அதிகாரம் ஆளுநருக்கா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கா என்னும் வினாவிற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் விவாதங்கள் இன்னும் ஓயவில்லை.

கடந்த வாரம், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஓரிரு பிரிவுகளைத் தவிர்த்து, பெரும்பான்மையான தளங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுகளுக்கே உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது. எனினும் அந்தத் தீர்ப்பு மிகத் தெளிவானதாகவும், விளக்கமானதாகவும் இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, மத்தியில் ஆளும் அதிகார வெறி கொண்ட பா.ஜ.க.வும், அதன் ஆளுநர்களும் மீண்டும் அந்தச் சிக்கலைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

banwarilal and edapadi

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, தில்லி அரசோடு தொடர்புடையது என்றாலும், அதன் பொதுத் தன்மைகள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதே சரி. ஆனால், மாநில அரசுகளின் அதிகாரத்திற்கும், யூனியன் பிரதேச அதிகாரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. யூனியன் பிரதேசங்களுக்குள்ளேயே கூடச் சில வேறுபாடுகளும் இருக்கின்றன.

அரசமைப்புச் சட்டப்படி, கோவா, டையூ, டாமன் போன்ற பகுதிகளுக்கு உள்ள அதிகாரங்கள் மிக மிகக் குறைவு. அதனைவிடத் தில்லிக்குச் சற்றுக் கூடுதல் அதிகாரம் உள்ளது. புதுவை போன்ற இடங்களில் மேலும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சட்டமன்றங்களில் ஆளுநர் என்பவர் பெரும்பாலும், அலங்காரப் பதவி (Ceremonial Head) வகிப்பவர் மட்டுமே. ஆனால் இந்த அரசமைப்புச் சட்ட அடிப்படையில், எந்தெந்த மாநிலங்களில் யார் யாருக்கு என்னென்ன அதிகாரம் என்பதை இன்னும் விரிவாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்க வேண்டும்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அதிகாரம் குறைவாக உள்ள தில்லி, புதுவை யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் ஆளுநரை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர். நீதிமன்றத்திற்கும் செல்கின்றனர். கூடுதல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டுள்ள தமிழக அரசோ, அஞ்சி ஒடுங்கி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அதனால்தான், எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஏழு ஆண்டுகள் சிறை என்று இங்குள்ள ஆளுநர் ஆணவத்தோடு அறிக்கை விடுகிறார். நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினரைச் சிறையில் அடைக்கிறது தமிழக அரசு. புதுவையின் துணை ஆளுநரோ, இன்றும் அதே தொனியில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கின்றார்.

சட்டம் என்னவாக இருக்கிறது என்பது ஒன்று. அது எப்படி இருக்க வேண்டும் என்பது இன்னொன்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அதிகாரம் இல்லையென்றால், பிறகு தேர்தல் எதற்கு? எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்களை வைத்து மத்திய அரசே நாட்டை ஆண்டுவிட்டுப் போய்விடலாமே! எனவே அதிகாரங்கள் அரசுகளுக்கே என்பது இன்னும் தெளிவாகக் கூறப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டமும் திருத்தப்பட வேண்டும். அதே வேளையில் என்னதான் விரிவாகக் கூறினாலும், சட்டத்தைத் திருத்தினாலும் எடப்பாடி போன்றவர்களின் தலைமையிலான அரசுகள் நெஞ்சு நிமிர்த்தி ஒருநாளும் செயல்படப் போவதில்லை என்பதும் உண்மை.

இன்றையத் தமிழக அரசுக்கு நீதிமன்றங்கள் அதிகாரத்தை அளித்தால் மட்டும் போதாது, முதுகெலும்பையும் சேர்த்து அனுப்பினால்தான் அவர்களால் நிமிர்ந்து அமர முடியும்!

Pin It