கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவரத்தைப் பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய்வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

1. “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது”.

2. “முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்”.

3. “முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது”.

என்று பேசியிருக்கிறார். ( இது 5.7.26 ² ‘மித்திரன்’ 4 - வது பக்கம் 5 - வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திரமாய்ப் போய் விட்டது. ஒன்றா நிர்மாணத்திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப்படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கக்ஷியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

(குடி அரசு - சிறு குறிப்பு - 11.07.1926)