eagle fightநமது இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் திரு.நரேந்திரமோடி அவர்கள் கடந்த 07.07.2021 அன்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து இருக்கிறார்.

அமைச்சரவையில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.எல்.முருகன் ஒன்றிய அரசின் இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். தாராபுரம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியாத ஒருவர் எப்படி ஒன்றிய அரசின் அமைச்சுப் பொறுப்பிற்கு வர முடியும்? நியாயமான கேள்விதான்.

இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடாமல், மக்களைச் சந்திக்காமல் அமைச்சர்கள் ஆகும் போது; தேர்தலில், மக்களால் புறக்கணிக்கப்பட்ட எல்.முருகனுக்கு மட்டும் அந்த ‘அதிர்ஷ்டம்' கிடைக்காமலா போகும். வாழ்க ஜனநாயகம் !

தமிழ்நாட்டின் முன்னாள் அ.தி.மு.க.அரசின் சட்டத்துறை அமைச்சராக இருந்த திரு.சி.வி.சண்முகம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தது தான் என்று சொல்லி விட்டார். இது குறித்து எப்போதும் பேட்டி கொடுக்கும் திரு.ஜெயக்குமார் அது அவரது சொந்தக் கருத்து என்றார்.

ஆனால் பா.ஜ.வின் திரு.கே.டி.ராகவன் இந்தக் கருத்தைச் சொன்ன சி.வி.சண்முகம் மீது அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கட்சி விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்றார் ஜெயக்குமார்.

உடனே சி.வி.சண்முகம் ‘‘நாங்கள் எங்கள் கருத்துகளைச் சொல்வோம்; தலைமை எங்களுக்கு வழிகாட்டும், ஏற்றுக் கொள்வோம்’’ என்று பதில் சொன்னாலும் பிரச்சனை சிந்துபாத் கதையாகத்தான் நீள்கிறது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுக்கும், பா.ஜ.கவுக்கும் இருக்கும் கூட்டணி ‘தர்மம்' இது.

இந்நிலையில் தனது மகனுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று கிடையாய் கிடந்தார் திரு.ஓ.பி.எஸ். சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் "ஒன்றிய அரசு" என்று சொன்னதை அவையிலேயே கேட்டாலும் கூட, ஒரு பத்து நாள்களுக்குப் பிறகு கண்டித்து ஒரு அறிக்கை விட்டார் அவர், பா.ஜ.க. மனம் குளிரும் என்று.

பல கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். மகனுக்கு "டாட்டா " காட்டி விட்டார். அது அவர்களின் "கூட்டணி தர்மம்".

இது ஒருபுறமிருக்க ரபேல் ராணுவ விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்த விமானங்கள் விற்ற வகையில் லாபம் அடைந்த பிரான்ஸ் அரசே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசு கூடுதலான நிதியை இழந்திருப்பதைப் பற்றிப் பிரதமர் பேசுவதில்லை. மாறாக அடுத்து வரவிருக்கும் உ.பி உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல்களைக் கணக்கில் வைத்து இந்திய ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ததே மக்களின் சிந்தனைகளை மடை மாற்றித் திசை திருப்புவதற்கானத் தந்திரம்தான்.

புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் ஒருவரான திரு.நாராயண்ராணே என்பவர் 2019இல்தான் பா.ஜ.வில் இணைந்துள்ளார். அதற்கு முன்னர் 2014இல் திரு. அமித்ஷாவால் நாராயண் ராணே மிகப் பெரிய ஊழல் வாதி என்றும், அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் சொல்லப்பட்டவர். இன்று புனிதமாகி விட்டார், பா.ஜ.க அமைச்சராக.

அதே சமயம் ஊழல் வாதிகளும், சட்டவிரோதச் செயல் புரிவோரும் பா.ஜ.வில் சேர்ந்ததும் புனிதப்படுத்தப்பட்டு விடுகிறார்கள் போலும். இதில் அ.தி.மு.கவும் அடக்கம்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இவர்களுக்கிடையில் எந்தப் "பிரச்சனையும்" இல்லை, கேட்டுப் பாருங்கள் அமித்ஷாவிடம்!

அ.தி.மு.க தலைவர்களுக்கிடையே எந்தப் "பிரச்சனையும்" இல்லை. கேட்டுப்பாருங்கள் சசிகலாவிடம்!

அ.தி.மு.கவுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே எந்தப் "பிரச்சனையும்" இல்லை. கேட்டுப் பாருங்கள் கே.டி. ராகவனிடம்!

மோடி மட்டும் பேச மாட்டார், அவரிடம் எதுவும் கேட்டு விடாதீர்கள்.

- சிற்பி செல்வராஜ்

Pin It