ஒரு பெரும் பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. கஜா புயல் ஈவு இரக்கமற்று தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. டெல்டா விவசாயிகள் வரலாற்றின் இருண்ட காலத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுக்க ஆடை என எதுவுமே இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னையும், வாழையும், பலாவும் கஜாவால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, உயிரற்ற உடல்களாக வீழ்ந்து கிடக்கின்றன. இனி உயிர் பிழைத்து இந்த உலகில் வாழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள் ஊருக்கே உணவளித்து காத்த விவசாய மக்கள்.

CycloneGajaDamagedHouseஆனாலும் என்ன, இந்த உலகில் மனிதம் மரித்தா போய்விட்டது? பிச்சை போடுவதைக் கூட படம் பிடித்து பேஸ்புக்கிலே போட்டு விளம்பரம் தேடும் சுயமோகிகளுக்கு மத்தியிலும், எந்த விளம்பரமும் அற்று எறும்புகள் போல சிறிது சிறிதாக சேர்த்து தன் சக மனிதனை மரணத்திற்கு தின்னக் கொடுக்காமல் பலர் களத்தில் இறங்கி களப்பணி ஆற்றி வருகின்றார்கள். அவர்கள் தாங்கள் செய்த உதவிகளுக்காக எந்தக் கைமாறையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஒரு புயலோ, பெரு மழையோ மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் பேரன்பை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றது. யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று செல்லும் அற்பப்பிறவிகளுக்கு மத்தியிலும் யாருக்கு எது நடந்தாலும், அதன் வலியும் வேதனையும் தனக்கும்தான் என அதைத் தீர்க்க முயலும் மனிதம் நிறைந்த மனிதர்களும் இந்த மண்ணில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் அது நிச்சயமாக ஞாலத்தின் மாணப் பெரிது.

இருந்தாலும் தமிழகத்தில் எங்கேயோ இருந்து எந்த ரத்த சொந்தமும் இல்லாமல் ஓடி ஓடி உதவி செய்யும் மனிதர்களிடம் ‘நீங்களே அனைத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று நாம் அனைத்து கடமைகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு ஓடிவிடலாமா? மனித உயிர்களின் மதிப்புகளை அறிந்த யாரும் அப்படி செய்வார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள். ஆனால் ஊழலிலும், அதிகார முறைகேட்டிலும் ஈடுபட்டு, மனித உயிர்களைக் கொன்று பணம் பறிக்கும் மிருகக் கூட்டம் நிச்சயமாக அப்படித்தான் செய்யும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘கூஜா’ அரசாங்கம் தன்னுடைய கையாலாகாத ஆட்சியால் டெல்டா விவசாயிகளை மரணத்தை நோக்கி ஓட ஓட விரட்டிக்கொண்டு இருக்கின்றது.

மாதம் மும்மாரி பொழிகின்றதா என தன் மந்திரியிடம் கேட்டு நாட்டு நிலவரத்தைத் தெரிந்து கொள்ளும் மன்னனுக்கு நாட்டில் மழை பொழிகின்றதா, இல்லை கடும் வறட்சி நிலவுகின்றதா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இருக்க வாய்ப்பில்லை. காரணம் உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட சாமானிய மக்களிடம் வரியை ஒட்ட சுரண்டி, குடியும் கூத்துமாக அந்தப்புரத்திற்குள் கொட்டம் அடிப்பதுதான் அந்தக்கால மன்னராட்சி. ஆனால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்று சொல்லப்படும் இந்த ஜனநாயக அமைப்பு முறையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தங்களை ஒரு மன்னர் போலத்தான் இன்னும் கருதிக்கொண்டு கொட்டம் அடித்துக் கொண்டு இருகின்றார்கள்.

ஒரு பெரும் இயற்கை சீற்றத்தால் முற்றாக வாழ்வாதாரம் சூறையாடப்பட்டிருக்கும் மக்களை நேரில் சென்று பார்க்காமலேயே அல்லக்கைகள் கொடுத்த தகவலை வைத்து நிவாரணம் அறிவிக்கின்றார் முதல்வர். லட்சக்கணக்கான தென்னை மரங்களும், வாழைமரங்களும், வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றன. நெற்பயிர்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான குடிசைவீடுகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. குவியல் குவியலாக ஆடுகளும், மாடுகளும் செத்துக்கிடக்கின்றன. ஆனால் முதல்வர் என்ற அடிப்படையில் இவ்வளவு பெரிய பேரிடரைக்கூட நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி பார்வையிட மாட்டாராம். உடல் முழுவதும் அதிகாரக் கொழுப்பும், மக்களை கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் ஆணவமும் தான் ஆட்சியாளர்களை இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் பணத்தை சுருட்டி ஆடம்பர சொகுசு வாழ்க்கை நடத்தும் புல்லுருவிக் கூட்டங்கள் சாமானிய மனிதர்களின் வாடை கூட தன்மேல் பட்டுவிடக் கூடாது என்று நினைக்கின்றார்கள். எப்படி ஜெயலலிதா தான் வாழ்ந்த காலத்தில் தன்னை தமிழ்நாட்டில் மகாராணியாக நினைத்துக்கொண்டு ஆட்டம் போட்டாரோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் எடப்பாடி தலைமையிலான கும்பலும் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றது.

gaja cycloneஅதனால்தான் இதை எல்லாம் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத மக்கள் அமைச்சர்களை ஓட ஓட துரத்தி அடிக்கின்றார்கள். ஓட்டுப் பொறுக்கிகளை ஊருக்குள் விடாமல் தடுக்கின்றார்கள். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவித நிவாரணப் பணிகளையும் இந்த அரசு இது வரை சிறப்பாக செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை என்பதுதான் உண்மை. அனைத்து வகையிலும் ஊழலாலும் அதிகார முறைகேட்டாலும் செல்லரித்துபோன ஓர் அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு நிச்சயமாக இந்த அரசால் அங்கு எதையுமே செய்ய முடியாது. செத்துப் போன பிணத்தை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் பிணம்தின்னிகளாய் அதிகார வர்க்கம் மாறி நெடுநாட்கள் ஆகிவிட்டது. அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் அரசை நம்பாமல் பல இடங்களில் அவர்களாகவே புனர்நிர்மாணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் திட்டமிட்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டிவருகின்றது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்தான் நாசகார திட்டமான மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாசிச பாஜக அரசு முயன்று வருவதால், இந்தப் பேரிடரை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவிகளையும் செய்ய மறுப்பதன் மூலம் அவர்களை தாங்களாகவே அங்கிருந்து ஓடிவிட அழுத்தம் கொடுப்பதாகவே நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரிகின்றது. இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மத்திய அரசின் பிரதிநிதிகள் யாரும் முழுமையாக புயல் சேதத்தைப் பார்வையிடவில்லை என்பதில் இருந்தும், சல்லிப் பைசாவை கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்பதில் இருந்தும் மத்திய அரசின் சதிச்செயலை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

மக்களைப் பற்றி இம்மியளவும் அக்கறையற்ற கொள்ளைகாரக் கும்பல் மத்தியிலும், மாநிலத்திலும் உட்கார்ந்துகொண்டு சாமானிய மக்களை வாட்டி வதைத்து சித்திரவதை செய்துகொண்டு இருக்கின்றது. புயல் பாதித்து 7 நாட்கள் கழித்து ஓப்பாரி சத்தமெல்லாம் ஓய்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கண்களில் நீர் வற்றிய பின் ஆற அமர சாகவாசமாக எடப்பாடி பழனிசாமி பிரதமரைப் போய் சந்தித்திருக்கின்றார். 15000 கோடி நிவராண நிதியாக கேட்டிருக்கின்றாராம். ஏற்கெனவே வர்தா, ஒக்கி புயல் போன்றவற்றிருக்கு பிச்சைக்காரர்களுக்கு போட்டது போல அற்ப நிவாரணம் கொடுத்து கழுத்தறுத்த தமிழர் விரோதக் கும்பல், இதற்கும் அதையேதான் நிச்சயம் செய்யும் என்பது சொல்லாமலேயே விளங்கும். இந்த மனித உணர்ச்சி அற்ற பாசிச கும்பல்களிடம் இருந்து தப்பிக்க வழியற்று கையறு நிலையில் மக்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆளத் தகுதியற்ற கும்பல்களிடம் நாட்டைக் கொடுத்த, தேர்தல் ஜனநாயகத்தில் அளப்பரிய நம்பிக்கை கொண்ட மக்களுக்கு தப்பிக்க வேறு என்ன தான் வழி இருக்கின்றது, அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருப்பதைத் தவிர. நம்மிடம் தேர்ந்தெடுக்கும் உரிமைதானே இருக்கின்றது, அயோக்கியர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை இல்லையே!

- செ.கார்கி

Pin It