மதத்தின் பேரால், சாத்திரத்தின் பேரால், நாம் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக இருக்கிறோம். இதைப் பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் கவலைப்படுவதில்லை. ஏதோ தங்களுக்குப் பதவி, பணம் கிடைத்தால் போதும் என்ற சுயநலத்தோடு தான் பலர் இருந்து வருகிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற சட்ட சபை மெம்பர்கள், மந்திரிகள் அத்தனை பேரும் சமுதாயத்தில் சூத்திரர்கள் தான், என்னதான் அவர்கள் உயர்ந்த பதவி, அந்தஸ்து, பணம் இவைகளோடு கூடியவர்களாய் அவர்கள் இருந்தாலும் இந்த இழிவு பற்றி கவலைப்பட இந்நாட்டில் இன்று யாரும் இல்லை. இது பற்றி அமைதியான முறையில் பிரசாரம் புரிந்து நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் பஞ்சமன்? நான் ஏன் தாழ்ந்தவன் என்று கேட்கிற எங்களை நாஸ்திரகர், வகுப்பு வாதிகள், கலகக்காரர்கள் என்று கூறுகிறார்கள்.
நாங்கள் மதம் வேண்டாம் என்று கூறவில்லை. மக்களுக்குள் அன்பு, சமத்துவம், நாணயம் ஆகியவைகளைச் செய்யாமல் ஒரு சிலரின் பித்தலாட்ட வாழ்வுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்து கொண்டு, மற்றவர்கள் என்றும் இழிந்த நிலையிலேயே வாழும் கூட்டத்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று இருக்கிற மதம் தான் கூடாது என்கிறோம். அதேபோல் பித்தலாட்டம் இல்லாமல், மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் சுதந்திரம் வேண்டும் என்றும் கூறுகிறோம். அது போலவேதான் யோக்கியமான உருவமில்லாத தேவடியாள் வீட்டுக்குப் போகாத ஒழுக்கமுள்ள, மானத்துக்குப் பயந்த அளவுக்கு பொருந்திய கடவுள் இருக்கட்டும் என்று கூறுகிறோம்.
என்னிடத்தில் இன்று பலர், நீங்கள் காங்கிரஸிலேயே இருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும் உங்கள் காலத்தில் உங்களோடு வேலை செய்த ஆச்சாரியார் கவர்னர்-ஜெனரல் ஆனார். இராமசாமி ரெட்டியார் பிரதம மந்திரியானார், நீங்களும் இன்று இருந்தால் எவ்வளவு காரியங்களை செய்திருக்கலாம் என்றெல்லாம் கூறினார்கள். இந்த மாதிரியாகவே என்னிடத்தில் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் ஒரு காங்கிரஸ் பார்லிமெண்ட் மெம்பர் கேட்டார். நான் அவரிடத்தில் கூறினேன், 'நான் காங்கிரஸில் இருந்தால் நீங்கள் பார்லிமெண்ட் மெம்பர்களாய் ஆகியிருக்க முடியுமா? அல்லது இன்று இவ்வளவு திராவிடர்களாவது பதவி வகிக்க முடியுமா?' என்று கேட்டேன். இன்று நம் மக்கள் இழிந்த நிலையில் இருக்கிறார்கள். அது ஒழிய நான் பதவி, தேர்தல் முதலியவற்றிற்கு ஆசைப்படாமல் என்னால் முடிந்தவரை உழைக்கிறேன், இதை நம் மக்கள் உணர்ந்து, 'நாம் இழிந்தவர்கள் அல்ல, தாழ்ந்தவர்கள் அல்ல, எல்லோரையும் போல் நாமும் மனிதர்கள்தான்' என்று உணர வேண்டும். அதுதான் நாங்கள் மக்களிடத்தில் இருந்து எதிர்பார்க்கும் பயன்.
பார்ப்பனர்களுக்குள் இருக்கும் கட்டுப்பாடு நம்மவர்களுக்கு இல்லை. கவர்னர் ஜெனரல் பார்ப்பனர் முதற் கொண்டு, காபி ஹோட்டலில் தம்பளர் கழுவும் பார்ப்பனர்கள் வரைக்கும் பார்ப்பனர்கள் என்ற கட்டுப்பாடும், தங்கள் இனத்துக்கு ஆபத்து வரக் கூடாது, வரவிடக் கூடாது என்கின்ற கவலையும் இருந்து வருகிறது. அது போலவேதான் முஸ்லீம்களுக்கும் உலகக் கட்டுப்பாடு இருக்கிறது. எகிப்தில் ஒரு முஸ்லீமுக்கு இன்னல் வந்ததென்றால் இங்கே இருக்கும் முஸ்லீமுக்குக் கவலை ஏற்படும்.
ஆனால் நம்மவர்களுக்குள்ளே அந்தக் கட்டுப்பாடு இல்லை, வரவில்லை. தங்கள் சுயநலத்திற்கு ஆக ஏதாவது கிடைத்தால் நம்முடைய இனத்தையே காட்டிக் கொடுத்துவிட்டு ஓடும் கண்ணியர்கள்தான் இருக்கிறார்களே தவிர, தம் இன ஒற்றுமைக்கு, முன்னேற்றத்திற்கு முயற்சி செய்பவர்கள் இல்லை.
நாம் நமக்குள் இருக்கும் துவேஷங்கள், பொறாமை இவைகளை ஒழித்து பார்ப்பனர்கள், முஸ்லீம்களைப் பார்த்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
***
15.04.1950 அன்று வாடிப்பட்டி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 18.04.1950
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா