nirmala sitharaman presents budget2020வேலைக்குப் போகாமல் உதவாக்கரையாக வாழும் ஒரு குடிகாரன், வீட்டில் இருப்பதை எல்லாம் விற்று குடித்து விட்டு, அதுவும் போதாமல் பொண்டாட்டியின் தாலியையும் விற்று குடித்த கதையாக மாறி இருக்கின்றது மத்திய மோடி அரசின் நிலை. நாட்டு மக்களின் வாழ்க்கையை எல்லாம் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றின் மூலம் நாசம் செய்து, பெரும் வேலை இழப்புகளையும், சிறு குறு தொழில்களின் அழிவையும் கொண்டு வந்தது போதாமல், இப்போது நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் விற்று விடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றது. அதன்படி தற்போது பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் எல்.ஐ.சியின் குறிப்பிட்ட சதவீதப் பங்குகளை விற்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்.ஐ.சி-யில் இருந்து அரசின் பங்குகளை குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.

வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டு 1956ல் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி புதிய பாலிசிகளை ஈட்டி மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களைவிட பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றது. அத்தோடு எல்.ஐ.சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்குத் தந்த தொகை ரூ.2,611 கோடி ஆகும். 12வது ஐந்தாண்டு (2012 -17) திட்டத்திற்கு எல்.ஐ.சி-யின் பங்களிப்பு ரூ.14.23 லட்சம் கோடி ஆகும். சராசரியாக ஆண்டிற்கு ரூ.2,84,000 கோடி ஆகும். 13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்குத் தந்திருப்பது ரூ.7,01,483 கோடி.

ஆண்டு சராசரி பங்களிப்பு ரூ.3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி ஆகும். ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி ஆகும். இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களிலேயே நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்கு அதிக பங்களிப்பை செய்து நாட்டு மக்களின் வளர்ச்சியோடு தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டுள்ளது எல்.ஐ.சி.

அப்படிப்பட்ட எல்.ஐ.சி பங்குகளை விற்கத் துணிந்திருகின்றது மோடி அரசு. நிச்சயம் மோடி விற்கப் போகும் இந்தப் பங்குகள் அனைத்தும் சில தனியார் முதலாளிகளின் கைவசம்தான் பெரும்பாலும் செல்லும் என்பதும், கூடிய விரைவில் எல்.ஐ.சியின் மீது தனியார் முதலாளிகளின் கை ஓங்குவதன் மூலம் அதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டு தனியார் பாலிசி நிறுவனங்கள் எழுச்சி பெறுவதற்கு வழிவகுக்கும் நிலை ஏற்படப் போகின்றது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மட்டும் அல்லாமல் பல்வேறு பொதுத்துறை நிறுவனப் பங்குகளையும் இந்த அரசு விற்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் இப்படி பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2,10,000 கோடி திரட்ட இந்த அரசு திட்டமிட்டு இருந்தது. கடந்த ஆண்டு இந்தத் தொகை 65000 கோடியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், 18,000 கோடி அளவிலான பங்குகளை மட்டுமே டிசம்பர் 2019 வரை விற்றிருந்தது.

ஸ்டீல் அதாரட்டி ஆஃப் இந்தியா(செயில்) நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை 10000 கோடிக்கும், ஜிஆர்சிஇ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை 200 கோடிக்கும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதே போல உலகத் தரத்தில் சோலார் பேனல்கள் தயாரிக்கும் சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸின் 100 சதவீத பங்குகளையும் விற்றுத் தின்ன இந்த அரசு முடிவெடித்துள்ளது.

கடந்த ஆண்டே பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (பிபிசிஎல்) 53.29% பங்குகளை விற்பனை செய்வதோடு அதன் நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது அத்தோடு இந்திய கப்பல் கார்ப்பரேஷன் (எஸ்சிஐ), கன்டெய்னர் கார்ப் ஆஃப் இந்தியா (கான்கார்), டிஎச்டிசி, நார்த் ஈஸ்டர்ன் பவர் கார்ப் லிமிடெட் (நீப்கோ) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதே போல ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளையும், ஐடிபிஐ வங்கியில் உள்ள 47 சதவீதப் பங்குகளையும் விற்க முடிவெடுத்துள்ளது.

இவர்களின் நோக்கம் ஒட்டுமொத்தமாக பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையுமே நஷ்டக் கணக்கு காட்டி, அதைச் சிறுக சிறுகவோ, இல்லை முழுவதுமாகவோ தனியாரிடம் விற்று விடுவதுதான். இவை அனைத்துமே ஏதோ பொருளாதார நெருக்கடி காரணமாக விற்கப்படுவதாக ஒரு தோற்றம் ஏற்படுத்தப் படுகின்றது. ஆனால் அது உண்மையில்லை. இது போன்ற சமயங்களைப் பயன்படுத்தி உலக வங்கி, உலக நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் இவர்களின் திட்டம்.

இலாபத்தில் இயங்காத நிறுவனங்களை தனியாரிடம் முழுவதுமாக விற்பதன் மூலம் அதை வாங்கும் தனியார் முதலாளிகள் அதை மீண்டும் லாபத்தில் நடத்துவார்கள் என்றால், இந்த அரசு ஒரு கையாலாகாத நிர்வாகத் திறனற்ற அரசு என்பதை ஒப்புக் கொள்கின்றது என்றுதான் அர்த்தம். இந்த ஆட்சியில் மட்டுமல்ல, புதிய பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப் பட்டதில் இருந்தே இப்படி பொதுத் துறை நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பது தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

2019, மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 70 பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக மாநிலங்களவையில் எம்.பி. வீரேந்திர குமாரின் கேள்விகளுக்கு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப் பூர்வமான பதிலை சமர்ப்பித்திருக்கின்றார். அதில் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 31,635.35 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதைக் கவனித்தாலே இவர்களின் கபட நாடகம் தெரிந்துவிடும். இவர்கள் இழப்பு என்று சொல்வதை நஷ்டம் என்ற பொருளில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. லாபத்தில் சரிவு ஏற்பட்டால் கூட அதை வழக்கமாக மத்தியில் எந்த அரசு ஆட்சி செய்தாலும் அதை இழப்பு என்றுதான் சொல்வார்கள். இவர்களின் கணக்குப்படி பார்த்தால் கூட இழப்பு, அதாவது லாபத்தில் சரிவு 31,635.35 கோடி ரூபாய் தான். ஆனால் இவர்கள் பங்கு விலக்கல் மற்றும் முழுவதுமாகவே நிறுவனத்தை விற்பது போன்றவற்றின் மூலம் நடப்பு ஆண்டில் திரட்ட நிர்ணயித்த தொகை 2.10 லட்சம் கோடிகள்!.

மேலே சொன்ன நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சென்னை பெட்ரோலிய நிறுவனம், மெட்ராஸ் பூச்சிக்கொல்லி நிறுவனம், சென்னை ஐ.டி.பி.எல், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), எம்டிஎன்எல் (MTNL) ஆகிய நிறுவனங்கள் அனைத்துமே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் பட்டியலில்தான் உள்ளன என்பதால் கூடிய விரைவில் இவை பகுதி அளவோ, இல்லை முழுவதுமாகவோ விற்கப்படும் என்று நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

பாஜக இப்படி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது புதிதல்ல. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்கு அருண் ஷோரியை அமைச்சராக்கி அழகு பார்த்த தேசபக்தர்கள்தான் பாஜகவினர். 2100 கோடி மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் நிறுவனத்தை 104 கோடிக்கும், 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனத்தை வெறும் 551 கோடிக்கும் விற்றார்கள். அதனால் நாட்டின் சொத்துக்களை விற்றுத் தின்பது என்பது பாஜகவினரின் டிஎன்ஏவிலேயே உள்ளது.

எதற்குமே ஆகாத ஒரு கையாலாகாத அரசாக இது மாறியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது. 2016-17 முதல் 2018-19 வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி விகிதம் முறையே 8.2%, 7.2%, 6.8% எனச் சரிவடைந்து வந்தது. 2019-20 நிதியாண்டு தொடங்கியது முதலே பொருளாதார வளர்ச்சி மேலும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீதமாகச் சரிந்திருக்கின்றது. இந்த நிலை இன்னும் மோசமாகும் என்றே பொருளாதார அறிஞர்கள் சொல்கின்றார்கள்.

வரலாறு காணாத வேலை இழப்புகளும், ஆலை மூடல்களும் நடந்து வருகின்றன. உள்நாட்டு நுகர்வு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. மோடி அரசின் முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கையால் நாடே திவலாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த அரசு அதானி, அம்பானி போன்றோரின் நலனுக்காக மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகப் பெரிய 9 பணக்காரக் குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்திய வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை பெருமுதலாளிகள் சுருட்டிக் கொள்ள இந்த அரசு உதவி இருக்கின்றது. ஆனால் மக்களுக்கு செலவு செய்ய மட்டும் இந்த அரசிடம் பணம் இல்லை.

ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து போதாமல், ஒட்டுமொத்தமாக நாட்டை விற்க தற்போது துணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த பட்ஜெட்டில் மட்டும் ஏழு லட்சம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் வரிச்சலுகைகள் தரப்பட்டுள்ளது. ஆனால் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடப்படுவதற்கு வெறும் ஒன்றரை லட்சம் கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா என்று பம்மாத்து செய்து கொண்டிருந்த இவர்களின் திட்டம் என்பது உண்மையில் இந்தியாவை விற்பதுதான் என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It