நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களிலே போலீஸ் பாதுகாப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.

கடந்த மார்ச் 2016ல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை  HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷேல் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்யவும், இலாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றி யமைக்கப்பட்டது. மேலும், கடந்த 01.08.2018 அன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 2016க்கும் முந்தைய கச்சா எண்ணெய் எடுக்கக் கூடிய இடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை மூலம் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தைப் பொறுத்தவரை நில வளத்தையும், நீர்வளத்தையும் பாதிக்கக் கூடிய மரபுசாராத் திட்டங்களாகிய மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடந்த 2013ல் இடைக்கால தடையும், 2015ல் நிரந்தர தடையும் அமலில் இருக்கக்கூடிய சூழலில், திறந்த வெளி அனுமதி முறையில் முதல் சுற்றில் தரைப்பகுதியில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் மற்றும் மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ., பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 2,674 சதுர கி.மீ., பகுதியை வேதாந்தா நிறுவனத் திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த சூழலில் மேற்கண்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விண்ணப்பித்துள்ளன.

மேலும், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியகுடி மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி எண்ணெய் வட்டாரங்களில் டைட் கேஸ் எனப்படும் மரபுசாரா எண்ணெய் எடுப்பு முறைக்கு கடந்த 27.02.2019ல் சுற்றுச் சூழல் அனுமதிக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.டெல்டா பகுதிகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் ஹைட்ரோ ப்ராக்தரிங் முறையில் மேற்கண்ட வாயு எடுக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இரு திட்டங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச் சூழல் மேலாண்மை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிபந்தனை களை விதித்து கடிதம் அனுப்பியுள்ளது.

மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கடந்த அக்டோபர் 2018ல் மத்திய அரசிடம் கொடுத்த மனுவில் வளர்ச்சித் திட்டங் களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந் தார். வேதாந்தா நிறுவனமும் தன்னுடைய சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தில் கடற் பகுதியில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டியதில்லை என்ற விதி முறையைக் காட்டி தனக்கு கருத்துக்கேட்புக் கூட்டத்திலிருந்து விலக்கு கேட்டுள்ளது. ஆனால் மரக்காணம் முதல் பரங்கிப் பேட்டை வரையிலான ஆழமில்லா கடல்பகுதி மட்டுமின்றி, தரைப்பகுதியில் ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையிலும் வேதாந்தா நிறுவனம் கருத்துக் கேட்பு கூட்டத்திலிருந்து விலக்கு கேட்பது மக்கள் விரோத செயலாகும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம், அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்குறுதி யளித்தனர். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களே போலீஸ் பாது காப்புடன் இத்திட்டத்திற்கு அனுமதியளித் துள்ளது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்துள்ள மிகப் பெரிய துரோகம்.

மத்திய பாஜக அரசு தமிழகத்தை வேதாந்தா உள்ளிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கத் துடிப்பதுடன்,  தமிழகத்தின் வளங்களையும், விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வா தாரங்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதை தட்டிக்கேட்க வேண்டிய, மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசோ, தமிழக மக்கள் நலன்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப் படாமல் தன் பதவியைமட்டும் காப்பாற்றிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடித்தால் போதும் என்ற நிலையில் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற் குரியது. எனவே, டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே  தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை.

Pin It