால் கூட அதில் முக்கியமாக மினிட்ஸ் (கூட்டக் குறிப்பு) எழுதி அதை சாரமாகத் தொகுத்து, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அடிக்கோடிட்டுக் காட்டி, இறுதி அறிக்கை தயாரித்து, சங்க உறுப்பினர்களுக்கு சுற்றுக்கு விடுவார்கள். அந்த ஜனநாயக உரிமை கூட கம்யூனிச அமைப்பில் இல்லை என்றால் நம் தலைமையிடம் ஜனநாயகம் எவ்வளவு தரத்தில் உள்ளது என்பதை நீங்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.

இன்னும் சிலர் கூட சொல்லலாம், “தோழரே நாம் ஒரு இரகசிய அமைப்பு. எல்லாத்தையும் அணிகளிடம் சொல்லிவிட முடியாது” என்று சில நல்லெண்ணம் கொண்டவர்கள் கேட்கலாம். தோழர்களே, சிறப்புக் குழுவின் சார்பாகத் தான் ஒவ்வொரு பிரதிநிதியும் ப்ளீனத்திற்கு அனுப்பப்படுகிறார். ஒரு குழுவினால் தேர்வு செய்து அனுப்பப்படும் பிரதிநிதி தனக்குத் தெரிந்த அனைத்து விசயத்தையும் தன்னைத் தேர்வு செய்தவர்களுக்குத் தெரிவித்து விட வேண்டும் என்பது தானே அடிப்படையான ஜனநாயக நியதி. அப்படி மறைத்து வைப்பதற்கு அணிகளாகிய நாமெல்லாம் போலீஸ் ஏஜெண்டுகளா என்ன?

இதில் இன்னொரு கேலிக்கூத்து என்னவென்றால், ப்ளீனம் முடிந்தவுடன் அது தொடர்பாக கூட்டத்தில் அணிகள் குறித்து வைத்திருந்த ஒவ்வொரு குறிப்பு நோட்டுகளையும் தீயிட்டு அழித்து விடச் சொல்லி, முழுவதையும் அழித்துவிட்டு தான் அனுப்பினார்கள். (இந்த வழிமுறை அமைப்பில் இதற்கு முன் எந்தப் ப்ளீனத்திலும் கடைபிடிக்கப் படவில்லை, இது தான் முதல் முறை) அது எதற்காக? இதற்கும் இரகசிய முறை என்று ஏதாவது பேய்க் கதையைச் சொல்லி ஏமாற்றுவார்களோ? அவ்வளவு ஏன், நாம் கமிட்டிக் கூட்டம் நடத்தினால் கூட அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை மினிட்ஸ் நோட்டில் தனிச்சிறப்பாக சுட்டிக் காட்டி எழுதுவோம். குழுவில் அனைவருக்கும் படித்தும் காட்டுவோம். ஆனால் நமது கமிட்டிக்கு சொந்தமான மினிட்ஸ் நோட்டை நாமே பார்க்கக் கூடாது, பரிசீலித்து தொகுத்த அறிக்கையை நாமே தெரிந்து கொள்ளக் கூடாது என்றால் அது என்ன வகை இரகசியம்?

இதை இன்னொரு வகையில் பரிசீலித்துப் பார்ப்போம் தோழர்களே. பொதுவாக நமக்குப் பரிசீலனை நடக்கும் பொழுது, ஒவ்வொரு தோழர்களின் தவறுகளை எப்படி பரிசீலிப்போம்? குறை என்ன? அதற்கான காரணம், வர்க்க அடிப்படை, பழக்க வழக்க குறைபாடுகள், கண்ணோட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன? இதை மொத்தமாகக் களைய என்ன வழிமுறையைக் கையாளப் போகிறோம்? இப்படி எல்லாம் விரிவாகத் தானே பரிசீலனை நடக்கும். மாதாந்திர அறிக்கையும் அப்படித் தானே தொகுக்கப்படும். அதே போலத் தான் ப்ளீனமும். அது மொத்த அமைப்பிற்கான பரிசீலனைக் கூட்டம் தானே. குறிப்பாக தலைமையைப் பரிசீலிக்கும் இடமும் அது தானே. உண்மையில் நமது வழக்கமான நடைமுறையில் பரிசீலிக்கப்பட்டு ப்ளீனம் நடத்தப்பட்டிருந்தால், அந்தப் பரிசீலனையின் விவரங்களை எங்காவது அந்த 4 பக்க அறிக்கையில் தோழர்கள் காட்ட முடியுமா? இது தான் தலைமையின் குறை, அதற்கான அடிப்படை இது தான், இவற்றைக் களைந்து கொள்ள இந்த வழிமுறையைக் கையாளப் போகிறார்கள் என்று ஏதாவது ஒரு இடத்தில் விளக்கப்பட்டிருக்கிறதா? மேலும் ப்ளீனம் தொடர்பாக நமக்குக் கொடுக்கப்பட்ட 3 அறிக்கையிலேயே அமைப்பின் பெரும்பாலான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி வேறு என்ன இரகசியம் இருந்து விடப் போகிறது? அனைத்துப் பிரச்சனைகளும் சபைக்கு வந்த பிறகு, அது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளும், பரிசீலனைகளும் அணிகளாகிய நமக்கு ஏன் மறைக்கப்படுகிறது?

ஆண்டைகளின் பரிசீலனை முறை

சரி ப்ளீனம் எப்படி நடந்தது என்ற மர்மத்தைப் பார்த்து விடுவோம். இதன் ஒவ்வொரு அசைவிலும் சதித்தனம் நிறைந்திருக்கிறது என்பதால் இங்கும் அதை மிகச் சுருக்கமாக மட்டுமே விளக்குகிறோம். ப்ளீனத்துக்காக கொடுக்கப்பட்ட அறிக்கைகளை நாம் இரவு, பகல் பாராமல் கண் விழித்துப் படித்து, அதன் மீது விவாதத்தை நடத்தி, பக்கம், பக்கமாக குறிப்பெடுத்து அறிக்கையாகத் தொகுத்து அனுப்பினோம். ஆனால் அந்தக் கருத்துக்களின் மீதோ, நாம் வைத்த விமர்சனங்கள் மீதோ விவாதம் நடத்தப்படவில்லை. அவை அனைத்தும் குண்டி துடைக்கும் காகிதத்திற்குக் கூடப் பயன்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

“என்ன தோழர்களே இப்படி அபாண்டமா சொல்றீங்க?” என்று யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். அதையும் நாங்களே விளக்கிச் சொல்லி விடுகிறோம். இந்த அம்சத்தை நம்மை வைத்தே பரிசீலித்துப் புரிந்து கொள்வோம். அதாவது நாம் தலைமையாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் செய்த தவறுகள் மீது அணிகள் பல ஆயிரம் பக்கங்களுக்கு விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுதி அனுப்பி இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? அனைத்துக் கடிதங்களையும் படித்துவிட்டு பொதுவாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன? எல்லாக் கடிதத்திலும் பொதுவாக சுட்டிக் காட்டப்படும் விமர்சனங்கள் என்னென்ன? மொத்த விசயத்திலும் மையமாகவும், சாரமாகவும் அணிகள் எதை விமர்சித்துள்ளார்கள் என்று கருத்துக்களை மொத்தமாகத் தொகுப்போம். இறுதியில் அதன் மீது தலைமையாகிய நமது பதில்களை எழுதியோ அல்லது வாய்மொழியாகவோ சொல்லுவோம். நாம் கூறிய பதில்கள், விளக்கங்கள், சுயவிமர்சனங்கள் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை பிரதிநிதிகள் மத்தியில் சுற்றுக்கு விட்டு கருத்துக் கேட்போம். மீண்டும் அதன் மீது தலைமையாக இருக்கும் நமது சுயபரிசீலனையை முன் வைப்போம். இப்படி மீண்டும் மீண்டும் இந்த சுழற்சி முறை நடத்தப்படும். இறுதியாக பெரும்பான்மைப் பிரதிநிதிகள் தலைமையின் சுயவிமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் வரை கூட்டம் நடைபெறும்.

ஆனால் நமது தலைவர்களும், அவர்களது கையாட்களான கூட்டத் தலைமையும் எவ்வாறு கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் தெரியுமா? நாம் மேலே சொன்னபடி நமது அறிக்கைகள் குப்பைக் கூடைக்குத் தான் போயிருக்கிறது. பொத்தாம் பொதுவாக 'பெரும்பான்மைத் தலைமை', “நாங்கள் தவறு செய்துவிட்டோம், தலைமை என்ற திமிரில் செய்து விட்டோம்” என்று பொத்தாம் பொதுவாக விளக்கம் கொடுத்தனர். இதை மறுத்து, விமர்சித்து தலைமையின் கையாட்களைத் தவிர நமது பிற பிரதிநிதிகளும் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கப் போராடத்தான் செய்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா? என்றால் இல்லை.

ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் மொத்தமாக கேள்வி கேட்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் எவ்வளவு தெரியுமா? மொத்தமே வெறும் 3 நிமிடங்கள் தான். அதாவது நாம் பக்கம், பக்கமாக எழுதித் தொகுத்து அனுப்பிய கருத்துக்களை எடுத்துப் பேசுவதற்குக் கிடைத்த கால அவகாசம் வெறும் மூன்றே மூன்று நிமிடங்கள் தான். கிடைத்த நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திய நமது பிரதிநிதிகள் கேள்விகளைக் கறாராக முன் வைத்தனர். ஆனால் அதையும் சதித்தனமாகத் தான் பெரும்பான்மைத் தலைமை எதிர்கொண்டது. எப்படி?

முதலில் தலைமை தனது தவறுகளைப் பற்றிய விளக்கங்களைச் சொன்னது. பின் அதன் மீது நமது பிரதிநிதிகள் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இறுதியாக, பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கு பொத்தாம் பொதுவாக ஒரு விளக்கத்தை மட்டும் தலைமை வாசித்து, மொத்த பரிசீலனைக் கூட்டமும் முடிந்தது என்றும், இனி யாரும் விமர்சனம் கூற அனுமதி இல்லை என்றும் அறிவித்தனர். இதை எதிர்த்து பிரதிநிதிகள் காரணம் கேட்ட பொழுது, அதற்கு சப்பைக் காரணங்களைக் கூறி வாயை அடைத்து விட்டனர். இதை நமக்கு நடக்கும் வழக்கமான பரிசீலனைக் கூட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு தோழர் தன் தவறை உணராமல், நாம் கேட்ட கேள்விகளுக்கும் முறையான விளக்கம் அளிக்காமல், ஒருமுறை பதில் சொல்லிவிட்டு பரிசீலனை முடிந்துவிட்டது என்று சொன்னால் நமது கமிட்டியில் ஏற்றுக் கொள்வோமா? ஆனால் ப்ளீனக் கூட்டத்தில் அப்படி ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது பெரும்பான்மைத் தலைமை. இது நேர்மையான செயலா? சதித்தனமா? நீங்கள் தான் எங்களைப் போன்றவர்களுக்கு விளக்க வேண்டும் தோழர்களே.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ப்ளீனத்திற்குப் பின்பான சுற்றறிக்கையில் ஏன் தலைமை மீதான பரிசீலனை எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பதற்கான விடை இப்பொழுது கிடைத்திருக்கும் என்று நினைக்கிறோம். ஏனென்றால் பரிசீலனையே முறையாக நடத்தப்படவில்லையே... பின்பு எப்படி அறிக்கையில் வரும்? ”சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்”.

புள்ளி விவர மோசடி – கார்ப்பரேட்டுகளுக்கே பாடம் நடத்தும் கம்யூனிச துரோணர்கள்

ப்ளீனம் நடந்து முடிந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் மிக முக்கியமான, மிக மிக வெட்கக்கேடான ஒரு சதிச் செயல் நிறைந்துள்ளதை நீங்கள் அறிவீர்களா தோழர்களே? அது ”பெரும்பான்மைத் தலைமை” என்று சொல்லிக் கொண்டவர்கள் தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அதை அணிகளின் ஒப்புதலோடு செய்து முடிப்பது அல்லது அணிகள் ஆதரிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்துவது என்பது தான் அது. மேலும் அதன் தொடர்ச்சியாக தோழர் 2-ஐ தலைமையில் இருந்து வெளியேற்றுவது. மொத்த தலைமையின் மீதான அணிகளின் கோபத்தை தோழர் 2-ன் மீது மடைமாற்றி திருப்பி விடுவதும் அதில் உள்ளடங்கி இருக்கிறது. இது தான் யோக்கியமான ”பெரும்பான்மைத் தலைமையின்” நோக்கம்.

மொத்த ப்ளீனத்தையும் இந்த நோக்கத்திற்காக நடத்த நினைத்தனர். அதை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் வலிமை சேர்ப்பதற்கு ஒரு பொய்யான தகவலை ப்ளீனம் நடந்து முடிந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சொருகியும் உள்ளனர். முதலில் அந்தப் பொய்யான தகவல் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். ”பெரும்பான்மைத் தலைமையின் சுயவிமர்சன அறிக்கையை அணிகளில் 97% பேர் ஏற்றுக் கொண்டதாகவும், சிறு சதவீத அணிகள் தோழர் 1 மற்றும் 3 உட்பட ”பெரும்பான்மைத் தலைமையின் அறிக்கையை” ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தோழர் 2-ன் சுயவிமர்சன அறிக்கையை அணிகளில் பெரும்பான்மையானவர்கள் நிராகரித்து இருப்பதாகவும் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அணிகள் பெரிய அளவில் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக காட்டும் நோக்கத்திற்கான புள்ளிவிவரம் தான் அது.

ப்ளீனம் நடந்து முடிந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வெறும் நான்கு பக்கத்தில் தான் இருந்தது. அதில் கூட்டம் நடந்தது பற்றி பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டே வந்தவர்கள், நடுவில் இந்தப் புள்ளிவிவரத்தை சொருகி இருப்பார்கள். இதில் தான் விசயமே உள்ளது. இந்த சதித்தனத்தைப் புரிந்து கொள்வது சற்று சிரமமானது என்பதால் ஆழ்ந்து படிக்கும்படி தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ப்ளீனம் நடந்து முடிந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் என்ன விளக்கப்பட்டு இருந்தது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அந்தக் கடிதத்தின் போக்கு இப்படித்தான் அமைந்து இருந்தது. ”ப்ளீனக் கூட்டத்தில் அணிகள் விமர்சனம் வைத்தனர், அதற்கு நாங்கள் பதில் கூறினோம். மீண்டும் அணிகள் கடுமையாக விமர்சித்ததால் நாங்கள் மீண்டும் சுயவிமர்சனம் வைத்தோம்” என்று விளக்கி இருப்பார்கள். அதாவது ப்ளீனக் கூட்டம் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் செல்லும் போக்கில் கடிதம் அமைந்திருக்கும். அப்படி விளக்கிக் கொண்டே வரும் அவர்கள், ப்ளீனத்தில் தாங்கள் வைத்த சுயவிமர்சனத்தை, கருத்துக்களை அணிகள் ஏற்றுக் கொண்டனரா? இல்லையா? என்பதைத் தான் புள்ளி விவரமாக நமக்கு கொடுத்திருக்க வேண்டும். அது தான் ப்ளீனக் கூட்டம் தொடர்பாக மொத்த அணிகளின் தொகுப்பான கருத்தைத் தெரிந்து கொள்வதற்கான சாட்சியாக இருக்கும். மேலும் அதுதானே இடத்திற்குப் பொருத்தமாகவும், நியாயமாகவும் இருக்க முடியும்? ஆனால் அவர்கள் முன்வைத்த புள்ளிவிவரம் எதைப் பற்றியது? ப்ளீனக் கூட்டத்திற்கு முன்பாக அணிகளுக்கு சுற்றுக்குவிட்ட மூன்று அறிக்கைகளை, அணிகளாகிய நாம் ஏற்றுக் கொண்டோமா? இல்லையா? என்பதைத் தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எங்கள் கேள்வி இதுதான். அணிகளில் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே ”பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சன அறிக்கையை (3 அறிக்கைகளில் ஒன்று) ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ப்ளீனக் கூட்டம் துவங்கி சில மணித்துளிகளில் முடிந்திருக்கும் அல்லவா? எல்லோரும் ஏற்றுக் கொண்ட விவகாரத்தில் என்ன விவாதம் நடந்திருக்க முடியும்? ”அணிகளே பெரும்பான்மைத் தலைமையின் சுயவிமர்சன அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். எனவே உங்களுக்கு நன்றி” என்று கூறி அத்துடன் தலைமையுடைய தவறின் மீதான பரிசீலனையை முடித்திருக்கலாம். அல்லது தோழர் 2-ன் மீதான தவறை மட்டும் பரிசீலித்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில் நடந்தது வேறொன்றாக இருக்கிறதே.

அணிகளில் பெரும்பான்மையானவர்கள் ”பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சனத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் ப்ளீனக் கூட்டத்தில் ஏன் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன? அதுவும் குறிப்பாக “பெரும்பான்மைத் தலைமைக்கு” எதிராக அணிகள் ஏன் விவாதம் நடத்தினார்கள்? இப்படி விவாதம் நடந்ததைப் பற்றி நாங்களாகக் கூறவில்லை, ப்ளீனத்திற்கு பின்பான சுற்றறிக்கையில் இருப்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம். அதில் பெரும்பான்மைத் தலைமையின் சுயவிமர்சனத்தின் மீது “அணிகள் கடுமையாகத் தொடர்ந்து விமர்சித்து, விவாதங்களை ப்ளீனத்தில் நடத்தினார்கள்” என்று வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தாங்கள் ஏற்றுக் கொண்ட விசயத்தை மறுத்து அணிகள் விவாதம் நடத்தினார்களா? என்று இங்கு ஒரு கேள்வி வருகிறது. தர்க்கப்படி பார்த்தால், தான் ஏற்றுக் கொண்டு எழுதிக் கொடுத்ததை யாரும் மறுத்து விவாதிக்க சாத்தியமில்லை. எனவே இதில் இருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது அணிகள் ”பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சன அறிக்கையை (3 அறிக்கைகளில் ஒன்று) ஏற்றுக் கொள்ளவில்லை என்ற முடிவுக்கு வரலாம். அதனால் தான் விவாதம் (தோழர் 2 மீதான பரிசீலனைக்கான நேரத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட) அதிக நேரத்தை (“பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சனத்தின் மீது) எடுத்துக் கொண்டிருக்கிறது.

“என்ன தோழர்களே இப்படி சொல்றீங்க, ஒருவேளை உண்மையிலேயே “பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சன அறிக்கையை (3 அறிக்கைகளில் ஒன்று) பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் இல்லையா? அந்த புள்ளிவிவரத்தைக் கூட அணிகளுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சேர்த்திருக்கலாம் இல்லையா?” என்று நம்மில் சிலர் சிந்திக்கலாம். இதையும் ஆதாரத்தில் இருந்து பரிசீலிப்போம் தோழர்களே. அந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் என்பது ”பெரும்பான்மைத் தலைமை” கொடுத்த சுயவிமர்சன அறிக்கையை ஏற்றுக் கொண்டவர்கள் பற்றியது என்றும், அதுதான் உண்மை என்றும் வைத்துக் கொண்டே பரிசீலிப்போம்.

அப்படிப் பரிசீலித்தாலும் வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. ப்ளீனம் மற்றும் அதில் நடந்த விவாதம் தொடர்பாக விளக்கிக் கொண்டே வந்தவர்கள் ஏன் நடுவில் சம்பந்தம் இல்லாமல் ப்ளீனத்திற்கு முன்பு கொடுத்த அறிக்கை பற்றிய புள்ளிவிவரங்களை நடுவில் சேர்க்கிறார்கள்? அதுமட்டுமல்ல ப்ளீனத்தில் நடந்த விவாதம், தாங்கள் எடுத்துக் கொண்ட சுயவிமர்சனம் ஆகியவற்றில் எத்தனை சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டனர், எவ்வளவு சதவீதம் பேர் நிராகரித்தனர் என்பதை ஏன் குறிப்பாக புள்ளிவிவரமாக சேர்க்கவில்லை? அப்படி பெரும்பான்மை, சிறுபான்மை தீர்மானிக்காமலே கூட்டம் முடித்து வைக்கப்பட்டதா? ஒருவேளை அந்தப் புள்ளி விவரங்கள் சரி என்று நாம் ஏற்றுக் கொண்டால், இந்தக் கேள்விகளுக்கும் பதில் வேண்டுமில்லையா தோழர்களே?

இதை வேறு ஒரு இடத்தில் இருந்து சிந்திப்போம். ஒருவேளை குறிப்பாக ப்ளீனக் கூட்டத்தில் “பெரும்பான்மைத் தலைமை” முன்வைத்த சுயவிமர்சனங்களையும், விளக்கங்களையும் பிரதிநிதிகளாக சென்ற தோழர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டதை புள்ளி விவரமாகக் கொடுக்க நினைத்து சுற்றறிக்கை தயாரிக்க நினைத்தவர்கள், தவறுதலாக எழுத்துப் பிழையுடன் தட்டச்சு செய்திருக்க வாய்ப்பிருக்கும் அல்லவா? ஏன் அப்படி இருக்கக் கூடாது? என்று கூட ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். மொத்த தலைப்பையுமே யாரும் தவறாக தட்டச்சு செய்யப் போவதில்லை. (ப்ளீனக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் அதிகபட்சமானவர்கள் ப்ளீனத்தில் நடந்த விவாதத்தின் ஊடாக “பெரும்பான்மைத் தலைமை முன்வைத்த சுயவிமர்சனத்தை ஏற்றுக் கொண்ட சதவீதம்” என்று எழுதுவதற்கும், ”பெரும்பான்மைத் தலைமையின் சுயவிமர்சன அறிக்கையை ஏற்றுக் கொண்ட சதவீதம்” என்று எழுதுவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இது வெறும் தட்டச்சுப் பிரச்சனையாக உண்மையில் இருக்க முடியாது)

ஒருவேளை மொத்தத் தலைப்பையும் கூட தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டனர் என்று வைத்துக் கொண்டும் பரிசீலித்துப் பார்ப்போம். குறிப்பாக ப்ளீனத்தில் நடந்த விவாதத்திற்குப் பின்பு “பெரும்பான்மைத் தலைமை” எடுத்துக் கொண்ட சுயவிமர்சனத்தைத் தான் பிரதிநிதிகளில் 97% ஏற்றுக் கொண்டுள்ளனர். அதை ஏதோ போகிற போக்கில் தவறுதலாக தலைப்பை மாற்றி தட்டச்சு செய்து விட்டனர் என்று வைத்துக் கொண்டால் இங்கும் ஒரு கேள்வி வருகிறது. என்ன சுயவிமர்சனம் (குறை, காரணம், களையும் வழி) எடுத்துக் கொண்டோம் என்பதையே அறிக்கையில் சொல்லாதவர்கள், அதை எத்தனை சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டனர் என்பதை மட்டும் ஏன் கறாராக புள்ளிவிவரத்தில் கூற வேண்டும்? பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவர்கள் தங்களை ஏற்றுக் கொண்டனர் என்பதைக் காட்டுவதற்காகவா? அல்லது நாம் ஏற்கனவே பார்த்தபடி ப்ளீனத்தில் பரிசீலனை என்பதே முறையாக நடைபெறாத காரணத்தால், அந்த அயோக்கியத்தனத்தை எழுத்தில் எழுதி சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே பரிசீலனையை விரிவாக எழுதாமல் வெறும் புள்ளிவிவரத்தைக் காட்டி அணிகளாகிய நம் வாயை அடைக்கவா?

இதில் சாரமானது என்னவென்றால், ”பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சன அறிக்கையை அணிகளில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் தோழர் 2-ன் அறிக்கையையும் நாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்தத் தலைமையும் அணிகளாகிய நம்மை ஏமாற்றியிருக்கின்றனர், அதனால் இரண்டு தரப்பின் சுயவிமர்சன அறிக்கையையும் தான் நாம் நிராகரித்தோம். ஆனால் “பெரும்பான்மைத் தலைமையின்” சுயவிமர்சன அறிக்கையை அணிகள் ஏற்றுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவும் அணிகளை ஏய்க்கவும் தான் இந்தப் பொய்யான புள்ளிவிவரத்தை இடையில் சொருகி உள்ளனர் என்பது எங்கள் தாழ்மையான கருத்து. ஒருவேளை நாங்கள் கேட்பதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தோழர்களே.

தவறு செய்யும் கம்யூனிஸ்டு, ஒரு நரியைப் போன்றவன்

நாம் இதுவரைப் பார்த்தது ப்ளீனத்தை எவ்வளவு சதித்தனமாகவும், நேர்மையற்ற முறையிலும் நடத்தியிருக்கிறார்கள் என்பதைப் பற்றித் தான். இனி நாம் அடுத்து பார்க்க இருப்பது, பதவி ஏற்பு விழா எப்படி சிறப்பாக அரங்கேறியது என்பதைப் பற்றி. அதற்கும் முன்பாக ஒரு குட்டித் தகவல். “அமைப்புல நிறைய புதிய மாற்றம் வந்திருக்கு, அதனால இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தத் தலைமை நம்மைப் பல ஆண்டுகளாக ஏமாற்றி, திட்டமிட்டு பொய் சொல்லி கழுத்தறுத்து குற்றம் செய்ததோ, அதே தலைமை தான் தற்போதும் ஆட்சியில் புதிய தலைமையாக இருக்கிறது. குறிப்பாக தோழர் 2-ஐத் தவிர பழைய தலைவர்களே பெரும்பாலும் நீடிக்கின்றனர் என்பது யாருக்காவது தெரியுமா? அதிலும் குறிப்பாக பழைய தலைமையில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நடவடிக்கை எடுத்து தகுதி இறக்கம் செய்யப்பட்ட தலைமைத் தோழர் உட்பட தலைமையில் அதே நபர்கள் நீடிக்கின்றனர் என்பது தெரியுமா? இதுதான் அமைப்பில் நடந்த புதிய மாற்றங்களா தோழர்களே?

நமது அமைப்பில் அணிகளாகிய நாம் ஏதேனும் சிறு தவறு செய்துவிட்டாலும் அதற்கு எச்சரிக்கை என்பதில் தொடங்கி சில ஆண்டுகள் இடை நீக்கம் வரை செய்வது என்ற தண்டனை முறை உள்ளது. இந்தத் தண்டனை முறை தலைமையில் இருப்பவர்களுக்குப் பொருந்தாதா தோழர்களே? ஒருவேளை நேர்மையான நபர்கள் தலைமையில் இருக்கிறார்கள் என்றால், ப்ளீனக் கூட்டத்தில் அமைப்புக்கும், அணிகளுக்கும் துரோகம் செய்த, குற்றம் செய்த தலைமைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதையே ஒரு அஜெண்டாவாகப் போட்டு ப்ளீனக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தலைமையில் இருப்பவர்கள் அதியோக்கியர்கள் என்பதால் அதைச் செய்யவில்லை போலும். சரி இதில் நீட்டி முழக்கி ஏதும் பயன் இல்லை. ப்ளீனத்திற்குப் பின்பு வந்த சுற்றறிக்கையில் “நாங்களே மீண்டும் தலைமைக்கு முன் வரவில்லை என்ற போதும், பிரதிநிதிகளில் பலர் வந்து எங்களிடம் கெஞ்சிக் கேட்டும், அமைப்பை நட்டாற்றில் விட்டுவிடாதீர்கள் என்று கெஞ்சியதாலும் நாங்களே மீண்டும் தலைமைக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்ற பொருள்பட எழுதி இருப்பதை தோழர்கள் நியாபகப்படுத்திப் பாருங்கள்.

இங்கு ஒரு ஒப்பீடு அவசியம். பொதுவாக அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் ஒன்று நடக்கும். அதில் அதிமுக அடிமைகள் உட்பட பலர் அந்தப் பதவிக்கான வேட்பு மனுக்களை வாங்கி, அதில் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா-வை நான் பொதுச் செயலாளராக முன்மொழிகிறேன் என்று எழுதிக் கொடுப்பார்கள். இறுதியில் ஜெயா தொலைக்காட்சியில், அம்மாவை முன்மொழிந்து இத்தனை மனுக்கள் வந்து சேர்ந்தன என்றும், அம்மா ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்றும் அதிமுக கட்சி சார்பாக கொடுத்த செய்தி வெளியிடப்படும். ஒரு பாசிச - அடிமைக் கட்சியில் கூட முறைப்படி மனுக்களை எழுதிக் கொடுத்து தான் சர்வாதிகாரியைக் கூட தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

ஒரு புரட்சிகரக் கட்சி, கம்யூனிச இயக்கம், ஜனநாயகம் உண்மையில் கடைபிடிக்கப்படும் இடம் என்றெல்லாம் அடைமொழியோடு இருக்கும் நமது அமைப்பின் நிலைமை என்ன? யாரெல்லாம் குற்றம் செய்த ”பெரும்பான்மைத் தலைமையை” அணுகி, “தோழர்களே நீங்கள் தான் மீண்டும் பொறுப்புக்கு வர வேண்டும்” என்று ’கெஞ்சிக்’ கேட்டவர்கள் என்பதைக் குறிப்பிட்டே சுற்றறிக்கை அனுப்பி இருக்கலாமே? பெயர்களைக் கூட குறிப்பிட வேண்டாம், ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் ஒரு அடையாள எண் ப்ளீனத்தில் வழங்கப்பட்டதே, அதையாவது குறைந்தபட்சம் குறிப்பிட்டு, மொத்த ஆதரவு எண்ணிக்கையையும் குறிப்பிட்டு சுற்றறிக்கையில் எழுதி இருக்கலாமே? ஆனால் எந்தப் பிரதிநிதிகள், எத்தனை பிரதிநிதிகள் தங்களை வற்புறுத்தினார்கள் என்பது பற்றி ப்ளீனக் கூட்டத்தில் கூட அறிவிக்காமல் மௌனமாக இருந்திருக்கிறது ”பெரும்பான்மைத் தலைமை”. ப்ளீனப் பிரதிநிதிகளுக்கே தெரியக் கூடாது என்ற அளவிற்கு அது அவ்வளவு இரகசியமா

தோழர்களே? இவை எதுவுமே வேண்டாம், மொத்தம் வந்திருந்த பிரதிநிதிகளில் இத்தனை சதவீதம் பேர் எங்களை மீண்டும் பதவியில் அமர்த்த விருப்பப்பட்டார்கள் என்று ஒரு சதவீதக் கணக்கையாவது சொல்வதற்கு தலைமைக்கு நேர்மை இருக்கிறதா என்றால் நேர்மையின் வாசனை கூட இல்லாத காலி பெருங்காய டப்பாவாகத் தான் இருக்கிறார்கள். நாங்கள் இப்படிக் கூறுவது சிலரது மனதைப் புண்படுத்தலாம். ஆனால் தலைமை சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள் உங்களுக்கே தலைமையின் யோக்கியதை புரியும். “அணிகளிடம் எதைச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்து சுற்றறிக்கை தயாரித்து அணிகளை ஏமாற்றும் திறமை எங்களிடம் இருந்தது” என்று பெரும்பான்மைத் தலைமை தங்களுடைய சுயவிமர்சன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

ப்ளீனம் குறித்து இதுவரை எழுதியதே போதும் என்று கருதுகிறோம். இன்னும் 20 அல்லது 25 பக்கங்கள் எழுதும் அளவிற்கு ப்ளீனத்தில் நிறைய நேர்மையற்ற செயல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் தேவை கருதி அடுத்த அத்தியாயத்திற்குப் போகலாம். அதற்கு முன் மிக முக்கியமான தகவல் ஒன்று.

வெறும் வாய்க்கா தகராறா? புரட்சிக்கான வழியில் கோளாறா?

தலைமைக் குழுவிற்குள் ஏன் பிரச்சனை வந்தது என்று தோழர்களுக்குத் தெரியுமா? நமது அமைப்பை உருவாக்கி, அடிப்படை ஆவணங்கள் அனைத்தையும் தொகுத்து உருவாக்கியவர் தோழர் 2 தான். தற்போதும் ஆய்வுப் பணியில் உண்மையில் அதிக அளவு ஆய்வு வேலைகள் செய்து முடித்திருப்பவரும் அவர் தான். அவர் தற்போது கண்டடைந்து இருக்கும் ஆய்வு முடிவு என்பது நமது 40 ஆண்டுகால செயல்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்கக் கூடியது. மொத்த மார்க்சிய லெனினிய இயக்கங்களையே புரட்டிப் போடக் கூடியது. 1970-களில் புரட்சி குறித்து தான் உருவாக்கிய அடிப்படைக் கோட்பாடுகளையே தவறு என்பதை தற்போது அவர் செய்யும் ஆய்வின் முடிவில் கண்டடைந்து உள்ளார்.

ஆனால் தலைமையில் இருக்கும் பழைய பெருச்சாளிகளுக்கு இந்த ஆய்வு முடிவு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்களைப் பற்றி அணிகள் உருவாக்கிய பிம்பம் உடைந்து நொறுங்கி விடுமே என்ற அச்சம் ”பெரும்பான்மைத் தலைமைக்கு”. ஆனால் தோழர் 2-ஐப் பொருத்தவரை 'அறிவியலுக்கும் மார்க்சியத்துக்கும் நேர்மையாக இருப்போம், செய்த தவறை மறுபரிசீலனை செய்வோம்' என்று முன்வைக்கிறார். இது தான் பிரச்சனைக்கான அடிப்படையே. இதைப் புரிந்து கொள்ளாத வரை, நமக்கு இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஏதோ வாய்க்கா தகராறு போலத் தோன்றலாம். ஆனால் தோழர் 2-ன் தவறும் மிக முக்கியமானது. அதுவும் பரிசீலனைக்கு உட்பட்டது தான். பெரும்பான்மையின் அயோக்கியத்தனம் உட்பட, மொத்த உண்மைகளையும் அணிகளுக்கு வெளியில் சொல்லாமல், அமைப்பின் கவுரவம் பாதிக்கப்படும் என்று பிற்போக்குத்தனமாக எண்ணிக் கொண்டு முடங்கிப் போயிருக்கிறார் என்று கருதுகிறோம். 

நேர்மையானவர்களிடம் ஒரு விவாதம்

அமைப்பில் நாம் பல வகையான தோழர்களாக இருக்கிறோம். நேர்மையற்றவர்களைப் பற்றியோ, ஜால்ராக்களைப் பற்றியோ, நித்தியானந்தாவின் சிஷ்யைகளைப் போல அடிமையாய் இருப்பவர்களைப் பற்றியோ எங்களுக்கு அக்கறை இல்லை. அவர்களுக்காக இந்தக் கடிதத்தை எழுதவும் இல்லை. ஆனால் நேர்மையானவர்கள் என்று கருதிக் கொண்டும், உட்கட்சிப் போராட்டம் நடத்தி பிரச்சனைகளை சரி செய்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டும் அதே நேரம் ப்ளீனத்தில் நடந்த குற்றங்கள் பற்றி அசட்டையாய் இருக்கும் தோழர்களுக்காகத் தான் இதை எழுதுகிறோம். இதில் உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளை முன்வைத்து அதன் மீது எங்களுடைய பதில்களையும் முன்வைக்கிறோம். 

கேள்வி: ”தோழர்களே, நீங்க கேட்கிற கேள்விகள் எல்லாம் சரி தான். ஆனா அமைப்புப் பிரச்சனைய இப்படி பொதுவெளில எழுதுறது சரியா. இது அமைப்பைக் காட்டிக் கொடுக்கிறது இல்லையா? நீங்க எல்லாம் போலீஸ் ஏஜெண்ட்னு நான் சொன்னா தப்பா? எல்லா மாற்றுக் கருத்துக்களையும் கட்சிக்குள்ள வச்சு முறையா தான போராடனும், முறைப்படி மாற்றுக் கருத்துக்களை எழுதி தலைமைக்குக் கொடுத்து சுற்றுக்கு விடச் சொல்லி போராடலாமே? இப்படி பொதுவெளியில எழுதுனா எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடுமா தோழர்களே? ” 

பதில்:

இது காட்டிக் கொடுக்கும் வேலை இல்லை தோழர்களே. ஒரு வகையில் அம்பலப்படுத்தும் வேலை தான். மொத்தக் கட்சியையும், தலைமையையும் சதி செய்து மோசடியாக தோழர் 1 G மற்றும் 3 உட்பட பெரும்பான்மைத் தலைமை என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும் மாவட்டம் முழுக்க தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு தற்போது தலைமையை நிரப்பி உள்ளார்கள். (இதைத் தான் புதிய பல மாற்றங்கள் நடந்துள்ளதாக நம்மிடம் கதையளக்கிறார்கள்) இந்த சூழலில் உட்கட்சிப் போராட்டம் என்பது சாத்தியமா என்பதைத் தோழர்கள் சிந்திக்க வேண்டும். தற்போது புதிய தலைமை என்ற பெயரில் இருக்கும் அதே பழைய கும்பல் எப்படி சதி செய்து தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பதைத் தான் நாம் மேலே விரிவாகப் பார்த்தோம். இவ்வளவு நேர்மையற்ற முறையில் நடந்து வருபவர்களிடம் நியாயத்தை எதிர்பார்த்து நிற்பது என்பது ஹிட்லரிடம் மனித உரிமை பற்றி பேசுவதற்குச் சமம்.

உதாரணமாக மொத்த தலைமையும் சீனத்தில் மோசமாகி விட்டது. கட்சி சீரழிந்து நிற்கிறது என்ற நிலைமை வந்த பொழுது தோழர் மாசேதுங் என்ன முழக்கம் வைத்தார்? யாரிடம் வைத்தார்? ”தலைமையைத் தகர்த்து எறியுங்கள் மக்களே” என்று மக்களிடம் தான் பிரச்சனையைக் கொண்டு சென்றார். சூழலும், நேரமும் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது தோழர்களே. கட்சிப் பிரச்சனையை வெளியே எல்லோருக்கும் தெரியும்படி செய்துவிட்டார், முதலாளி வர்க்கத்திற்கு முன்பு கட்சியின் பிரச்சனைகளை கடை விரித்துவிட்டார் என்று மாவோவை நாம் குறை சொல்ல முடியுமா?

மேலும் ஒருவேளை இந்தக் கடிதத்தை விமர்சனமாக எழுதி தலைமைக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் சுற்றுக்கு அணிகளிடம் கொடுத்திருப்பார்கள் என்று இன்னுமா நம்புகிறீர்கள்? அப்படி ஓருவேளை அனுப்புவார்கள் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் இதுவரை எழுதி அனுப்பிய மாற்றுக் கருத்துக்களை எத்தனை முறை மற்ற அணிகளுக்கு, பகுதிகளுக்கு சுற்றுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள் போதும், உங்களுக்கே உண்மை புரியும். இன்னொரு விசயம், உட்கட்சிப் போராட்டம் என்பது அணிகளில் ஒரு சிலர் தலைமைக்கு எழுதும் காதல் கடிதம் கிடையாது. குறிப்பிட்ட பிரச்சனையின் மீது அணிகளுக்கும், தலைமைக்கும் நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் என்பதை சம்பந்தப்பட்ட அணிகளும், தலைமையும் மட்டுமே தெரிந்து வைத்துக் கொள்ள முடியும் என்பதும் மற்ற அணிகளுக்கும், பகுதிகளுக்கும் தெரியவே கூடாது என்பதும் உட்கட்சிப் போராட்டமாகாது. (அது அரசியல் கோட்பாட்டுக் பிரச்சனையாக இருந்தால் கூட).

மாறாக உட்கட்சிப் போராட்டம் என்பது ஜனநாயகக் பூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு தோழர் அல்லது அணிகள் தலைமை மீதோ அல்லது அமைப்பின் மீதோ வைக்கக் கூடிய பருண்மையான மற்றும் அரசியல், அமைப்புத் துறை சார்ந்த காத்திரமான விமர்சனங்கள் அமைப்பு முழுக்க இருக்கும் குறிப்பிட்ட தகுதி வரையிலான தோழர்களுக்காவது தெரிய வழி இருக்க வேண்டும். மாவோ சொன்னது போல நூறு பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயக வழிமுறையாக இருக்கும். இப்படி நாம் சொல்வது எந்த வகையிலும் இரகசிய அமைப்புமுறையை மீறுவதாகவோ, அதீத ஜனநாயகம் கோருவதாகவோ ஆகாது. இந்த முறையை கையாள்வதற்குத் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளில் கட்சிப் பத்திரிக்கை மற்றும் பிற வடிவங்கள் இருக்கின்றன. அப்படி ஏதாவது ஒரு வடிவம் நமது அமைப்பில் இருக்கிறது, அதைப் பயன்படுத்தி உட்கட்சிப் போராட்டத்தை அனைத்து அணிகளுக்கும் தெரியும் வகையில் நடத்த முடியும் என்று தோழர்கள் யாராவது காட்ட முடியுமா? இப்படி எந்த வழியும் இல்லாத போதும், ஜனநாயகம் மறுக்கப்படும் போதும் மாற்றுக் கருத்துக்கள் இப்படித் தான் வெளிப்படும் தோழர்களே.

கேள்வி: ”தோழர்களே நீங்க என்ன தான் சொல்லுங்க, அமைப்பு விசயத்தப் பொதுவெளில எழுதுறது தப்பு. அமைப்பு முறைய மீறிட்டீங்க. இது பெரும் பாவம் தான். அதனால் நீங்க என்ன சொன்னாலும் எங்க காதுல எதுவும் ஏறாது”

பதில்: வசூல் ராஜா MBBS படத்தில் ஒரு காட்சி வரும். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். ஆனால் அந்த மருத்துவமனையிலோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடு, வரிசையில் வா, முறைப்படி வா என்று சட்ட வழிமுறைகள மட்டும் பேசி உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவரை அம்போவென போட்டு வைத்திருப்பார்கள். அப்பொழுது ஹீரோ சட்ட விதிமுறைகளயும், அந்த ஆஸ்பத்திரி அமைப்பு முறைகளையும் மீறி ஆஸ்பத்திரி ஊழியர்களை மிரட்டிப் பணிய வைத்து அந்த நோயாளிக்கு மருத்துவம் பார்க்க வைப்பார். அதுமாதிரி தான் இதுவும். நாம் நேசித்த புரட்சி, நாம் நேசித்த மக்கள், நம்முடைய கட்சி அதைக் குத்துயிரும் கொலை உயிருமாய் துடிதுடிக்க அழித்துக் கொண்டிருக்கும் சூழலில் எங்களுக்கு இந்த சட்ட வெங்காயம், அமைப்பு முறை பற்றி எல்லாம் கவலைப்பட மனம் வரவில்லை தோழர்களே. மக்களுக்காகத் தான் சட்டம், சட்டத்திற்காக மக்கள் இல்லை என்பதைப் போல கட்சிக்காகத் தான் அமைப்புமுறை, கட்சியையே அழித்து, ஒரு கும்பல் கையகப்படுத்தி வைத்திருக்கும் போது அமைப்புமுறை எல்லாம் வெறும் காகிதங்கள் தான்.

இந்த விவகாரத்தில் கடைசியாக ஒன்று, நமது அமைப்பில் கட்சித் துணைவிதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் அமைப்பு முறைகள் என்பது மிகச் சொற்பமானது தான். கட்சித் துணைவிதிகளில் குறிப்பிடப்படாத, ஆனால் மூத்த தோழர்களின் அருள்வாக்குகளே பல நேரங்களில் அமைப்பு முறைகளாக இருக்கிறது என்பதையும் முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணமாக ப்ளீனம் நடத்துவது, அதுவரை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் அதிகார எல்லையை வரையறுப்பது, தலைமைக்கான தேர்தலை எப்படி, யாரைக் கொண்டு நடத்துவது போன்ற மிக முக்கியமான விசயங்களுக்கு கூட முறையான அமைப்பு முறை கட்சித் துணைவிதிகள் நம்மிடம் இருக்கிறதா? இல்லையே. ஆனால் ஒரு முதலாளித்துவ அரசு கூட ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு கறாரான சட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்படுகிறது. அவ்வளவு ஏன் தேர்தல் நடத்தை விதி என்று புத்தகமே போட்டு வைத்து தான் பின்பற்றுகிறது. (அதுல எவ்வளவு நேர்மையாக இருக்கிறான் என்ற விசயம் தனி). ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச விசயம் கூட தெரியாதா? அல்லது தெரியாமல் இருப்பது போல் நடிக்கிறார்களா? நமது அமைப்பு அடிப்படையிலேயே ஒரு அண்ணாச்சி மளிகைக் கடையைப் போன்றது. ஏனென்றால் அங்கு அண்ணாச்சி வாயில் இருந்து வருவது தான் சட்டம். மற்றபடி விதிமுறைகள் எல்லாம் வெறும் பொட்டணம் மடிக்கும் காகிதங்கள் தான்.

கேள்வி: ”நீங்கள் சொல்றதுல உண்மை இல்லாம இல்லை. சரி தான். ஆனா ஒரு கம்யூனிஸ்ட் கட்சின்னா இது மாதிரி தப்பு நடக்கத் தான செய்யும்? உட்கட்சிப் போராட்டம் நடத்தி சரி பண்றது தான நம்ம வேலை. அதை செய்ய வேண்டுமில்லையா? அதை எப்படித் தான் செய்யுறதுன்னு சொல்றீங்க? பொதுவெளியில எழுதுனா சரியாப் போச்சா?”

பதில்: உண்மை தான் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். பல நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதே போன்ற துரோகங்கள், ஏமாற்று வேலைகள், சீரழிவு சக்திகள் தலைமையில் இருக்கத் தான் செய்தனர். ஆனால் அதை எதிர்த்து உறுதியான போராட்டத்தை அணிகள் நடத்தியதால் அந்தக் கட்சிகள் பிழைத்துக் கொண்டன. நேர்மையாகப் போராடாத அணிகள் மொத்தக் கட்சியையும், புரட்சியையும், மக்களையும் கூட காவு கொடுத்தனர். அதே நிலைமை நம் நாட்டுக்கும் வரக் கூடாது என்றால், நேர்மையானவர்கள் அல்லது நேர்மையானவர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் தோழர்கள் மேலே நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளை தலைமையிடம் கேட்டுப் போராடி பதிலைப் பெற முயற்சியுங்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கு முயற்சிக்கிறோம்.

சதி செய்து நடத்திய ப்ளீனத்தை முழுவதும் இரத்து செய்! பொதுவான சட்டவிதிமுறைகளை வகுத்து அணிகளிடம் சுற்றுக்கு விட்டு மீண்டும் ப்ளீனத்தையும், தலைமைக்கான தேர்தலையும் நடத்து!! என்ற ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றப் போராடுவோம். ஏனென்றால் மற்றெல்லாப் பிரச்சனைகளையும் விட உட்கட்சி ஜனநாயகம் என்பது மிக அடிப்படையானது. இது தான் மையான பிரச்சனையும் கூட. நாம் எதிர்கொண்டிருக்கும் நிலைமை என்பது ஏதோ சிறு பிரசுரம் எழுதுவதில், ஆர்ப்பாட்ட முழக்கத்தை வடிப்பதில் தலைமை தவறு செய்கிறது, அதை நாம் கடந்து செல்வதா? அல்லது கேள்வி கேட்பதா? என்பதல்ல. மாறாக கட்சியின் வரலாற்றில் முக்கிய கட்டமான ப்ளீனத்திலும், புரட்சியை வழி நடத்திச் செல்வதில் பிரதானமான பங்கு வகிக்கும் ஆய்வு குறித்த விசயத்திலும் குற்றம் செய்துள்ளனர். பத்தோடு பதினொன்றாக இதைக் கடந்துவிட முடியாது. எனவே அதைக் களைவதற்கான போராட்டத்தை நாம் நேர்மையாக நடத்துவோம். கட்சிக்குள் நடக்கும் இந்த ஜனநாயக விரோத செயல்களை முறியடிக்காமல், அரசும், ஆளும் வர்க்கமும் மக்கள் மீது திணிக்கும் ஜனநாயக விரோத செயல்களை எப்படி நம்மால் முறியடிக்க முடியும்? “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்ற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

இதில் பிரதானமாக ஒரு மனநிலையைக் கடந்து வந்தால் தான் இந்த உட்கட்சிப் போராட்டத்தைக் கூட நம்மால் நடத்த முடியும். உதாரணமாக, யானையை கட்டுப்படுத்த அது குட்டியாக இருக்கும் போதே மிகக் கடினமான சங்கிலியால் கட்டி வைத்து, பாகன்கள் வளர்ப்பார்களாம். அது வளர்ந்து வலிமையாக மாறிய பின்பு வெறும் சாதாரண சங்கிலியால் கட்டினால் கூட போதுமாம். அதற்குக் காரணம், யானை தான் வளர்ந்த பின்பும் தன் காலில் அந்தக் கடினமான இரும்புச் சங்கிலி தான் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுமாம். தனக்கு எவ்வளவு மோசமான நிலைமை வந்தாலும் காலில் சாதாரணமாக உடைக்கக் கூடிய சங்கிலியை வைத்து கட்டியிருந்தாலும் கூட அது தன் இளம் பருவ வளர்ப்பின் நினைவினால் அதை உடைக்கத் துணியாதாம். அந்த யானைக் காலில் இருக்கும் சங்கிலியைப் போலத்தான் அமைப்பு முறை என்ற சங்கிலியால் தோழர்களை அமைப்பிற்குள் நுழைந்த நாள் முதல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

மொத்த அமைப்பும் மிக மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கும் போது கூட தோழர்களாகிய நம்மால் அந்த அமைப்பு முறை என்ற சங்கிலியை உடைக்க முடியாமல் தயங்கி நிற்கிறோம். இதன் விளைவாக மக்களையும், புரட்சியையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது சங்கிலியை உடைப்பதா? அமைப்பில் உள்ள பிற தோழர்களிடம் மனம் விட்டுப் பேசி பிரச்சனைக்குத் தீர்வு காணப் போராடுவதா? அல்லது சங்கிலியோடு கிடந்து செத்துப் போவதா? என்பதை தோழர்களே நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: “சரி தோழர்களே, உட்கட்சிப் போராட்டம் என்பது நீண்ட செயல்முறையைக் கொண்டது. ஒருவேளை பெரும்பான்மை முடிவு வேறு ஒன்றாக இருந்தால் என்ன செய்ய முடியும்? கட்சின்னா இது மாதிரி பிரச்சன இருக்கத்தான செய்யும் என்று சகித்துக் கொண்டு தானே போக முடியும். கட்சிய விட்டு வெளிய போய் என்ன செய்துவிட முடியும்?’

பதில்: நாங்களும் தோழர்களை கட்சியை விட்டு வெளியே போகச் சொல்லவில்லை. நாங்களும் இந்தக் கட்சியை விட்டுப் போக மாட்டோம். இது நாம் வளர்த்த கட்சி. இந்தக் கட்சி ஒரு சில மூத்த தோழர்களின் சொத்து கிடையாது. அணிகளின் உழைப்பினாலும், தியாகத்தினாலும் உருவான கட்சி. எனவே பதில் வர தாமதம் ஆகலாம் அல்லது 'ப்ளீனத்தில் பெரும்பான்மை ஏற்றுக் கொண்டுவிட்டது அதனால் எல்லோரும் வாயை மூடி வேலையைப் பாருங்கள்' என்று உத்தரவுகள் கூட நமக்குக் கிடைக்கலாம். ஆனால் நம்முடைய கேள்விகளுக்குப் பதில் எழுத்துப் பூர்வமாக கிடைக்காத வரை எந்த வேலையையும் செய்ய முடியாது என்று சொல்லி வேலை நிறுத்தம் செய்வோம். முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் தொழிலாளி வர்க்கம் ஆலையை இழுத்து மூடவா சொல்கிறது? இல்லையே. மாறாக வேலை நிறுத்தம் செய்து முதலாளிகளைப் பணிய வைக்கிறார்களே. அதுபோல நம்முடைய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில் வரும் வரை அமைப்பிற்குள் இருந்து கொண்டே வேலை நிறுத்தம் செய்வோம். இறுதி முடிவு காணும் வரை போராடலாம்.

அதேபோல் 'ப்ளீனத்தில் பெரும்பான்மை ஒரு முடிவு செய்துவிட்டது. எனவே விசயம் இத்தோடு முடிந்துவிட்டது. இந்தத் தலைப்பில் இனி யாரும் கேள்வி எழுப்ப முடியாது' என்று கூறி நம் வாயை அடைக்க முற்படுவார்கள். அதை எதிர்கொள்ளத் தயாராவோம். ஒரு புதிய ஜனநாயக அரசில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சரியாக வேலை செய்யவில்லை என்று வெறும் 20% பேர் நினைத்தால் கூட பதவியில் இருந்து இறக்கும் உரிமை இருக்கிறது என்று தானே நமக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். எனவே நாம் கூட்டம், கூட்டமாக தலைமை மீதான அவநம்பிக்கையை முன் வைப்போம். சிறுபான்மையாக இருந்தாலும் நம் கோரிக்கையை முன் வைத்துப் பேசச் சொல்லிப் போராடுவோம். இரண்டில் ஒன்று பார்க்கும் வரை அரசியல் நேர்மையுடனும், உறுதியுடனும் போராடுவோம்.

புரட்சிகரப் பிழைப்புவாதிகளுடன் சில வார்த்தைகள்

மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்வி, பதில்கள் அனைத்தும் குறைந்தபட்ச அரசியல் நேர்மை இருக்கும் தோழர்களுக்கானது. சொரணையே வராத சில புரட்சிகர அடிமைகளுக்காக மட்டும் இந்த கடைசிக் கேள்வி மற்றும் பதில்.

கேள்வி: ”எங்களை எல்லாம் பாத்தா ஆட்டு மந்தைகள் மாதிரி தெரியுதா? இங்க கட்சிக்குள்ள எல்லாம் ஒழுங்காத்தான் இருக்குது. எல்லாம் முறைப்படி தான் நடக்குது. உட்கட்சி ஜனநாயகம் எல்லாம் சரியாத் தான் இருக்குது. உங்கள மாதிரி போலீஸ் ஏஜண்டுகள் தான் அதீத ஜனநாயகம் கேட்குறீங்க. உங்கள மாதிரி ஆளுங்க தான் குழப்பம் பண்றீங்க. உங்களையெல்லாம் களை எடுத்துட்டா கட்சி சுத்தமாகிடும்” என்று சொல்பவர்களுக்கு...

பதில்: அய்யா புரட்சிகரப் பிழைப்புவாதிகளே! இங்கு எல்லாம் ஜனநாயகப்படி தான் நடக்கிறது என்றால், எங்களுடைய எளிமையான கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள். கட்சியினுடைய மூன்று மக்கள் திரள் அரங்குகளைக் கலைத்திருக்கிறார்கள் (வி.வி.மு., பெ.வி.மு., ம.க.இ.க). இதை தலைமையில் இருக்கும் உங்கள் கடவுளர்கள் யாரிடம் அனுமதி வாங்கிச் செய்தார்கள்? ப்ளீனத்தில் முறையாக நிகழ்ச்சி நிரலில் போட்டு அனைவரும் கூடிப் பேசி முடிவு செய்திருக்க வேண்டிய விவகாரம் இல்லையா இது? அணிகளுக்கு வெறும் சுற்றறிக்கையில் அனுப்பி கருத்துக் கேட்டு முடிவெடுக்கும் விசயமா இது? அப்படியே இருந்தாலும் அதையாவது அமைப்பு முழுக்க அனுப்பி அனுமதி பெற்றார்களா? அப்படி எதையாவது பெரும்பான்மைத் தலைமை செய்ததா? அல்லது குறைந்தபட்சம் இப்படி மாற்றங்களை செய்திருக்கிறோம் என்று அணிகள் அனைவருக்கும் சுற்றறிக்கையாவது அனுப்பப்பட்டதா? இதற்குப் பெயர் ஜனநாயகமா? அல்லது ஆண்டைத்தனமா?

மேலும் அமைப்பு முழுக்க கூடி சிறப்புப் ப்ளீனம் நடத்தி முடிவு செய்த ”கட்டமைப்பு நெருக்கடி” என்ற செயல் தந்திரத்தை ”கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு” என்று மாற்றியிருக்கிறார்களே, அதற்கு அணிகளிடம் அனுமதி வாங்கினார்களா? அனைவரும் கூடிப் பேசி முடிவு செய்து மாற்றப்பட்டதா? இதை மாற்றுவது குறித்து அணிகளின் கருத்துக்கள் தேவை இல்லையா? ஒருவேளை சூழல் கருதி மாற்றுகிறோம் என்று வைத்துக் கொண்டால் கூட பழைய செயல் தந்திரத்தின் அனுபவம், படிப்பினை என்ன? புதிய செயல் தந்திரம் அல்லது செயல் தந்திரத்தின் துணை முழக்கம் எப்படி முன்னுக்கு வந்தது என்பது குறித்தான மார்க்சிய லெனினிய விளக்கம் ஏதாவது அணிகளுக்கு சுற்றுக்கு விட்டு கருத்து கேட்கப்பட்டதா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் புறக்கணிப்பு என்று முன்வைத்து “தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை” என்று முழங்கிய நாம், தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணிக்குப் பினாமியாக மாறி நிற்பதை ஏற்கிறீர்களா? குறைந்தபட்சம் பாசிச அபாயத்தை வீழ்த்துவது என்ற காரணத்திற்காக இதைச் செய்வதாக சொன்னாலும், அதை மக்களிடம் வெளிப்படையாக மொத்த அமைப்பின் நிலைப்பாடாகச் சொல்லி அறிவித்து நேர்மையுடன் அணுகாத பேடித்தனத்தை நீங்கள் கேள்வி கேட்பீர்களா? இந்த கேள்விகள் அனைத்திற்கும் மனதிற்கு உண்மையாக பதில் சொல்ல உங்களுக்கு அரசியல் நேர்மை இருக்கிறதா புரட்சிகர அடிமைகளே?

அம்பலப்படுத்துவதால் யாருக்கு பலன் அரசுக்கா? புரட்சிக்கா?

”கட்சிப் பிரச்சனைய யாராவது பொதுவெளில எழுதுவாங்கலா? நீங்க எவ்வளவு சொன்னாலும் எம் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. கட்சிப் பெயர வெளிய சொல்லிட்டீங்க, கட்சியோட எல்லா இரகசியத்தையும் பொதுவெளில எழுதிட்டீங்க. இதனால புரட்சிக்கும், மக்களுக்கும் ஒரு பயனும் கிடையாது. உங்களோட முட்டாள்தனத்துனால அரசுக்கு தான் எல்லாம் சாதகமா போய் முடிஞ்சிருக்கு. நம்மோட தவறுகள வெளிய சொன்னா அது எதிரிக்கு, ஆளும் வர்க்கத்துக்கு சாதகமா இருக்காதா?” என்று இதைப் படிக்கும் சிலர் கருதலாம்.

நாங்கள் ”கட்சி உறுப்பினர் பெயரையும், முகவரியையும், அவரது அங்க அடையாளங்களையும் சொல்லவில்லை”. மேலே முழுக்க முழுக்க அமைப்பின் நடைமுறைகளில் இருக்கும் பிரச்சனைகளைத் தான் சொல்லியிருக்கிறோம். இப்படி எழுதியது அரசுக்கு மிகப் பெரிய இரகசியத்தை கண்டுபிடிக்க உதவியாக இருந்துவிட்டது என்று சொல்வதற்கு அதில் ஏதும் இல்லை. எல்லாம் ஊர் அறிந்த இரகசியங்கள் தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மூலம் தான் அரசுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று யாராவது அணிகளாகிய உங்களிடம் பேய்க் கதை சொன்னால், அவன் தான் நம்பர் 1 அயோக்கியன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

சரி அப்படி என்றால் இதனால் மக்களுக்கும், புரட்சிக்கும் என்ன தான் பயன்? இதற்கு லெனினுடைய வார்த்தைகளையே சாட்சியாகக் கொண்டு பதில் அளிக்கிறேன். ஒரு கட்சி தன்னுடைய தவறுகளை எந்த அளவுக்கு மனம் திறந்து மக்களிடம் வெளிப்படையாக அம்பலப்படுத்தி சுயவிமர்சனம் செய்து கொள்கிறதோ, அந்த அளவு தான் அது புரட்சிக்கும், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறது என்று பொருள் எனத் தோழர் லெனின் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். மேலும் இப்படி தன் தவறுகளை வெளிப்படையாக எல்லோர் முன்பும் சொல்வதால் கட்சியின் செல்வாக்கு குறையாது, ஆளும் வர்க்கத்திற்கும் சாதகமாகப் போகாது. மாறாக மக்களிடத்தில் கட்சியின் மதிப்பு தான் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். நமது கட்சி ஒரு இடத்திலாவது தன்னை சுய அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறதா? தன்னுடைய தவறுகளை வெளிப்படையாக மக்களிடம் சொல்லியிருக்கிறதா? என்றால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. கட்சி செய்ய மறுப்பதை, செய்ய வைப்பதற்கு இது ஒரு துவக்கமாக இருக்கட்டும் தோழர்களே.

இவை எல்லாவற்றையும் விட ஒரு விசயம் மிக அடிப்படையானது. நமக்குள்ளேயே அனைத்து தவறுகளையும் மூடி மறைத்துக் கொள்வதற்கு நாம் சீட்டுக் கம்பெனி நடத்தவில்லை. மாறாக நாம் இயங்குவது கம்யூனிஸ்டு கட்சியில். இது மக்களுக்கான நிறுவனம், மக்களுடைய நிறுவனம், மக்களால் இயங்கும் நிறுவனம் என்று வார்த்தைகளில் சொன்னால் போதாது. நம்முடைய நிறை, குறைகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த அம்பலப்படுத்துதல் ஒவ்வொரு நேர்மையான கம்யூனிஸ்டும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை.

இன்றைய தனிச்சிறப்பான நிலைமை என்ன? குறிப்பிட்ட ஒரு சிறு கும்பல், அவர்களுக்கு எடுபடி வேலை செய்யும் அல்லக்கைகள், காசுக்காகவும், பாதுகாப்புக்காகவும், பதவிக்காகவும், பவுசுக்காகவும் புகழுக்காகவும் அவர்களை வட்டமிடும் அயோக்கியர்கள் - இவர்களின் கையில் கட்சித் தலைமையும், கட்சியும் சென்றுவிட்டது. இந்த நேரத்திலும் வாய் மூடிக் கிடப்பது என்பது இந்தக் கும்பல் செய்யும் அயோக்கியத்தனத்தை விட மோசமானது இல்லையா?

வேறு ஒரு வகையிலும் இந்த விசயத்தை அணுகுவோம். தோழர் 3 வழக்கமாய் சொல்லும் கணவன் மனைவி உதாரணத்தில் இருந்தே ஒரு உதாரணத்தை சொல்கிறோம். ஒரு கணவன் குடித்துவிட்டு மனைவியை வீட்டுக்குள் போட்டு அடிக்கிறான். அந்தப் பெண் அழுது ஓலமிடுகிறாள். ஒரு கட்டத்தில் அடி தாங்காமல் வீதிக்கு வந்து கதறுகிறாள். அவனை நோக்கி மண்ணை அள்ளித் தூற்றுகிறாள். சுற்றி நிற்கும் ஊர் மக்களிடம் தன் நிலைமையைச் சொல்லி காப்பாற்றும்படி முறையிடுகிறாள். இப்பொழுது அந்தப் பிரச்சனை அவர்களது குடும்பப் பிரச்சனை அல்ல, அது ஊர்ப் பிரச்சனையாக மாறிவிட்டது. அது போலத் தான் ”பெரும்பான்மைத் தலைமை” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பலின் சதித்தனங்களை சகித்துக் கொள்ள முடியாமல் பொது வெளியில் வந்து முறையிடுகிறோம். இனி இது ஊர்ப் பிரச்சனை. இனி இது மக்கள் பிரச்சனை. மக்கள் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்று மாவோ சொன்னதை நினைவுபடுத்தி இந்தக் கடிதத்தை முடிக்கிறோம். நன்றி. புரட்சிகர வாழ்த்துகள்.

- தீப்பொறி & தோழர்கள்

Pin It