இன்று வரையில் இப்படி ஓர் அநாகரிகம் தமிழ்நாட்டில் அரங்கேறியதில்லை. ஆளுங்கட்சியினர் அன்றாடம் அடித்துக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் மிக இழிவாகப் பேசிக் கொள்கின்றனர். அடுத்த நாளே மீண்டும் கூடிக் கொள்கின்றனர். நேற்று அந்த அணியில் இருந்தவர்கள், எந்த வெளிப்படையான காரணமுமில்லாமல் இன்று இந்த அணிக்குத் ‘தாவுகின்றனர்’. குதிரை பேரம் நடப்பது நாட்டிற்கே தெரிகிறது. ஆனால் ஆளுநருக்குத் தெரியவில்லை.
“ஒரு வாரத்தில் நீ மாமியார் வீட்டுக்குப் போய்விடுவாய்” என்கிறார் தினகரனைப் பார்த்து முதலமைச்சர். ஒரு ‘மாண்புமிகு’ முதலமைச்சரின் மொழிநடை எப்படியிருக்கிறது பாருங்கள்! 19 ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று நேரடியாக ஆளுநரிடம் சொன்னபிறகும் கூட, இது உட்கட்சிப் பிரச்சினை என்கிறார் ஆளுநர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் சபாநாயகர். திமுக தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுனரிடம் சென்று மனு கொடுத்த பிறகும், அவர் தனக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல, மும்பையில் அமர்ந்திருக்கிறார்.
தாங்கள் தலைகீழாய் நின்றாலும் ஆட்சிக்கு வரமுடியாது, எவ்வளவு தடுத்தாலும் தேர்தல் வைத்தால் மாபெரும் வெற்றி பெற்றுத் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற உண்மை நிலவரம் மத்தியில் ஆளும் பாஜக அரசை உறுத்துகிறது. எனவே எடப்பாடி அரசு என்னும் பெயரில் ஓர் எடுபிடி அரசே இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைக்கிறார் மோடி.
என்னதான் மோடி வித்தை செய்தாலும், இறுதியில் தளபதியின் படையே வெல்லும். வரும் காலம் இதனைச் சொல்லும்!