கல்லணையைக் கட்டிய மன்னர் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு சோழ நாடு இருகூறுகளாகப் பிரிந்து போக ஒரு பகுதியை கடற்கரை நகரமான புகாரைத் தலைநகராகக் கொண்டும், மற்றொரு பகுதியை உறையூரைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பொருஞ்சோழனே மிகச் சிறந்து விளங்கினான். புலவர்கள் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், புல்லாற்றூர் எயிற்றியினார், பொத்தியார் அறிவுரைகளுக்கிணங்க கோப்பெருஞ் சோழன் நல் ஆட்சி புரிந்து வந்தான். அப்போது ஒரு நாள்...
அரண்மனையில் இருக்கும் திறந்த வெளி அரங்கில் மல்யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அரசர் கோப்பெருஞ்சோழனிற்காக அனைவரும் காத்திருந்தார்கள். “மாமன்னன் வாழ்க. அவன் கொற்றம் சிறக்க” என்ற மக்களின் வாழ்த்தொலி வரவேற்க கோப்பெருஞ்சோழன் அரியணையில் வந்தமர்ந்தார். அரசரின் இருபுறமும் துவார பாலகர்கள் போல அவருடைய புதல்வர்கள் இளவரசர் இளங்கோச் சோழனும், அவனுடைய தம்பி இளவரசர் செங்கோட் சோழனும் நின்று கொண்டு கைகளைத் தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
அரசர் கோப்பெருஞ்சோழன் தன் புதல்வர்களிடம் செய்கையால் ரகசியமாக ஏதோ உணர்த்த சிறிது நேரத்தில் மல்யுத்த உடையில் இருவரும் களம் இறங்கினார்கள். கூடியிருந்தவர்கள் அனைவரும் குரல் எழுப்பி ஆர்ப்பரித்தார்கள். வீழ்வதும், எழுவதுமான தொடர் போராட்டத்தில் இருவருக்குமான வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. வெற்றி தோல்விகள் இருவருக்குமிடையே சரி சமமாக இருக்க, அடுத்து நடக்கும் போட்டியே அவர்களின் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. அதுவரை திறமையாக விளையாடிய செங்கோட் சோழன் தன் அண்ணன் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்கள் யாரும் அறியாதபடிக்கு வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொடுத்தான். இறுதியில் வென்றது இளங்கோச் சோழனாக இருந்தும், மல்யுத்த நெறிமுறைகளை திறமையாகக் கையாண்டு விளையாடிய செங்கோட் சோழனையே அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
“செங்கோடா, மிக அருமையாக விளையாடினாய். அற்புதம்” என்று தந்தை கோப்பெருஞ்சோழன் இளையவனை அணைத்துத் தழுவிப் பாராட்ட, இனம் புரியாத ஏதோ ஒன்று முதன் முதலாக தன்னை விட்டு நழுவுவதாக உணர ஆரம்பித்தான் இளங்கோச் சோழன். இதை எப்படியே அறிந்த புலவர் பொத்தியார் மிகவும் தணிந்த குரலில் இளங்கோச் சோழனிடம், “இளவரசே, உங்கள் அளவிற்கு உலக அனுபவம் இல்லாத உங்களின் தம்பி தோல்வியால் தளர்ந்து விடாமல் இருக்கவும், அவனை மேலும் உற்சாகப்படுத்துவதற்காகவும் அரசர் அவரை சற்று மிகையாகப் புகழ்கிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும் போது யாருக்கு இங்கு குழுமியிருந்த மக்கள் அதிக கரகோஷம் எழுப்பினார்கள் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே இளங்கோச் சோழனின் கைகளை அனைவரின் முன்னும் உயர்த்த அங்கிருந்தவர்கள் மீண்டும் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். மன்னரின் பாராட்டை விட மக்களின் பாராட்டே முக்கியம் என்று உணர்ந்த இளங்கோச் சோழனின் கண்களில் முதன் முறையாக பேராசை மிளிர்ந்தது.
இப்படியாக தந்தைக்கும், தனயனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே போனாலும் புதல்வர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிக பாசத்துடன் இருந்தார்கள். செங்கோட் சோழன் அரசரின் ஆணைக்குக் கட்டுப்பட்டாலும் அண்ணனின் கண் அசைவு ஒப்புதலிற்காகக் காத்திருப்பான். இருவருக்குமிடையே இருக்கும் அன்பின் ஆழத்தை பல சந்தர்ப்பங்களில் நேரில் கண்ட அரசர் மனதிற்குள் மகிழ்ந்தாலும், இளங்கோச் சோழனின் பிடிவாதத்தையும் சமீபகாலமாக அவன் கொண்டிருந்த துர் நட்புக்களையும் கண்டு மனம் வருந்தினார்.
ஒரு நாள் அரசர் புலவர் பொத்தியாரிடம் “அண்ணனுக்கு விட்டுக் கொடுப்பது தவறில்லை புலவரே. என்றாலும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால் மூத்தவனின் பிடிவாதம் வளர்ந்து கொண்டுதானே போகும். உங்களுக்கு என்னைப் பார்க்கிலும் இளங்கோச் சோழன் மேல் அதிக அன்பும் அக்கறையும் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அவனைத் தாங்கள் நிச்சயம் நல் வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் என் காலம் கழிகிறது ” என்று இருக்கையில் தாராளமாகச் சாய்ந்து கொண்டார். தூரத்தே புலவர் எயிற்றியினார் இளங்கோச் சோழனிடம் ஏதோ பேசிக் கொண்டே அவனைத் தொடர, அவன் பதில் ஏதும் கூறாமல் செய்கையினால் அவர் கூறுவதை அலட்சியமாக மறுதலித்துக் கொண்டே அவரைக் கடந்து முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கவனித்த அரசர் புலவர் பொத்தியாரை நோக்கி “அங்கு பார்த்தீரா, வயதிலும் அறிவிலும் மூத்தவர் என்ற மரியாதை துளியும் இன்றி எப்படி நடந்து கொள்கிறான்” என்று கேட்க புலவரும் அமைதியாகப் பதிலளித்தார். “எனக்கு இது தவறாகத் தோன்றவில்லை அரசே. புலவர் எயிற்றியினாரிடம் இளவரசருக்கு அதிக உரிமை இருக்கிறது. அதில் நாம் தலையிடக் கூடாது” என்று அன்புடன் அரசரைக் கடிந்து தற்காலிக நிம்மதிச் சூழலை மன்னருக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
ஒரு நாள் அரசரும் சோழ நாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரியும் நீண்ட நேரம் அரசாங்க விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த இளங்கோச் சோழன் படைத்தலைவர் வீட்டிற்கு யாரும் அறியாமல் வேகமாக குதிரையில் விரைந்தான். “படைத் தலைவரைக் காண வேண்டும். மிகவும் அவசரம்” என்று வாசலில் நின்று உயர்த்திக் குரலெழுப்ப, படைத்தலைவரின் ஓரே மகள் மணியிடை கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அலட்சியமாக அவன் முன் வந்து நின்றாள்.
“படைத் தலைவரைக் காண வேண்டுமா?” என்று விழிகளை உயர்த்திக் கேட்டுக் கொண்டே இளவரசருக்கு வழி விட்டாள். “நீ எப்படி இருக்கிறாய் மணியிடை?” என்று இளவரசர் கேட்டவுடன் துடுக்குடனே “நேற்று மாலை நான் உங்களைச் சந்திக்கும் போது எப்படி இருந்தேனோ அதைப் போலவே இப்போதும் இருக்கிறேன்” என்று அவள் கூற இளவரசர் அவளை இறுக அணைத்துக் கொண்டார். அவரின் பிடியை விலக்குவதான பொய் பாவனையுடன் தன் சம்மதத்தை மறைமுகமாகத் தெரிவித்தாள் மணியிடை. “நீதான் இந்தச் சோழப் பேரரசின் வருங்கால இளவரசி. இப்படி வெட்கப்பட்டால் எப்படி?” என்று அவளின் முகத்தை தன் பக்கம் திருப்பி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
கோப்பெருஞ்சோழனின் நல்ல பண்புகளுக்கு எதிர்மறையாக அவருடைய புதல்வர்கள் பல தீய குணங்களைப் பெற்றிருந்தார்கள். தந்தை ஆண்டு கொண்டிருந்த ஒரு சில பகுதிகளை அவர்கள் தனியாக ஆண்டு வந்தாலும் தந்தைக்கு கீழ்படியவோ அல்லது அவரின் சொல் கேட்டு அதன் படி நடக்கவோ அவர்கள் சித்தமாக இல்லை. அண்ணனின் கட்டளையை தலைமேற்கொண்டு நடக்கும் இளையவனும் அவனுக்கே உடன் போனான். நாடாளும் ஆசை இருவர் மனதிலும் தணியாத தீயாக வளர்ந்து கொண்டிருந்தது.
தகாத நட்பு, மாண்பில்லாத புதல்வர்கள் என்றாகிப் போக முழு அரசுரிமையை அவர்களுக்கு அளிக்க அரசன் அஞ்சினார். நாட்டு மக்களின் நலம் கருதி பேராசை மிகுந்த புதல்வர்களின் ஆசைப்படி நடந்து கொள்ளாமல் ஆட்சியை தன் முழு அதிகாரத்துக்குள்ளே வைத்துக் கொண்டான். அரசரின் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் புலவர் எயிற்றியினாருக்கு இது குறித்து அரசரிடம் மாற்றுக் கருத்து இருந்தது.
நாட்களும் நகர்ந்து கொண்டே போனது. அப்போது பாண்டிய நாட்டில் பச்சைக்கிளி என்ற பெண் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது கரடி வந்து தாக்க, அவளை சோழநாட்டைச் சேர்ந்த தூயன் என்பவன் காப்பாற்றினான். அவளைத் திருமணம் முடிக்க தன் ஆவலையும் தெரிவித்தான். ஆனால் பச்சைக்கிளி அதை ஏற்கவில்லை. சில காலம் கழித்து மான்வளவன் என்பவனைத் திருமணம் செய்து கொண்டு பொன்னன் என்ற குழந்தைக்குத் தாயுமானாள். இதைக் கண்டு பொறாமைப்பட்ட தூயன் பச்சைக்கிளிமேல் சந்தேகத்தீயை அவளுடைய கணவன் மான்வளவன் மனதில் வளர்க்க சினம் கொண்டு அவளை கொலையும் செய்துவிடுகிறான்.
பச்சைகிளியின் கொலையில் சோழ நாட்டுத் தூயவனும் தொடர்பு கொண்டிருக்கிறான் எனவே இந்தக் கொலைக்குக் காரணம் சோழ நாடுதான் என்று பதவி ஆசையில் இளங்கோச் சோழன் பொய்ச் செய்தியை அரசருக்கு எதிராக மக்களிடையே பரப்பினான். சோழநாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரின் மகள் மணியிடையை இளங்கோச் சோழன் திருமணம் செய்ய விரும்புவதாகப் படைத்தலைவரிடம் கூறினான். திருமணத்திற்கு முன்பு, தான் மன்னன் ஆவதற்கு உதவுமாறு அவரிடம் வேண்டினான். பேராசையில் ஆசையில் அவரும் இளங்கோச் சோழனின் திட்டத்திற்கு உடன்பட, அண்ணனும் தம்பியும் படையுடன் தந்தையை எதிர்க்க ஆயத்தமானார்கள்.
இதை அறிந்த அரசர் தம் மக்களே ஆயினும், பிழையொழுக்கம் உடையவராதலின் அவர்களை வென்று அடக்கல் அறநெறியே என்று தீர்மானித்து படையெடுத்து வந்த புதல்வர்களை எதிர்த்துப் போரிட்டார். இதையறிந்த புலவர் எயிற்றியனார் மன்னர் கோப்பெருஞ்சோழனின் இந்த முடிவால் பெற்றெடுத்த புதல்வர்களையே பகையாகக் கொண்டான் என்ற தீராப் பழி மன்னரின் மேல் விழுமே என்று அஞ்சியதாலும், இளங்கோச் சோழனின் மேல் தான் வைத்திருந்த அளப்பறிய அன்பின் காரணமாகவும் அரசருக்கு அறிவுரை கூறி போரை நிறுத்த வழி செய்தார். செய்வதறியாது கடமைக்கும் பாசத்திற்குமிடையே சிக்கிய அரசரும் இதற்கு அரை மனதுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
தன் புதல்வர்களின் மீது கொண்ட மனக்கசப்பின் காரணமாக வாழ விரும்பாத மன்னன் கோப்பெருஞ்சோழன் தனக்கு நேர்ந்த இந்த பழிச்சொல் தன் பகையரசர் செவிகளில் சென்று புகும் முன்னமே உயிர்விடத் துணிந்தான். அவைப் புலவர்கள் அனைவரையும் அழைத்து வடக்கிருந்து உயிர் நீத்து பிறவாப் பெரு நிலையை தான் அடைய விரும்புவதாகக் கூறினார். அரசன் எடுத்த முடிவை ஏற்றுக் கொண்ட புலவர்கள் வடக்கிருக்கத் துணிந்த வேந்தனைத் தடை செய்யாமல், அவரோடு தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர்.
சோழ நாட்டின் தலைநகரான எழில் கொஞ்சும் உறையூர். கரைபுரண்டு ஓடும் வற்றா காவேரியாறு. மேடும் பள்ளமுமாகத் தெரியும் நெடிய வெண்மணற் பரப்பு. மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து கொண்டே இருந்தார்கள். வெண்மை நிறத்தில் எளிய ஆடையை உடுத்திக் கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார் அரசர். அவரைச் சுற்றி சதுரமாக சிறிய பள்ளம் தோண்டியிருந்தார்கள். அவர் அமர்ந்திருந்த மணல் மேட்டில் தாராளமாக தர்ப்பை புற்களைப் பரப்பியிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் சொல்லொணா சோகம். நேற்றுவரை அரச வாழ்வில் இன்புற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அரசன், இன்று தன் புதல்வர்களின் பேராசையால் தன் வாழ்வை வெறுத்து உண்ணா நோன்பு இருக்கத் துணிந்து விட்டான் என்று பலரும் பலவாறு தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள். அரசருடனே இருந்த புலவர் பெருமக்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவரும் அரசரை அங்கேவிட்டு பிரிய மனமில்லாமல் கண்ணீருடன் அங்கேயே இருந்தார்கள். இருள் கவியும் நேரம். ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறினார்கள். தயங்கியபடி இருள் சூழ அரசரைப் பிரிய மனம் இல்லாமல் கீற்றாகத் துளி வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது.
கோப்பொருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்து விட்டான் என்பதை அறிந்த புலவர் பிசிராந்தையார் அரசரைக் காண பாண்டிய நாட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். காவிரி ஆற்றின் சுடுமணற் பரப்பில் பலரின் கால் தடயங்கள் பதிந்திருந்தது. அவைகளின் ஊடே இளங்கோச் சோழனின் காலடிப் பதிவுகளும் இருந்தது. அரசரை நேரில் பார்க்கத் துணிவில்லாமல் குற்ற உணர்ச்சியில் தயங்கியபடி யாரும் அறியாமல் தூரத்தே தனியாக நின்றிருந்தான். அப்போது மணற்சூடு தாங்காமல் தடுமாறியபடி ஒருவர் அங்கே வந்து கொண்டிருந்தார். அரசரை இந்த நிலையில் கண்ட அவர், மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுதார். வெகு தொலைவில் இருந்து நடந்து வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.
“உறையூரிலிருந்து உலகாளும் அரசருக்கெல்லாம் அரசனான கோப்பெருஞ்சோழனே! எயிற்றியினார், பொத்தியார் புலவர்கள் சூழ சிறப்புடன் வாழ்ந்த பெருமானே! இயல், இசை, நாடகம் வளர்த்த வித்தகனே! எனை எங்ஙனம் மறந்து நீ மட்டும் தனியாக வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தாய்? இது எப்படி உனக்குச் சாத்தியமாயிற்று? என்று கேட்டுக் கொண்டே அரசரின் அருகில் ஏற்கனவே அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தமர்ந்து வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தார்.
இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்த இளங்கோச் சோழன் வந்திருப்பது அரசரின் உயிர் நண்பன் பிசிராந்தையார் என்பதை அறிந்தான். அரசரை இது நாள் வரை நேரில் சந்திக்காமல் அவரின் நல்ல பண்புகளைக் கேட்டறிந்து அவர் மேல் கொண்ட நட்பால் உயிர் விடத் துணிந்த பாண்டிய நாட்டுப் புலவர் ஒருபுறம். நாடாளும் பேராசையால் அன்பு செலுத்திய அரசரை வடக்கிருந்து உயிர் நீக்க வைத்த புதல்வர்கள் மறுபுறம். இளங்கோச் சோழன் தன்னையும் புலவரையும் ஒரு சேர வைத்துப் பார்க்க மனம் கூசினான். தந்தையின் இந்த முடிவிற்கு தான் மட்டும் தான் முழுக்காரணம் என்று அந்த நொடியில் உணர்ந்தவன் முதன் முதலாக தந்தைக்காகக் கண்ணீர் சிந்தினான். சோகம் தாளாமல் மனமுருகி மானசீகமாக தன் தந்தையிடம் வருந்தி மன்னிப்பு கேட்ட அந்த நொடியிலேயே மன்னரின் உயிரும் மெல்லப் பிரிந்தது. சிலை போல அமர்ந்திருந்த மன்னரின் கண்களின் ஓரத்தில் திரண்டிருந்த கண்ணீர்த் துளி அஸ்தமன சூரியனின் ஒளியால் சிதறுண்டு விடியலின் முதல் வெளிச்சத்தை இளங்கோச் சோழனிற்கு அடையாளம் காண்பித்தது.
சில நாட்கள் கழித்து வடக்கிருந்து உயிர் நீத்த கோப்பெருஞ்சோழனின் நினைவாக எழுப்பிய நடுகல்லை வழிபட படைத் தலைவரின் மகள் மணியிடை வந்தாள். குளிர்ந்த காவிரி நீரினால் நடு கல்லைக் கழுவி நெய். சந்தனம் சாற்றி, வாசம் மிகுந்த மாலை பூட்டி , கொண்டு வந்த வரகரிசியையும், இறைச்சியையும் முன் படைத்து ஒரு முடிவு எடுப்பதற்குக் காத்திருப்பவள் போல கண்களை மூடி நீண்ட நேரம் நின்றாள். மெல்லிய இரைச்சலுடன் சென்று கொண்டிருந்த காவிரி ஆறு மணியிடைக்கு மட்டும் கேட்கும் வகையில் சாதகமான பதிலைக் கூற சிரித்தபடியே கண்களைத் திறந்தாள். நடு கல்லின் மேல் வைத்திருந்த பூ ஒன்று பீடத்தில் விழுந்தது. அதை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு தகப்பனாரிடம் தன் முடிவைக் கூற உற்சாகமாக வீடு திரும்பினாள்.
- பிரேம பிரபா