கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

விரம்பக்கல்வியை தாய்மொழியில் அளித்தால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் அபாரமாக இருக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக அறிந்தபின், 1953-இலிருந்து யுனெஸ்கோ (UNESCO) தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. பல வளர்ந்த நாடுகள் இதனை ஆர்வமாக முன்னெடுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றன. ஆனால் மொழிகளின் தோட்டமாகிய இந்தியாவிற்கு தாய்மொழி வழிக்கல்வி என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

இதுபற்றிய விவாதம் 1950-இலிருந்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தொள்ளாயிரத்திற்கும் மேற் பட்ட தாய்மொழிகளைக் கொண்ட இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ஆரம்பக் கல்வியை கொடுப்பது சாத்தியப்படாத திட்டம் என்றே மத்தியில் ஆட்சி அமைத்த கட்சிகள் கைவிட்டுவிட்டன. அதுமட்டுமன்றி தாய்மொழிகளைக் காக்கும் தொலைநோக்குத் திட்டமும் நம்மிடம் இல்லை.

அதனால் இன்று உலகில் அழிந்து வரும் தாய்மொழிகளில் இந்திய மொழிகளே அதிகம். தாய்மொழி அழிவு குறித்து உலகம் முழுவதும் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் 3000 மொழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக யுனெஸ்கோ அறிக்கை குறிப் பிடுகிறது. யுனெஸ்கோவின் ஆய்வுப்படி அழிந்து வரும் தாய்மொழிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. பின்வரும் ஏழு நாடுகளும் அதிகமான தாய்மொழி இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

(நாடும் அழிந்துகொண்டிருக்கும் தாய்மொழிகளின் எண்ணிக்கையும்)

இந்தியா - 197,

அமெரிக்கா-191,

பிரேசில்-190,

சீனா-144,

இந்தோனேஷியா-143,

ரஷ்யா-143,

ஆஸ்திரேலியா-108

இந்தியாவில் 197 தாய்மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இம்மொழிகளைப் பேசு வோரின் எண்ணிக்கை சில நூறாகக் குறைந்து கொண்டிருக்கிறது.

ஏன் நாம் தாய்மொழிக் கல்வியில் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம்? இந்தியச் சூழலில் ஆட்சி மொழி, அலுவல்மொழி, தாய்மொழி வழிக்கல்வி என தீர்க்கப்படாத மொழிப் பிரச்சினைகள் ஏராளம். இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், நிகராகவும் ஒரு சுதேசி மொழியை (இந்தி) நிறுவுவதற்கே கடந்த அறுபத்து ஐந்து ஆண்டுகளை செலவழித்திருக்கிறோம்.

இந்தியைப் பரப்பும் நோக்கில் தீவிரமாக இறங்கிய இந்திய அரசு, பழங்குடிமக்கள் பேசும் நூற்றுக்கணக்கான சிறுபான்மை மொழிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டது. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிகளாக அட்டவணைப்படுத்தப்பட்ட 22 இந்திய மொழிகளையும் கூட பெரிதாகக் கவனத்தில் கொள்ள வில்லை. இவ்வட்டவணை மொழிகளில் (scheduled languages) சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பக் கல்வி அளிக்கப்பட்டு வந்தாலும், அதை ஊக்கப்படுத்தவோ, மேம்படுத்தவோ முயலாமல், இந்தியாவை இந்தி மயமாக்குவதிலேயே குறியாக இருந்தது மத்திய அரசு.

அதனால் தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் இந்திக்கு எதிராக 1965 ஜனவரி 25-இலிருந்து இரண்டு மாத காலம் நடந்த தொடர் போராட்டத்தையடுத்து, 1968-ஆம் ஆண்டு உருவான தேசிய கல்விக்கொள்கை (4(3)(a)), தாய்மொழிவழிக்கல்வி முறையை உயர்கல்வி (பல்கலைக்கழகம்) வரை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அது இன்றுவரை நிறைவேற வில்லை. தாய்மொழிகளின் உரிமைகளை வெறும் ஏட்டில்தான் எழுதி வைத்திருக்கிறோம்.

இந்தியக் குடிமக்கள் அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட மொழிக் கொள்கை மற்றும் மொழித் திட்டம் என்று எந்தவொரு திட்டத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இதுவரை இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மொழிக் கொள்கைகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானவை, பெரும்பான்மை யோரின் விருப்பத்தினாலும், அழுத்தத்தினாலும் நிறைவேற்றப்பட்டவை.

அங்கு சிறுபான்மையாகப் பேசப்படும் நூற்றுக்கணக்கான தாய்மொழிகளுக்கு இடமில்லை. இந்த நிலை மன்னர் ஆட்சிக் காலத்தி லிருந்து, மொகலாயர், ஆங்கிலேய காலனியாதிக்கம் வழி சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது.

காந்தியிலிருந்து மோடி வரையான பல தேசத் தலைவர்கள் இந்தியாவின் வளமாகவும், அடையாள மாகவும் விளங்கும் பல்வேறுபட்ட தாய்மொழிகளை, தேச விடுதலை, நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், சமூகப் பிரச்சினைகள் போன்ற பிற காரணிகளோடு இணைத்தே பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்கும் போது, தேசியம், சமூகம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் முதன்மை பெற்று, அதனோடு தொடர்புடைய தாய்மொழியும், தாய்மொழியாளர்களின் உரிமையும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலில், சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒருங்கிணைக்க, காங்கிரஸ் ஒருமொழிக் கொள்கையைப் பின்பற்றியது. பலதரப்பட்ட இந்திய மக்களை ஓரணியில் நிறுத்த காங்கிரஸக்கு முதல் தடையாக இருந்தது பல்வேறுபட்ட தாய்மொழிகள். இந்தப் பிரச்சினையை காங்கிரஸின் இரு குழுக்களான மிதவாதமும், தீவிரவாதமும் நன்கு உணர்ந்திருந்தன. எனவே இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரு தொடர்பு மொழியாக இந்தியைப் பரப்ப முயன்றனர்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் திலகர் மீது ஈர்ப்பு கொண்டிருந்த சுப்பிரமணிய பாரதி 1908 மே 29-ஆம் தேதி திலகருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: சென்னை ஜனசங்கம் ஆதரவில் சென்னையில் ஒரு ஹிந்தி வகுப்பு துவக்குமாறு கேட்டு, கிருஷ்ணவர்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. நாங்கள் ஏற்கனவே ஒரு சிறிய வகுப்பு துவக்கியுள்ளோம்.

போகப்போக அதில் நிறையப் பேர் கலந்து கொள் வார்கள் என நம்புகிறோம். அதனுடைய முன்னேற்றம் பற்றி பின்னர் தெரிவிக்கிறேன். இவ்வாறு பாரதி போன்ற தாய்மொழிப்பற்று மிகுந்த தேசியவாதிகள், தேச விடுதலை என்று வரும் போது, தாய்மொழிப் பற்றையும்,  தாய்மொழி உரிமையையும் விட்டுக் கொடுத்தார்கள். அதற்குக் கைமாறாக அவர்களின் தாய்மொழிக்கு இந்திய அரசு என்ன செய்தது?

காந்தி சுதந்திரத்திற்கு முன்பும்-பின்பும் ஒரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தார். 1918 மார்ச் 29-இல் இந்தூரில் நடந்த இந்தி இலக்கிய சம்மேளனத்திற்கு தலைமை வகித்துப் பேசிய காந்தி இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க வேண்டும் என முன்மொழிந்தார். அவர் அதோடு நில்லாமல் பல காங்கிரஸ் மாநாடுகளிலும் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தக் காரணம், அப்போது வடஇந்தியப் போராட்டக் குழுக்களில் விழுந்துகொண்டிருந்த இந்து-முஸ்லீம் பிளவைக் கட்டுப்படுத்தி சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்தவேயாகும்.

மேலும், இந்துஸ்தானியை முன்மொழிவதற்கு அவர் மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார். அவை: 1. இந்துஸ்தானி என்பது இந்துக்களுக்கும், முஸ்லீம் களுக்கும் பொதுவானது, 2. தேவநாகரி எழுத்திலும், பாரசீக-அரபி எழுத்திலும் எழுதப்படுவது, 3. முழுமை யான சமஸ்கிருதத் தாக்கத்திற்கோ, பாரசீகக் கடன் சொற்களுக்கோ ஆட்படாதது.

நூற்றுக்கணக்கான மொழிகள் பேசும் இந்தியாவின் தேசிய மொழியைத் தீர்மானிப்பதற்கு மொழிப் பிரச்சினையோ அல்லது சாதிப் பிரச்சினையோ கூட முக்கிய பங்கு வகிக்கவில்லை. மாறாக, மதப் பிரச்சினையே முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியாவின் மொழிப் பிரச்சினை எவ்வாறு அணுகப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

சிலர் மொழிப் பிரச்சினைகளை நாட்டின் வளர்ச்சியோடு இணைத்துப் பார்க்கின்றனர். இந்திய மொழிச் சூழலுக்கு சிறிதும் பொருந்தாத பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் வளர்ச்சியை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு, பலமொழிகள் பேசும் இந்தியர்களுக்கு எதிரான ஒருமொழிக் கொள்கையை ஆதரிக்கின்றனர்.

  அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் பெரும்பான்மை இந்தியர் பேசும் ஒரு மொழியை (இந்தியை) இந்தியர்கள் அனை வருக்குமான பொது மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. இந்திய மொழிச் சூழலுக்குப் பொருத்தமில்லாத இந்தக் கருத்துதான் இந்திய மொழிக் கொள்கையில் இன்று வரை ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, இந்திய மொழிகள் அனைத்தையும் காக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையே தற்போதைய தேவை.

அழிந்துகொண்டிருக்கும் 197 இந்திய மொழிகளில் 95 சதவீதம் வடகிழக்கு மொழிகளும், இமயமலை மொழிகளுமாகும். மலைவாழ் மக்களின் மொழிகளே இங்கு முதலில் பலியாகிக்கொண்டிருக்கின்றன.

இன்று மலைவாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியும், பிற உதவிகளும் இந்தியிலேயே இருக்கின்றன. இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக முன் மொழியும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆதரவோடு இவை அரங்கேற்றப்படுகின்றன. வடக்கிலும், வட கிழக்கிலும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்தியின் மேலாதிக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்கள் தாய்மொழியை இழந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது.

சிறுபான்மையான மலைவாழ் மக்களின் மொழியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இம்மொழி இழப்பு, அட்டவணை மொழிகளான பெரும்பான்மை மொழியிலும் சிறிய அளவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் ஓர் இந்தியத் தாயிடம் இருக்கும் தாய்மொழி அறிவு அவர் மகனிடம் இல்லை. எனவே தாய்மொழியின் தனித் துவத்தையும், தாய்மொழிக் கல்வியால் விளையும் பயனையும் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

மொழிதான் மனிதனின் முதல் அடையாளம். இந்தியாவின் பன்முகத் தன்மை அதன் பல்வேறுபட்ட சாதியிலோ, மதத்திலோ இல்லை. நூற்றுக்கணக்கான அதன் தாய்மொழியில்தான் இருக்கிறது. எனவே, தாய்மொழி இழப்பு என்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இழுக்கு.